ஆணவப் படுகொலைகளுக்கு எதிரான படம்!‘‘ஸ்கிரிப்ட்டை முடிச்சுட்டு ஷூட்டுக்கு ரெடியானோம். அப்ப என் ஃப்ரெண்ட்ஸ் போன் செஞ்சு ‘சாய்ரத்’ மராத்தி படத்தை பார்க்கச் சொன்னாங்க. உடனே  போய்ப் பார்த்தேன். ஆணவப் படுகொலை பத்தின படம். என் ஸ்கிரிப்ட்டும் அதுதான். எடுத்தா ‘காபி’னு நம்ம மக்கள் சொல்லிடுவாங்க! அதனால  ‘சாய்ரத்’ படத்தையே முறைப்படி ரைட்ஸ் வாங்கி ரீமேக் பண்ணிடலாம்னு விசாரிச்சேன். பார்த்தா ராக்லைன் வெங்கடேஷ் சார் ஏற்கெனவே அதோட  ரைட்ஸை வாங்கியிருந்தார்.

‘சாய்ரத்’ சீன்ஸ் என் படத்துல பிரதிபலிச்சிடக் கூடாதுனு மறுபடியும் ஸ்கிரிப்ட்டை ரீரைட் செஞ்சேன். அப்புறம்தான் ஷூட்டுக்கு கிளம்பினோம்...’’  இயல்பாகப் பேசுகிறார் மதுராஜ். பாண்டியராஜனின் மகன் பிருத்விராஜன், புதுமுகம் வீணா நடிக்கும் ‘தொட்ரா’ படத்தின் அறிமுக இயக்குநர். பட  விநியோகஸ்தர், தயாரிப்பாளர் என பயணித்தவர் இப்போது இயக்குநராக களமிறங்கியிருக்கிறார். ‘‘பூர்வீகம் கிருஷ்ணகிரி. சிறுகதைகள் எழுதுவேன்.  சினிமால ‘பா’ வரிசை இயக்குநர்கள் யார்கிட்டயாவது உதவியாளரா சேரணும்னு சென்னைக்கு வந்தேன்.

அந்த டைம்ல அவங்க யாருக்கும் படமில்லை. ஊருக்கு திரும்பிப் போக மனசில்லாம சில உப்புமா சினிமா கம்பெனிகள்ல கிடைச்ச வேலைகளை  செஞ்சேன். எதேச்சையா ஒருநாள் பாக்யராஜ் சாரை பார்க்கப் போனேன். அது ஆசீர்வதிக்கப்பட்ட நேரமா இருக்கணும். ‘மகதீரா’ தெலுங்குப் படத்தோட  தமிழ் டப்பிங்குக்கு அவர் வசனம் எழுதிட்டிருந்தார். என் படையெடுப்புகளைச் சொல்லி அவர்கிட்ட அசிஸ்டென்ட்டா சேர்ந்தேன். நாட்கள் நல்லபடியா  போச்சு. ஒருநாள் பேச்சுவாக்குல ஒரு சிறுகதையைச் சொன்னேன். வியந்துட்டார்.

உடனே பாக்கெட்ல இருந்த மூவாயிரம் ரூபாயை அப்படியே என்கிட்ட கொடுத்தார்! பிறகு ஒரு ஸ்கிரிப்ட்டை ரெடி பண்ணி அவர்கிட்ட சொன்னேன்.  அதை படமாக்க அப்ப சந்தர்ப்பம் அமையலை. இடைல டிஸ்ட்ரிபியூஷன் பக்கம் கவனம் செலுத்தினேன். ராம்கோபால் வர்மாவோட ‘சாக்கோபார்’,  ‘லைஃப் ஆஃப் பை’, ‘வனயுத்தம்’, ‘கழுகு’னு கிட்டத்தட்ட 18 படங்களை விநியோகம் செஞ்சேன். கடைசியா டிஸ்ட்ரிபியூட் செஞ்சது விஷால் நடிச்ச  ‘ஆம்பள’. வியாபாரம் ஓரளவு புரிஞ்சதால தயாரிப்புல அடுத்ததா நுழைஞ்சேன்.

பாபி சிம்ஹா நடிச்ச ‘சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது’ படத்தைத் தயாரிச்சது அப்படித்தான். அதுல சில கசப்பான அனுபவங்கள். இந்த  நேரத்துல பாக்யராஜ் சார்கிட்ட ரெண்டு கதைகள் சொல்லியிருந்தேன். அதுல ஒரு கதைக்கு, ‘பிருத்விராஜன் பொருத்தமா இருப்பார்’னு அவர் சொன்னார்.  அந்தக் கதைதான் இந்த ‘தொட்ரா’ படம்...’’ ரிலீஸ் பரபரப்பிலும் நிதானமாகப் பேசுகிறார் மதுராஜ். எப்படி வந்திருக்கு படம்..? அருமையா வந்திருக்குனு  நம்பறேன். என் குருநாதர் பாக்யராஜ் சார் படத்தைப் பார்த்துட்டார். எதுவும் பேசாம கிளம்பிப் போயிட்டார்.

சாருக்கு படம் பிடிக்கலை போலிருக்குனு நினைச்சேன். ஆனா, ரெண்டு நாட்களுக்குப் பிறகு அவர்கிட்ட இருந்து போன். ‘ராஜ், படம் ரொம்ப  பாதிச்சிடுச்சு. இன்னொரு தடவ பார்க்க விரும்புறேன்’னு சொன்னார். அப்பதான் நிம்மதிப் பெருமூச்சு விட்டேன். செகண்ட் டைம் படம் பார்த்துட்டு சில  லாஜிக் கரெக்‌ஷன்ஸ் சொன்னார். அதே வேகத்துல உடுமலை ஏரியாவுக்கு கிளம்பிப் போய் அந்த கரெக்‌ஷன்ஸை செய்தோம். படம் பார்த்த  பாண்டியராஜன் சார் எமோஷனல் ஆகிட்டார். ‘படத்துல நிறைய குறியீடுகள் இருக்கு.

தெரிஞ்சு வைச்சீங்களோ தெரியாம வைச்சீங்களோ... ஆனா, சமூகத்துக்கு அது தேவை’னு நெகிழ்ந்தார். ‘சாதிதான் சமூகம் என்றால் வீசும் காற்றில்  விஷம் பரவட்டும்’னு எண்ட் கார்ட் வைச்சிருக்கோம். இது ஆணவப் படுகொலை பத்தின கதைதான். ஆனா, சங்கர் - கௌசல்யா, இளவரசன் - திவ்யா  கதையில்ல. கமர்ஷியல் கலந்த அழுத்தமான சப்ஜெக்ட். ஆணவப் படுகொலைகளுக்கு சாதி மட்டுமே காரணமில்ல... பணமும் பெரும் பங்கு வகிக்குது.  வட மாவட்டங்கள்ல சில தாதாக்கள் காதலை சேர்த்தும் வைக்கிறாங்க.

பிரிக்கவும் செய்யறாங்க. முதலீடே இல்லாத தொழிலா இதை செய்றாங்க. அப்படிப்பட்ட சில நிஜ தாதாக்களை அதே கேரக்டர்ல நடிக்க  வைச்சிருக்கோம்! பிருத்விராஜன் ஜோடியாக புதுமுகம் வீணா நடிக்கறாங்க. மலையாளத்துல ஒரு படத்துல நடிச்ச அனுபவம் அவங்களுக்கு இருக்கு.  இயக்குநர் ஏ.வெங்கடேஷ், ‘மைனா’ சூஸன், இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் அப்பா கஜராஜ்னு பல தெரிஞ்ச முகங்கள் நடிச்சிருக்காங்க.

ஜெயசந்த்ரா தயாரிச்சிருக்கார். கிருஷ்ணகிரி, பழனி, உடுமலை, பொள்ளாச்சி ஏரியாக்கள்ல படப்பிடிப்பை நடத்தியிருக்கோம். ஒளிப்பதிவாளர்கள்  கார்த்திக்ராஜா, ஏகாம்பரம் ஆகியோரிடம் உதவியாளரா இருந்த ஏ.செந்தில் குமார் ஒளிப்பதிவு செய்திருக்கார். ‘ஆறாவது சினம்’ ராஜேஷ்கண்ணன்  எடிட்டிங் படத்துக்கு பலம். நண்பர் உத்தமராஜா இசையமைக்கறார். ஒரு பாடலை எழுதியிருக்கேன். அதை சிம்பு பாடியிருக்கார். இன்னொரு பாடலான,  ‘உனக்குள் ஒளிச்சு வச்சேன்...’ யூ டியூப்ல செம ரீச் ஆகியிருக்கு.

விநியோகஸ்கர், தயாரிப்பாளரா உங்க அனுபவத்தை சொல்லுங்க?

விநியோகிச்ச 18 படங்கள்ல நாலுதான் லாபம் கொடுத்தது. என்னை மாதிரி இந்தத் துறைக்கு வர விரும்பறவங்களுக்கு கைட் பண்ண சரியான ஆட்கள்  இல்ல. நாமா இறங்கி முட்டி மோதித்தான் கத்துக்கணும். இங்க படம் இயக்கறதும், தயாரிக்கறதும் ஈஸி. ஆனா, மார்க்கெட்டிங் அவ்வளவு சுலபமில்ல.  அதுக்கு புதுசு புதுசா நிறைய யோசிக்கணும்!

மை.பாரதிராஜா