நீங்கள் கீர்த்தி சுரேஷுக்கு உறவினராக இருக்கலாம்!



DNA உறவுகளின் நெட் ஒர்க் அதை சாத்தியமாக்கும்!

கல்யாணம் முதல் காதுகுத்து வரை அழைப்பிதழ் பெற்று விழாக்களுக்குச் சென்று உறவுகளை வளர்த்த காலம் ரொம்பப் பழசு. இன்றைய கலாசார  ட்ரெண்ட் ஃபேஸ்புக், டுவிட்டர் போன்ற சமூக வலைத்தளங்களில் ரிக்வெஸ்ட் அனுப்பி நட்பு, உறவுகளைப் பெருக்குவதல்ல; டிஎன்ஏ மூலம் நம்  சொந்தங்களை நாடு விட்டு நாடு தேடிக் கண்டுபிடிப்பதுதான்!

சில ஆண்டுகளுக்கு முன்பு ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜோலி டிஎன்ஏ டெஸ்ட் எடுத்துக் கொண்டார். அதில் எதிர்காலத்தில் மார்பகப் புற்றுநோய்  அவருக்கு வர 50% வாய்ப்பிருப்பதாகத் தெரிய வந்தது. உடனே ஆபரேஷன் மூலம் தன் மார்பகத்தை அகற்றி வருங்காலத்தில் தனக்கு ஏற்படவிருக்கும்  தொந்தரவிலிருந்து தப்பித்துக் கொண்டார். இதுபோன்ற ப்ளஸ்களும் டிஎன்ஏ டெஸ்ட் மூலம் உண்டு. ரைட். இதையெல்லாம் எப்படி கண்டறிகிறார்கள்?  23 குரோசோம்களிலுள்ள டிஎன்ஏவில் 99.5% டிசைன் அனைவருக்கும் ஒரே மாதிரிதான் இருக்கும்.

வேறுபடும் 0.5%தான் எதிர்காலத்தில் குறிப்பிட்ட அந்த நபருக்கு என்ன நோய் வரும் என்பது மாதிரியான அடிப்படை தகவல்களை அறிவிக்கும். இதன்  அடுத்த கட்டம்தான் நம் முன்னோர், உறவுகள் யார்..? எங்கே வசிக்கிறார்கள்... என்பதையும் டிஎன்ஏ வழியாகக் கண்டறியலாம் என்பது! விளைவு,  இணையம் வழியே அவர்களோடு தொடர்பு கொண்டு சுற்றுலா செல்வது, சாப்பிடுவது... என ‘வித்தியாச’ கல்ச்சரை டிஎன்ஏ சோதனை தொடங்கி  வைத்துள்ளது!

சோதிப்பது எப்படி?

டிஎன்ஏ தளத்திலுள்ள கிட் (Kit) ஒன்றை முதலில் 99 டாலருக்கு (கிட்டத்தட்ட ரூ.7 ஆயிரம்) வாங்கவேண்டும். கிட்டிலுள்ள டெஸ்ட் டியூபில்  எச்சிலைத் துப்பி ஆய்வகத்துக்கு அனுப்பினால் போதும். இரண்டு மாதங்களில் ரிசல்ட் மின்னஞ்சல் கதவைத் தட்டும். அதில் டிஎன்ஏ விவரங்கள்,  தாக்கும் நோய்கள் ஆகியவற்றோடு உங்கள் மரபணுவோடு பொருந்தும் உறவுகள் பற்றிய விவரங்களும் இருக்கும்.

இந்த மரபணு உறவுகள் பற்றிய தகவல்களை தொடர்புடையவரின் அனுமதியைப் பெற்றே வழங்குகிறார்கள். அமெரிக்காவின் மசாசூசெட்சிலுள்ள ஜார்ஜ்  டவுனில் வாழும் எழுத்தாளர் டையன் டெநபோலிக்கு அவரது பிறந்த நாளன்று டிஎன்ஏ டெஸ்ட் கிட் பரிசாகக் கிடைத்தது. மின்னஞ்சலில் கிடைத்த 40  பக்க ரிசல்ட்டில் அவரது முன்னோர்கள் ஐரோப்பாவைச் சேர்ந்தவர்கள் என்ற குறிப்புடன் 1,200 உறவினர்களின் தகவல்களும் கிடைத்தது அவரை மிரள  வைத்தது.

‘‘ஐந்து சகோதரர்களுக்கு மேல் நீளும் சகோதரர்களின் எண்ணிக்கை என்னை வியக்க வைத்தது. என் அப்பாவின் சாயலிலுள்ள வயதான சகோதரர்  ஜார்ஜின் வயது 90!’’ என தகவல் தருபவர் உள்ளூர் உறவினர்களைக் கண்டுபிடித்து புகைப்படங்களைப் பரிமாறி மகிழ்ந்ததோடு பாட்டி வழி  சொந்தங்களை இத்தாலிக்குச் சென்று சந்தித்துள்ளார்.

டிஎன்ஏ உறவுகள்!

டிஎன்ஏ சோதனைகளைச் செய்வதில் AncestryDNA (1 கோடி வாடிக்கையாளர்கள்), 23andMe (50 லட்சம் வாடிக்கையாளர்கள்)  ஆகிய  இணையதள சேவை நிறுவனங்கள் முன்னணி வகிக்கின்றன. இரண்டும் தங்களுடைய தகவல்தளங்கள் மூலம் டிஎன்ஏவைப் பொருத்திப் பார்த்து  கல்யாணமாலை போல உறவுகளை சுழிசுத்தமாகக் கண்டுபிடிக்கிறார்கள்.

விந்தணுக்களை தானம் கொடுத்தவர்களையும் கூட இதன் மூலம் கண்டுபிடித்து உறவினர்களாகி வரும் நிகழ்வுகளும் மேற்குலகில் நடந்து  வருகின்றன. இந்தியானாவிலுள்ள வாஷிங்டனின் ஷெர்ரி ட்ரெட்வே, கலிஃபோர்னியாவிலுள்ள துணை ஷெரீஃபான ஜோஸ் பிராட்வாட்டர் ஆகியோர்  இம்முறையில் சகோதரியையும், தந்தையையும் கண்டறிந்திருக்கிறார்கள். டிஎன்ஏ டெஸ்ட்டில் உறவினர் என சுட்டிக் காட்டப்படுபவர், மரபு ரீதியான  உறவை ஏற்காமலும் போகலாம்.

டெநபோலி தன் உறவினர்கள் 25 பேர்களை தொடர்பு கொள்ள முயற்சித்தபோது அவரது அழைப்பை ஏற்று சந்திக்க விரும்பியவர்கள் 9 பேர்தான்.  ஷெர்ரி ட்ரெட்வேயைத் தன் மகளாக ஏற்க முடியாது என அவரது மரபணு ரீதியிலான உறவினர் கூறியது போன்ற கசப்பான சம்பவங்களும்  ஏற்படலாம். இவற்றையும் ஏற்க நாம் தயாராக இருக்க வேண்டும். இப்போது அமெரிக்காவில் மட்டுமல்ல, சென்னை பெருங்குடியிலும் டிஎன்ஏ  சோதனை செய்ய பன்னாட்டு நிறுவனம் ஒன்று தன் கிளையைத் தொடங்கியிருக்கிறது!

காசுக்கு டேட்டா!

டிஎன்ஏ நிறுவனங்கள் தகவல்களின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் வழங்கினாலும் இதில் அபாயங்களும் இருக்கின்றன. ஃபேஸ்புக் போல டிஎன்ஏ  தகவல்கள் கசியவும் வாய்ப்புள்ளது. இவற்றை காவல்துறை, காப்பீட்டுத்துறை, மருத்துவ வட்டாரங்கள் பணம் கொடுத்து வாங்க முயற்சிக்கலாம்.  போலவே மரபணுத் தகவல்களை மருத்துவர்களின் மூலம் ஆராய்ச்சி செய்து ஒருவரது ஆயுளுக்கும் வரக்கூடிய நோய்களைக் கணக்கில் எடுத்து  பிரத்யேகமாக அவருக்கென பிளான்களை காப்பீட்டு நிறுவனங்கள் அமைக்கவும் வாய்ப்புள்ளது.

அதோடு டிஎன்ஏ தகவல்கள் வங்கிக்கு கிடைத்தால், ‘எதிர்காலத்தில் நோயால் தாக்கப்படவிருக்கும் உங்களால் எப்படி கடன்களைக் கட்டமுடியும்...’ என  லோன் அப்ளிகேஷனை மறுக்கவும் சான்ஸ் உருவாகும். இரக்கமில்லாத வணிகத்தில் தகவல்கள் மட்டுமல்ல, மனிதர்களும் விற்பனைப்  பொருட்கள்தான் என்பதை உணர்ந்து செயல்படுவதே நல்லது.        

MyHeritageDNA  : 42 மையங்கள். 92 மில்லியன் வாடிக்கையாளர்கள். தகவல்தளம் 1.1 மில்லியன். கட்டணம் 59 - 99 டாலர்கள்.
AncestryDNA :  தகவல்தளம் 5 மில்லியன். 350 மையங்கள். கட்டணம் 99 டாலர்கள்.
23andMe  : தகவல்தளம் 1 மில்லியன். 31 மையங்கள். கட்டணம் 99 - 199 டாலர்கள்.
LivingDNA : தகவல் தளம் 1.1 மில்லியன். 80 மையங்கள். கட்டணம் 129 யூரோ.
Vitagene : 25 மையங்கள். கட்டணம் 79 - 149 டாலர்கள்.   

டிஎன்ஏ டெஸ்ட்!

மக்களுக்கு முதன்முதலில் 2001ம் ஆண்டு டிஎன்ஏ சோதனைகளை நடத்தி ‘ஜென்ட்ரீ’ என்ற நிறுவனம் சாதனை புரிந்தது. பின்னர் இந்நிறுவனத்தை  SMGF நிறுவனம் வாங்கியது. இதன் பிறகு பென்னட் க்ரீன்ஸ்பான் மற்றும் மேக்ஸ் பிளாங்க்பீல்ட் என்ற இரு ஆராய்ச்சியாளர்கள் இணைந்து  ஃபேமிலிட்ரீ டிஎன்ஏ என்ற நிறுவனத்தை அரிசோனா பல்கலைக்கழக உதவியுடன் தொடங்கினர். 2007ம் ஆண்டு 23அண்ட்மீ என்ற நிறுவனம் எச்சில்  மூலம் டிஎன்ஏ டெஸ்ட் நடத்தும் சோதனை முறையை அமல்படுத்தியது.

ச.அன்பரசு