கானலாகிறதா காவிரிக் கனவு? :நூற்றாண்டைக் கண்ட தண்ணீர் யுத்தம்!



தமிழர் வாழ்வோடு ஆயிரமாயிரம் ஆண்டுகளாகத் தொடர்புடைய ஜீவ நதி, காவிரிதான். வருடந்தோறும்  லட்சக்கணக்கான ஹெக்டேர் விளைநிலங்கள் காவிரியின் கால் படாமல் சருகாய் காய்ந்து தரிசாய் உலர்ந்து  கொண்டிருக்கின்றன. வருடத்துக்கு ஒருமுறை சில நாட்கள் காவிரி பற்றி தீவிரமாக ஊடகங்களில் செய்தி அடிபடும்.  அப்புறம் அப்படியே மறக்கடிக்கப்படும். இடையே, நதி நீர் பங்கீடு ஒப்பந்தம் வந்தது, நடுவர் மன்றம் வந்தது, காவிரி  மேலாண்மை ஆணையம் வந்தது. ஆனால், இப்போதுவரை காவிரி மட்டும் வரவே இல்லை. காவிரிப் பிரச்னையின்  கதை காவிரி யின் ஓட்டத்தைப் போலவே பலவித சுழிப்புகளும் திருப்பங்களும் நிறைந்தது. இது சுமார் இருநூறு  ஆண்டுகளுக்கு முன்பு தோன்றியது.

1807ம் ஆண்டில் காவிரியின் நதி நீரைப் பகிர்வதில் அப்போதைய மெட்ராஸ் மாகாண அரசுக்கும் மைசூர் அரசுக்கும்  இடையே உரசல் எழுந்தது. இது பல வருடங்களாகப் புகைச்சலில் இருந்தது. 1892ல் முதல் முதலாக இரு  மாகாணங்களுக்கு இடையே ஓர் ஒப்பந்தம் கையெழுத்தானது. அதன்படி, காவிரி ஓடும் பகுதியில் எங்கேனும் அணை  கட்டுவதாக இருந்தால் மைசூர் அரசு சென்னை மாகாணத்திடம் அனுமதி பெற வேண்டும் என்று முடிவானது. மைசூர்  அரசு 1910ல் கண்ணம்பாடி என்ற இடத்தில் 41.5 டி.எம்.சி கொள்ளளவு கொண்ட அணை ஒன்றை நிர்மாணிக்க  முயன்றது. இதை, சென்னை மாகாண அரசு ஆங்கிலேய நடுவண் அரசிடம் முறையிட்டது. அணையின் கொள்ளளவு 11  டி.எம்.சிக்கு மேல் போகக்கூடாது என்ற நிபந்தனையுடன் தீர்ப்பு வந்தது.

ஆனால், மைசூர் அரசு திட்டமிட்டபடி 41.5 டி.எம்.சி அளவுக்கே அணையைக் கட்டியது. இந்த விவகாரம் தொடர்பாக  அப்போதே கிரிஃபின் என்ற நடுவர் நியமிக்கப்பட்டார். ஆனால், இவரின் முயற்சிகள் தோல்வியில் முடிந்தன.ஒரு  வழியாக 1924ம் ஆண்டில் இரு மாகாணங்களுக்கும் இடையே ஐம்பது ஆண்டுகால ஒப்பந்தம் கையெழுத்தானது.  தொடர்ந்து 1929 மற்றும் 1933ல் போடப்பட்ட துணை ஒப்பந்தங்களின்படி மைசூர் அரசு கிருஷ்ணராஜ சாகர்  அணையையும் சென்னை மாகாணம் மேட்டூர் அணையையும் கட்டிக்கொண்டன. இந்திய விடுதலைக்குப் பிறகு இந்தப்  பிரச்னை மேலும் தீவிரமானது. மொழிவாரி மாகாணங்கள் அமைந்த பிறகு தமிழக அரசுக்கும் கர்நாடக அரசுக்குமான  பிரச்னையாக வளர்ந்த இதில் கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களின் நலனும் சேர்ந்திருப்பதால் நான்கு மாநிலப்  பிரச்னையானது.

ஆங்கிலேய அரசு காலத்தில் போடப்பட்ட ஒப்பந்தம் 1972ம் ஆண்டு காலாவதியானது. அந்த ஒப்பந்தம் முடிவதற்கு சில  வருடங்கள் முன்பே மத்திய அரசு ‘காவிரி உண்மை அறியும் குழு’ ஒன்றை ஏற்படுத்தியது. இந்தக் குழு பல்வேறு  தரப்பையும் விசாரித்து 1972ம் ஆண்டு அறிக்கையைச் சமர்ப்பித்தது. இதன் அடிப்படையில் பல்வேறு கூட்டங்கள்  நடத்தப்பட்டு 1976ம் ஆண்டு தமிழக அரசும், கர்நாடக அரசும் இதில் கையொப்பமிட்டன. ஆனால்,அதுநடைமுறைப்  படுத்தப்படாமல் போனது.இந்தியா முழுதும் பதினான்கு மகா நதிகள், 44 நடுத்தர நதிகள் ஓடுகின்றன. இவற்றில் சுமார்  ஒன்பது ஆறுகளுக்கு மேல் இரு மாநிலங்களுக்கு இடையே ஓடுகின்றன.

இந்த ஆறுகள் ஓடும் மாகாணங்களுக்கு இடையே இந்த நதி நீரைப் பங்கீடு செய்வதற்காக அரசியல் அமைப்புச் சட்டம்  262 புதிதாகச் சேர்க்கப்பட்டது. இந்தப் பிரிவின்படி, நதி நீர்ப் பங்கீட்டில் சிக்கல் ஏற்பட்டால் அதை நாடாளுமன்றம்  தலையிட்டு தீர்த்து வைக்க வேண்டும். மேலும், நதிநீர் பிரச்னைகள் சட்டம் 1956ம் ஆண்டு  ஏற்படுத்தப்பட்டுள்ளது.ஆனால், இப்படியான சட்டங்கள் மூலமாக எல்லாம் காவிரிப் பிரச்னையைத் தீர்க்கவே  முடியவில்லை. இந்த நிலையில்தான் 1990ம் ஆண்டு காவிரி நடுவர் மன்றம் அமைக்கப்பட்டது. அடுத்த ஆண்டு  தமிழகத்துக்கு 205 டி.எம்.சி. தண்ணீர் தர வேண்டும் என்று நடுவர் மன்றம் ஓர் இடைக்காலத் தீர்ப்பைக் கூறியது.

இந்தத் தீர்ப்பு கர்நாடகாவில் பெருங்கொந்தளிப்பை உருவாக்கியது. காவிரிக்கு பதிலாக ரத்த ஆற்றை ஓடவிட்டது  கர்நாடகா. மைசூர், பெங்களூர் பகுதிகளில் தமிழர்களுக்கு எதிராகப் பரவிய கலவரத்தில் சுமார் 18 பேருக்கு மேல்  இறந்தனர். தமிழர்க்கு சொந்தமான பல லட்சம் மதிப்புள்ள பொருட்கள் சூறையாடப்பட்டன. இத்தனைக்குப் பிறகும்  காவிரி நதி முறையாக வந்து சேரவில்லை. பருவ மழை அதிகரித்து வெள்ளம் பெருகி கர்நாடக அணைகள் நிரம்பினால்  மட்டுமே தமிழகத்துக்கு காவிரி வரும் என்ற நிலைமை.இதனால், காய்ந்து கெட்ட பயிர்கள் பாய்ந்து கெட்டு அழுகும்.  இதுதான் பல ஆண்டு காலத் தொடர்கதை.

ஒருவழியாக 2007ம் ஆண்டு காவிரி நடுவர் மன்றம் தனது இறுதித் தீர்ப்பை வழங்கியது. ஆயிரக்கணக்கான பக்கங்களில்  ஐந்து பாகங்களாக வெளிவந்த மிக நீண்ட தீர்ப்பில் தமிழகத்துக்கு 419 டி.எம்.சி. என்று தீர்ப்பானது. அதாவது, காவிரியில்  உருவாகும் மொத்த நீர் 740 டி.எம்.சி. எனக் கணக்கிடப்பட்டு அதில் 419 டி.எம்.சி. நமக்குச் சொந்தம் எனப்பட்டது.  இதிலும், 192 டி.எம்.சி. தான் கர்நாடக அரசு நமக்குத் தரும்; எஞ்சியதை தமிழகத்தில் உள்ள காவிரியின் நீர்ப்பிடிப்புப்  பகுதி களில் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்று தீர்ப்பானது. இந்தத் தீர்ப்புக்கு எதிராக தமிழகம், கர்நாடகம் மற்றும்  கேரள அரசுகள் உச்சநீதி மன்றத்தை நாடின. பத்து ஆண்டுகளுக்கும் மேல் நடந்த இந்த வழக்கில் கடந்த பிப்ரவரி மாதம்  தீர்ப்பு வந்தது. அதில் தமிழகத்துக்கு வழங்கப்பட்ட 192 டி.எம்.சி. என்பது 177.25 ஆக மேலும் குறைக்கப்பட்டது.

இந்தத் தீர்ப்பை நடைமுறைப்படுத்த ஆறு வாரங்களுக்குள் செயல் திட்டம் உருவாக்க வேண்டும் என்றும் உச்ச  நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதனையடுத்து கடந்த மே மாதம் மத்திய அரசு 14 பக்க செயல்திட்ட அறிக்கையைத் தாக்கல்  செய்தது. இதன்படி, காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்க தீர்மானிக்கப்பட்டது. நதி நீர் பங்கீடு, அணைகள் திறப்பது  என அனைத்தையுமே இந்த ஆணையம்தான் மேற்கொள்ள வேண்டும். இந்த ஆணையம் தில்லியிலிருந்து செயல்படும்.  இந்தத் தீர்ப்பு அடுத்த பதினைந்து ஆண்டுகளுக்கு அமலில் இருக்கும். காவிரி மேலாண்மை ஆணையமானது மத்திய  அரசால் அமைக்கப்பட வேண்டும். ஆனால், மத்திய அரசோ அரசியல் காரணங்களுக்காக தமிழகத்தை  வஞ்சித்துவருகிறது. என்று தணியும் எங்கள் பயிர்களின் தாகம் என்று விழி பூத்துக் காத்திருக்கிறார்கள் காவிரி டெல்டா  விவசாயிகள்.

- இளங்கோ கிருஷ்ணன்