மெட்ராஸூம் சென்னையும்தல புராணம்

மதராசப்பட்டிண மணல்திட்டைப் பார்த்த பிரான்சிஸ் டே, மசூலிப்பட்டிணத்தில் இருந்த ஆண்ட்ரூ கோகன் தலைமையிலான கவுன்சிலுக்கு என்ன  தகவல் அனுப்பினார் தெரியுமா? ‘The surf was heavy and dangerous!’

இப்படியிருக்க கடல் வணிகத்துக்கு வசதியில்லாத ஒரு நிலப்பரப்பை ஏன் தேர்ந்தெடுத்தார்? காரணம் ஒன்றே ஒன்றுதான். எந்த நதியை இன்று நாம்  மூக்கைப் பிடித்துக்கொண்டு கடக்கிறோமோ, வெறுக்கிறோமோ அதே கூவம்தான்!  ஆம். இந்த நதிதான் வணிகத்துக்கும் கம்பெனியின் பாதுகாப்புக்கும்  ஏற்றதாக இருக்குமென கணித்தார் டே. மட்டுமல்ல. அப்போது வடக்கே எக்மோர் என்ற ஓர் ஆறும் சங்கமித்தது. இப்போது இந்த ஆறு பக்கிங்ஹாம்  கால்வாயோடு இணைந்து விட்டதாகச் சொல்லப்படுகிறது. இப்படியொரு இயற்கையான பாதுகாப்பு அரணே, உடனடியாக கம்பெனியை நிர்மாணிக்கச்  செய்தது.

தவிர, நதிக்கு அந்தப் பக்கம் திருவல்லிக்கேணியும், அதையொட்டி சாந்தோமும் இருந்தன. இதனால், அன்று கூவம் ‘திருவல்லிக்கேணி நதி’ என்றே  அழைக்கப்பட்டுள்ளது. சாந்ேதாமில் இருந்த போர்த்துக்கீசியர்கள் வணிகத்துடன் மதத்தையும் பரப்பிக் கொண்டிருந்தனர். ஏற்கனவே டச்சுக்காரர்களுடன்  இருந்த வணிகப் போட்டியாலும் அப்போது ஆங்கிலேயர்களும் டச்சை எதிர்த்ததாலும் போர்த்துக்கீசியர்கள் ஆங்கிலேயர்களைச் சிவப்புக் கம்பளம்  விரித்து வரவேற்றனர். ஏரியா தேர்வாகிவிட்டது. அடுத்து அதை வாங்க வேண்டும் அல்லவா? துபாஷ் ஆக இருந்த (இருமொழி தெரிந்தவர்கள்) பெரி  திம்மப்பா என்பவர் இதற்கு உதவி செய்தார்.

ஆங்கிலேயர்களின் தொழிற்சாலை 1639ம் ஆண்டு நிறுவப்பட்டது. அவர்கள் ஒரு நகரை உருவாக்க நினைக்கவில்லை. மாறாக, தொழிற்சாலையை  நிறுவத்தான் இடம் கேட்டனர். அப்போது அந்த இடத்தின் பெயர் என்னவாக இருந்தது என்பதில் நிறைய குழப்பங்கள் உள்ளன. இதை, ‘History of the  City of Madras’ என்கிற நூலில் அண்ணாமலைப் பல்கலைக்கழக வரலாற்றுப் பேராசிரியர் சி.எஸ்.ஸ்ரீனிவாசாச்சாரி தெளிவுபடுத்துகிறார். அதன்படி,  ‘‘பழவேற்காட்டில் இருந்த டச்சுக்கும், சாந்தோமில் இருந்த போர்த்துக்கீசியர்களுக்கும் அடிக்கடி சண்டை நடந்தது.

இதனால், மக்கள் பாதிக்கப்பட்டனர். அதைத் தடுக்கும் பொருட்டு இந்தப் பகுதியை ஆண்ட தமர்ல வெங்கடாத்ரி ஒரு முடிவெடுக்கிறார். டச்சுப்  பகுதிக்கும், சாந்தோமுக்கும் இடையில் அவரது தந்தை சென்னப்ப நாயக்கர் பெயரில் ஒரு கிராமத்தை உருவாக்குகிறார். இதன் பெயர்தான்  சென்னப்பட்டிணம். இந்நேரம் ஆங்கிலேயர்களுக்கு மணல்திட்டு பகுதியைத் தமர்ல வெங்கடாத்ரி அளிக்கிறார். அந்த ஒப்பந்தத்தில் மதராசப்பட்டிணம்  என்றுள்ளது. ஆக, மதராசப்பட்டிணம், சென்னப்பட்டிணம் என்ற இரண்டு கிராமங்கள் இருந்துள்ளன என்பது தெளிவாகிறது.

மட்டுமல்ல, மதராசப்பட்டிணம் சென்னப்பட்டிணத்திற்கு முன்னரே இருந்துள்ள பழமையான ஒரு கிராமம். ஆங்கிலேயர்கள் கோட்டையையும், சுற்றிலும்  அவர்களுக்கான குடியிருப்பும் கட்டுகின்றனர். கூடவே, அவர்களுக்குப் பணிபுரிந்த இந்தியர்களுக்கு வடக்கே புதிதாக ஒரு நகரும் உருவாகிறது. இந்தப்  புதிய நகரையும் சென்னப்பட்டிணம் என்றே நம்மவர்கள் அழைத்துள்ளனர். நிறைவில், இந்தியர்கள் வாழ்ந்த பகுதி சென்னப்பட்டிணம் என்றும்,  கோட்டையும், ஆங்கிலேயர்கள் வசித்த இடமும் மதராசப்பட்டிணம் என்றும் அழைக்கப்பட்டுள்ளது. ஆனால், ஆங்கிலேயர்கள் இந்த இரண்டு நகரையும்  மதராசப்பட்டிணம் என்றே குறிப்பிட்டனர்.

அதுவே சுருங்கி மதராஸ் என்றானது...’’ என்கிறார் அவர். சரி. மதராசப்பட்டிணம் என்பதற்கு என்ன அர்த்தம்? அதற்கும் ஆதாரபூர்வமான கதைகள்  உள்ளன. சாந்தோமில் ‘மத்ரா’ என்ற போர்த்துக்கீசிய குடும்பம் வசித்துள்ளது. இவர்கள் தங்கள் சொந்தச் செலவில் ஒரு தேவலாயத்தைக் கட்டும்  அளவுக்கு செல்வச் செழிப்புடன் இருந்துள்ளனர். அந்நாளில் குறிப்பிட்ட அந்த ஊரில் யார் வசதியாக இருந்தார்களோ அவர்களது குடும்பப் பெயரிலேயே  அந்த கிராமமும் அழைக்கப்பட்டது. இந்த அடிப்படையில் ‘மதராஸ்’ என்ற சொல் வந்திருக்கலாம் என்கிறார்கள்.

இதற்கு ஆதாரமாக 1927ம் ஆண்டு மேனுவல் மத்ரா மற்றும் அவரது தாயாரின் கல்லறையை, சாந்தோமில் புனித லாசரஸ் தேவாலயத்தைக்  கட்டும்போது கண்டெடுத்துள்ளனர். அதில், 1637ல் இங்கு கோயில் கட்டிய மத்ரா மற்றும் குடும்பத்தை கவுரவிக்கும் வசனங்கள் இருந்தன. எப்படியோ,  சென்னையும் மெட்ராஸும்  மக்களின் மனங்களிலிருந்து பிரிக்க முடியாத பெயர்களாகிவிட்டன. இந்த இரண்டு கிராமங்களுடன் சுற்றியுள்ள பல்வேறு  கிராமங்களும் ஒன்றிணைந்ததே சுமார் 80 லட்சம் பேர் வாழும் இன்றைய சென்னை மாநகரம்!

(பயணிப்போம்)
பேராச்சி கண்ணன்

மதராஸ் 300!

மெட்ராஸ் மாநகரின் 300ம் ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில் சென்னைப் பல்கலைக்கழகம் 1939ம் ஆண்டு ‘Madras Tercentenary  Commemoration Volume’ என்ற மலரை வெளியிட்டது. இது தமிழில் ‘மதராஸ் 300’ என்ற பெயரில் நூலாக வந்துள்ளது.
அதிலிருந்து...

*    சென்னப்பட்டிணம் என்ற பெயருக்கு இன்னொரு காரணமும் முன்வைக்கப்படுகிறது. ஆனந்தரங்கம் பிள்ளை வரலாற்றைப் பேசும்,  ‘ஆனந்தரங்க விஜய சம்பு’ என்கிற நூல் இந்நகரைச் சென்ன கேசவப்புரம் அல்லது சென்னக் கேசவப்பட்டிணம் என்று குறிப்பிடுகிறது.
*    காரணம், இன்று உயர்நீதிமன்றம் இருக்கும் இடத்தில்தான் இந்நகர் இருந்தது. அப்போது, அங்கே சென்னக் கேசவப் பெருமாள் கோயில்  இருந்துள்ளது. அதனால், கோயிலை வைத்து பெயர் வந்துள்ளதே தவிர, வெங்கடாத்ரி விருப்பத்தின்படி அல்ல.
*    பிரான்சிஸ் டே இந்த மணல்திட்டைத் தேர்ந்தெடுக்கும்போது அந்த இடத்தில் ஓர் வாழைத்தோட்டம் இருந்துள்ளது. இந்தத் தோட்டம் அந்த  மீனவக் குப்பத்தின் தலைவனாக இருந்த மதராசன் என்பவருக்குச் சொந்தமாக இருந்தது.
*    தொழிற்சாலைக்கு இந்த இடத்தை கொடுத்தால் அதற்கு மதராசன்பட்டிணம் எனப் பெயர் வைப்பதாக பேரி திம்மப்பா கூறி மதராசனை  சம்மதிக்க வைத்தார்.
*    இந்த மதராசன் மதம் மாறிய ஒரு கிறிஸ்துவன். மத்ரா குடும்பத்திற்கு தன் நன்றிக் கடனை செலுத்துவதற்கு ‘மதராசன்’ எனப் பெயர்  வைத்திருக்க வேண்டும்.
*    அக்காலத்தில் மதராஸ்பட்டிணத்தில் கிடைத்த சாயங்கள் மிகவும் புகழ்பெற்றவை. அவை வெளுத்துப் போவதில்லை. தவிர  அச்சடிக்கப்பட்ட பருத்தித் துணிகள் வேறு எங்கும் கிடைப்பதைக் காட்டிலும் மதராசில் குறைந்த விலைக்குக் கிடைத்தன.
*    அச்சடிக்கப்பட்ட துணிகள் என்பது மரத்தாலான அச்சுகளை சாயங்களில் தோய்த்து அவற்றை மொர்ரீஸ் என்ற பருத்தித் துணிகளின் மீது  அச்சடிப்பது அல்லது படங்களைத் துணியின் மீது கைகளால் வரைவது. இவை மதராஸில்தான் கிடைத்தன என டே கூறுகிறார்.  
*     1639ல் மதராஸின் மக்கள் தொகை 7 ஆயிரம். இது 1939ல் 7 லட்சமானது.


அமெரிக்காவில் மெட்ராஸ்!

*    அமெரிக்காவின் ‘ஒரேகான்’ மாநிலத்தில் மெட்ராஸ் எனும் பெயரில் ஒரு நகரமே இருக்கிறது. சுமார் ஆறாயிரம் பேர் வசிக்கும் இந்நகரின்  பெயர் மெட்ராஸ் துணிகள் மீதிருந்த ஈர்ப்பினாலே இடப்பட்டது.   

*    ஆரம்பத்தில் இதன் பெயர் பால்மெயின் என்பதுதான். ஆனால், ஏற்கனவே பார்மன் என்ற பெயரில் ஒரு நகர் இருந்ததால் உச்சரிப்பில்  குழப்பம் வரக்கூடாதென யு.எஸ். போஸ்டல் சர்வீஸ் அந்தப் பெயரை நிராகரித்துவிட்டது. அதன்பிறகு, 1902ல் மெட்ராஸ் என பெயரிடப்பட்டது.