இன்டர்நெட் ஆஃப் திங்ஸ்-ஸ்மார்ட் சிட்டிக்கு உதவும் ஸ்மார்ட்!சென்ற இதழ் தொடர்ச்சி...

எல்லாவற்றையும் துல்லியமாகச் சொல்லும் இன்டர்நெட் ஆஃப் திங்ஸ் தொழில்நுட்பம் இன்னும் சில ஆண்டுகளில் அடுத்த பாய்ச்சலுக்குப் போய்விடும்  என்கிறார்கள்.

எப்படி? சிம்பிள். உலகெங்கும் பரவி, பெருகும் ஸ்மார்ட் சிட்டி நகரமைப்புக்கும் இந்தத் தொழில்நுட்பம் பயனுள்ளதாக இருக்கப் போகிறதாம்!  சாலைகளின் கண்காணிப்பு, குடிநீர் மற்றும் கழிவு நீர் மேலாண்மை, ஸ்மார்ட் மீட்டரிங், எனர்ஜி மேலாண்மை, மாசுக் கட்டுப்பாடு, தானியங்கி தீ  அணைப்பு வசதி, செக்யூரிட்டி மற்றும் CCTV கண்காணிப்பு, வேஸ்ட் மேனேஜ்மென்ட்... என பல செயல்களை குறைந்த செலவில் இந்த தொழில்நுட்பம்  துரிதமாகச் செய்துவிடும் என்கிறார்கள் வல்லுநர்கள். இதற்கு சரியான உதாரணம் சுவீடன்.

இந்நாட்டில் உள்ள மிகப்பெரிய அடுக்குமாடிக் குடியிருப்பில் இந்தத் தொழில்நுட்பம் பயன் படுத்தப்படுவதாகவும், இதன் மூலம் அவர்களுடைய அன்றாட  தண்ணீர் பயன்பாடு, குடிநீர் பயன்பாடு, மின்சார உபயோகம், சென்சார் லைட்டிங், ஹீட்டிங் சிஸ்டம், வேஸ்ட் மேனேஜ்மென்ட் போன்ற வசதிகள்  தேவைக்கு ஏற்ப பயன்படுத்தப்படுவதாகவும், அதனால் பண விரயம் தவிர்க்கப்படுவதாகவும், அதோடு அங்கு குடியிருப்பவர்களுக்கு 10 ஆண்டு  கணக்குப்படி தண்ணீர், மின்சாரம், ஹீட்டிங் போன்ற பயன்பாடுகளின் சேமிப்பு 45 மில்லியன் டாலர்அளவுக்கு இருப்பதாகவும் ஒரு புள்ளிவிவரம்  தெரிவிக்கிறது.

இந்த தொழில்நுட்பம் மூலம் வாகன ட்ரெக்கிங், ஸ்மார்ட் ஹாஸ்பிடல், ஸ்மார்ட் விவசாயம், ஸ்மார்ட் தோட்டம், ஸ்மார்ட் கால்நடை வளர்ப்பு,  ஸ்மார்ட் பிராணிகள் வளர்ப்பு, ரேடியேஷன் மானிட்டரிங், சுனாமி மானிட்டரிங், பருவகால அறிவிப்பு, காற்றின் மாசுபாடு, கழிவு மேம்பாடு, எரிசக்தி  குறைப்பு, காடுகளில் ஏற்படுகின்ற தீ போன்ற எண்ணற்ற விஷயங்களையும் அபாயங்களையும் நாம் உடனுக்குடன் கண்டறிந்து சரி செய்ய முடியும்.  இவ்வளவு வசதிகள் இந்த தொழில்நுட்பத்தால் கிடைக்கும் என்றாலும் இன்னொரு அபாயமும் இருக்கிறது.

இந்தத் தொழில்நுட்பத்தில் தகவல் பாதுகாப்பு, தனியுரிமை (Privacy) மற்றும் ஆட்டோமேஷன் போன்றவை மிகப்பெரிய அச்சுறுத்தலாக  பார்க்கப்படுகிறது. ஒருவேளை இயந்திரம் தானாகவே ‘டெர்மினேட்டர்’ படத்தில் வருவது போல் ஏதேனும் ஏடாகூடமாகச் செய்து ஆபத்து வந்தால்  என்ன செய்வது? ஹெல்த் ஹிஸ்டரி மற்றும் பைனான்சியல் தகவலை ஹேக்கர்ஸ் எடுத்துவிட்டால் என்ன செய்வது..? பல பில்லியன் சாதனங்களை  குறிப்பிட்ட வலைப்பின்னலில் இணைத்து அதன் மூலம் தரவிறக்கிய தகவல்களை யாரும் ஹேக் செய்யாமல் பாதுகாப்பது நிறுவனங்களுக்கு  மிகப்பெரிய சவாலாக உள்ளது.

இப்படிச் செய்தால் பாதுகாப்புச் செலவு அதிகரிக்கும் என ‘போர்ப்ஸ்’ பத்திரிகை தெரிவிக்கிறது. இப்போது பிரிட்டனில் சுமார் 9 மில்லியன் கார்களில்  WIFI வசதி உள்ளதாகவும், இந்த வசதி கொண்ட கார்களை ஹேக்கர்ஸ் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியும் என்றும் சொல்கிறார்கள்.  எனவே இந்தத் தொழில்நுட்பம் எதிர்காலத்தில் மிகப்பெரிய ஆபத்தை ஏற்படுத்தலாம் என்கிறது பிரிட்டன் ‘இண்டிபெண்டன்ட்’ பத்திரிகை. இந்தத்  தொழில்நுட்பத்தினால் உற்பத்திச் செலவு மற்றும் நேரம் மிச்சமானாலும், மிக அதிக அளவில் வேலையிழப்பு உண்டாகும் என்று  ஆஸ்திரேலியாவிலிருந்து வெளிவரும் ‘தி கார்டியன்’ பத்திரிகை எச்சரிக்கிறது.

மாற்றத்தை விரும்பாத மற்றும் புதிய தொழில் நுட்பத்துக்கு தம்மைப் புதுப்பிக்காத தொழிலாளர்கள் இந்தத் தொழில் நுட்பத்தினால் மிக அதிகமாக  பாதிக்கப்படலாம். ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழக கல்வியாளர்கள் கார்ல் பெனடிக்ட் மற்றும் மைகேல் ஆகியோர்களுடைய ஆராய்ச்சியில்,  அமெரிக்காவில் இப்போதைய வேலைகளில் 47% அதிக பாதிப்புக்கு உள்ளாகும் என தெரிய வந்திருக்கிறது. முன்னணி நிறுவனங்களான சாம்சங்,  IBM, கூகுள், CISCO, GE, ஆப்பிள், விண்டோஸ், அமேசான், யூபெர், டெஸ்லா போன்றவை இந்தத் தொழில்நுட்பத்தில் பெருமளவில் முதலீடு  செய்வதாக ‘போர்ப்ஸ்’ தெரிவிக்கிறது.

அத்துடன் அமெரிக்காவில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நிறுவனங்கள், இந்த தொழில்நுட்பத்தில் 125 பில்லியன் அமெரிக்க டாலர்ஸை முதலீடு  செய்துள்ளதாகவும், அந்த நிறுவனங்களின் மதிப்பு 613 பில்லியன் அமெரிக்க டாலர் உயரும் என்றும், இதனால் 3,42,000 இளைஞர்களுக்கு  வேலைவாய்ப்பு கிடைக்கும் என்றும் குறிப்பிடுகிறது உலக இணையத்தில் 50 பில்லியன் சாதனங்கள் 2020ம் ஆண்டுக்குள் இணைக்கப்படும் என்கிறது  ‘கார்ட்னர்’. இன்டர்நெட் ஆஃப் திங்ஸின் மொத்த வளர்ச்சியில் ஆசியாவின் பங்கு 35% இருக்கும் என்கிறது ‘Zinnor Zone’. போலவே இன்டர்நெட் ஆஃப்  திங்ஸின் மொத்த உலக செலவுத்தொகை 2021ல் 253 பில்லியன் அமெரிக்க டாலரைத் தொடும் என ‘Forester’ கணித்திருக்கிறது.

உற்பத்தி நிறுவனங்களின் முதலீடு 2020ல் 60 டிரில்லியன் அமெரிக்க டாலராக வளரும் என நம்புகிறது GE நிறுவனம். இவற்றையெல்லாம்  பார்க்கும்போது இதன் வளர்ச்சி அடுத்த சில ஆண்டுகளில் மிகப்பெரிய மாற்றத்தை உருவாக்கிவிடும் எனத் தெரிகிறது. பாதுகாப்புக் குறைபாடு,  தனிப்பட்ட நபர்களின் நடவடிக்கையில் குறுக்கீடு, சிக்கலான ஆட்டோமேஷன் கட்டமைப்பு போன்ற குறைபாடுகள் இப்போது இருந்தாலும்,  நிறுவனங்களின் அசுர பங்களிப்பு, தொழில்நுட்பத்தின் வீரியம் மற்றும் வளர்ச்சி வேகம் போன்றவை இந்தக் குறைகளை நீக்கி வாகைசூடும் என்றே  வல்லுனர்கள் கணிக்கிறார்கள்!

(முற்றும்)
ஆஸ்திரேலியாவிலிருந்து கோவிந்தராஜன் அப்பு
B.Com., MBA, ACA, CPA