சென்னை காவல் நிலையத்தில் சூரிய ஒளி மின்சாரம்!



- பேராச்சி கண்ணன்

மாற்று எரிசக்தி என்றாலே நினைவுக்கு வருவது சோலார்தான். இன்றைக்கு வீடுகளிலும், நிறுவனங்களிலும், பள்ளிகளிலும் கூட சோலார் பேனல் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு பயன்படுத்தப்படுகிறது. விவசாயிகளுக்கும் சோலார் பம்ப் அமைக்க அரசு மானியமெல்லாம் தருகிறது. இப்போது இந்த வளர்ச்சி காவல்நிலையங்களை எட்டியிருப்பதுதான் ஹாட் நியூஸ்! இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்தில் முதல் முறையாக நாகப்பட்டிணம் காவல்நிலையத்தில் சோலார் பேனல் அமைக்கப்பட்டது.

இப்போது, சென்னை மாம்பலம் காவல்நிலையத்தில்! இங்கே மொத்தம் பன்னிரெண்டு சோலார் பேனல்கள் வழியே மின் உற்பத்தியை ஜரூராக ஆரம்பித்துள்ளனர். நகரின் மையப்பகுதி என்பதாலும், சொந்த கட்டடத்தில் காவல் நிலையம் இயங்குவதாலும் இத்திட்டத்தை இங்கே முதல் கட்டமாக செயல்படுத்தியுள்ளனர். இதை தமிழ்நாடு போலீஸ் வீட்டுவசதிக் கழகம் பராமரித்து வருகிறது.

‘‘இங்க சோலார் பேனல் வச்சு ரெண்டு மாசமாச்சு... இனிதான் எவ்வளவு சிக்கனம் பண்ணியிருக்கோம்னு தெரியும். இவை ஒரு கிலோவாட் திறன் கொண்ட பேனல்கள். 3 லட்சம் ரூபாய் செலவுல வைச்சிருக்கோம். இப்ப கீழ்த்தளம் மட்டும் இந்தப் பேனல் வழியா உற்பத்தி செய்ற மின்சாரத்துல இயங்கிட்டு இருக்கு. மத்த இரண்டு தளங்களும் மின்வாரிய மின்சாரம்தான்.

முன்னாடி மூணு தளத்துக்கும் சேர்த்து இரண்டு மாச கரண்ட் பில் சுமார் ரூ.70 ஆயிரம் வரை வரும். இதுல கீழ்த்தளத்துக்கு மட்டும் ரூ.20 ஆயிரம் இருக்கும்.
இப்ப எப்படியும் அந்தப் பணம் மிச்சமாகும், மின்சாரமும் சிக்கனமாகும்...’’ என்றார் மாம்பலம் காவல்நிலைய அதிகாரி ஒருவர்.

படங்கள் : ஆர்.சி.எஸ்.