COFFEE TABLE



கிறுக்கல்

அஜய் தேவ்கனுடன் நடித்த ‘ரெய்டு’க்குப் பின், போட்டோஷூட்டில் பிசியாகிவிட்டார் ‘நண்பன்’ பொண்ணு இலியானா. சமீபத்தில் லண்டனைச் சேர்ந்த மாடர்ன் ஆர்ட்டிஸ்ட் சுராஜ்தன்கி என்பவர் இலியானாவின் பெயரை தனது ஸ்டைலில் வரைந்திருக்கிறார். அதை சூட்டோடு சூடாக இலியானாவிற்கும் தட்டிவிட்டார் மனிதர். ‘ஐ லவ் திஸ் கிறுக்கல்’ என அந்த ஓவியத்தை வியந்து, தன் இன்ஸ்டா பக்கத்திலும் பகிர்ந்திருக்கிறார் இலி. அப்புறமென்ன? இரண்டே நாளில் ஒரு லட்சம் லைக்குகளைத் தாண்டிவிட்டது அந்த மாடர்ன் கிறுக்கல்.

இதிலும் இந்தியாவே முதலிடம்!

‘‘வாகனம் ஓட்டும்போது மொபைல் போன் பயன்படுத்துவதில் இந்தியர்கள் முதலிடம்...’’ என்ற அதிர்ச்சியான தகவலைத் தெரிவித்திருக்கிறது ஜப்பானைச் சேர்ந்த ஆய்வு நிறுவனம் ஒன்று. ‘‘தென் இந்தியாவை விட, வட இந்தியாவில்தான் வாகனம் ஓட்டும்போது மொபைலில் பேசிக்கொண்டே செல்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது.

இருபது மாநிலங்களில் நடத்திய ஆய்வில் ஐந்தில் மூன்று பேர் இந்தத் தவறைச் செய்கின்றனர்...’’ என்கிறது அந்த ஆய்வு. ‘‘அதிவேகத்தில் செல்பவர்களைவிட, மிதமான வேகத்தில் செல்பவர்களே இந்தத் தவறை அதிகமாகச் செய்கின்றனர். தவறு செய்பவர்களில் நான்கில் ஒருவர் மட்டுமே எங்களிடம் மாட்டுகின்றனர்...’’ என்கிறது காவல்துறை.

க்யூட்!

‘கப்பல்’ ஹீரோயின் சோனம் பஜ்வாவை நினைவிருக்கிறதா? ‘அழகான ஹீரோயின்’ என இயக்குநர் ஷங்கராலே பாராட்டப்பட்டவர். இப்போது பஞ்சாபி படங்களில் செட்டில் ஆகிவிட்ட சோனம் பஜ்வா, இன்ஸ்டாவில் கலக்கிவருகிறார். சமீபத்தில் வாக்கிங் சென்ற ஒருவர், கூடவே தனது செல்ல நாய்க்குட்டியையும் அழைத்துப் போயிருக்கிறார். ஹேண்ட் பேக்கை சுமந்தபடி பவ்யமாகச் செல்லும் அந்த நாயின் க்யூட்னெஸில் மயங்கிய சோனம், அதை வீடியோவாக்கி இன்ஸ்டாவில் தட்டிவிட மூன்று லட்சத்தை நெருங்கிக்கொண்டிருக்கிறது லைக்ஸ்.

இதுதான் மனிதர்களின் அலைபேசியாம்

‘‘இதுதான் மனிதர்களுக்கான அலைபேசி...’’ என்ற அடைமொழியுடன் ‘லைட் போன் - 2’வின் விளம்பரம் வெளியாகியுள்ளது. ஸ்மார்ட் போனில் இருந்து மக்களை விடுவிக்கும் நோக்கத்தில் இந்த போன் தயாரிக்கப்பட்டுள்ளது. கால், மெசேஜ் வசதி மட்டுமே இதில் உள்ளது. கருப்பு மற்றும் வெள்ளை நிற டிஸ்ப்ளே, 4G - LTE, WiFi, GPS உடன், 1 GB ரேம், 8 GB மெமரி என்று தேவையான வசதிகளைக் கொண்டுள்ளது. சிறிய அளவில் கிரெடிட் கார்டைப் போல் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த போனின் விலை ரூ.26 ஆயிரம்.

அந்தரத்தில் நாய்!

அந்தரத்தில் கட்டப்பட்டிருக்கும் கயிற்றில் எந்தவித பயமுமில்லாமல் அசால்ட்டாக நடந்து செல்லும் சர்க்கஸ் வீரர்களின் சாகசத்தை நாம் பார்த்திருப்போம். இதே சாகசத்தை தன்னாலும் செய்ய முடியும் என்று சவால்விடுகிறது ஒரு நாய். சீனாவைச் சேர்ந்த வியாபாரி ஒருவரின் செல்ல நாய் ஒன்று, தன் எஜமான் வீட்டின் மேல்மாடியின் முனைக்கும், பக்கத்தில் இருக்கும் சுவருக்கும் இடையில் இறுக்கிக் கட்டப்பட்டிருக்கும் கயிற்றில் ராஜநடை போடுகிறது. அந்த கயிற்றுக்கும் நிலத்துக்கும் இடையில் 30 அடி இடைவெளி என்பது ஆச்சர்யம். இந்த அரிய காட்சியை வீடியோவாக்கி சமூக வலைத்தளங்களில் வெளியிட சீனாவின் ஹீரோவாகிவிட்டது அந்த நாய்.

குங்குமம் டீம்