சூரியக் குடும்பத்தில் புதிய கிரகம்!



சோலார் குடும்பத்தில் ஒன்பதாவதாக புதிய கோளுக்கு அட்மிஷன் கிடைத்துள்ளது! ப்ளூட்டோவை கோளாக கருத முடியாது என ஆராய்ச்சியாளர்கள் 2006ம் ஆண்டே முடிவு செய்து விட்டதால் அதனை நாம் கணக்கில் கொள்ள வேண்டியதில்லை. டார்க் எனர்ஜி ஆய்வு முறையில் நெப்டியூனைக் கடந்து பெரிய வடிவில் சூரியனைச் சுற்றி வரும் ஒன்பதாவது புதிய கோளுக்கு ‘2015 BP519’ என்று பெயர் சூட்டியுள்ளனர்.

‘‘பூமியின் வட்டப்பாதையிலிருந்து 54 டிகிரி கோணத்தில் 35 - 862 மடங்கு பெரியதான வட்டப்பாதையில் இக்கோள் பயணிக்கிறது...’’ என்கிறார் மிச்சிகன் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சி மாணவரான ஜூலியட் பேக்கர். இப்போது புதிய கோளை மாடலாக உருவாக்கி அதன் இயக்கத்தை கணித்து வருகின்றனர். சூரியனுக்கு பின்புறமாக உள்ளதாக கருதப்படும் ‘2015 BP519’ என்னும் இக்கோள் நெப்டியூன் மற்றும் யுரேனஸ் போல வாயுக்கள் நிரம்பியதாக இருக்கலாம் என்பது ஆராய்ச்சியாளர்கள் கூட்டிக்கழித்து சொன்ன கணக்கு.

டெலஸ்கோப்புகளாலும் அணுக முடியாத தொலைவில் கோள் அமைந்துள்ளதால் இதன் இருப்பை உறுதிப்படுத்த முடியவில்லை. இச்சூழலில் நேரடியாக கண்களால் பார்க்க முடியாத கோளின் இயக்கத்தை ஆய்வுகள் மூலம் மட்டுமே அறிய முடியும். இக்கோளை இன்று புதிதாகக் கண்டுபிடித்ததாக யாரும் கிரடிட் வாங்க முடியாது. ஏனெனில் இப்படி ஒரு கோளைப் பற்றி 2016ம் ஆண்டே கலிஃபோர்னியா டெக்னாலஜி இன்ஸ்டிடியூட்டைச் சேர்ந்த கான்ஸ்டான்டின் பேட்டிகின்,

மைக்கேல் ப்ரௌன் ஆகிய இரு ஆராய்ச்சியாளர்கள் துப்பு கொடுத்துவிட்டனர். அவர்கள் கூறியதுடன் கச்சிதமாகப் பொருந்தி வருகிறது ‘2015 BP519’ என்னும் இந்தக் கோள். ஆனால், இதிலும் ஆராய்ச்சி யாளர்களிடையே பல்வேறு கருத்துகள் உள்ளதால் உறுதியாக ஒன்பதாவது கோள் இதுதான் என்று கூற முடியவில்லை. ப்ளூட்டோவின் இடத்தை புதியகோள் நிரப்புவதற்கான சாத்தியத்தை அடுத்தடுத்த ஆராய்ச்சிகள் நிச்சயம் உருவாக்கும்!       

- ச.அன்பரசு