மாநகராட்சி



தல புராணம்

இன்று சென்னையில் ராயல் லுக்கில் வசீகரமாகக் காட்சியளிக்கும் ஒரே கட்டடம் சென்ட்ரல் அருகே இருக்கும் ரிப்பன் பில்டிங்தான்! அமெரிக்காவின்  வெள்ளை மாளிகை போல பிரம்மாண்டத்துடன் பளீரெனத் தோற்றமளிக்கும் இந்தக் கட்டடத்தை உருவாக்க அன்று எவ்வளவு செலவானது தெரியுமா?  ஏழரை லட்சம் ரூபாய்! ஆனால், ஆச்சரியங்கள் கட்டடத்தில் மட்டுமல்ல. அதில் இயங்கும் சென்னை மாநகராட்சியிலும் உண்டு!

இந்தியாவில் முதல்முதலாக உருவாக்கப்பட்ட ஒரு நகராட்சி அமைப்பு மெட்ராஸ் என்பது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. அதற்கு முன் உள்ளூர்  நிர்வாகமே இருந்தது. ஊர் தலைவர், கணக்கர், காவலர் என மூன்று பேரின் கட்டுப்பாட்டில் இருந்தது நகரம். ஊர்தலைவர் நகரின் சத்திரத்தில் அமர்ந்து  பணிபுரிந்தார். கணக்கர் அவருக்கு உதவியாளராக இருந்தார். குற்றம் செய்பவர்களை, காவலராக இருந்தவர் சத்திரத்தின் சிறைக் கூடத்தில் அடைப்பார்.  இந்தச் சத்திரம்தான் சிறு குற்றங்களை விசாரிக்கும் இடமாகவும், சுங்கம் அல்லது வரி வசூலிக்கும் நிலையமாகவும், பத்திரப்பதிவு அலுவலகமாகவும்  இருந்தது.

ஆங்கிலேயர்கள் வந்த பிறகும் இதே நிலைமைதான். அப்போது ஊரின் மக்கள் தொகை 7 ஆயிரம். வணிகம் அதிகரிக்க மெட்ராஸ் பிஸியான நகராக  மாறத் தொடங்கியது. இதுவரை கம்பெனியின் முகவர் என்றழைக்கப்பட்டவர் ‘பிரெசிடென்ட்’ எனப்பட்டார். அதேபோல் ஊரின் தலைவர், ‘நகர ஆளுநர்’  ஆனார். கணக்கர், ‘நகரக் கணக்குப்பிள்ளை’ என்றும்; காவலர், ‘பெத்தநாயக்’ என்றும் அழைக்கப்பட்டனர். இவரின் கீழ் நிறைய தலையாரிகள் இருந்தனர்.  இப்படியாக மாறிய நிர்வாகம் 1675 முதல் 81 வரை கம்பெனியின் தலைவராக வந்த ஸ்ட்ரெய்ன்ஷாம் மாஸ்டர் காலத்தில் அடுத்த கட்டத்தை நோக்கி  நகர்ந்தது.

இவர், சத்திர நீதிமன்றத்தை ஒரு நீதிமன்றமாக அங்கீகரித்து நீதிபதிகளின் எண்ணிக்கையை இரண்டிலிருந்து மூன்றாக உயர்த்தினார். பின்னர், சிவில்  மற்றும் குற்ற வழக்கை விசாரிக்க உயர்நீதிமன்றம் தேவையெனக் கருதி அதுவும் நிறுவப்பட்டது. ஒவ்வொரு புதன் மற்றும் சனிக்கிழமைகளில்  கோட்டையிலுள்ள சர்ச்சில் உயர்நீதிமன்றம் இயங்கியது. இந்நிலையில் மெட்ராஸ் நகரின் வீதிகளைத் துப்புரவாக வைக்கவும், இரவில் நகர்க் காவல்  செய்யவும் நகர் பராமரிப்புக்கு வழிகோலப்பட்டது. வீட்டு எண்ணிக்கை எடுப்பதற்கும், வரி வசூலிப்பதற்கும் ஆங்கிலேய அதிகாரி நியமிக்கப்பட்டார்.

1678ம் வருடம் முதல் வீட்டு வரி வசூலிக்கும் முறை மெட்ராஸில் அமல்படுத்தப்பட்டது. ‘‘தமிழர்கள் வாழ்ந்த பகுதியில் 75 வீடுகளும், வெள்ளையர்  குடியேறியிருந்த பாகத்தில் 115 வீடுகளும் இருப்பதாகக் கணக்கிட்டு, வீடு ஒன்றுக்குக் காலணா முதல் ஒரு பணம் வரை வரி விதிக்க முடிவு  செய்யப்பட்டது. இதை எதிர்த்து மக்கள் கிளர்ச்சி செய்யவே, ஆட்சியாளர்கள் அத்திட்டத்தை சிறிது காலம் ஒத்தி வைத்து பின்னர் நடைமுறைக்குக்  கொண்டு வந்தனர். இப்போது வரி வசூலிப்பவனுக்கு ‘குப்பைக்காரன்’ என்று பெயர் தரப்பட்டது.

இதற்கும் அவையிலுள்ள மூத்த வெள்ளை அதிகாரியே நியமிக்கப்பட்டார்!’’ என ‘சென்னை மாநகர்’ நூலில் குறிப்பிடுகிறார் எழுத்தாளர் மா.சு.சம்பந்தன்.  1678ம் ஆண்டு அங்கீகாரம் பெற்ற மதுக்கடைகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டன. ஓராண்டுக்கான உரிமம் 205 பகோடாக்கள். அன்றும்  மதுக்கடைகளின் வருமானத்தை நம்பித்தான் அரசு இருந்தது! ஆனாலும், நகராண்மைச் செலவுகளுக்கு வரிப் பணம் போதவில்லை. மக்கள்தொகை  உயர, வேறு வழியில்லாமல் லண்டனிலுள்ள கம்பெனிக்கு இங்குள்ள ஆளுநர் கடிதம் எழுதினார்.

பதிலுக்கு கம்பெனியின் இயக்குநர்கள், ‘வரிமூலம் சம்பாதிக்கும் சுலப முறைகளை விட்டுவிடக் கூடாது...’ என அறிவுறுத்தினர். இதன்பிறகு  கம்பெனியின் மேலாளர்கள் மெட்ராஸ்பட்டிணம் ஒரு மாநகராட்சியாக அறிவிக்கப்பட வேண்டுமென முடிவெடுத்தனர். 1687ம் ஆண்டு டிசம்பர் மாதம்  30ம் நாள் ஆளுநரும், கிழக்கிந்தியக் கம்பெனியின் வணிகர்களும் சேர்ந்து மெட்ராஸ் நகருக்கான மேயரையும், நகர்மன்ற உறுப்பினர்களையும்  தெரிவுசெய்ய சாசனம் வெளியிட்டனர். ‘மக்கள்தொகை அதிகமுள்ள நகர்களுக்கு அந்த நகர்களை நிர்வகிக்க மாநகராட்சி அமைப்புகள் தேவையென  நினைக்கிறோம்.

சிறு பிரச்னைக்கெல்லாம் ராணுவச் சட்டம் ெகாண்டு தீர்வு காண இயலாது. கவலை தரும் சம்பவங்கள் அடிக்கடி நிகழ்கின்றன. புனித ஜார்ஜ்  கோட்டையைச் சுற்றி பத்து மைல் தூரம் வியாபித்துள்ள இந்நகருக்கு மேயர், நகர்மன்ற உறுப்பினர்கள் மற்றும் நகரத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்படும்  அங்கத்தினர்கள் அடங்கிய ஒரு மன்றத்தை அமைக்க முடிவெடுத்துள்ளோம்!’ என்கிறது அச்சாசனம். பிறகு, 1688ம் ஆண்டு செப்டம்பர் 29ம் தேதி  அப்போதைய எலிஹு யேல் ஆட்சியில் முதல் நகராட்சி மன்றம் பிறந்தது. இது உருவாகக் காரணம் கிழக்கிந்தியக் கம்பெனியின் இயக்குனர்களில்  ஒருவராக இருந்த சர் ஜோசையா சைல்டு.

டச்சுக் கிழக்கிந்தியத் தீவுகளில் நடைபெற்று வந்த நகராட்சி முறையை மாடலாகக் கொண்டு இங்கு ஏற்படுத்தினார். ஒரு மேயர், 12 நகர் உறுப்பினர்கள்,  60 நகர அங்கத்தினர்கள் நியமிக்கப்பட்டனர். மேயராக நத்தானியேல் ஹிக்கின்சன் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர்தான் சென்னையின் முதல் மேயர்!  நகர்மன்றக் கட்டடம் கட்டவும்; குற்றவாளிகளையும் வாங்கிய கடனைத் திருப்பித் தராவர்களையும் அடைத்து வைக்க சிறைக் கூடம் உருவாக்கவும்;  சிறைக் காவலர்களை நியமிக்கவும்; உள்ளூர் குழந்தைகளுக்கு ஆங்கில மொழியை எழுதப் படிக்கக் கற்றுத் தரும் பொருட்டு பள்ளிகள் அமைக்கவும்  வரிகள் வசூலிக்கலாம் என அறிவுறுத்தப்பட்டது.

தவிர, அனைத்து சிவில் மற்றும் குற்றவியல் வழக்குகளை விசாரிக்கவும் மேயரின் நீதிமன்றத்துக்கு அதிகாரம் அளிக்கப்பட்டது. மேயர் அவைக்கு  வரும் போதும் போகும்போதும் இரு ஆங்கிலேயக் காவலர்கள் அவர் முன்னால் ஆளுக்கொரு வெள்ளித் தடிகளை ஏந்திச் செல்ல வேண்டும். மேயரும்,  உறுப்பினர்களும் சிவப்பு அங்கிகள் அணிந்து கொள்ள வேண்டும். அங்கத்தினர்கள் வெள்ளை நிற மேலாடைகள் அணிய வேண்டும். மேயருக்கும்,  உறுப்பினர்களுக்கும் அகன்ற குடைகள் பிடித்து வர வேண்டும் போன்ற விஷயங்களும் மேற்கொள்ளப்பட்டன.  மொத்தத்தில் அன்று நீதி, காவல்,  உள்ளூர் நிர்வாகம் எல்லாம் மாநகராட்சி வசமே இருந்தன.

பின்னர் 1721ம் ஆண்டில் மெட்ராஸ் கவர்னர் நிர்வாகக் குழுவில் கொண்டு வந்த தீர்மானத்தின்படி மேயர் மற்றும் உறுப்பினர்களை தேர்தல் மூலம்  தேர்ந்தெடுக்க வழிமுறைகள் மேற்கொள்ளப்பட்டன. 1726ல் முதலாம் ஜார்ஜ் மன்னர் வெளியிட்ட ஆணைப்படி மாநகராட்சி மறுசீரமைப்பு செய்யப்பட்டது.  கூடுதல் அதிகாரமும் வழங்கப்பட்டது. பிரஞ்சு அரசு மெட்ராஸைக் கைப்பற்றியபோது மாநகராட்சி இயங்காமல் போனது. இதன் பிறகு மாநகராட்சியின்  அடுத்தகட்ட வளர்ச்சி 1792ல் நடந்தது. வீட்டு வாடகையின் ஆண்டு மதிப்பில் நூற்றுக்கு 5 சதவீதம் வரியை இந்தியக் குடிகளிடமிருந்து   வசூலிக்கும்படி இங்கிலாந்து பாராளுமன்றச் சட்டம் கம்பெனிக்கு அதிகாரம் அளித்தது.

தவிர, அமைதிக் காவலர் எனப்படும் நீதிபதியும் நியமிக்கப்பட்டார். பின்னர், 1801ல் மேயர் மற்றும் மாநகராட்சி உறுப்பினர் பதவிகள் ஒழிக்கப்பட்டன.  மேயர் நீதிமன்றத்தை, பதிவாளர் நீதிமன்றம் எடுத்துக் கொண்டது. 1856ம் ஆண்டில் இந்த அமைதிக் காவலர் முறையும் ஒழிக்கப்பட்டு மூன்று  ஆணையர்கள் நியமிக்கப்பட்டனர். ‘‘நிலவரி அதிகமாக விதித்துக் கொள்ள சட்டம் இயற்றப்பட்டதால் வீட்டு வரி நூற்றுக்கு 5 சதவீதம் என்பதிலிருந்து  ஏழரை சதவீதமாக உயர்ந்தது. வண்டிகளுக்கும், மாடுகளுக்கும் வரி போடப்பட்டது. 1863ல் வர்த்தக வரி, உத்தியோக வரி, சுங்கவரி முதலியன  போட்டுக் கொள்ளவும் சட்டம் இடம் தந்தது.

இதுவரையில் மாநகராட்சி நிர்வகித்து வந்த போலீஸ் துறை நீக்கப்பட்டு அதை அரசாங்கம் ஏற்றுக் கொண்டது...’’ என்கிறார் மா.சு.சம்பந்தன். பிறகு,  மெட்ராஸ் எட்டு தொகுதிகளாகப் பிரிக்கப்பட்டு ஒவ்வொன்றுக்கும் நான்கு ஆணையாளர்களை நகர மக்களிலிருந்தே அரசு நியமித்தது. மொத்தமுள்ள 32  ஆணையாளர்கள் சேர்ந்து விவாதிக்கும் கூட்டத்துக்கு ஒரு நிர்வாக அதிகாரி தலைமை வகித்தார். பின்னர், 1878ல் கொண்டு வரப்பட்ட சட்டம் இந்த 32  பேரில் 16 பேர் வரி செலுத்துவோரில் இருந்து நியமிக்கப்பட வேண்டும் என்றது. தொடர்ந்து 1884ல் நகர உள்ளாட்சிச் சட்டம் கொண்டு வரப்பட்டது.

பொது சுகாதாரம், பாதுகாப்பு, ஆரம்பக் கல்வி மற்றும் கழிப்பிட வசதிகள் போன்றவற்றிற்கு உள்ளாட்சி வருவாயைப் பயன்படுத்தலாம் என்றது இந்தச்  சட்டம். 1904ல் நகராட்சி ஆணையாளர்கள் 32 என்பதிலிருந்து 36 ஆகவும், பின்னர் 50 ஆகவும் உயர்த்தப்பட்டனர். அத்துடன் இவர்கள், ‘கவுன்சிலர்’ என  அழைக்கப்பட்டனர். இதனால், மெட்ராஸ் வட்டம் முப்பதாகப் பிரிக்கப்பட்டு 30 கவுன்சிலர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். மீதி 20 கவுன்சிலர்கள் நியமனம்  மூலமாகவும், நிறுவனங்கள் வழியாகவும் தேர்வு செய்யப்பட்டனர். உறுப்பினர்கள் அவர்களுக்குள் ஒருவரை சபைத் தலைவராகத் தேர்ந்தெடுக்க  வேண்டும்.

இப்படி முதன்முதலாக தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் நீதிக்கட்சியைச் சேர்ந்த சர்.பி.தியாகராய செட்டியார்! 1933ல் சபைத் தலைவரை மேயர் என  அழைக்கும் மசோதா நிறைவேற்றப்பட்டது. மீண்டும் மேயர் பதவி கொண்டு வரப்பட்டது. முதல் மேயராக குமாரராஜா எம்.ஏ.முத்தையா செட்டியார்  தேர்ந்தெடுக்கப்பட்டார். மூன்றாண்டுகள் கழித்து துணை மேயர் பதவி உருவாக்கப்பட்டது. முதல் துணை மேயராக பக்தவத்சலம் தேர்ந்தெடுக்கப்பட்டார்.  சுதந்திரத்துக்குப் பிறகு நூறு வட்டங்களாகப் பிரிக்கப்பட்டு தேர்தல் நடத்தப்பட்டது. இப்போது 15 மண்டலங்கள், 200 வார்டுகள், 200 கவுன்சிலர்களுடன்  இயங்கி வருகிறது கிரேட் சென்னை மாநகராட்சி!

ரிப்பன் பிரபு

*    ஜார்ஜ் ஃபிரடெரிக் சாமுவேல் ராபின்சன் எனப் பெயர் கொண்ட ரிப்பன் பிரபு, 1880 முதல் 1884 வரை இந்தியாவின் கவர்னர் ஜெனரலாக  இருந்தவர்.
*    அன்று ஐரோப்பியர் சம்பந்தமான வழக்கை ஐரோப்பிய நீதிபதிதான் விசாரிக்க முடியும். இந்திய நீதிபதி விசாரிக்க முடியாது என்றிருந்தது.  சர் சி. பி. இல்பர்ட் என்பவர் இந்த பாகுபாட்டைப் போக்க ஒரு மசோதா கொண்டு வந்தார். இதற்கு ஐரோப்பியர்கள் இடையே பலத்த எதிர்ப்பு  கிளம்பியது. இருந்தும் இம்மசோதாவில் ரிப்பன் பிரபு திருத்தம் கொண்டு வந்தார்.
*     பிறகு, உள்ளாட்சியில் பல்வேறு சீர்திருத்தங்கள் கொண்டு வந்ததால், ‘உள்ளாட்சியின் தந்தை’ எனப் போற்றப்பட்டார்.
*    இவர் இறந்த 1909ம் ஆண்டுதான் மாநகராட்சி அலுவலகத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது. அதனால், அவரது பெயரே இந்தக்  கட்டடத்துக்கு சூட்டப்பட்டது.

இன்று

*     மெட்ராஸ் மாநகராட்சி அலுவலகம் முத்தியால்பேட்டையிலுள்ள எர்ரபாலு செட்டித் தெருவில் வாடகைக் கட்டடத்தில் செயல்பட்டு வந்தது.  1913ம் ஆண்டே ரிப்பன் கட்டடத்துக்கு மாறியது.
*     இதை ஜி.எஸ்.டி ஹாரிஸ் என்ற கட்டடக்கலை நிபுணர் நியோ கிளாசிக்கல் பாணியில் வடிவமைக்க, லோகநாத முதலியார் கட்டினார்.  
*     461 சதுர கிமீ தூரம் சென்னையின் மாநகராட்சி விரிந்து கிடக்கிறது.
*     2012 - 13ன் வருடாந்தர வரவு - செலவுத் திட்டத்தில் வரவு 1326.11 கோடியாகவும், செலவு 1232.97 கோடியாகவும் உள்ளது. உபரி  வருவாய் 93.14 கோடி என்கிறது மாநகராட்சியின் இணையதள புள்ளி விவரம்.  

பேராச்சி கண்ணன்
படங்கள்: ஆ.வின்சென்ட் பால்