பல்கலைக்கழகத்தில் பறை இசைக்கலை



ஆச்சர்யமாக இருக்கிறதல்லவா? இந்த மகத்தான காரியத்தைத்தான் கோவை பாரதியார் பல்கலைக்கழகம் செய்திருக்கிறது. ஆம். ஓர் ஆண்டு பட்டயப் படிப்பாக பறை இசைக்கலையை அறிமுகப்படுத்தியுள்ளது.

“ஒடுக்கப்பட்ட மக்களின் இசை என்ற தவறான கண்ணோட்டத்தில் மட்டுமே பார்க்கப்படும் பறை இசையை அனைத்து தரப்பு மக்களிடமும் கொண்டு  சேர்க்கும் நகர்வுதான் இந்த முயற்சி...” என்கிறார் நிமிர்வு கலையகத்தின் பறையிசைப் பயிற்சியாளரான சக்தி. “தாள இசைகளின் தாயாக விளங்கும்  பறை, சாவுச்சடங்குக்கு மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்தது. பறை கருவியின் பரிமாணத்தில் வந்த தாளங்கள் எல்லாம் மேடைகளிலும்,  கோயில்களிலும் இசைக்கப்படுகின்றன. பறையோ சாதி ரீதியாக ஒதுக்கப்பட்டு கோயில் வாசலில் நிற்கிறது.

இந்த இசையை மீட்க பல்வேறு பறை இசைக்கலைஞர்களும் முயற்சி செய்தனர். அதில் நாங்களும் ஒருவராக இருக்கிறோம்...’’ என்று சொல்லும் சக்தி,  விடுதலையைப் பற்றிப் பேசக்கூடிய இசைக்கருவிகளில் முதன்மையாக இருப்பது பறை இசைதான் என்கிறார். ‘‘தமிழர்களின் பண்பாட்டுக் கலைவடிவம்  என பறையைச் சொல்லலாம். இதை அனைவரும் உணர வேண்டுமானால் மாணவர்களுக்கு பறை இசைக் கலை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த  வேண்டும். அதைத்தான் நாங்கள் செய்கிறோம். பள்ளி, கல்லூரிகளில் சிறப்பு வகுப்பாக பறை இசை பயிற்சி நடத்தி வந்தோம்.

இதன் அடுத்தகட்டமாக வகுப்பறைக்குக் கொண்டு செல்ல முடிவு செய்தோம். பறை இசைக்கு தனியாக இசைக்குறிப்புகள் வரையறுக்கப்பட்டு பாடத்  திட்டமாக அறிவிக்கப்படுவது இதுவே முதல்முறை. கோவையை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் நிமிர்வு கலையகத்தின் தொடர்  முயற்சிக்குக் கிடைத்த வெற்றி இது. கோவை மாவட்டம் பேரூரில் தாய்த் தமிழ்ப் பள்ளியும், தமிழ்க் கல்லூரியும் உள்ளன. இந்தக் கல்லூரி பல தமிழ்  அறிஞர்களை வளர்த்துள்ளது. தமிழ்க் கல்லூரியின் முதல்வர் மருதாசல அடிகளார் அக்கல்லூரியை பறை இசைக் கலைக்கான களமாக எங்களுக்கு  அமைத்துக் கொடுத்தார்.

அவரே பாரதியார் பல்கலைக்கழக நிர்வாகிகளிடம் கலந்து பேசி சமுதாயக் கல்லூரியில் பறை இசையைப் பாடத்திட்டமாகக் கொண்டுவர பெரிதும்  உதவி செய்தார். அதன்பிறகு எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகத்தில் பேசினோம். இக்கலையை பட்டயப் படிப்பாகக் கொண்டு வர  அவர்களும் ஒப்புக்  கொண்டுள்ளனர். இப்போது தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழத்தில் பட்டயப் படிப்பாகக் கொண்டு வரும் வேலைகள் நடக்கின்றன. தொடர்ந்து தமிழகம்  முழுவதும் உள்ள கல்லூரிகளுக்கு இதைக் கொண்டு சேர்க்கும் வேலையில் மும்முரமாக ஈடுபட்டுள்ளோம்...’’ என்றவரிடம் பறை இசையைப்  பாடத்திட்டமாக வரையறுத்தது குறித்து கேட்டோம்.

“சங்க இலக்கிய நூல்களில் பறை இசை குறித்து ஆய்வு செய்தபோது அதை பாடத்திட்டமாகக் கொண்டு வரும் அளவுக்கு முக்கியத்துவம் இருப்பது  தெரிந்தது. தொல்காப்பியம், ஆறு. ஆளவந்தார் எழுதிய ‘தமிழர் போர்க் கருவிகள்’, மு.வளர்மதி எழுதிய ‘பறை-ஓர் ஆய்வு நூல்’, பஞ்ச மரபு,  கே.குணசீலனுடைய ‘நாட்டுப்புற இசைக்கலை’ போன்ற பல்வேறு நூல்களில் இருந்து குறிப்புகள் எடுத்து பாடத்திட்டம் வரையறுக்கப்பட்டுள்ளது. நான்கு  எழுத்துத் தேர்வுகளும், இரண்டு செய்முறைத் தேர்வுகளையும் உள்ளடக்கியது. இதன் அடுத்த கட்டமாக பறை இசை பயிற்றுவிப்பாளர்களுக்கான  முதுநிலை பட்டயப் படிப்பை அறிமுகப்படுத்தும் முயற்சியில் இருக்கிறோம்...’’ என்கிறார் சக்தி.  


ஜெ.சதீஷ்