ஊஞ்சல் தேநீர்



யுகபாரதி - 73

கஜல் என்றால் ‘மான்விழி’ என்று அர்த்தம். அதாவது, அழகை பிரதானப்படுத்துவதே கஜல். இயற்கையையும் காதலையும் பாடுவதே கஜலின் எல்லைகள். காதலி, கடவுள் என எதையெல்லாம் புனிதத்துவத்துடன் இணைக்க முடியுமோ அதையெல்லாம் கஜலில் பாடலாம்.

ஒன்றன்பின் ஒன்றாக அடுக்கிக்கொண்டே போய் இறுதியில் ஓர் உச்சத்தைத் தொடுவதே கஜலின் தன்மை. நம்முடைய சங்கப்பாடல்களில் இயற்கையைப் பாடும் வகை இருக்கிறது. ஆனால், அவை இசையுடன் இணைத்துப்பாடிய முறையில்லை. கஜல்கள் அந்தவிதத்தில்தான் நம்முடைய பாடல்களிலிருந்து வேறுபடுகின்றன. உருது கஜல்களைப் போல தமிழில் எழுத முடியாது என்றொரு எண்ணம் நம்மிடையே உண்டு. ஹிந்துஸ்தானிக்கு ஏற்ப எழுத நம்முடைய தமிழ் வளைந்து கொடுக்காது என்னும் தவறான புரிதலும் கூட சிலரிடத்தில் காணப்படுகிறது. உண்மையில், தமிழன்பன் இந்த எண்ணத்தை உடைக்கும் முயற்சியாகவே கஜல்களை தமிழில் ஆக்கி அளித்திருக்கிறார்.

தனக்குள்ள யாப்பு அறிவினாலும் மரபுப் பயிற்சினாலும் தமிழ் கஜல்களை உருவாக்கியிருக்கிறார். உருது அகாடமியின் துணைத் தலைவர் சஜ்ஜாத் புகாரியே ஒப்புக்கொள்ளும் அளவுக்கு என்பதுதான் அதில் விசேஷம். அசை, சீர், தளை, தொடை என்ற தமிழ் இலக்கணப் பயிற்சியை வைத்துக்கொண்டு, அதன் வழியே கஜல்களை எழுத முடியும் என நிரூபித்திருக்கிறார். புறத் தோற்றத்தில் எதுகை மோனை துள்ளல் சேர்த்து எழுதப்படாதபோது, அசல் கஜல்கள் உருவாக வாய்ப்பில்லை. உருது மொழிக்கேற்ப வடிவமைக்கப்பட்ட கஜல்களை, தமிழின் அளவுகோலுக்குத் தக்கவாறு மாற்றுவது தனிப்பெரும் ஆற்றல். வெறும் இலக்கியச் சுவையறிந்த ஒருவரால் இதைச் செய்துவிட முடியாது.

இலக்கணத்தைப் பிழையற பின்பற்றத் தெரிந்த ஒருவரால்தான் இத்தகைய  முயற்சிகளில் ஈடுபட முடியும். ‘கஜல் பிறைகள்’ என்னும் தலைப்பில் வெளிவந்துள்ள தமிழன்பனின் பாடல்களை இசையமைத்து, நூல் வெளியீட்டு விழாவில் அரங்கேற்ற நானும் இசையமைப்பாளர் டி.இமானும் முயன்றோம். என்றாலும், குறித்த நேரத்திற்குள் எங்களால் தயாராக முடியவில்லை. தொடர் பாடல் பதிவினால் அப்போது அம்முயற்சி தள்ளிவைக்கப்பட்டாலும், கூடிய வரையில் தமிழன்பனின் தமிழ் கஜல்களை இசையுடன் கேட்கும் வாய்ப்பிருக்கிறது. திரைப்பாடல் எழுதுவதில் அதிக விருப்பம் காட்டாத தமிழன்பன், கஜல்களை எழுதியிருக்கும் விதம் அசாத்தியமானது.

உதாரணத்திற்கு ஒன்றிரண்டை இசையமைத்த இமான், எங்கேயும் இசைக்கு நெருடலாக வார்த்தை இல்லையென்று வியந்ததை நானறிவேன். “நட்சத்திரக் கடிதத்தைப் பகலினிலே / யார் எடுத்துப் படிப்பார்? / தொட்டில் பாடலுக்கோர் மெட்டமைத்துச் செத்தவரா முடிப்பார்..?” என்று ஒரு கஜலின் இறுதியை எழுதியிருப்பார். அக்கஜலில் எல்லா வரிகளிலும் அழகு மிளிரும். “நிலாவட்டம் சாக்கடையில் என்றாலும் / யாரள்ளிக் குடிப்பார்? / கூழாங்கல் அடைகாத்து குஞ்சுகளைப் / பெற யாரே துடிப்பார்...” என அவர் அடுக்கிக்கொண்டே போகும் விதத்தில், நமக்குமே கஜல்களை எழுதிப்பார்க்கும் ஆர்வம் வந்துவிடுகிறது.

‘காஃபியா’வையும் ‘ரதீஃப்’பையும் கணக்கிட்டுக்கொண்டே எழுதப்படும் கஜலை, தமிழிலும் எழுத முடியும். ஒன்றைப்போல செய்து பார்த்தல் படைப்பாளிகளுக்கே உரிய ஆரம்ப குணம். அதிலும், தனித்து வெளிப்படும் ஆற்றலுடன் வெளிப்படுவது தமிழன்பனின் தனித்துவம். தொடக்கத்திலிருந்தே தமிழுக்கேற்ப ஒன்றைத் தயாரித்துத் தருவதில் தமிழன்பன் ஆர்வமுடையவர். ஆர்வத்தை சித்தியாக்கும்வரை அவர் ஓய்ந்ததில்லை. உருது மொழிக்கேயுரிய நளினமான பிரயோகங்களை, மெல்லின எழுத்துகளை மட்டுமே பயன்படுத்தி எழுதும் முயற்சி சவால்கள் நிரம்பியது.

ஒலிக் குறிப்புகளிலிருந்து இசையை உருவாக்குவதுபோல ‘காஃபியா’வையும் ‘ரதீஃப்’பையும் மெல்லின ஓசைகளாக அமைத்துக்கொள்வது, தமிழ் கஜல்களை வசீகரமுடையதாக்கும். அவர் தமிழிலிருந்துதான் சகலத்தையும் எழுதுவார்; அணுகுவார். தமிழின் தன்மைகளைப் புறக்கணிக்காமல் எழுதுவதே புதுமை என்னும் எண்ணம் அவரிடமுண்டு. எதையும் தமிழுக்குக் கொண்டுவருவதில் தீவிரம் காட்டுபவர். அதே சமயம், எது ஒன்றும் தமிழைக் காட்டிலும் சிறந்ததென்ற வாதத்தை அவர் வைத்ததாகத் தெரியவில்லை. நான் சொல்வது, தமிழில் இல்லாதது எதுவுமில்லை என்கிற பண்டித மனோபாவம் இல்லை. தமிழில், தமிழால் சகலமும் முடியும் என்கிற கம்பீரம் அல்லது நம்பிக்கை.

பிற மொழிகளில் எவை எவை உள்ளனவோ அவற்றையெல்லாம் தமிழ்ப்படுத்துவதிலும் அதன் வழியே தமிழை முன்னோக்கி நகர்த்துவதிலுமே அவருடைய விருப்பங்கள் விளைகின்றன. கடந்த கால் நூற்றாண்டுக்கும் மேலாக அவருடைய படைப்புகளை வாசித்து வருகிறேன். நேரடியாக பழகும் வாய்ப்பையும் பெற்றிருக்கிறேன். பத்திரிகையில் பணியாற்றியபோதும் சரி, திரைப் பாடலாசிரியனாக ஆகிவிட்ட இப்போதும் சரி, அவருடைய ஒவ்வொரு சந்திப்பிலும் ஒவ்வொரு நூலிலும் ஏதோ ஒரு புதிதை அறிமுகப்படுத்துபவராகவே இருந்து வருகிறார். அவர் தலைமையில் நடைபெற்ற பல அரங்குகளில் பங்கு பெற்றிருக்கிறேன். ஒரு மேடையில்கூட அவர், புதிய செய்திகளைப் பகிராமல் இருந்ததில்லை.

கவியரங்குகளில் தனக்குப் பின்னால் வரும் இளம் கவிஞர்களை தாய்மையுடன் தாங்கிக்கொள்வார். ஒருமுறை மணப்பாறையில் நிகழ்ந்த கவியரங்கில் கவிதைப்பித்தன், நான், கபிலன், இளங்கம்பன், சொற்கோ ஆகியோர் கலந்து கொண்டோம். மேடையில் நாங்கள் எல்லோரும் அமர்ந்த நிலையில் கவியரங்கம் விமரிசையாகத் தொடங்கியது. தலைமைக் கவிதையை தமிழன்பன் வாசிக்கத் தொடங்கினார். அரங்கம் கைதட்டி ஆரவாரம் செய்தது. அப்போது பார்த்தால், நாற்காலியிலிருந்து கபிலன் மயங்கிச் சரிகிறார். இரண்டு மூன்று நாட்களாக சரியான உறக்கமில்லாமல் பாடல் பதிவிலும் கூட்டங்களிலும் கலந்துகொள்ள நேர்ந்ததால் அவரது உடல் ஒத்துழைக்கவில்லை.

கபிலன் மயங்கிச் சரிந்த மாத்திரத்தில் விழாக் குழுவினர் பதறிவிட்டனர். கவிதை வாசித்துக் கொண்டிருந்த தமிழன்பனோ, அந்த வேளையிலும், அரங்கையும் கபிலனையும் ஒருசேர தாங்கிக் கொண்ட தருணத்தை மறப்பதற்கில்லை. மிகையுணர்ச்சிகளுக்கு ஆட்படாதவர் தமிழன்பன் என்று நான் முதல் பத்தியில் எழுதிய காரணம் அதுதான். அருகிலிருந்த மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட கபிலன், திரும்பி வந்து தன் கவிதையை வாசிக்கும்வரை மேடையும் காத்திருந்தது. அவரை விட்டுவிட்டு அரங்கத்தை முடித்திருக்கலாம். ஆனால், அப்படிச் செய்யாமல், கபிலன் திரும்பி வந்து கவிதையை வாசித்தபிறகுதான் அரங்கை நிறைவு செய்தார். அவரை நம்பி எங்கேயும் போகலாம்.

மூன்று தலைமுறைகளாக கவிதைகளுடனும் கவிஞர்களுடனும் பழகிவரும் அவர், ஒரு சந்தர்ப்பத்தில் கூட யாரையும் குறைத்துச் சொல்லி நாங்கள் கேட்டதில்லை. கொள்கையளவில் அவருடன் மாறுபட்டவர்கள், வேறுபட்டவர்கள் பலருண்டு. திராவிட இயக்கத்தைக் கடுமையாக விமர்சித்துக் கட்டுரை எழுதுபவர்களே ஆனாலும், அவர்கள் கருத்துகளில் எவை எவை தக்கனவோ அவற்றை ஏற்றுக்கொள்ள தயங்க மாட்டார். எழுத்திலும் இயல்பிலும் நிதானத்தை இழந்துவிடாத அவர், “எனக்கு ஒரு மகள் இருந்திருந்தால், யுகபாரதிக்கு திருமணம் செய்து கொடுத்திருப்பேன்...” என்றதும், “எனக்கு ஒரு மகள் இல்லையே என்ற வருத்தம் இப்போதுதான் வருகிறது...” என்றதும், என்மீது அவர் கொண்டுள்ள அன்பின் வெளிப்பாடே அன்றி வேறில்லை.

(பேசலாம்...)
ஓவியங்கள்: மனோகர்