தண்ணீர் லாரிகள்



இரவுக்கு ஆயிரம் கண்கள்

இரவில் நன்றாக உறங்கி காலையில் எழுந்தவுடன் முகம் கழுவ குளியலறைக்குள் செல்கிறீர்கள். வாஷ் பேசினிலிருக்கும் குழாயைத் திறக்கும்போது ஒரு சொட்டு நீர் கூட வரவில்லை. அடுத்து என்ன நடக்கும்?

அடித்துப் பிடித்து மோட்டாரை ஆன் செய்வோம். அப்போதும் தண்ணீர் வரவில்லை என்றால் பதற்றத்துடன் கீழ் நிலைத் தொட்டியைப் பரிசோதிப்போம். அதிலும் தண்ணீர் இல்லை என்றால் அந்த நாளே மன உளைச்சலில் ஆரம்பிக்கும். சரியாகக் குளிக்காமல், சாப்பிடாமல், வேண்டா வெறுப்புடன் வேலைக்குச் செல்வோம். வேலை செய்யும் இடத்தில் எதற்கெடுத்தாலும் எரிச்சலடைவோம். வீட்டை காலி செய்துவிட்டு வேற இடத்துக்குப் போய்விடலாமா என்று கூட யோசிப்போம். இரண்டாவது நாள், மூன்றாவது நாள்... என்று தொடர்ந்து இதே மாதிரி தண்ணீர் வரவில்லை என்றால் பிரச்னை வேறு மாதிரி உருவெடுக்கும்.

அதன் விளைவுகள் பெரிதாக வெடிக்கும். பக்கத்து வீடு, தெரு, ஊர், மாவட்டம் என்று தண்ணீருக்கான சண்டை விரிவடையும். இறுதியில் மூன்றாம் உலகப்போர்தான். மேலே சொன்ன அனுபவத்தை கடக்காமல் யாராலும் சென்னையில் வாழவே முடியாது. அதுவே குழாயைத் திறந்தவுடன் தண்ணீர் வந்துவிட்டால் அந்த நாளே புன்முறுவலுடன் இனிமையாக விடியும். இந்த புன்முறுவலுக்கும், இனிமைக்கும் பின்னால் இருப்பவர்களில் முதன்மையானவர்கள் தண்ணீர் லாரி டிரைவர்கள்! நாம் உறங்கும் வேளையில் நமக்காக அவர்கள் காத்துக்கிடக்கிறார்கள்.

சென்னைக் குடிநீர் வாரியத்துக்குச் சொந்தமான தண்ணீர்த் தொட்டிகளிலிருந்து நீரைப் பிடித்து வந்து நம் தொட்டியை நிரப்பி நம்மை மன உளைச்சலில் இருந்து காப்பாற்றுகிறார்கள். பெரும்பாலான இடங்களில் நிலத்தடி நீர் வற்றிப் போய்விட்ட நிலையில் இவர்களின் பணியால்தான் சென்னை வாசிகளின் தண்ணீர்த் தேவை ஓரளவுக்காவது பூர்த்தியாகிறது. காலையிலிருந்து மாலை வரை தண்ணீர் லாரியில் பவனி வரும் இவர்கள் இரவில் என்ன செய்கிறார்கள்? கே.கே.நகரில் கம்பீரமாக வீற்றிருக்கிறது இரண்டு மாபெரும் தண்ணீர்த் தொட்டிகள். ‘டபுள் டேங்க்’ என்று சொன்னால்தான் பலருக்குத் தெரியும். இரவு பத்து மணி.

கிராமப்புறங்களில் தண்ணீர் பிடிப்பதற்காக குழாயின் முன் வரிசையாக வைக்கப்பட்டிருக்கும் குடங்களைப் போல டபுள் டேங்கின் முன் லாரிகள் நிற்கின்றன. இதிலும் முதலில் வருபவருக்கே முன்னுரிமை. இரவு இரண்டு மணி வரை லாரிகள் வந்து கொண்டேயிருக்கின்றன. மொத்தம் 88 லாரிகள். டேங்கின் முன் விரிந்து செல்லும் சாலையை லாரிகளின் அணிவரிசைகள் அலங்கரிக்கின்றன. இதுபோலவே இரவு முழுவதும் சென்னையின் ஒவ்வொரு தண்ணீர்த் தொட்டிக்கு முன்னாலும் லாரிகள் வரிசை கட்டி தண்ணீருக்காகக் காத்திருக்கின்றன. காலையில் 6 மணி முதல் லாரிகளில் தண்ணீர் பிடிக்கலாம். அதுவரை பாதி உறங்கியும், உறங்காமலும் அங்கேயே காத்துக்கிடக்கிறார்கள் டிரைவர்களும், கிளீனர்களும்.

கடைசியில் நிற்கும் லாரி தண்ணீர் பிடிக்க காலை 10 மணி ஆகிவிடுகிறது. இங்கிருந்துதான் கே.கே. நகரைச் சுற்றி 10 கி.மீ.  தொலைவுக்குள் இருக்கும் வீடுகள், ஹோட்டல்கள், மருத்துவமனைகள், தெருவில் இருக்கும் கருப்பு நிற டேங்க்... என அனைத்துக்கும் மெட்ரோ வாட்டர் சப்ளை செய்யப்படுகிறது. இதேபோல் சென்னை முழுவதும் ஆயிரக்கணக்கான தண்ணீர் லாரிகள் பகல் நேரத்தில் ஓய்வில்லாமல் ஓடுகின்றன. தோராயமாக தினமும் 6000 டிரிப்கள் அடிக்கின்றன. இந்த லாரிகள் எல்லாம் சென்னை குடிநீர் வாரியத்துடன் செய்யப்பட்ட ஒப்பந்தத்தின் மூலம் இயங்குகின்றன. ‘‘சொந்த ஊர் வந்தவாசி. அப்பாவும், அம்மாவும் கட்டட வேலைக்குப் போறாங்க.

ரெண்டு அக்கா, ஒரு அண்ணன். எல்லாருக்கும் கல்யாணம் ஆகிடுச்சு. எட்டாவதுல ஃபெயிலாயிட்டேன். அதுக்கப்புறம் ஸ்கூலுக்குப் போகப் பிடிக்கல. கொஞ்ச நாள் ஊர் சுத்திட்டு சும்மா இருந்தேன். அப்ப ஊர்க்காரர் ஒருத்தர் ‘என் கூட லாரி கிளீனரா வர்றியா’னு கேட்டார். சும்மா இருக்கறதுக்கு ஏதாவது வேலை செய்யலாம்னு போனேன். சாப்பாடு போக மாசம் 2,000 ரூபா கொடுப்பார். இந்தியா முழுசும் அந்த லாரில சுத்தியிருக்கேன். லாரிதான் எங்க வீடு. அதுலயே தங்கிப்போம். அஞ்சு மாசத்துக்கு ஒரு தடவை ஊருக்கு வருவோம். ஆறு வருசம் அவர் கூடவே இருந்தேன். அவர்தான் எனக்கு லாரி ஓட்ட கத்துக்கொடுத்தார்...’’ தனது 24 வருட வாழ்க்கையை இரண்டே நிமிடங்களில் ஒப்பிக்கிறார் செல்வம்.

இவரைப் போலவே எண்ணற்ற கதைகளை மனதுக்குள் சுமந்துகொண்டு லாரியின் மேற்புறத்திலும், உள்ளேயும் உறக்கம் வராமல் காலை வரை விழித்திருக்கிறார்கள் நூற்றுக்கணக்கான லாரி டிரைவர்கள். கொசுக்கடிக்கும், தூக்கமின்மைக்கும் நடுவில் மிளிரும் நிலவின் வெளிச்சம், மெலிதாக வீசும் காற்று, எஃப்.எம்.மில் ஒலிக்கும் பாடல்கள், நள்ளிரவின் அமைதி, அந்த நேரத்திலும் கிடைக்கும் தேநீர், சிகரெட் இரவை ரம்மியமாக்குகின்றன. ‘‘போன வருஷம் கடைசிலதான் சென்னைக்கு வந்தேன். அப்ப இருந்து தண்ணி லாரிதான் ஓட்டறேன். வாரத்துல ஏழு நாளும் வேலை இருக்கும். எங்களுக்கு மாச சம்பளம் எல்லாம் இல்ல. ஒரு ட்ரிப் அடிச்சா 40 ரூபா கிடைக்கும்.

தினமும் 8 இல்லைனா 9 ட்ரிப் அடிப்போம். இந்த சம்பளத்தை வச்சுக்கிட்டு தனியா ரூம் எல்லாம் எடுத்து தங்க முடியாது. டேங்க் பக்கத்துல தூங்கிப்போம். இங்கயே குளிச்சுப்போம். இல்லைன்னா கார்ப்பரேஷன் டாய்லெட்தான். காலைல லாரி, நைட்டானா தண்ணி டேங்க். இதுதான் எங்க வாழ்க்கை. என்ன மாதிரியே 10 பேர் இங்க இருக்கோம். யாருக்கும் இன்னும் கல்யாணம் ஆகல. ஒழுங்கா படிச்சிருந்தா நல்ல வேலைக்குப் போயிருப்போம்...’’ செல்வத்தின் குரலில் அவ்வளவு வேதனை. இருந்தாலும் அவர் சிரிக்கத் தவறவில்லை. நம்மால் சில நிமிடங்கள் கூட நிற்க முடியாத ஓர் இடத்தில் வருடக்கணக்கில் வாழ்ந்து வருகிற இவர்களின் வாழ்க்கையிலும் சொல்ல முடியாத எத்தனையோ காதல் கதைகள் மனதுக்குள் பூட்டி வைக்கப்பட்டிருக்கின்றன.

‘‘ஒரு பொண்ண ஆறு வருஷங்களா லவ் பண்றேன். பக்கத்து வீடுதான். மாசத்துக்கு ஒரு முறை அவங்களைப் பார்க்க ஊருக்குப் போவேன். மாலையானா என் வீட்டை கடந்து போவாங்க. அவங்களை பாக்கறதுக்காக ரெண்டு மூணு மணி நேரம் வீட்டு வாசல்ல காத்துக்கிடப்பேன். இன்னும் ஒரு தடவை கூட அவங்ககிட்ட பேசினதில்ல. எப்படி என் லவ்வை சொல்றதுனு தெரியல. ரொம்ப அழகா இருப்பாங்க...’’ முகத்தில் வெட்கம் மிளிர புன்னகைத்துக் கொண்டே தனது காதல் கதையைப் பகிர்ந்த குமாருக்கு வயது 25. சொந்த ஊர் விழுப்புரம். மூன்று வருடங்களாக லாரி டிரைவாக இருக்கிறார். ‘‘தெருக்கள்ல இருக்குற கருப்பு டேங்க்கை  தினமும் அல்லது  தண்ணி வரவைப் பொறுத்து நிறைப்போம்.

வீடு, ஆஸ்பிட்டல், ஹோட்டலுக்கு தண்ணி வேணும்னா ஆன்லைன்லயே புக் பண்ணிடுவாங்க. புக் பண்றவங்களோட அட்ரஸை டேங்க்ல இன்சார்ஜா இருக்கிறவர் தருவார். யார் முதல்ல புக் பண்றாங்களோ அவங்களுக்கு முதல்ல தண்ணி கொண்டு போகணும். இதுதான் இங்க சட்டம். அப்படி கொண்டு போகலைன்னா அதிகாரிங்ககிட்ட புகார் பண்ணிடுவாங்க. எங்க வேலையே போயிடும். இப்ப 9000 லிட்டர் 600 ரூபா; 6000 லிட்டர் 400 ரூபா...’’ என்று சின்னத்தம்பி சொல்லிக் கொண்டிருக்கும் போது காவல் துறையின் வாகனம் அங்கு வந்து நின்றது. லாரி டேங்கின் மீது உட்கார்ந்துகொண்டு மொபைலை பார்த்துக்கொண்டிருந்த டிரைவர் அவசரமாக கீழிறங்கி போலீசுக்கு வணக்கம் தெரிவித்தார்.

‘‘என்னப்பா... ‘புள்ள’ எப்படி யிருக்கு..?’’ என்று நலம் விசாரிக்கிறார் அந்த அதிகாரி. அப்போது மணி நள்ளிரவு மூன்று. இங்கிருக்கும் அனைத்து லாரி டிரைவர்களின் பயோ டேட்டாவையும் அந்த அதிகாரி விரல் நுனியில் வைத்திருக்கிறார். ‘‘லாரியை விட்டுட்டு வீட்டுக்குப் போனா யாராவது காத்தை தொறந்து விட்டுடறாங்க. டீசலை திருடிடறாங்க சார்... ஓனருக்கு பதில் சொல்ல வேண்டியிருக்கு...’’ வேதனைப்படுகிறார் பெயர் சொல்ல விரும்பாத அந்த டிரைவர். இங்கு லாரி ஓட்டும் பலருக்கு சென்னையிலேயே தங்குவதற்கு வீடும், குடும்பமும் இருக்கிறது.

இருந்தாலும் யாரும் இரவில் வீட்டுக்குச் செல்வதில்லை. லாரியிலேயே தங்கிக்கொள்கின்றனர். ‘‘சொந்த ஊரு, வீடுனு எல்லாத்தையும் விட்டுட்டு இங்க வந்திருக்கோம். யாருன்னே தெரியாத நாங்கெல்லாம் இந்த இடத்துல ஒண்ணா சேர்ந்திருக்கோம். ஒண்ணாவே சாப்பிடறோம். ஒண்ணாவே நடக்கறோம். இதுதான் எங்களுக்கு இருக்குற ஒரே சந்தோஷம். அப்பப்ப சினிமாவுக்குப் போவோம். டிக்கெட் விலை ஏத்துனதுல இருந்து தியேட்டருக்கும் போறதில்ல. நாங்க கடைசியா பாத்த படம் ‘பாகுபலி - 2’’’ என்ற அந்த லாரி டிரைவரின் கண்களில் மிளிர்கிறது இரவின் அற்புதம்.

த.சக்திவேல்
படங்கள்: ஆ.வின்சென்ட் பால்