வீட்டுக்குள் மியூசியம் ! வியக்க வைக்கும் கோவைக்காரர்



கலெக்டர்ஸ்

ரவிவர்மா ஓவியங்கள்... மண்ணெண்ணெய் ஃபிரிட்ஜ்... பிரஷர் குக்கர்... நான்குமுக கடிகாரங்கள்... அழகான வீடு. ‘‘வாங்க...’’ என புன்னகையுடன் மாடிக்கு அழைத்துச் செல்கிறார் கோவையைச் சேர்ந்த தினேஷ். வீடுதானே என்று நினைத்து அதற்குள் நுழைந்த மறுநொடி திகைத்து நிற்கிறோம். காரணம், அது வீடல்ல; அருங்காட்சியகம்! தினேஷின் ஹாபியே இதுதான். பல வருடங்களுக்கு மேலான பொருட்களை சேகரிப்பது. ஒவ்வொரு பொருளுக்கும் குறைந்தது நூறு வயதாவது இருக்கும். குக்கர், மண்ணெண்ணெய் இஸ்திரி பெட்டி முதல் பாக்கெட் கிராமபோன், வரைபடங்கள், பித்தளை சாமான்கள் வரை கணக்கற்ற பொருட்கள் நிரம்பி வழிகின்றன!

‘‘பிறந்து, வளர்ந்ததெல்லாம் பாலக்காடுல. இப்ப கோவைல செட்டிலாகிட்டோம். கல்லூரில லேப் டெக்னீஷியனா பணிபுரிஞ்சு இப்ப ரிடையர் ஆகிட்டேன். எனக்கு இரு மகள்கள். பெரியவளுக்கு திருமணமாகிடுச்சு. சின்னவ ஐடில வேலை பார்க்கிறா...’’ என தன்னைப் பற்றி இன்ட்ரோ கொடுக்கும் தினேஷுக்கு இப்போது வயது 68. ‘‘நினைவு தெரிஞ்ச நாள்லேந்து பொருட்களை சேகரிச்சுட்டு வரேன். நல்லா நினைவுல இருக்கு. ஒருமுறை பெரியவர் ஒருத்தர் எங்க வீட்டுக்கு வந்தார். குடும்ப நண்பர். எப்பவும் அவர்கிட்ட ஒரு சுருக்குப் பை இருக்கும். அதுல பழைய நாணயங்களைப் போட்டு வைச்சிருப்பார்.

அன்னிக்கு அதுலேந்து எனக்கு சில காசுகளைக் கொடுத்தார். அப்ப அதன் மதிப்பு எனக்குத் தெரியலை. விளையாட்டா நினைச்சேன். ஆனா, பார்க்க வித்தியாசமா இருந்ததால அதை பத்திரப்படுத்தினேன். என் பழங்காலப் பொருட்கள் சேகரிப்புக்கு அந்தப் பெரியவரும் ஒரு காரணம். எங்க ஊர்ல தேர்த் திருவிழா நடக்கும். அப்ப எல்லாம் 25 பைசாவுக்கு நிறைய பொருட்கள் வாங்கலாம். அப்படி பழைய காசு, ஓட்ட காலணா எல்லாம் வாங்கினேன். என்ன அப்படிப் பார்க்கறீங்க? தேர்த் திருவிழாவுல இதையெல்லாம் கூட விற்பாங்க. கோயிலுக்குப் போனா சாமிகளைப் பார்க்கறதைவிட அங்க இருக்கிற சிற்பங்களைத்தான் அதிகம் பார்ப்பேன்.

அதை தொட்டுத் தொட்டுப் பார்க்கிறப்ப அந்தக் காலத்துக்கே போன மாதிரி ஓர் உணர்வு ஏற்படும். எப்படி இதை செதுக்கி இருப்பாங்கனு யோசிப்பேன். எங்க மாமா வீட்ல சாவி கொடுக்கிற கடிகாரம் இருந்தது. அதுக்கு நான்தான் சாவி கொடுப்பேன்னா பார்த்துக்குங்க! பரண் மேல அப்பப்ப ஏறுவேன். அங்க இருக்கிற பொருட்களை எல்லாம் ஒண்ணு விடாம பார்ப்பேன். சிலதை என் ரூம்ல கொண்டு வந்து வைச்சுப்பேன். இதுக்காக அப்பாகிட்ட நிறைய முறை திட்டு வாங்கியிருக்கேன்...’’என்று சிரிக்கும் தினேஷ், எல்லா மாணவர்களும் ஏதாவது ஒன்றை சேகரிக்க வேண்டும்...

அதையும் தங்கள் ஹாபியாக மாற்றிக்கொள்ள வேண்டும் என்கிறார். ‘‘காரணமாதான் சொல்றேன். இப்ப இருக்கிற மாணவ / மாணவிகளுக்கு படிப்புச் சுமைதான் அதிகமா இருக்கு. அதை மீறி பொழுதுபோக்குக்காக அவங்க எதையும் செய்யறதில்ல. அதுக்கு நேரமும் இல்ல. இதனால மன அழுத்தம்தான் அதிகமாகுது. ஸோ, ஏதாவது ஒரு சேகரிப்பை முழு ஈடுபாட்டோடு செய்தாங்கன்னா மன அழுத்தம் குறையும். அதுக்காக பணம் கொடுத்து வாங்கிட்டு, ‘இதுதான் என் சேகரிப்பு’னு சொல்லக் கூடாது. தேடி அலைஞ்சு வாங்கணும். அப்பதான் பொருட்களோட மதிப்பு புரியும்.

அதுக்காக என்னை மாதிரி பெரிய அளவுல சேகரிக்கணும்னு இல்ல. சாதாரண சட்டை பட்டனை கலெக்ட் பண்றது கூட ஹாபிதான். பட்டன்லயே எத்தனை வகைகள் இருக்கு! தேடிப் போறப்ப நாமே எதிர்பார்க்காதது கிடைக்கும். அப்ப கிடைக்கிற உணர்வு இருக்கே... அனுபவிச்சாதான் அந்த ஃபீலிங் புரியும். பத்து வருஷங்களுக்கு முன்னாடி திருவனந்தபுரத்துல பழைய பொருட்கள் கிடைக்கிறதா என் நண்பர் சொன்னார். அட்ரஸ் கூட அவர் சொல்லலை. ஆனாலும் ரயில் ஏறிப் போனேன். தேடிக் கண்டுபிடிச்சேன். ஆனா, ஏமாற்றமா இருந்தது. ஏன்னா, எதுவுமே அசல் இல்ல. போலி.

தொடர்ந்து இதுலயே இருக்கிறவங்களால இதை கண்டுபிடிக்க முடியும். 500 வருஷங்களுக்கு முன்னாடி எல்லா பொருட்களையும் கைலதான் செய்வாங்க. எந்திரம் கிடையாது. அதனால ஒரு சங்கிலினா கூட ஒவ்வொரு வளையமும் ஒவ்வொரு மாதிரிதான் இருக்கும். அனுபவம் வழியா அசல் எது, நகல் எதுனு கண்டுபிடிச்சுட முடியும். ஒருமுறை மதுரைல பழங்கால இரும்புப் பெட்டி இருக்குனு தெரிஞ்சு போனேன். அதுக்குள்ள குப்பைங்க இருந்தது. கொட்டிட்டு எடுத்துக்க சொன்னாங்க. கொட்டினா... உள்ள ஒரு சில்க் துணி இருந்தது. விரிச்சுப் பார்த்தா மகாத்மா காந்தியோட உருவத்தை அதுல நூலால நெய்திருந்தாங்க.

பிரமிப்பா இருந்தது! இதை நெய்தது இங்க இல்ல. சீனாவுல இருக்கிற ஹாங்சூ என்ற இடத்துல 1935ல க்வா ஹுவா என்ற பட்டு மில்லுல நெய்திருக்காங்க!’’ என்று சொல்லும் தினேஷிடம் ரவிவர்மாவின் ஓவியங்களும் இருக்கின்றன! ‘‘ஒரு முறை ரவிவர்மா பத்தி படிச்சேன். அரச குடும்பத்துல பிறந்த அவருக்கு சின்ன வயசுலேந்தே ஓவியத்துல ஈடுபாடு. வீட்டு சுவர்ல கரித்துண்டுகளால கிறுக்குவாராம். வளர வளர ஓவியத்தையும் முறைப்படி கத்துக்க ஆரம்பிச்சிருக்கார். ஜமீன்தார், ஜமீன்தாரினி உருவங்களை எல்லாம் அச்சு அசலா வரையறதுல எக்ஸ்பர்ட்.

இன்னிக்கு நாம பார்க்கிற எல்லா தெய்வங்களுக்கும் உருவம் கொடுத்தவர் ராஜா ரவிவர்மாதான்! அவர் காலத்துல பிரிண்டிங் மெஷின் எல்லாம் இல்ல. அதனால ஜெர்மனிக்கு போய் தான், வரைந்த ஓவியங்களை ஆலியோகிராஃப் முறைல பிரிண்ட் போட்டுட்டு வருவார். முடிஞ்ச வரை அதையெல்லாம் அலைஞ்சு திரிஞ்சு சேகரிச்சிருக்கேன். மரப்பாச்சி பொம்மைகளை கேள்விப்பட்டிருப்போம். அந்தக் காலத்து டெடி பியர்! ரத்த சந்தன மரத்துல செய்யப்பட்ட பொம்மைங்க. அதனால குழந்தைங்க கடிச்சாலும் அவங்களுக்கு எந்த பாதிப்பும் வராது.

அப்படிப்பட்ட மரப்பாச்சி பொம்மைங்களும் என்கிட்ட இருக்கு. இனிமே வேலையே செய்யாதுனு பழைய பேப்பர் கடைகள்ல வீசப்பட்ட, கையால செய்யப்பட்ட கடிகாரங்களை வாங்கி மறுபடியும் அதை இயக்க வைச்சிருக்கேன். மண்ணெண்ணெய்ல இயங்கற ஃபிரிட்ஜ், பாக்கெட் கிராமபோன், மண்ணெண்ணெய் அயர்ன் பாக்ஸ், புரொஜெக்டர், விளக்குகள், ஜாடிகள், பித்தளை பொருட்கள், ‘சுதேசமித்திரன்’ பத்திரிகைக்கு மகாகவி பாரதியார் ஆசிரியரா இருந்தப்ப வெளியான பிரதிகள், மரத்தால செய்யப்பட்ட அஞ்சரைப் பெட்டி, பார்க்கர் பேனாக்கள், சீன பீங்கான் பாத்திரங்கள்,

உலகப் போரப்ப கிளார்க் நிறுவனம் முதன் முதல்ல தயாரிச்ச பிரஷர் குக்கர்ஸ், பாக்கெட் வாட்சஸ்...’’ இப்படி என் சேகரிப்புல இருக்கிறதை பட்டியலிட்டுகிட்டே போகலாம்...’’ என்றபடி மண்ணெண்ணெய்யால் இயங்கும் ஃபிரிட்ஜைத் திறந்து காண்பித்தார். ‘‘ஆங்கிலேயர் காலத்துல இது அறிமுகமாச்சு. அவங்க தினமும் உணவுல மாமிசம் சேர்த்துப்பாங்க. அந்த மாமிசங்களை சேகரிக்க இந்த ஃபிரிட்ஜ் பயன்பட்டது. அப்ப மின்சாரம் போதுமான அளவுல இல்லாததால கெரசினால இயக்கியிருக்காங்க! பொதுவா பழைய பேப்பர் கடைகள்... தெரிஞ்சவங்க, நண்பர்கள் மூலமாதான் என் சேகரிப்பு படலம் இருக்கு.

இதுக்குனே தரகர்களும் இருக்காங்க. அவங்க வழியாகவும் பல பொருட்களை வாங்கியிருக்கேன். அப்படித்தான் ஒரு தரகர் மூலமா ஒரு வீட்ல பழங்காலப் பொருட்கள் இருக்கறது தெரிஞ்சு போனேன். அந்த வீட்ல இருந்த பெரியம்மா புறப்படும்போது ஒரு பையைத் தூக்கிக் கொடுத்து, ‘இதையும் கொண்டு போங்க’னு சொன்னாங்க. ரொம்ப கனமா இருந்தது. என்னனு பார்த்தா... 500 ஓட்ட காலணாவை வைச்சு அந்தப் பையை செய்திருக்காங்க! அதாவது அந்த வீட்ல யாரோ ஒருத்தர் ஓட்ட காலணாவை வைச்சு எம்பிராய்டரி செய்திருக்காங்க..! இதோ... இதுதான் முதல் பிரஷர் குக்கர். உலகப் போர் அப்ப வீரர்கள் இதால சமைச்சு சாப்பிட்டிருக்காங்க.

மண்ணெண்ணெய் இஸ்திரி பெட்டியும் ஆங்கிலேயர்கள் பயன்படுத்தியதுதான். எப்பவும், தாங்க அணியற துணிகள் விறைப்பா இருக்கணும்னு நினைப்பாங்க. இந்த இஸ்திரி பெட்டியோட கைப்பிடில சின்னதா ஒரு கேன் இருக்கும். அதுல மண்ணெண்ணெய் நிரப்பி பம்ப் ஸ்டவ்ல அடிக்கிறா மாதிரி செய்தா அடிப்பாகம் சூடாகும். நான்கு முக கடிகாரமும் ரேர் கலெக்‌ஷன். நான்கு திசைலேந்தும் மணி பார்க்க முடியும். இப்ப பாக்கெட் சைஸ் மியூசிக் சிஸ்டம் இருக்கு இல்லையா... அதுமாதிரி அப்ப பாக்கெட் கிராமபோன் இருந்தது. பெரும்பாலும் ரயில் எஞ்சின் டிரைவர்ங்க இதைப் பயன்படுத்துவாங்க...’’ என்று விளக்கும் தினேஷ்,

தன் சேகரிப்புகளை அருங்காட்சியகத்துக்கு தரும் எண்ணத்தில் இருக்கிறார். ‘‘எனக்கு அப்புறம் என் பொண்ணுங்க இதையெல்லாம் பார்த்துக்கணும்னு நான் கட்டாயப்படுத்த முடியாது. இந்தக் கால பிள்ளைகளோட விருப்பம் வேற. அதனால முடிஞ்ச வரை சேகரிச்சுட்டு கடைசில மியூசியத்துக்கு தரலாம்னு இருக்கேன். நிறைய பேர் பணத்துக்கு விற்கச் சொல்லி கேட்கறாங்க. அதுல எனக்கு உடன்பாடில்லை. இதெல்லாம் நம்ம நாட்டோட பொக்கிஷங்கள். இது இங்கதான் இருக்கணும். பாதுகாப்பா எந்த மியூசியம் வைச்சிருக்குமோ அவங்களுக்கு இதை தர தயாரா இருக்கேன்...’’ என்கிறார் தினேஷ்.         

- ப்ரியா

படங்கள்: சாதிக்