முதல்நாள் ஷூட்டிங்...பேட்டா தர கைல பணமே இல்ல...



தயாரிப்பாளர் பாபி சிம்ஹாவின் அனுபவங்கள்

தயாரிப்பாளராகி இருக்கிறார் பாபிசிம்ஹா. ‘ஜிகர்தண்டா’வில் பேசப்பட்ட தனது ‘அசால்ட் சேது’ கேரக்டர் பெயரையே தனது தயாரிப்பு நிறுவனத்திற்கும்  சூட்டி அழகு பார்த்திருக்கிறார். அவரது ‘அசால்ட் புரொடக்‌ஷன்’ஸின் முதல் அதிரடி சரவெடி ‘வல்லவனுக்கும் வல்லவன்’. ‘‘தயாரிச்சதுக்காக  சொல்லலை. உண்மைல ‘வல்லவனுக்கும் வல்லவன்’ நல்லா வந்திருக்கு. இது ராபின் ஹுட் கதை. அதனால படத்துல ஏகப்பட்ட கெட்டப் எனக்கு  உண்டு. காமெடியோட நாட்டு நடப்பை சொல்லியிருக்கோம். ‘நெடுஞ்சாலை’ ஷிவதா ஹீரோயின்.

நெப்போலியன், ஆனந்தராஜ், அப்புகுட்டி, பூஜானு நிறைய பேர் நடிச்சிருக்காங்க. தமிழகம் முழுக்க டிராவல் பண்ணி ஷூட் செய்திருக்கோம்.  டெக்னீஷியன் டீமும் சிறப்பா அமைஞ்சிருக்கு. கேமராமேன் பத்மேஷ், தமிழ்ல இதுக்கு முன்னாடி நாலஞ்சு படங்களுக்கு ஒளிப்பதிவு பண்ணியிருக்கார்.  படத்துல ரெண்டு இசையமைப்பாளர்கள். பின்னணியை ‘பாம்புசட்டை’ அஜீஸ் செய்திருக்கார். திறமையானவர். இன்னொருத்தர் ரகு திக்‌ஷித்.  கன்னடத்துல மோஸ்ட் வான்டட் மியூசிக் டைரக்டர். விவேக் ஹர்சன் எடிட்டிங், படத்துக்கு பலம்...’’ நம்பிக்கையுடன் பேசுகிறார் பாபி சிம்ஹா.

திடீர்னு ஏன் தயாரிப்பு?

விபத்துதான். ‘சூதுகவ்வும்’ல நடிக்கும்போதே இந்தக் கதை எனக்குத் தெரியும். இதை படமா பண்ண இயக்குநர் விஜய் தேசிங் பல இடங்கள்ல அப்ரோச்  பண்ணினார். எனக்குத் தெரிஞ்ச தயாரிப்பாளர்கள்கிட்ட நானும் சொல்லிவிடுவேன். ஓகே ஆகற மாதிரி இருக்கும்... அப்புறம் வேற வேற காரணங்களால  செட் ஆகாம போகும். ஒருநாள் ரொம்ப வெக்ஸ் ஆகி விஜய் தேசிங் என்கிட்ட ஃபீல் பண்ணினார். அப்ப என் பக்கத்துல இருந்த நண்பர் சதீஷ், ‘நாமே  இதை தயாரிக்கலாமே’ன்னார். ஷாக்காகிட்டேன். கைல பணமே இல்லாம எப்படி..? ‘ஸோ வாட்? ஊர்ல இருக்கிற ப்ராபர்டியை வித்துட்டு வர்றேன்’னார்.
அந்த செகண்டை என் வாழ்க்கைல மறக்கவே மாட்டேன்.

கூட இருக்கிறவங்க என்னை நம்பும்போது எனக்கு மட்டும் ஏன் என்மேல நம்பிக்கை வரலை? அவ்வளவுதான், மின்னல் வேகத்துல இறங்கினோம்.  உடனே ஆபீஸ் போட்டோம். ‘அசால்ட் புரொடக்‌ஷன்ஸ்’னு பேரு வைக்கச் சொன்னது கூட சதீஷ்தான். கைல இருந்த பணத்தை செலவழிச்சு ப்ரீ  புரொடக்‌ஷன் வேலைகளை முடிச்சோம். அப்ப ஒருத்தர் வந்து, ‘உங்களோடு நானும் இணையறேன்’னு சொன்னார். ஜாயின்ட் வென்ச்சர் கிடைச்ச  தைரியத்துல ஷூட்டிங் கிளம்பினோம். அன்றைய பேட்டா கொடுக்க எங்க யார்கிட்டயும் பணமில்ல. ‘போய் எடுத்துட்டு வரேன்’னு கிளம்பின ஜாயின்ட்  வென்ச்சர் அப்புறம் வரவே இல்ல! போன் செஞ்சா ஸ்விட்ச் ஆஃப்.

முதல் நாள் ஷூட்டிங்கே இப்படி ஆச்சுனா இண்டஸ்ட்ரில பெயர் கெட்டுடும். என்ன செய்யறதுனு தெரியலை. செல்போனை எடுத்து என் கான்டாக்ட்  லிஸ்ட்டை வரிசையா பார்த்தேன். ‘தேனாண்டாள் ஃபிலிம்ஸ்’ முரளி சார் நம்பரை பார்த்ததும் டக்குனு கால் பண்ணி விஷயத்தை சொன்னேன்.  ‘எவ்வளவு வேணும்’னு மட்டும் கேட்டார். சொன்னேன். சில நிமிடங்கள்ல பணம் கைக்கு வந்தது. முதல் நாள் அவமானப்படாம தப்பிச்சோம்.  இப்படித்தான் ‘தேனாண்டாள்ஃபிலிம்ஸ்’ படத்துக்குள்ள வந்தாங்க. அதுக்குப் பிறகு எங்களுக்கு எந்த டென்ஷனும் இல்ல. ஈசியா நாங்க நினைச்ச  மாதிரியே படத்தை முடிச்சோம்.

ஆனா, டிமானிடைசேஷன் இடியா இறங்கிச்சு. ஒரு பாட்டுல பழைய ஐநூறு, ஆயிரம் ரூபா தாள்களை மாலையா போட்டு டான்ஸ் ஆடுவேன். இதை  கிராஃபிக்ஸ்ல மாத்த முடியுமானு டிரை பண்ணி காஸ்ட் கேட்டோம். பக்குனு இருந்தது. ஏன்னா, அதுக்கு ஆகற செலவுல ரீ ஷூட்டே செய்துடலாம்.  கடைசில அப்படித்தான் செஞ்சோம். இப்படி பல பிரச்னைகளை சமாளிச்சு இப்ப ரிலீசுக்கு ரெடியா இருக்கோம். தொடர்ந்து படம் தயாரிக்கிற ஐடியா  இருக்கு. நானே நடிப்பேனா இல்லை வேற ஹீரோ நடிப்பாங்களானு ஸ்கிரிப்ட்தான் முடிவு செய்யும்.

‘கருப்பன்’, ‘சாமி 2’னு வில்லனாகவும் கலக்கறீங்க..?

நண்பர் விஜய் சேதுபதிக்காக ‘கருப்பன்’ செஞ்சேன். அவர்கிட்ட என்னால நோ சொல்ல முடியாது. ஆனா, தொடர்ந்து வில்லனா நடிக்கக் கூடாதுனு  தீர்மானமா இருந்தேன். அப்ப ஹரி சார்கிட்டேந்து போன். ‘சாரி சார்... நெகடிவ் ரோல் பண்ண வேண்டாம்னு இருக்கேன்’னு சொன்னேன். ‘கதையைக்  கேட்டுட்டு முடிவு பண்ணுங்க’னு முழு ஸ்கிரிப்டையும் சொன்னார். எக்ஸைட்டிங்கா இருந்தது.

‘எப்ப ஷூட்டிங் கிளம்பலாம்’னு டக்குனு கேட்டேன்! அப்படியொரு ரோலை ‘சாமி 2’ல கொடுத்திருக்கார். இதுல எனக்கு மூணு லுக். அதுல ஒரு  கெட்டப்தான் இப்ப வெளியாகியிருக்கு. ஸ்பாட்ல ஹரி சாரோட எனர்ஜியை பார்த்து பிரமிச்சுட்டேன். நைட் ஷூட்லயும் அவ்வளவு உற்சாகமா  இருக்கார். விக்ரம் சார்... சொல்லவே தேவையில்ல. அப்படியொரு இன்ஸ்பையரிங் ஆக்டர். நிறைய கத்துகிட்டேன். ஆனா, ஒண்ணு. இனி வில்லனா  நடிக்க மாட்டேன்.  

ஃபேமிலி லைஃப் எப்படி போயிட்டிருக்கு?

சந்தோஷமா. நிறைவா. ரேஷ்மி என்னை உள்ளங்கைல தாங்கறாங்க. மகள் முத்ராவுக்கு முதல் பிறந்தநாளை கிராண்டா கொண்டாடினோம். விஜய்  சேதுபதி உட்பட நெருக்கமான நண்பர்கள் எல்லாம் வந்திருந்து அவளை ஆசீர்வதிச்சாங்க. அடுத்ததா ‘ட்ரீம் வாரியர்ஸ்’ எஸ்.ஆர்.பிரபுசார் தயாரிப்புல  ஒரு வெப் சீரிஸ்ல நடிக்கிறேன். ‘சவாரி’ குகன் டைரக்ட் பண்றார்.


மை.பாரதிராஜா
படங்கள்: ஆ.வின்சென்ட் பால்