பெண்களுக்கே நிலம் சொந்தம்!



‘‘தினக்கூலியாக உணவுக்காக போராடும் எங்களுக்கு அரசு செய்த பெரிய உதவி நிலத்தை எங்கள் பெயருக்கு உரிமை மாற்றிக் கொடுத்ததுதான்!’’ மலர்ச்சியுடன் பேசுகிறார் ஜெர்மியா. மேற்குவங்க மாநிலத்தின் டார்ஜிலிங் மாவட்டத்தைச் சேர்ந்த கேசர்டோபா கிராமத்தில் வாழும் ஜெர்மியா மட்டுமல்ல, அங்குள்ள 41 ஏழைக் குடும்பங்களுக்கு நிலங்களைப் பெற்றுத்தந்துள்ளது ‘லேண்டெஸா இன்ஸ்டிடியூட்’ என்ற உலகளாவிய தன்னார்வ அமைப்பு.

அத்துடன் இக்கிராம மக்களுக்கு விவசாயப் பயிற்சியும், நிலத்தில் விதைக்க தானியங்களையும் வழங்கி உதவுகிறது. தினசரி 130 ரூபாய் வருமானத்தில் இரண்டு குழந்தைகளை வளர்க்க போராடி வரும் ஜெர்மியா போன்ற பெண் மணிகளைக் கொண்ட ஏழைக் குடும்பத்துக்கான எதிர்கால நம்பிக்கையை, அரசும் லேண்டெஸா அமைப்பும் பெற்றுத் தரும் நிலம் மீதான உரிமை தந்துள்ளது என்பது மறுக்கமுடியாத உண்மை.

பெண்களின் சக்தி!

உலகம் முழுவதும் ஐம்பதுக்கும் மேற்பட்ட நாடுகளில் நிலஉரிமைகளை சீர்திருத்தி கிராமப் பொருளாதாரத்தை வலுவூட்டி மேம்படுத்தி வருகிறது ‘லேண்டெஸா இன்ஸ்டிடியூட்’ அமைப்பு. இந்தியாவில் மட்டும் 6 லட்சத்து 80 ஆயிரம் குடும்பங்களுக்கு நிலங்களின் மீதான உரிமைகளை அரசுடன் இணைந்து பெற்றுக் கொடுத்துள்ளது இவ்வமைப்பின் சாதனை.

ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, ஒடிஷா, தில்லி, உத்திரப் பிரதேசம், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் அரசு மற்றும் சக தன்னார்வ அமைப்புகளுடன் இணைந்து நிலவுரிமைக்கான பிரசாரம் மற்றும் சட்டங்களைத் திருத்தி ஏழை மக்களுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறது லேண்டெஸா.

நிலச்சீர்திருத்த புரட்சி!

1967ம் ஆண்டு அமெரிக்காவிலுள்ள வாஷிங்டன் சட்டப்பள்ளி பேராசிரியரான ராய் பிராஸ்டர்மென், லத்தீன் அமெரிக்க நாடுகளில் நடைபெற்ற நிலச்சீர்திருத்தத்தின் அம்சங்களை விளக்கி பத்திரிகையில் கட்டுரை ஒன்றை எழுதினார். இவரது ஜனநாயகமுறையிலான நிலச் சீர்திருத்தத்தைப் பார்த்து வியந்த அமெரிக்க அரசு, 1971ம் ஆண்டு பிராஸ்டர்மென்னை வியட்நாமில் இதனை சோதித்துப் பார்க்க அனுப்பியது.

1971 - 73 வரையிலான காலகட்டத்தில் பிராஸ்டர்மென் செய்த நிலச்சீர்திருத்தங்களின் விளைவாக அரிசி உற்பத்தி 30 சதவிகிதம் அதிகரித்ததோடு 10 லட்சம் குத்தகை விவசாயிகளும் நில உரிமை பெற்று பயனடைந்தனர். ‘நியூயார்க் டைம்ஸ்’ பத்திரிகை இருபதாம் நூற்றாண்டின் மிகச்சிறந்த நிலச்சீர்திருத்த நடவடிக்கை என இதனைப் பாராட்டி கட்டுரை எழுத, பல்வேறு நாடுகளும் இதனைச் செயல்படுத்த ராய் பிராஸ்டர்மென்னை அழைத்தன. 1981ம் ஆண்டு நிலவுரிமைச் சட்டங்களை சீர்திருத்துவதற்கான அமைப்பாக லேண்டெஸா இன்ஸ்டிடியூட் உருவானது. தனது லாபநோக்கற்ற சமுதாயப் பணிக்காக 2015ம் ஆண்டு ஹில்டன் பரிசும் பெற்றுள்ளது.

உன்னத நோக்கம்!

கிராமப்புறங்களில் விவசாயம் சார்ந்து அல்லது காடுகளைச் சார்ந்து வாழ்வாதாரத்தைக் கொண்டுள்ள மக்களுக்கு நிலங்களை அவர்கள் பெயருக்கு பெற்றுக் கொடுத்து வறுமையின் பிடியிலிருந்து அவர்களை மீட்பதே நிறுவனத்தின் நோக்கம். உலகெங்கும் 40 கோடி பெண்களும், 25 கோடி ஆண்களும் தங்களுக்கான நிலவுரிமையைக் கோராமல் வறுமையில் வாழ்ந்து வருவதைக் குறிப்பிடும் லேண்டெஸா, இவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி கல்வி, குடிநீர், உணவு ஆகியவற்றை உறுதி செய்ய உழைத்து வருகிறது.

யாருக்கு நிலம் சொந்தம்?

பெண்களுக்கான நிலவுரிமையை இந்தியா உறுதி செய்துள்ளதே என பலரும் நினைக்கலாம். அவை சட்டப்புத்தகத்தில் சரியாக இருந்தாலும் எதார்த்தத்தில் பல்வேறு மாநிலங்களில் இன்னும் பெண்களுக்கு சொத்துரிமை கிடைக்காமல் லைபீரியா நாட்டைப் போலவே உள்ளோம். அங்கு பெண்களுக்கு தனி சொத்துரிமை கிடையாது. விவசாய நிலத்தில் வியர்வை சிந்த பெண்கள் உழைத்தாலும் நிலவுரிமை பெண்களின் கணவர்கள் அல்லது மகன்களின் பெயரில்தான் இருக்கிறது.

இதை மாற்றத்தான் லேண்டெஸா அமைப்பு முன்வருகிறது. நிலங்களுக்கான உரிமையைப் பெற்று ஏழைமக்களுக்கு அளிக்க நிலம் குறித்த விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்துகிறது. பின் அப்பகுதி சார்ந்த கலாசாரம், அரசியல் விஷயங்களைக் கணக்கிலெடுத்து குடும்பங்கள் வறுமையில் வாடாமல் இருக்க தேவையான நிலத்தை ஆராய்ந்து கணக்கிடுகிறது. பின்னர், மத்திய, மாநில அரசுகளின் நிலச்சட்டத்தினைச் சீரமைத்து நிலங்களைப் பயன்படுத்துவதற்கான உரிமையைப் பெற்றுத்தருகிறது.

பெண்களுக்கு சமநீதி!

முதன்மை மாநிலங்கள்

லட்சத்தீவுகள் (41%),
மேகாலயா (34.3%),
தமிழ்நாடு (17.8%),
ஆந்திரா (23.7%),
கர்நாடகா (17.3%).

பின்தங்கிய மாநிலங்கள்

மத்தியப் பிரதேசம் (8.6%), ராஜஸ்தான் (7.1%),
உத்திரப் பிரதேசம் (6.1%).

நிலவுரிமைச்சட்டத்தில் முதலிடம்

லட்சத்தீவுகள் (31.1%),
மேகாலயா (26%).

பெண்களுக்கு நிலவுரிமை

இந்தியா (12.8%),
சீனா (17%).

விவசாயத்தில் பெண்களின் உழைப்பு விகிதம்

55/56%;
விவசாயக்கூலிகள் (32%).

(National Family Health Survey of 2015-16, Socio Economic Caste Census of 2011, agriculture census of 2011 தகவல்படி)

ச.அன்பரசு