தேவைன்னா hire பண்ணு! சரியில்லைன்னா fire பண்ணு!



சின்னத்திரை திரைக்கதை ஆசிரியர் எஸ்.அசோக்குமார் சொல்லும் டெக்னிக்

‘‘ஒரு நல்ல ரைட்டரா பயணிக்கறது திருப்தியா இருக்கு. தொடக்க காலத்துல கூட வந்தவங்கள்ல பலர் இப்ப வேற வேற துறைகளுக்குத்  தாவிட்டாங்க. இந்தச் சூழல்ல இத்தனை காலமா டிவி உலகத்துல நான் தாக்குப் பிடிக்கறதே பெரிய சாதனைதான்...’’ அடக்கமாகப் பேசுகிறார்  எஸ்.அசோக்குமார்.

‘காலா’ ஹீரோயின் ஈஸ்வரிராவ் நடித்த ‘கோகிலா எங்கே போகிறாள்’,  ‘காவியாஞ்சலி’, ரம்யா கிருஷ்ணனின் நடிப்பில் ‘தங்கம்’, ‘வம்சம்’ உட்பட  25க்கும் மேற்பட்ட சீரியல்களுக்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதியிருப்பவர் இவர். ‘‘இப்ப சீரியல் பார்க்கிறவங்க உடனுக்குடன் விமர்சிக்கறாங்க. யூ  டியூப்ல தேடிப்பிடிச்சு சீரியல் பார்க்கிறவங்க அதிகமாகிட்டாங்க. எபிசோட் பிடிக்கலைனா உடனுக்குடன் திட்டிடறாங்க. இந்த சூழல்ல தினமும்  சீரியலுக்கு திரைக்கதை எழுதறது பெரிய சவால். இதை மக்களும் புரிஞ்சு வைச்சிருக்காங்க. அதனாலதான் ஒருநாள் எபிசோட் சொதப்பினாலும் அதை  சரிசெய்ய சான்ஸ் தர்றாங்க.

அடுத்தடுத்த எபிசோட்ஸ் நல்லா வர்றப்ப ‘பழைய பகை’யை மறந்துட்டு தலைல தூக்கி வைச்சு கொண்டாடறாங்க...’’ என்று சொல்லும் அசோக்குமார்,  ஆங்கில இலக்கியத்தில் பட்டம் பெற்றிருக்கிறார். ‘‘பூர்வீகம் திருநெல்வேலி பக்கம் சிவகிரி. அப்பா சுந்தரம் போலீஸ் கான்ஸ்டபிள். அம்மா  சொர்ணத்தாய் இல்லத்தரசி. பெரிய குடும்பம். வீட்ல மொத்தம் ஒன்பது பேர். பாளையங்கோட்டை செயின்ட் ஜான்ஸ்ல படிச்சேன். காலேஜ் முடிச்சதும்  சென்னைக்கு வரவேண்டிய சூழல். சினிமாவில சேர்ந்து ஜெயிக்கணும்னு எல்லாம் இங்க வரலை. பொழப்புத் தேடித்தான் சென்னை வந்தேன். இங்க  தங்க உறவுக்காரர் வீடு இருந்தது.

ஆரம்பகாலங்கள்ல நான் சந்திச்ச நண்பர்கள் பலரும் உதவி இயக்குநராக முயற்சி செஞ்சுட்டு இருந்தாங்க. சினிமா கம்பெனில அவங்களை நடத்தின  விதத்தைப் பார்த்து அதிர்ந்துட்டேன்!  அப்ப சினிமாவுல நிறைய கதாசிரியர்கள் இருந்தாங்க. பஞ்சு அருணாசலம் சார், கலைமணி சார், கலைஞானம்  சார், ஆர்.செல்வராஜ், ஆர்.சுந்தர் ராஜன்னு பலருக்கும் மரியாதை இருந்தது. அதனால ரைட்டர் ஆகலாம்னு முடிவெடுத்தேன். கல்லூரி நாட்கள்ல  நிறைய ஆங்கில நாவல்கள் படிப்பேன். அதெல்லாம் கைகொடுத்தது. நண்பர்கள் மூலமா இயக்குநர் மனோஜ்குமார் அறிமுகம் கிடைச்சது. அவர் பிரபு,  குஷ்பு நடிப்புல அப்ப ‘மறவன்’ எடுத்துட்டிருந்தார். அதோட கதை விவாதத்துல கலந்துகிட்டேன்.

அப்புறம் ரமேஷ் அரவிந்த் நடிச்ச ‘பாட்டு வாத்தியார்’ படத்துக்கு கதையும், அர்ஜுன் நடிச்ச ‘செங்கோட்டை’க்கு கதை, வசனமும் எழுதினேன்...’’ என்று  சொல்லும் அசோக்குமாருக்கு இந்தக் காலகட்டத்தில்தான் திருமணமாகி இருக்கிறது. மனைவி ஹேமலதா, எம்ஏ முடித்தவர். ‘‘சின்னத்திரைக்கு வந்தது  ‘கங்கா யமுனா சரஸ்வதி’ தொடர் வழியாதான். இதனோட கதை விவாதத்துல ஆபாவாணன் சார் கூட கலந்துகிட்டேன். நிறைய கத்துக்க முடிஞ்சது.  யார் வேணாலும் பெஸ்ட் சீன், பெஸ்ட் டயலாக் சொல்ல முடியும். அந்த சுதந்திரத்தை ஆபாவாணன் சார் கொடுத்தார். இந்த தொடர் அப்ப மறைந்த  இயக்குநர் சி.வி.ராஜேந்திரன் சார் நட்பு கிடைச்சது.

அவர் வழியா சிவாஜி சார் மகன் ராம்குமாரை சந்திச்சேன். சிட்னி ஷெல்டன் எழுதின ‘If Tomorrow Comes’ நாவல் கதையை அவர்கிட்ட  சொன்னேன். அவருக்கு பிடிச்சுப் போச்சு. அதைத்தான் ‘கோகிலா எங்கே போகிறாள்’னு தொடரா தயாரிச்சாங்க. கதை, திரைக்கதை, வசனம்னு எனக்கு  கிரெடிட் வந்த முதல் தொடர் இதுதான். இந்த சீரியலைப் பார்த்துட்டு ரைட்டர் பீட்டர் செல்வகுமார் என்னை மனதாரப் பாராட்டினார். இவர் வழியா  ‘காவியாஞ்சலி’ தொடருக்கு எழுதும் வாய்ப்பு கிடைச்சது...’’ என்ற அசோக்குமார், இத்தொடரின் வெற்றிக்குப் பிறகு அந்த சீரியலைத் தயாரித்த ஏக்தா  கபூரின் பாலாஜி டெலிஃபிலிம்ஸில் ஒருவராகப் பணிபுரிய ஆரம்பித்திருக்கிறார்.

‘‘12 வருஷங்கள் அந்த நிறுவனத்துல இருந்தேன். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம்னு தென்னிந்திய மொழிகள்ல ஏக்தா கபூர் தயாரிச்ச  20  சீரியல்களுக்கு எழுதினேன். மொத்தம் 15 ஆயிரம் எபிசோட்ஸ்! ‘ஒரு விஷயம் தேவைனா அதை hire பண்ணு... அது சரிவரலைன்னா fire பண்ணு’.  இதுதான் ஏக்தா கபூரோட சக்சஸுக்குக் காரணம். நான் எழுதற சீரியல்கள்ல சோகம், அழுகை இருக்காது. கமர்ஷியல் + பொழுதுபோக்குக்கு  முக்கியத்துவம் கொடுப்பேன். இதுக்குப் பிறகு ரம்யா கிருஷ்ணன் மேம் நடிச்ச தொடர்களுக்கு எழுதற வாய்ப்பு கிடைச்சது. ‘தங்கம்’, ‘வம்சம்’ எல்லாம்  பேசப்பட்ட தொடர்கள்.

ஒரே நாள்ல என் நாலு சீரியல்களும் டெலிகாஸ்ட் ஆன அற்புத தருணங்கள் எல்லாம் வாழ்க்கைல நடந்திருக்கு...’’ என்று நெகிழ்பவரின் ஒர்க்கிங்  ஸ்டைல் தனி. ‘‘ஒவ்வொரு ஆடியன்ஸும் தனிப்பட்ட முறைல தங்களை திருப்திப்படுத்தணும்னு விரும்பறாங்க. கிரிக்கெட் மேட்ச் பார்க்கிறப்ப கூட  ஆட்டத்தை யாரும் ரசிக்கறதில்லை. ‘இப்படி விளையாடியிருக்கணும்’னுதான் சொல்றாங்க. இப்படியான சூழல்லதான் சீரியல் ரைட்டர்ஸ் இயங்கறோம்.  ஒருநாள்ல 30 சீன்ஸ் எல்லாம் எழுதியிருக்கேன். ஒரு எபிசோடை அடுத்த கட்டத்துக்கு நகர்த்த முடியாம 10 நாட்கள் வரை தவிச்சும் இருக்கேன்.

ஒரு மெகா தொடர்ல கமிட்டானா அதோட எல்லா எபிசோட்ஸும் நாமதான் எழுதுவோம், இயக்குவோம் என்பதற்கு இங்க உறுதியில்ல. அதனால  கதையை ஸ்ட்ராங் செய்ய தனிப்பட்ட முறைல ஒரு டீம் வைச்சிருக்கேன். திரைக்கதை விவாதத்தை அந்த டீமுடன் செய்யறேன். இப்ப படம் பண்ற  முயற்சில இருக்கேன். அடுத்த ஆண்டு நான் டைரக்டரானா ஆச்சர்யப்படாதீங்க!’’ என டிவிஸ்ட் வைக்கும் அசோக்குமாரைப் பார்த்து  கண்சிமிட்டுகிறார்கள் அவரது மனைவி ஹேமலதாவும் மகள் மதுமிதாவும்.

மை.பாரதிராஜா
படங்கள்: ஆ.வின்சென்ட் பால்