பசுமை வழிச் சாலை அவசியமா?




சென்னை டூ சேலம் பசுமை வழிச் சாலை திட்டத்தை அரசு அறிவித்ததிலிருந்து நாலாப்பக்கமும் எதிர்ப்புகளும்,  போராட்டங்களும் பெருகிக்கொண்டே வருகின்றன. ‘‘இந்த திட்டத்தால் லட்சக்கணக்கான மக்களின் வாழ்வாதாரம்  பாதிக்கப்படும்...’’ என்று கொந்தளிக்கின்றனர் சமூக ஆர்வலர்கள். ஆனால் அரசோ, ‘‘பயண நேரம் குறையும், தொழில்  வளம் பெருகும், அதனால் வேலை வாய்ப்புகள் அதிகரிக்கும், மக்களின் பொருளாதாரமும் முன்னேறும்...’’ என்கிறது.  இதுகுறித்து நிபுணர்களிடம் பேசினோம்.

‘‘சென்னையிலிருந்து சேலத்துக்குச் செல்ல முன்பே மூன்று வழித்தடங்கள் (உளுந்தூர்பேட்டை வழி, கிருஷ்ணகிரி வழி,  வாலாஜா வழி) இருக்கின்றன. இதுபோக நாட்டறம்பள்ளி வழியாகவும் ஒரு பாதை இருப்பதாகச் சொல்கிறார்கள். நிலைமை இப்படியிருக்க ஐந்தாவதாக ஒரு சாலை எதற்கு? இதற்காக 10 ஆயிரம் ஏக்கர் வரையிலும் மக்களின்  விவசாய நிலங்களை அடிமாட்டு விலைக்கு வாங்குவதாகச் சொல்கிறார்கள். இந்தத் திட்டத்தால் விவசாய நிலங்கள்  பறிபோவது மட்டுமல்லாமல், கிணறுகள், நீர்நிலைகள், வனப் பிரதேசங்கள் எல்லாம் இருந்த இடம் தெரியாமல்  காணாமல் போய்விடும்.

உதாரணமாக திருவண்ணாமலையில் மட்டும் சுமார் 5 காப்புக்காடுகள் அழிந்துபோகும். இந்தத் திட்டம் மக்களுக்கு  மட்டுமல்ல; சுற்றுச்சூழலுக்கும் கேடாக முடியும்...’’ என்று ஆரம்பித்தார் ‘பூவுலகின் நண்பர்கள்’ சுந்தர்ராஜன்.‘‘இந்த  பசுமை வழிச் சாலை திட்டத்தால் பயண நேரம் பாதிக்குமேல் குறையும், தொழில் வளர்ச்சி பெருகும் என்கிறார்கள்.  தமிழகத்தில் தொழில்வளர்ச்சி உள்ள பிரதேசங்கள் எல்லாமே நெடுஞ்சாலையை நம்பாமல் மனித வளத்தை மட்டுமே  நம்பி உருவானவை. கோவை. சிவகாசி, தூத்துக்குடி, கடலூர், திருப்பூர் போன்றவை தங்க நாற்கரச் சாலைத்  திட்டத்துக்கு முன்பே தொழில்வளர்ச்சி அடைந்த பகுதிகள். கன்னியாகுமரி வரை போகும் நாற்கர திட்டத்தால்  விழுப்புரத்திலும், விருதுநகரிலும், பெரம்பலூரிலும் தொழில்வளர்ச்சி ஏற்பட்டு விட்டதா என்ன? சாலைக்கும்  தொழில்களுக்கும் முடிச்சுப்போடுவது தமிழகத்தைப் பொறுத்தவரைக்கும் சரியானதல்ல...’’ என்று சுந்தர்ராஜன் கறாராக  முடிக்க, ‘‘இந்தத் திட்டம் சில தனியார் தொழில் முனைவோர்களுக்காகக் கொண்டுவரப்பட்ட திட்டம்...’’ என அடித்துச்  சொல்கிறார் அகில இந்திய விவசாயிகள் மகாசபையின் மாநிலக்குழு உறுப்பினரான சந்திரமோகன்.

‘‘இது பசுமை வழித்திட்டம் அல்ல; பசுமையை அழித்து உருவாகும் திட்டம். இந்தத் திட்டம் மட்டும் நடைமுறைக்கு  வந்தால் செழிப்பான பல பகுதிகள் சுவடில்லாமல் போய்விடும். குறிப்பாக சேலம் தமிழ்நாட்டின் மாம்பழத் தலைநகர்.  சேலத்தின் ஜருகு மலையிலிருந்து தர்மபுரியின் மீட்புத்துறை வரையில் இருக்கும் 100 கி.மீட்டரில் மாம்பழச் சாகுபடி  ஜோராக நடக்கிறது. இந்தத் திட்டத்தால் இதுவும் அழிக்கப்படும். இனி அல்போன்சா மாம்பழத்தை தமிழக மக்கள்  ருசிப்பது என்பது வெறும் கனவாகிவிடும்...’’ என்று சந்திரமோகன் சொல்ல, ‘அரசு இந்த நிலங்களுக்காக இழப்பீடு  தருவதாகச் சொல்கிறது. ஆனால், இழப்பீட்டில் நியாயம் இல்லை என்று விவசாயிகள் கருதுகின்றனர். நல்ல இழப்பீடு  கிடைத்தால் விவசாயிகள் நிலத்தைக் கொடுக்க முன்வருவார்களா..?’ என்று கேட்டோம்.

‘‘நிச்சயமாக வரமாட்டார்கள். இங்கே ஓர் ஏக்கரிலிருந்து மூன்று ஏக்கர் வரை வைத்திருக்கும் குறு விவசாயிகளே  பெரும்பான்மையாக இருக்கிறார்கள். சொந்தமாக நிலத்தை வைத்திருப்பது என்பது அவர்களுக்கு கவுரவமான,  மரியாதையான ஒரு விஷயம். தவிர, இயற்கையைச் சார்ந்து நிம்மதியான ஒரு வாழ்க்கையை அவர்கள் வாழ்ந்து  வருகிறார்கள். பணத்துக்காக அந்த வாழ்க்கையை அவர்களால் எப்படி இழக்க முடியும்? இங்குள்ள ஓர் ஏக்கரின்  சந்தைமதிப்பு சுமார் 25 லட்சத்திலிருந்து ஒரு கோடி வரை. ஆனால் அரசோ, ஒரு ஏக்கருக்கு 8 லட்சம் மட்டுமே  கொடுப்பதாகச் சொல்கிறது. 1956ல் கொண்டுவரப்பட்ட நிலம் கையகப்படுத்தும் சட்டத்தில் 2013ம் வருடம் திருத்தம்  செய்தார்கள். ஆனால், இந்த சாலைத் திட்டத்தில் 1956 சட்டத்தையே பின்பற்றப் போவதாகச் சொல்கிறார்கள்.

திருத்தம் செய்யப்பட்ட சட்டத்தின்படி ஒருவரின் நிலத்தை அரசு வாங்கும்போது அந்த நிலத்தின் உரிமையாளரிடம்  கருத்து கேட்க வேண்டும். நிலப் பரிமாற்றத்தில் வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும், மீள்குடியேற்றம்  போன்றவற்றைத் தெரிவிக்க வேண்டும், புனருத்தாரணம் செய்ய வேண்டும் போன்ற விதிகள் இருக்கின்றன. ஆனால்,  அரசு இதையெல்லாம் ஓரமாக வைத்துவிட்டதால்தான் மக்கள் எதிர்ப்பைக் காட்டி வருகிறார்கள். இந்தத் திட்டத்தால்  சுமார் இருபதாயிரம் விவசாயிகள் நேரடியாக பாதிக்கப்படுவார்கள். முப்பதாயிரம் வீடுகள் தரைமட்டமாக்கப்படும்.

விவசாயத்தை நம்பி வாழும் கூலித்தொழிலாளர்கள், விவசாயப் பொருளை சந்தைப்படுத்தும் நபர்கள் என்று பல லட்ச  மக்களின் வாழ்வாதாரமே பாதிப்படையும்...’’ என்ற சந்திரமோகன் இத்திட்டத்துக்குப் பின்னால் உள்ள  உண்மைகளையும் உடைத்தார்.‘‘சேலம் கஞ்ச மலையில் ‘ஜிண்டால்’ என்ற வடநாட்டு நிறுவனம் உள்ளது. சென்னை  - சேலம் பசுமை வழிச்சாலை கஞ்ச மலையில்தான் போய் முடிகிறது. ஜிண்டால் நிறுவனம் அங்கேயிருக்கும் இரும்புத்  தாதுக்களை வெட்டி எடுத்து ஏற்றுமதி செய்கிறது. தவிர, திருவண்ணாமலையில் உள்ள கவுந்திமலை என்னும்  மலைப்பிரதேசத்தையும் 2005ல் ஜிண்டால் வாங்கியது. அங்கும் இரும்புத் தாதுக்கள் உண்டு. 2008ல் இதற்கு மக்கள்  எதிர்ப்பு தெரிவித்ததால் அங்கே அவர்களால் எதுவும் செய்யமுடியவில்லை. அரசு இந்த சாலைத் திட்டத்தின் மூலம்  ஜிண்டால் நிறுவனத்தின் இரும்புத் தாதுக்களை வெளிமாநிலங்களுக்கும், வெளிநாடுகளுக்கும்  ஏற்றுமதி செய்வதற்கான  மறைமுகமான முயற்சிகளைச் செய்து வருகிறதோ என்ற சந்தேகம் எழுகிறது.

சில வருடங்களுக்கு முன் சேலம் உருக்காலையை தனியார்மயமாக்கும் செயலில் அரசு இறங்கியது. இதற்கும் அந்த  ஜிண்டால் நிறுவனமே முயற்சிகளைச் செய்தது. இன்னொரு விஷயம், சேலம் போன்ற மாவட்டங்களில் இராணுவ  ஆயுதங்களைத் தயாரிக்கும் நிறுவனங்களை அரசு நிறுவ இருக்கிறது. இதில் அம்பானி, அதானி போன்றவர்கள்  களமிறங்கத் தயாராக உள்ளனர். இதற்காகத்தான் இந்த ஏற்பாடுகளோ என்ற கேள்வி எழுகிறது...’’ என சந்திரமோகன்  முடிக்க, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் பொதுச்செயளாலர் சண்முகம் மேலும் நில விவரங்களைப்  பகிர்ந்துகொண்டார்.‘‘இந்தத் திட்டத்தால் விவசாய நிலங்கள், வனங்கள், மலைகள் மற்றும் குன்றுகள் மட்டுமில்லாமல்  சுமார் 45 கிராமங்கள் காணாமல் போய்விடும். கருத்துக்கணிப்பு என்னும் பெயரில் அரசும், அதிகாரிகளும் ஆளும்  கட்சியினரை வைத்து வீடியோ எல்லாம் எடுத்து ‘மக்கள் இந்தத் திட்டத்துக்கு ஆதரவாக இருக்கிறார்கள்’ என்று  நாடகம் நடத்துகிறார்கள். இப்போதைக்கு நிலத்தைக் கையகப்படுத்த சேலம் மற்றும் தர்மபுரி மக்களுக்குத்தான் அரசு  நோட்டீஸ் கொடுத்திருக்கிறது. போராட்டங்கள் வலிமையடைந்திருப்பதால் ஒரு நல்ல தீர்வு கிடைக்கும் என்று  நம்புகிறோம்...’’ என்றார்.              

-டி.ரஞ்சித்