புக்ஸ்தான் ஒரே சொத்துனு அப்பா புரிய வைச்சார்!



கலெக்டர்ஸ்

முதல் வரியாக சென்னை ஆர்.ஏ.புரத்தின் பழமையான குடியிருப்பு வாசி என கோவிந்தராஜுவை சொல்லக் காரணம், அவரது கலெக்‌ஷன்தான்! ஆம்.  சிறு வயது முதலே இவர் சேகரித்து வருவது பழைய புத்தகங்களை, விளம்பரங்களை, இதழ்களில் வந்த தொடர்கதைகளை! தன் கலெக்‌ஷனுக்காகவே,  தான் வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்பிலுள்ள தன் கார் கேரேஜை புத்தகக் கிடங்காக மாற்றியிருக்கிறார்!

‘ரேர் புக் கலெக்‌ஷன்’ என்று பெயரிட்ட பலகை வரவேற்கிறது. அதிலுள்ள கைபேசியை தொடர்பு கொண்டால், துள்ளலுடன் வருகிறார் 83 வயதான  கோவிந்தராஜு! புத்தகக் கிடங்கைத் திறந்து உள்ளே நுழைந்ததும் பிரமிப்பு ஏற்படுகிறது. காரணம், நீக்கமற நிறைந்திருக்கும் புத்தக அலமாரிகள்.  நடுவிலுள்ள மேஜையிலும் புத்தகக் குவியல்கள். ‘‘என்னதான் தொழில்நுட்பம் வளர்ந்து செல்போன்லயே ஈ புக்ஸ் படிக்க முடிஞ்சாலும் அச்சான  நூல்களைப் படிக்கிற சுகமே தனிதான். குறிப்பா பழைய புத்தகங்கள்ல இருந்து வர்ற வாசனையை அடிச்சுக்கவே முடியாது!’’ ஆழ்ந்து சுவாசித்தபடி  பேசத் தொடங்குகிறார் கோவிந்தராஜு.

‘‘சென்னைலதான் பிறந்து வளர்ந்தேன். அப்பா, மெடிக்கல் கேப்டனா மிலிட்டரில இருந்தார். அவர் வேலை காரணமா நாடு முழுக்க மாறிக்கிட்டே  இருந்து கடைசில சென்னைல செட்டிலானோம். அப்ப எஸ்எஸ்எல்சி முடிச்சுட்டு இன்டர்மீடியட் படிக்கணும். அப்புறம்தான் காலேஜ். படிச்சு முடிச்சதும்  இந்துஸ்தான் லீவர் நிறுவனத்துல ரூ.300 சம்பளம், ரூ.400 பேட்டானு விற்பனைப் பிரதிநிதியா சேர்ந்தேன். அப்பா மருத்துவத் துறைல இருந்தாலும்  நிறைய படிப்பார். எப்பவும் அவர் கைல புக்ஸ் இருக்கும். அவரைப் பார்த்து எனக்கும் புத்தகங்கள் படிக்கிற பழக்கம் வந்தது.

‘என்னால சொத்து சேர்த்து வைக்க முடியாது. ஆனா, புக்ஸ் படிக்க உனக்கு கத்துத் தர முடியும். உண்மைல அதுதான் பெரிய பொக்கிஷம். ஏதாவது  ஒரு வழில அது உனக்கு எப்பவும் பயன்படும்’னு அப்பா சொல்வார். இது என் மனசுல ஆழமா பதிஞ்சுது. புக்ஸ் சேகரிக்க ஆரம்பிச்சேன்...’’ என்று  முன்னுரை தரும் கோவிந்தராஜு, இந்த வயதிலும், தான் சுறுசுறுப்புடன் இருக்க புத்தகங்கள்தான் காரணம் என்கிறார். ‘‘பெங்குவின் புக்ஸ் அப்ப  காலணா, அரையணாவுக்கு விக்கும். அப்பா வாங்கிட்டு வருவார். மேல மேல என்னைப் படிக்கத் தூண்டியது அந்த புக்ஸ்தான்.

ஆரம்பத்துல படிக்க மட்டும் செஞ்சேன். சேகரிக்கணும்னு சொன்னவர் அப்பாதான். இதுக்கிடைல எம்ஏ சோஷியாலஜி படிச்சுட்டு மெட்ராஸ் சோஷியல்  ஒர்க் அமைப்புல லேபர் வெல்ஃபேர் ஆபீசரா சேர்ந்தேன். அப்புறம் கோவைல இண்டஸ்ட்ரியல் ரிலேஷன் ஆபீசரா ஆறு மாதங்கள். பிறகு  ஃப்ரெண்ட்ஸோட சேர்ந்து கன்சல்டன்சி நிறுவனம் ஆரம்பிச்சேன். என்னவோ... இது சரியா வரலை. அப்புறம் பல கல்லூரிகள், நிறுவனங்களுக்கு  கெஸ்ட் லெக்சரரா, ஆலோசகரா இருந்தேன். இப்படி வேலைகள் மாறிக்கிட்டே இருந்தாலும் புக்ஸ் வாங்கறதை நிறுத்தலை.

பஸ், சைக்கிள், பைக்னு எதுல போனாலும், எங்க புத்தகக் கடையைப் பார்த்தாலும் உள்ள நுழைஞ்சுடுவேன். என் இத்தனை வருட வாழ்க்கைல  இதுவரை பெரிய புத்தகக் கடைகளுக்கு போனதேயில்ல. எல்லாமே பழைய புத்தகக் கடைகள்தான்! ஒரு கட்டத்துல 6 ஆயிரம் புக்ஸ் வரை  சேகரிச்சுட்டேன். மத்தவங்களும் பயன்பெறணும்னு 1970ல லைப்ரரி ஆரம்பிச்சேன். வருஷத்துக்கு ஆறு பேர்தான் வந்தாங்க! மனசுக்கு ரொம்பவே  கஷ்டமாகிடுச்சு...’’ என வருத்தப்படும் கோவிந்தராஜு, இதன் பிறகும் புத்தகங்கள் வாங்குவதை நிறுத்தவில்லை என்பதுதான் ஹைலைட்.

‘‘சினிமா, பிலாசஃபி, விளையாட்டு, கிரைம், திரில்லர் நாவல்கள், மிஸ்டரி, இலக்கியம், கவிதைத் தொகுப்புகள், சுதந்திரத்தப்ப வந்த டெய்லீஸ்,  1800கள்ல வந்த புக்ஸ், கையெழுத்துப் பிரதிகள், சிறப்புப் பதிப்புனு கண்லபட்டு, மனசுல பதிஞ்ச எல்லாத்தையும் வாங்கினேன். வீட்ல வைக்க  இடமில்ல. கேரேஜும் நிரம்பி வழிஞ்சது. அப்ப ரூ.15க்கு 50 நூல்கள் வாங்கலாம். அப்படித்தான் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட புக்ஸை சேகரிச்சேன். 75  வயசுல அமெரிக்கா போக வேண்டிய சூழல். ஏன்னா, என் மகன் அங்க இருந்தான். எல்லா புக்ஸையும் அப்படியே விட்டுட்டுப் போக மனசில்ல.

என்னைத் தவிர இந்தப் புத்தகங்களுக்கு வேற ஆதரவில்ல. கடைசில மனசைக் கல்லாக்கிட்டு பழைய புத்தகம் சேகரிப்பவர்கள்கிட்ட 13 டன் புக்ஸை  கொடுத்தேன்...’’ என்று சொல்பவர் அமெரிக்கா சென்றதும் நிலைகொள்ளாமல் தவித்திருக்கிறார். ‘‘புத்தகங்கள் இல்லாம இருக்க முடியலை. என்னை  சுறுசுறுப்பா அதுதான் வைச்சுக்கும்னு புரிஞ்சுது. ஆறே மாசத்துல சென்னைக்கு வந்துட்டேன். மறுநாளே பழைய புத்தகக் கடைக்கு போனேன்!  மயிலாப்பூர்ல ஆழ்வார் இருக்கார் இல்லையா... அவர்கிட்ட நிறைய பழைய புக்ஸ் இருக்கும்.

அவர் கடைக்குப் போய் அள்ளினேன். அப்புறம் பழைய புத்தகங்களுக்கான புரோக்கர்ஸ் எனக்குத் தெரியும். அவங்களை மறுபடியும் கான்டாக்ட்  செஞ்சேன். கிட்டத்தட்ட 100 வருஷங்களுக்கு முன்னாடி ‘இந்தியன் ரிவ்யூ’ மாதப் பத்திரிகை வந்தது. நம்ம நாட்டைப்பத்தின அறிவு பூர்வமான  பத்திரிகை. உலகத்துல இருக்கிற பல மேதைகள் அதுல எழுதியிருக்காங்க. அஞ்சு வருஷங்களுக்கு முன்னாடி ஒரு புரோக்கர் வழியா 1923ம் வருஷத்து  வால்யூம் கிடைச்சது.

ரூ.12 ஆயிரம் கொடுத்து அதை வாங்கினேன்...’’ என்று சொல்லும் கோவிந்தராஜு, அந்தக் கால ஜோக்ஸ், பத்திரிகை அட்டைப் படங்கள், சினிமா  செய்திகள், விளம்பரங்கள்... என எதையும் விடாமல் சேகரித்திருக்கிறார். இதுவே 5 ஆயிரத்துக்கு மேல் வரும்! ‘‘உண்மைல என் மனைவிக்குத்தான்  நன்றி சொல்லணும். அவ்வளவு உறுதுணையா இருக்காங்க. இப்ப முன்ன மாதிரி கடைகளுக்குப் போக முடியலை. ஆனாலும் என்னைத் தேடி புக்ஸ்  வருது! பல மாணவர்கள் புத்தகங்கள் பார்க்க இங்க வர்றாங்க. தங்கள் படிப்புக்கு பயன்படுத்திக்கறாங்க. எனக்குப் பிறகு இந்த சேகரிப்பை  நூலகங்களுக்கு கொடுத்துடுவேன்!’’ என்கிறார் கோவிந்தராஜு.

ப்ரியா
படங்கள்: ஆ.வின்சென்ட் பால்