COFFEE TABLEபூனை காதலி!

பாலிவுட்டின் பிஸி ஹீரோயின்களில் ஒருவர் ஜாக்குலின். இப்போது சுஷாந்த் சிங், சல்மான்கான் படங்களின் நாயகி. பஹ்ரைனில் பிறந்து வளர்ந்த  ஜாக்குலின் பூனைகள் மீது தீராத காதல் கொண்டவர். மும்பை வீட்டில் அவர் வளர்த்து வரும் வெளிநாட்டு வகை பூனைக்குட்டியின் பெயர் யோடா.  அவர் தன் செல்ல யோடாவுடன் கொஞ்சும் புகைப்படங்களை இன்ஸ்டாவில் பதிவிட, லைக்குகள் லட்சங்களைத் தாண்டி வைரலாகிவருகிறது.

தூங்கு தம்பி தூங்கு!

ஒரு நாள் நான்கு மணி நேரம், அடுத்த நாள் ஏழு மணி நேரம் என்று ஒவ்வொரு நாளும் நீங்கள் தூங்கும் நேரம் மாறுபடுகிறதா? உடனே  விழித்துக்கொள்ளுங்கள். ‘‘தினசரி தூக்கம் சரியான விகிதத்தில் இல்லையென்றால் கூட உடல் நல பிரச்னைகள் ஏற்படும்...’’ என்கிறது ஸ்வீடனைச்  சேர்ந்த ஆய்வு நிறுவனம். 65 வயதுக்கு உட்பட்ட ஆயிரக்கணக்கானவர்களை சுமார் 13 வருட இடைவெளியில் ஆய்வு செய்ததில் இந்த ரிப்போர்ட்  கிடைத்திருக்கிறது. ‘‘தூக்கத்தின் சமநிலை சீர்குலையும்போது புற்றுநோய், இதயநோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம்...’’ என்று அந்த ஆய்வு  எச்சரிக்கிறது.

நடிகையைத் தேடி வந்த புறா!

இந்தி, கன்னடத்தில் ஹாட் ஃபேவரிட் டெய்சி ஷாதான். தமிழில் கூட ‘பொறி’ படத்தில் ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போட்டிருக்கிறார். மும்பையில்  உள்ள உயரமான அபார்ட்மென்ட்டில் வசித்து வரும் டெய்சி ஷா, அதிகாலைப் பொழுது ஒன்றில் காற்று வாங்க பால்கனி பக்கம் நின்றிருக்கிறார்.  அப்போது அங்கே பறந்து வந்த புறா ஒன்று, டெய்சியின் கையில் தவழ்ந்து அவரது வீட்டிற்குள் புகுந்துட்டது. அந்த இனிய தருணத்தை தன்  மொபைலில் ஷூட் செய்து இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார் டெய்சி. அப்புறமென்ன? லட்சங்களைத் தாண்டிவிட்டது ஹார்ட்டின்ஸ்.

ப்ளூடூத் ஸ்பீக்கர்!

ஹோம் தியேட்டர் காதலர்களுக்காக ஜெவிசி நிறுவனம் ‘JVC XS-XN511A’ என்கிற 5.1 சவுண்ட் சிஸ்டத்துடன் கூடிய ப்ளூடூத் ஆடியோ ஸ்பீக்கரை  இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. சப் ஊபருடன் ஐந்து சின்ன ஸ்பீக்கர்களை உள்ளடக்கிய இந்த கேட்ஜெட் வாடிக்கையாளர்களைக் கவரும்  விதமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. யூஎஸ்பி போர்ட், எஃப் எம் ரேடியோ... என்று பல வசதிகளைக் கொண்ட இந்த ஸ்பீக்கரை 10 மீட்டர் சுற்றளவுக்குள்  எங்கு வேண்டுமானாலும் வைத்துக்கொண்டு டிவி அல்லது கம்ப்யூட்டருடன் இணைத்துக்கொள்ளலாம். விலை ரூ.11,999.

மகளுக்கு புகைக்க கற்றுத்தரும் தந்தை!

இளம் தந்தை ஒருவர் தனது மூன்று வயது மகளுக்கு புகைபிடிப்பது எப்படி என்று கற்றுத்தருவதுதான் சவுதி அரேபியாவில் ஹாட் டாபிக். அப்பாவிக்  குழந்தையின் வாயில் சிகரெட்டை வைத்து ஒவ்வொரு பப்பாக இழுப்பது வரைக்கும் சொல்லிக் கொடுப்பதோடு அதை வீடியோவாக்கி இணையத்திலும்  வெளியிட்டுவிட்டார் அந்தத் தந்தை. அடுத்த சில நிமிடங்களிலேயே இரண்டு லட்சம் ‘ஏங்க்ரி’ குறியீட்டைத் தாண்டி வைரலாகிவிட்டது அந்த ஷாக்கிங்  வீடியோ. காவல்துறை அந்த தந்தையை இப்போது வலைவீசித் தேடிவருகிறது.

குங்குமம் டீம்