மணியக்காரர் சத்திரமும் ஸ்டான்லி மருத்துவமனையும்!



தல புராணம்

சாதாரண மனிதன் அசாதாரண செயல்களைச் செய்யும்போதே முகம் அறியப்பட்டு கொண்டாடப்படுகிறான்.

ஆனால், பெயரோ, முகமோ எதுவும் அறியப்படாத ஓர் அசாதாரண மனிதரை காலம் கடந்து நினைவில் வைத்திருக்க முடியுமா? முடியும் என்பதே சென்னையின் ஸ்டான்லி மருத்துவமனை எதிரில் இருக்கும் ‘மணியக்காரர் சத்திரம்’ கொடுக்கும் பதில்! அதென்ன மணியக்காரர் சத்திரம் எனச் சென்னைவாசிகளே கேட்கக்கூடும். ஏனெனில் அவர்களுக்கு எம்.சி.ரோடு என்றால்தானே தெரிகிறது?! சென்னையில் முதன்முதலாகவும் முறையாகவும் தொடங்கப்பட்ட ஓர் அறக்கட்டளையே ‘மணியக்காரர் சத்திரம்’! இந்தச் சாதாரண சத்திரம்தான் பின்னாளில் மாபெரும் சரித்திரத்தைக் கட்டி எழுப்பியது.

ஆம். ஸ்டான்லி மருத்துவமனை தொடங்கக் காரணமும் இதுவே! ஆங்கிலேயரின் நாக்கு சுழியால் ‘மோனேகர் சாரிட்டி’ என்றும், அது அமைந்திருக்கும் பகுதியை சுருக்கமாக ‘எம்.சி.ரோடு’ என்றும் அழைக்கின்றனர் மக்கள். அதனால், மணியக்காரர் சத்திரம் என்கிற பெயர் மறந்தேபோனது. ஆனால், சத்திர வரலாறு மறக்கக் கூடியதல்ல.  1782ம் வருடம். பிரிட்டிஷ் அரசுக்கும், மைசூர் நவாப்களுக்கும் தீராத பகை இருந்த காலக்கட்டம். மைசூர் அரசர் ஹைதர் அலி சென்னை மாகாணத்தைக் கட்டுக்குள் வைத்திருந்த ஆங்கிலேயர்களுக்குத் தொடர்ந்து கிலி ஏற்படுத்தினார்.

ஓயாத போரால் உயிரிழப்புகளும், பொருள் இழப்புகளும் அதிகரிக்க, மக்கள் பயந்து வீட்டிலேயே முடங்கிக் கிடந்தனர். இதனால் மெட்ராஸில் கடுமையான பஞ்சம் ஏற்பட்டது. மக்கள் பசியால் வாடித் துடித்தனர். யாராவது வந்து காப்பாற்ற மாட்டார்களா என்ற ஏக்கத்தில் துவண்டு போயினர். அப்போது, ஆபத்பாந்தவனாக வந்து சேர்ந்தவர்தான் ‘மணியக்காரர்’! அது தனியொருவரின் பெயர் அல்ல. கிராமத் தலைவரை ‘மணியக்காரர்’ என்ற பட்டம் சூட்டி அழைத்துள்ளனர். அவர் யார்? அவரது உண்மையான பெயரென்ன? யாருக்கும் தெரியாது.

அன்று அவர் உருவாக்கிய சத்திரம் 236 வருடங்களுக்குப் பிறகு இன்றும் தொடர்ந்து பணியாற்றி வருவதுதான் சாதனையின் உச்சம்! அப்போது பஞ்சத்தால் வாடிய மக்களின் துன்பத்தைக் கண்டு ராயபுரம் - பிராட்வே பகுதியில் கஞ்சித் தொட்டியை ஆரம்பித்தார் ‘மணியக்காரர்’. நீண்ட வரிசையில் நின்று கஞ்சி வாங்கிக் குடித்து தங்கள் பசியைப் போக்கிக் கொண்டனர் அன்றைய மெட்ராஸ்வாசிகள். பிறகு அந்த இடம் ஆதரவற்றவர்கள், ஏழைகள், நோயாளிகளுக்கான சத்திரமாக மாறிப் போனது. குறிப்பாக அடைக்கலம் வேண்டி வந்த முதியவர்களுக்கு நல்லதொரு இடமாக இருந்தது.

அன்று போரின் காரணமாக கருப்பர் நகர் சுவரின் அருகிலிருந்த அனைத்து கட்டடங்களையும் இடிக்க ஆங்கிலேய அரசு உத்தரவிட்டது, ஒன்றைத் தவிர! அது ஏழைகளுக்கு உணவளித்த சத்திரம்தான். பிறகு, மணியக்காரர் சத்திர அறக்கட்டளை தொடங்கப்பட்டது. இதனை பிரிட்டிஷ் அரசும் கோட்டையிலுள்ள புனித மேரி சர்ச்சின் நிர்வாகிகளும் சேர்ந்த ‘பஞ்ச நிவாரணக் குழு’ நிர்வகித்தது. அரசு நிதி மற்றும் ஆற்காடு நவாப் தந்த நன்கொடைகள் மூலம் மணியக்காரர் சத்திரத்திற்கு நிறைய உதவிகள் கிடைத்தன.

இந்நிலையில், கிழக்கிந்தியக் கம்பெனியில் உதவி மருத்துவராக இருந்த ஜான் அண்டர்வுட் 1797ம் வருடம் இந்திய நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக ஒரு மருத்துவமனைக்கு இடம் கேட்டு விண்ணப்பித்தார். மணியக்காரர் சத்திரத்திலிருந்த முதியவர்களுக்கு மருத்துவ உதவி தேவையாக இருந்ததால் அதன் வளாகத்தில் மருத்துவமனை அமைக்க அனுமதியளித்தது அரசு. இது நேட்டிவ் ஹாஸ்பிடல். அதாவது சுதேசி மருத்துவமனை என்று அழைக்கப்பட்டது. ஆனால், மக்கள், ‘கஞ்சித் தொட்டி மருத்துவமனை’ என்றே அழைத்தனர்.

பிறகு 1809ல் சத்திரமும் இந்த நேட்டிவ் மருத்துவமனையும் இணைந்து செயல்பட ஆரம்பித்தன. சில வருடங்களுக்குப் பிறகு சத்திரத்துக்கு அருகில் ராஜா வெங்கடகிரி என்பவர் இன்னொரு சத்திரத்தைத் தொடங்கினார். அதன் அருகில் ராஜா சர் ராமசாமி முதலியார் மகப்பேறு மருத்துவமனை கட்டடமும் இருந்தது. இவையெல்லாம் ஒன்றாக இணைய, மெல்ல வளர ஆரம்பித்தது சத்திரம். இதனிடைேய 1836ல் மருத்துவப் படிப்பும் இந்த நேட்டிவ் மருத்துவமனைக்குள் தொடங்கப்பட்டது.

1910ல் இந்த நேட்டிவ் மருத்துவமனையை மெட்ராஸ் அரசு தன்வசப்படுத்தி ராயபுரம் மருத்துவமனை எனப் பெயர் மாற்றியது. அதுவே, 1934ம் வருடம் அப்போதைய மெட்ராஸ் ஆளுநர் ஜார்ஜ் பிரடெரிக் ஸ்டான்லி நினைவாக ‘ஸ்டான்லி மருத்துவமனை’ என்றானது!  ஆமாம். இந்தியாவில் முதன்முதலில் வெற்றிகரமாகக் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்த அரசு மருத்துவமனை ஸ்டான்லிதான். மட்டுமல்ல. கை மறுவாழ்வுக்கான ஆராய்ச்சி மையமும், பிளாஸ்டிக் சர்ஜரி துறையிலும் சிறந்ததெனப் பெயரெடுத்து வருவதும் இதேதான்!   

இன்று எப்படி இருக்கிறது மணியக்காரர் சத்திரம்?

சுற்றிலும் உயரமான மரங்கள். நடு நடுவே சின்னதாக அங்கேயும் இங்கேயுமாகப் பழைய கட்டடங்கள். பசுமையும், அழகும் நிறைந்த நிம்மதியான சூழல்! பரபரப்பான ஸ்டான்லி மருத்துவமனைக்கு எதிரில் அமைதியாய் நிற்கிறது சத்திரம். ஆதரவற்ற முதியவர்கள் 51 பேர் இங்கே வசிக்கிறார்கள். இப்போது அறக்கட்டளையின் தலைவராக சென்னை கலெக்டரும், செயலாளராக ஸ்டான்லி மருத்துவமனையின் டாக்டர் ஒருவரும் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களெல்லாம் குழுவில் இருந்தாலும் சத்திரத்தின் முழு கண்காணிப்பும் பவானி அம்மாதான்! அறுபத்திநான்கு வயதாகும் அவருக்கு பூர்வீகம் சென்னை.

கணவர், மூன்று மகன்கள், ஒரு மகள் என குடும்பமும் உண்டு. ஆனாலும், வருடத்தில் சில நாட்கள் மட்டுமே வீட்டுக்குச் செல்கிறார். மீதி நாட்கள் எல்லாம் அவருக்கு இந்த ஆதரவற்றோர் அறக்கட்டளைதான் வீடு. கிட்டத்தட்ட 37 ஆண்டுகள், சலிக்காமல் தன்னுடைய பணியை சந்தோஷமாகச் செய்து வருகிறார். ‘‘முதியோருக்கான பயிற்சியை முடிச்சுட்டு, 1980ம் வருஷம் இங்க டைப்பிஸ்ட்டா வேலைக்கு சேர்ந்தப்ப சொற்ப சம்பளம்தான். ஆனா, இங்குள்ள ஆதரவற்றவர்களைப் பார்க்கிறப்ப அதெல்லாம் பெரிசா தோணலை. ஆரம்பத்துல வீட்டுக்கு போயிட்டு வந்துட்டு இருந்தேன். கண்காணிப்பாளரான பிறகு இங்கயே தங்கிடறேன்.

இப்ப, 33 பெண்கள், 18 ஆண்கள்னு மொத்தம் 51 பேர் இருக்காங்க. எல்லோருக்கும் 65 முதல் 85 வயசு வரை இருக்கும். எந்தக் குறையுமில்லாம சந்ேதாஷமா இருக்காங்க. காலையில காப்பி, டிபன் கொடுப்போம். மதியம் சாப்பாடு. இரவு சாப்பாடோ, டிபனோ ஏதாவது ஒண்ணு இருக்கும். தவிர, நல்லுள்ளம் கொண்டவங்க நிறைய பேர் சாப்பாடு, ஸ்நாக்ஸ், டிரஸ்னு தானமும் பண்ணுவாங்க. இன்னைக்கு வரை நல்லபடியா நடந்திட்டு இருக்கு...’’ என்கிறவர், சத்திரத்தில் ஆதரவற்றவர்களைச் சேர்க்க சில விதிமுறைகள் இருப்பதாகக் குறிப்பிடுகிறார்.

‘‘முதல்ல, ஆதரவற்றவங்களா இருக்கணும். அவங்களோட பகுதி கவுன்சிலர்கிட்ட இருந்து கவனிக்க யாரும் ஆளில்லைனு ஒரு கடிதம் வாங்கிட்டு வரணும். அப்புறம் அதை செயலாளருக்கு அனுப்பி உள்ளே சேர்த்துக்குவோம். இங்க உள்ளவங்க யாராவது இறந்திட்டா ஸ்டான்லி மருத்துவமனைக்கே அனுப்பிடுவோம். அவங்க எந்த நோயும் இல்லாத நல்ல உடலாக இருந்து, மருத்துவப் படிப்புக்குத் தேவைப்பட்டா பயன்படுத்திப்பாங்க. இல்லைன்னா, சுடுகாட்டுக்கு அனுப்பிடுவாங்க...’’ என்கிறார் பவானி அம்மா!

தொழுநோய் மருத்துவமனை

*    மணியக்காரர் சத்திரத்தின் ஒரு பகுதியாகவே மெட்ராஸ் தொழுநோய் மருத்துவமனையும் தொடங்கப்பட்டுள்ளது. அதற்கு முன் தொழுநோயாளிகள் மெட்ராஸ் நேட்டிவ் ஹாஸ்பிடலிலேயே அட்மிட் செய்யப்பட்டனர்.
*    1921ம் வருடம் மெட்ராஸ் ஆளுநராக இருந்த வெல்லிங்டன் பிரபு செங்கல்பட்டுக்கு இந்த மருத்துவமனையை மாற்றினார். லேடி வெல்லிங்டன் தொழுநோயாளிகள் குடியேற்றம் என்ற பெயரில் மிஷனரி அமைப்பால் நடத்தப்பட்டு வந்தது.
*    1955ல் இந்திய அரசு இதைக் கையகப்படுத்தி ‘மத்திய தொழுநோய் கல்வி மற்றும் ஆராய்ச்சி மையம்’ என மறுபெயரிட்டது.

(பயணிப்போம்)
பேராச்சி கண்ணன்