விவேகானந்தர் இல்லமான ஐஸ்ஹவுஸ்!தல புராணம்

ஐஸ் ஹவுஸ், கேஸ்டில் கெர்னன், மரைன் மேன்ஷன், விதவைகள் இல்லம், ஆசிரியர் பயிற்சி விடுதி... இப்போது, விவேகானந்தர் இல்லம்! எத்தனை பெயர்கள் அந்தக் கட்டடத்துக்கு? கடற்கரைச் சாலையில் வட்ட வடிவமாக வீற்றிருக்கும் விவேகானந்தர் இல்லம் ஒரு காலத்தில்  ஆங்கிலேயர்களின் ஐஸ் ஹவுஸாக ஜில்லென இருந்தது வரலாற்று சுவாரஸ்யமல்லவா?! இன்று நிறைய ஜன்னல்களோடு காற்றோட்டமாக ரோஸ்  கலரில் பளபளவென மிளிரும் இந்தக் கட்டடம் அப்போது காற்றே புகாதபடி கட்டப்பட்டிருந்தது எனச் சொன்னால் யாராவது நம்புவார்களா?

ஆங்கிலேயர்கள் மதராசபட்டிணத்தை முழுமையாக தங்கள் ஆளுகையின் கீழ் கொண்டு வந்த பிறகு வாழ்க்கையை சுகமாக வாழத் தொடங்கினர். ஆனால், அவர்களால் இங்குள்ள வெக்கையைத் தணிக்க முடியவில்லை. அதற்கு பனிக்கட்டிகள் தேவையாக இருந்தது. தவிர, உணவைப்  பாதுகாப்பதற்கும், பானங்களை குளிர்ச்சியாக வைப்பதற்கும் ஐஸ் கட்டிகளின் அவசியம் ஏற்பட்டது. இந்தப் புள்ளியிலிருந்துதான் ஐஸ் ஹவுஸின்  கதையும் தொடங்குகிறது. ஆங்கிலேயர்களின் வேட்கையை அறிந்த அமெரிக்காவின் ‘ஐஸ் கிங்’ என்றழைக்கப்பட்ட ஃபிரெடரிக் டியூடர் 1833ம் வருடம்  முதன்முதலாக கல்கத்தாவிற்கு தனது ஐஸ் கப்பலான க்ளிப்பர் டஸ்கனியை அனுப்பினார்.

நான்கு மாத கடல் பயணத்துக்குப் பிறகு கல்கத்தாவில் இறங்கியது அந்தக் கப்பல். ‘‘உருகாத 180 டன் எடையுள்ள ஐஸ் கட்டிகளை சுங்கவரி  இல்லாமல் இறக்குமதி செய்வதற்கு டியூடரின் கூட்டாளி வில்லியம் ேராஜர்ஸ் அனுமதி பெற்றார். அந்தச் சரக்கு உடனே விற்பனையானதில்  கிடைத்த ெபருமளவு லாபத்தின் மூலம் டியூடர் ஐஸ் கம்பெனியின் கிளையும், கிடங்கும் கல்கத்தாவில் நிறுவப்பட்டன. பிறகு, 1840களின் மத்தியில்  சென்னையிலும், மும்பையிலும் கிளைகள் திறக்கப்பட்டன. காலை 6 மணி முதல் மாலை 9 மணி வரை அங்கு ஐஸும், அமெரிக்க ஆப்பிள்களும்  கிடைத்தன.

ஒரு பவுண்ட் ஐஸின் விலை நாலணா என்ற ரீதியில் வியாபாரம் மும்முரமாக நடந்தது!’’ என ‘சென்னை மறுகண்டுபிடிப்பு’ நூலில் குறிப்பிடுகிறார்  எழுத்தாளர் எஸ்.முத்தையா. கல்கத்தா, பம்பாய், மெட்ராஸ் நகரங்களில் ஐஸ் பாதுகாப்புக்காக டியூடர் கட்டடங்களைக் கட்டினார். அவற்றில் 1842ல்  கட்டப்பட்ட மெட்ராஸ் கட்டடம் மட்டுமே இன்று வரை நிலைத்து நிற்கிறது. மெட்ராஸுக்கு கப்பல்களில் வரும் ஐஸ் கட்டிகள் மசூலா படகுகள் மூலம்  கரைக்கு எடுத்து வரப்பட்டன. பிறகு கூலிகள் தலைமேல் ஏற்றி அவற்றை ஐஸ் ஹவுஸில் பத்திரமாக அடுக்கினர். சுமார் நாற்பது ஆண்டுகள் வரை  டியூடரின் ஐஸ் பிசினஸ் இந்தியாவில் ஓகோவென நீடித்தது. நீராவி அழுத்தத்தின் மூலம் குளிர்பதன முறை கண்டறியப்பட்ட பிறகு வணிகம்  கொஞ்சம் கொஞ்சமாக மறையத் தொடங்கியது.

பனிக்கட்டித் தொழிற்சாலைகள் மெட்ராஸ் நகரிலேயே அதிக எண்ணிக்கையில் வந்ததால் கப்பல் இறக்குமதிக்கு அவசியமில்லாமல் போனது. இதனால்,  ஐஸ் ஹவுஸ் 1880களில் விற்கப்பட்டது. மைசூரைச் சேர்ந்த வழக்கறிஞர் பிலிகிரி ஐயங்கார் இந்தக் கட்டடத்தை வாங்கி வீடாக மாற்றினார். மேலும்  அவர், ஆங்கிலேய நீதிபதியான ஜேம்ஸ் கெர்னன் மேல் கொண்ட ஈடுபாட்டால் வீட்டுக்கு, ‘Castle Kernan’ எனப் பெயர் வைத்தார். அரை  வட்டவடிவமான வராண்டாவை வைத்து வசிப்பதற்கு ஏற்ற இடமாக அதை மாற்றினார். ஆனாலும் போதுமான காற்றோட்டம் இல்லாமல் இருந்தது.  இருந்தாலும் மைசூரில் இருந்த தனது சகோதரரையும் அழைத்துக்கொண்டு கூட்டுக் குடும்பமாக வாழ்க்கையை நடத்தினார்.  இவருக்கு, சுவாமி  விவேகானந்தரின் பேச்சில் அதீத ஈர்ப்பு.

இந்த நேரத்தில் சிகாகோ ஆன்மீக மாநாட்டில் சொற்பொழிவு முடித்துவிட்டு கொழும்பிலிருந்து ராமேஸ்வரம் வந்து சேர்ந்தார் விவேகானந்தர்.  அங்கிருந்து ரயில் மார்க்கமாக சென்னை வந்தவரை பிலிகிரி ஐயங்கார் வரவேற்று தன் வீட்டில் தங்குமாறு அழைத்தார். 1897ல் 9 நாட்கள் இவரது  வீட்டில் தங்கியிருந்தார் சுவாமி விவேகானந்தர். அப்போது பிலிகிரியாரும் மற்றவர்களும் வேண்டுகோள் வைக்க தென்னிந்தியாவின் ராமகிருஷ்ண  மடம் சென்னையில் நிறுவப்பட்டது. 1897 முதல் 1906 வரை பத்தாண்டுகள் ஐஸ் ஹவுஸில் இருந்துதான் ராமகிருஷ்ணமடம் செயல்பட்டது. பிறகே,  மயிலாப்பூரிலுள்ள இப்போதைய இடத்துக்கு மாறியது.  இதற்கிடையே பிலிகிரியாரின் பதினோரு வயது மகன் இறந்து போனார். அவரது இரண்டு  மகள்களும் இளம் வயதிலேயே விதவைகளானார்கள்.

இதனால் மனவேதனை அடைந்த அவர் இதய நோயால் மரணமடைந்தார். அவரது சகோதரரும் சொந்த ஊரான மைசூருக்கே திரும்பிவிட்டார். 1907ல்  கேஸ்டில் கெர்னன் ஏலத்துக்கு வந்தது. அதை ஒரு ஜமீன்தார் வாங்கினார். பிறகு, அவரிடமிருந்து அன்றைய ஆங்கிலேய அரசு ஐஸ் ஹவுஸை  விலைக்கு வாங்கி ‘மரைன் மேன்ஷன்’ எனப் பெயரிட்டது. இந்த இடத்தில் பத்ம விருது பெற்ற சகோதரி சுப்பலட்சுமியை நினைவுகூர வேண்டியது  அவசியம். ஏனெனில், அவர்தான் சில காலம் இந்தக் கட்டடத்தில் ‘விதவைகள் இல்லம்’ நடத்தி வந்தார். தன்னுடைய பதினோரு வயதில்  விதவையான இவர், டிகிரி பட்டம் வாங்கிய சென்னை மாகாணத்தின் முதல் பெண்மணி ஆவார்.

அன்று, பி.ஏ. முதல் வகுப்பில் ஹானர்ஸ் உடன் தேர்வு பெற்றது நாடு முழுவதும் பேசப்பட்டது. ‘‘அப்போது மிஸ் லிஞ்ச் என்ற ஆங்கிலப் பெண்மணி  மெட்ராஸின் ‘இன்ஸ்பெக்ட்ரஸ் ஆஃப் வுமன் எஜுகேஷன்’ ஆக இருந்தார். இவர் சுப்பலட்சுமியிடம் 1912ல் பிராமண விதவைகளுக்கான ஓர் இல்லம்  தொடங்கும்படி அறிவுறுத்தினார். அதை ஏற்று பொதுமக்களிடமிருந்து நன்கொடையாக ரூ.2 ஆயிரம் திரட்டினார். இதை மூலதனமாக வைத்து, ‘சாரதா  ஆஸ்ரமம்’ என்ற அமைப்பை இளம் விதவைகளுக்காக ஆரம்பித்தார். நான்கு பெண்மணிகள் சேர்ந்தனர். அதேநேரத்தில், சிஸ்டர் சுப்பலட்சுமி சாரதா  மகளிர் சங்கம் ஒன்றையும் ஆரம்பித்திருந்தார்...’’ என ‘மதராசபட்டிணம்’ நூலில் குறிப்பிடுகிறார் ஆய்வாளர் நரசய்யா.

இடப்பற்றாக்குறையால் இந்த விதவைகள் இல்லம் 1917ல் ஐஸ் ஹவுஸுக்கு மாறியது. பிறகு, 1922ல் இதனருகில் லேடி வெல்லிங்டன் ஆசிரியர்  பயிற்சிக் கல்லூரி ஆரம்பிக்கப்பட்டதால் ஐஸ் ஹவுஸ் அதன் விடுதியாகச் செயல்பட்டது. 1963ம் ஆண்டு விவேகானந்தரின் நூற்றாண்டையொட்டி  மாநில அரசு ‘விவேகானந்தர் இல்லம்’ எனப் பெயர் மாற்றம் செய்தது. ஆசிரியர் கல்லூரி விடுதியும் இந்தக் கட்டடத்திலே இயங்கி வந்தது. நிறைவில்,  1997ல் தமிழக அரசு ராமகிருஷ்ண மடத்துக்கு இந்தக் கட்டடத்தை 99 வருட குத்தகைக்கு அளித்தது. அதன்பின் புதுப்பிக்கப்பட்டு பழமை மாறாமல்  புதுப்பொலிவோடு பராமரிக்கப்பட்டு வருகிறது இந்தக் கட்டடம்!

(பயணிப்போம்)
பேராச்சி கண்ணன்
படங்கள்: ஆ.வின்சென்ட் பால்

இன்று எப்படியிருக்கிறது?

*    விவேகானந்தரைப் போற்றும் வகையில் அழகான அருங்காட்சியகமாக மாறியிருக்கிறது. வாசலிலேயே சுவாமி விவேகானந்தர்  அமர்ந்திருக்கும் பெரிய சிலை வரவேற்கிறது. அதனடியில், ‘1897ல் பிப்ரவரி 6ம் தேதி முதல் 15ம் தேதி வரை விவேகானந்தர் இந்த இல்லத்தில்  தங்கியிருந்தார்’ என்கிற வாசகம் பளிச்சிடுகிறது.
*     கீழ்த்தளத்தில் இரண்டு அறைகள். ஒன்றில் வேதங்கள், மகாபாரதம், ராமாயணம், பௌத்தம் போன்றவற்றைப் பற்றிய ஓவியங்கள்  அலங்கரிக்கின்றன. அடுத்துள்ள அறை வட்டமாகக் காட்சியளிக்கிறது. அதில்தான் ஒரு காலத்தில் ஐஸ் கட்டிகள் இறக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டுள்ளன.  அதைப்பற்றிய புகைப்படங்களும், மாதிரிகளும் அங்கே காண முடிகிறது. தவிர, ஐஸ்கட்டி கரையாமல் இருக்க பயன்படுத்திய மரக்கரிகளையும் சுவரில்  உள்ள துளைகளில் வைத்துள்ளனர்.

*      முதல் தளத்தின் வலதுபக்கத்தில், விவேகானந்தரின் பிறப்பு முதல் இறப்பு வரையிலான அத்தனை விஷயங்களும், அவரது வெளிநாட்டுப்  பயண நடவடிக்கைகளும் புகைப்படங்களாக மாட்டப்பட்டிருக்கின்றன.
*    சிகாகோ நகரில் அவர் ஆற்றிய சொற்பொழிவு சார்ந்த புகைப்படங்களும், சென்னையில் அவர் தங்கிருந்தபோது எடுத்துக்கொண்டவையும்  காலத்தைக் காட்டி நிற்கின்றன.
    இடதுபக்கத்தில் அவர் தங்கியிருந்த அறை, இப்போது அமைதி தவழும் தியானக் கூடமாக மிளிர்கிறது.
*    இரண்டாம் தளத்திலுள்ள 3டி காட்சிக் கூடத்தில் விவேகானந்தரின் சிகாகோ சொற்பொழிவு 15 நிமிடங்கள் காட்டப்படுகிறது.  
*    பெரியவர்களுக்கு 20 ரூபாயும், குழந்தைகளுக்கு 10 ரூபாயும், பள்ளி வழியே மொத்தமாக வரும் மாணவர்களுக்கு 5 ரூபாயும்
வசூலிக்கின்றனர்.
*    காலை 10 மணி முதல் 12.30 வரையும்; மாலை 3 மணி முதல் 7.15 வரையும்  பார்வையிடலாம். திங்கள் விடுமுறை.

ஐஸ் நிறுவனர் ஃபிரெடரிக் டியூடர்

* அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் 1783ம் ஆண்டு பிறந்த ஃபிரெடரிக் டியூடர், தனது 23வது வயதில் ஐஸ் வணிகத்தைத் தொடங்கினார்.  முதன்முதலில் ஐஸில் பிசினஸ் செய்தது இவர்தான்.
*  பாஸ்டன் நகரைச் சுற்றியுள்ள குளங்களிலிருந்து குளிர்காலங்களில் உறையும் ஐஸ் கட்டிகளை வெட்டி எடுத்து மேற்கிந்தியத் தீவுகள், ஐரோப்பா  உள்ளிட்ட பகுதிகளுக்கு முதலில் அனுப்பினார். அதற்காகவே ஐஸ் ஹவுஸை பல பகுதிகளில் கட்டினார்.
*  ஐஸ் கட்டிகள் போகும் வழியிலேயே உருகிவிட, கோணிப்பையைச் சுற்றி அதன்மேல் மரத்தூளைத் தூவி எடுத்துச் சென்றார். இதுதான் அவரை  இந்தியா வரை பிசினஸ் செய்ய வைத்தது.