மூன்று ஹால்களின் கதை!



தலபுராணம்

ஆங்கிலேயர்கள் கட்டடங்கள் எழுப்பியே தங்கள் வெற்றிக் கொண்டாட்டங்களையும் நினைவுகளையும் வரலாறாக்கி உள்ளனர். அப்படி மெட்ராஸில்  அவர்கள் கட்டி பெயர் சொல்லும்படி திகழ்பவை மூன்று அரங்கங்கள். இதில் தமிழகம் முழுவதும் தெரிந்த ஒரே அரங்கம் ராஜாஜி ஹால் மட்டுமே.  ஏனெனில், காமராஜர், அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா என மறைந்த முதலமைச்சர்களின் உடல்கள் இங்கே மக்களின் அஞ்சலிக்காக  வைக்கப்பட்டிருந்ததுதான்.  

சரி, மற்றவை? விக்டோரியா மற்றும் மெமோரியல் ஹால்கள். ராஜாஜி ஹால் (1802) இதன் பழைய பெயர் பாங்க்கேயிங் ஹால். அதாவது விருந்து  மாளிகை. ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிப்பது போல, இதைக் கட்டச் சொல்லி இரண்டு விஷயங்களை ஞாபகப்படுத்தினார் 1800ல் ஆளுநராக  இருந்த எட்வர்ட் கிளைவ். ஒன்று, திப்பு சுல்தானை வீழ்த்தி ஸ்ரீரங்கப்பட்டிணத்தைக் கைப்பற்றிய சம்பவம். அடுத்து, தன் தந்தை ராபர்ட் கிளைவ் வெற்றி  வாகை சூடிய பிளாசி போரின் நினைவைப் போற்றுவது. இரண்டும் இந்த விருந்து மாளிகை மூலம் ஈடேறியது. இந்த அரங்கம் அன்றைய அரசினர்  இல்லத்துடன் இணைத்து கட்டப்பட்ட ஒன்று. அன்று இந்த அரசினர் இல்லம்தான் கவர்னரின் தோட்ட வீடாக இருந்தது.

இன்று இந்த இடம் இடிக்கப்பட்டு பல்நோக்கு மருத்துவமனை மற்றும் எம்எல்ஏ விடுதிகளாக மாறிவிட்டது. இந்த இடத்தில் அரசினர் இல்லம் பற்றி ஒரு  சின்ன ஃபிளாஷ்பேக். ஆரம்ப நாட்களில் கவர்னருடன் கடைநிலை உள்ளிட்ட அனைத்து கம்பெனி பணியாளர்களும் தங்கியிருந்தனர். இவர்கள்  அனைவரும் பொதுவான உணவகத்திலேயே உணவருந்தினர். ஆனால், சாப்பாட்டு நேரத்தில் எழுத்தர்களையும், வணிகர்களையும் கட்டுப்படுத்தி  அமைதியைக் கொண்டு வர வீரர்களைப் பயன்படுத்த வேண்டியிருந்தது. ஒழுங்கின்மையும், குடிப்பழக்கமும் அதிகரித்ததால் 1672 முதல் 78 வரை  கவர்னராக இருந்த சர் வில்லியம் லாங்ஹோர்ன் பொது உணவு முறையை மாற்றி அமைத்தார்.

எனவே, கவர்னருக்கும் முக்கிய விருந்தினர்களுக்கும் தனி உணவு மேஜை பராமரிக்கப்பட்டது. இவர்களுக்குத் தனிப்பட்ட விடுதியும், தோட்டங்களும்  தேவைப்பட்டன. எனவே, சிறிய தோட்ட வீடு அமைத்துக் கொள்ள கம்பெனிக்கு கடிதம் எழுதினார். ஒப்புதல் கிடைத்ததும் கூவம் நதிக்கரையில் ஒரு  தோட்ட இல்லம் உருவாக்கப்பட்டது. ஆனால், எங்கே அமைக்கப்பட்டது என்பதில் நிறைய சந்தேகங்கள் உள்ளன. ‘‘பொதுவாக இரண்டு இடங்கள்  குறிப்பிடப்படுகின்றன. ஒன்று இப்போது மருத்துவக் கல்லூரி இருக்கும் இடம். மற்ெறான்று மன்றோ சிலை அருகிலுள்ள தீவு. அடுத்தடுத்து வந்த  ஆளுநர்களால் அது ஓய்வுக்கும் கேளிக்கைக்கும் உபயோகிக்கப்பட்டதே தவிர வசிப்பதற்கு அல்ல...’’ என ‘சென்னை மறுகண்டுபிடிப்பு’ நூலில் குறிப்பிடு  கிறார் வரலாற்று ஆய்வாளர் எஸ்.முத்தையா.

1746ல் மெட்ராஸை முற்றுகையிட்ட பிரஞ்சுப்படையினர் இந்தத் தோட்ட வீட்டை பீரங்கி வைக்க பயன்படுத்தினர். கோட்டையைப் பிடித்தபின் இந்த  வீட்ைடத் தகர்த்துவிட்டனர். காரணம், இந்த வீட்டிலிருந்து தங்களைப் போலவே கோட்டையை பிரிட்டிஷார் பிடித்துவிடக் கூடாது என்பதற்காக!  மூன்றாண்டு கழித்து மீண்டும் பிரிட்டிஷ் வசம் மெட்ராஸ் வந்ததும் உடனடியாக கவர்னருக்கு ஒரு தோட்ட வீடு அமைக்க முடிவெடுக்கப்பட்டது. 1753ல்  கூவத்துக்கு தென்கிழக்குப் பக்கமாக இருந்த மடீரா என்பவரின் வீடு வாடகைக்கு எடுக்கப்பட்டது. பின்னர் 3,500 பகோடாக்கள், அதாவது 12 ஆயிரத்து  250 ரூபாய் கொடுத்து அந்த வீட்டை விலைக்கு வாங்கினர். இதுதான் அரசினர் இல்லமாக மாறியது.

‘‘1800ல்தான் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த முடிவை எடுத்தார் கிளைவ். சில மாற்றங்களையும், புதிய பகுதிகளையும் செய்தார். இதற்கு மூன்று  லட்ச ரூபாயும், விருந்து மாளிகை கட்ட இரண்டரை லட்சம் ரூபாயும் செலவழித்தார். இதனால், செலவு அதிகமென கம்பெனி அதிருப்தி தெரிவித்தது...’’  என, ‘The Madras Tercentenary Commemoration Volume’ மலரின் ஒரு கட்டுரையில் விசாகப்பட்டின கலெக்டர் குரோம்பி தெரிவிக்கிறார்.  இப்படியாக, விருந்து அரங்கம் 1802ல் திறக்கப்பட்டது. இதை கம்பெனியின் வானியலாளரும், பொறியாளருமான ஜான் கோல்டிங்ஹாம் கிரேக்க  கோயில் வடிவில் வடிவமைத்துக் கட்டினார்.

120 அடி நீளமும், 65 அடி அகலமும், 40 அடி உயரமும் கொண்ட இந்தக் கட்டடம் ஆங்கிலோ இந்தியர்களின் உருவப்படங்கள் கொண்ட கேலரியாக  விளங்கியது. 1875ல் சில வேலைப்பாடுகளும், 1895ல் பெரிய தூண்களுடன் வராண்டாவும் அமைக்கப்பட்டன. 1857 முதல் 1879 வரை மெட்ராஸ்  பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு இந்த ஹாலில்தான் நடைபெற்றது. செனட் ஹவுஸ் கட்டியபிறகு பட்டமளிப்பு விழா அங்கு மாற்றப்பட்டது.  சுதந்திரத்துக்குப் பிறகு ஆங்கிலோ இந்தியர்களின் உருவப்படத்துக்குப் பதிலாக தமிழ்ச் சரித்திரத்தில் புகழ்பெற்ற தலைவர்களின் படங்கள்  வைக்கப்பட்டன. இன்று அரசினர் இல்லம் இடிக்கப்பட்டு விட்டாலும் இந்த விருந்து அரங்கம் மட்டும் அப்படியே ரோஸ் கலரில் பளபளவென  மின்னுகிறது.

சுதந்திரத்துக்குப் பின் இந்தியாவின் கவர்னர் ஜெனரலாகவும், பிறகு மாநிலத்தின் முதலமைச்சராகவும் இருந்த ராஜாஜியை கவுரவிக்கும் பொருட்டு  இந்த அரங்கத்தின் பெயர் ‘ராஜாஜி ஹால்’ என மாற்றம் செய்யப்பட்டது. தமிழ்ப் படங்களில் வரும் பெரும்பாலான கோர்ட் சீன்கள் இந்த ஹாலின்  வாசலில் எடுக்கப்பட்டவையே! மெமோரியல் ஹால் (1857) எதற்காக இந்த ஹால் கட்டப்பட்டது என்பதை ஆண்டே சொல்லிவிடும்! ஆமாம். முதல்  சுதந்திரப் போர் அல்லது சிப்பாய்க் கலகத்தின் நினைவாக இந்தக் கட்டடம் இங்கே எழுப்பப்பட்டது. இதுவும் பல்வேறு சினிமாக்களில் நிழலாடி  இருக்கிறது. குறிப்பாக, ‘முதல்வன்’ படத்தில் அர்ஜுன் முதல்வராக வரும் காட்சிகள் இந்த பில்டிங்கில் பில்டப் செய்யப்பட்டதே!

வட இந்தியா முழுக்க சிப்பாய்க் கலகம் கொழுந்துவிட்டு எரிந்தபோது மெட்ராஸ் மாகாணத்தில் அங்கொன்றும் இங்கொன்றுமாகவே கலகங்கள் நடந்தன.  தவிர, இங்குள்ள ஆங்கிலேயர்களுக்கு எந்த இழப்பும் நேரவில்லை. அதற்கு நன்றி செலுத்தும் விதமாக இங்கிருந்த பிரிட்டிஷ் குடியிருப்பினர் ஒரு  கட்டடம் எழுப்ப நினைத்தனர். அப்போது சிவில் எஞ்சினியரிங் பள்ளியின் (அண்ணா பல்கலைக்கழக  கிண்டி பொறியியல் கல்லூரி) முதல்வராக  இருந்த கர்னல் ஜார்ஜ் வின்ஸ்காம், 1858ல் இந்த ஹாலை கட்டத் தொடங்கினார். முன்பகுதியில் எட்டு பெரிய தூண்களுடன் பிரம்மாண்டமாக  எழுப்பப்பட்ட கட்டடம் சில இழுத்தடிப்புக்குப் பிறகே நிறைவுற்றது. பின்னர், கர்னல் ஹார்ஸ்லே என்பவர் கட்டடத்தின் டிசைனில் பல்வேறு  மாற்றங்கள் செய்தார்.

இதில், ‘The Lord hath been mindful of us: He will bless us’ என்கிற வாசகம் மேலே பொறிக்கப்பட்டது. இதன்பிறகு, கிறிஸ்துவ இலக்கிய  சங்கக் கட்டடம் கட்டப்பட்டது. ‘‘இப்ப சிஎஸ்ஐ. பேராயர் குழுவின் கீழ் இந்த ஹால் பராமரிக்கப்பட்டு வருது. இது பாரம்பரிய கட்டட லிஸ்ட்ல இருக்கு.  நாங்க பொதுக் கூட்டங்கள், நிகழ்ச்சிகள், கண்காட்சிகள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளுக்கு ஹால் கொடுக்கறோம். நிறைய சினிமா ஷூட்டிங்கும் இங்க  நடந்திருக்கு...’’ என்கிறார் அந்தக் குழுவின் செயலாளர் சார்லஸ் செல்லதுரை. விக்டோரியா பப்ளிக் ஹால் (1887) இங்கிலாந்தின் ஒருங்கிணைந்த  பிரிட்டிஷ் ராணியாக விக்டோரியா 1837ம் ஆண்டு பதவியேற்றார்.

அவரது 50வது வருட பொன் விழாவை நினைவு கூரும் வகையில் இந்தக் கட்டடம் கட்டப்பட்டது. அப்போது மெட்ராஸ் கார்ப்பரேஷன் தலைவராக  இருந்த ஏ.டி.அருண்டேல் முயற்சியில் பொது மக்களிடம் பெறப்பட்ட நன்கொடையில் கட்டி முடிக்கப்பட்டது. இதற்கு விஜயநகர மன்னரும் கணிசமான  தொகையை அளித்தார். ஒரு லட்சத்து 79 ஆயிரம் ரூபாயில் உருவான கட்டடத்தின் டிசைனை ராபர்ட் சிஸ்ஹோல்ம் இந்தோ சாராசெனிக் பாணியில்  வடிவமைத்தார். மேல்மாடம் மட்டும் திருவிதாங்கூர் ஸ்டைலில் அமைக்கப்பட்டது. இதற்கு திருவனந்தபுரத்திலுள்ள நேப்பியர் மியூசியத்தின் டிசைன்  எடுத்துக் கொள்ளப்பட்டது.

இரண்டு மாடிகளுடன் நேர்த்தியாக இதை நம்பெருமாள் செட்டி கட்டினார். கட்டடம் உருவாக்க பீப்பிள்ஸ் பூங்காவுடன் இணைந்திருந்த மூன்றரை ஏக்கர்  நிலம் (57 கிரவுண்ட்) வருடத்துக்கு 28 ரூபாய் வாடகை என 99 வருட குத்தகைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டது. 1887ம் ஆண்டு அன்றைய கவர்னர்  கன்னிமாரா இதைத் திறந்து வைத்தார். சாதி, மத வேறுபாடு இல்லாமல் பொதுமக்களின் நிகழ்ச்சிகள், கச்சேரிகள், விருந்துகள், நாடகங்கள்  போன்றவற்றுக்கு அனுமதியளிக்கப்பட்டது. ‘‘உயர்தளத்தில் அறுநூறு பேரும், காலரியில் இருநூறு பேரும், தரைத்தளத்தில் அறுநூறு பேரும் அமரத்தக்க  வகையில் அமைக்கப்பட்டது.

தொழில்முறை நாடகக் குழுக்களுக்கு ஓரிரவுக்கு வாடகை 50 ரூபாய்; அமெச்சூர் குழுவினருக்கு ரூபாய் 30 என நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது...’’ என  ‘சென்னப்பட்டணம் - மண்ணும் மக்களும்’ நூலில் குறிப்பிடுகிறார் ராமச்சந்திர வைத்தியநாத். சுவாமி விவேகானந்தர் 1897ல் மெட்ராஸ் வந்தபோது  இந்த விக்டோரியா ஹாலில்தான் உரையாற்றினார். மட்டுமல்ல, காந்தியடிகள் மெட்ராஸ் வந்த அதே தருணத்தில் பாரதியார் இந்த ஹாலில்  உரையாற்றி விட்டு அவரைச் சந்தித்திருக்கிறார். இப்படியான வரலாற்று நிகழ்வுகள் நடந்த இடம் ஒரு கட்டத்தில் பராமரிப்பின்றி போனது. இன்று  சென்னை மாநகராட்சி இதை மீட்டெடுத்து புனரமைப்பில் ஈடுபட்டு வருகிறது. விரைவில், பழைய பாரம்பரியத்துடன் பொதுமக்களின் அரங்கமாக மாறும்  என்கின்றனர்.

பேராச்சி கண்ணன்
படங்கள்: ஆ.வின்சென்ட் பால்