கறிவேப்பிலை பொடி



ரேணுகாவை அழைத்துக் கொண்டு தேவராஜன் ஆல்காட் குப்பத்தை அடைந்த போது இருட்டி விட்டது. பூங்கோதையைக் காணோம். வீடு பூட்டிக் கிடந்தது. பக்கத்து வீடுகளில் சிலர் வயிற்றிலும், வாயிலும் அடித்துக்கொண்டு புலம்பியவண்ணம் இருந்தார்கள். “எந்தப் பாவி என்னத்தைக் கொடுத்தானோ! இப்படி குடும்பத்தோட ஆஸ்பத்திரி போகும்படி ஆயிடுச்சே!”‘‘நாசமாய்ப் போக! அவன் கட்டைலே போக...’’ என்று நரைத்த கிழவி ஒருத்தி சாபமிட்டாள். மீசை இளைஞன் குறுக்கிட்டான். ‘‘ஏ பெரிசு! வாயை மூடு. இப்ப யாரும் கட்டைலே போறதில்லே...’’ என்றான். ‘‘மெசின் வந்துடுச்சி, ஸ்விட்சைத் தட்டினா சாம்பல்...’’

‘‘ஏ கிஷ்டா! வாயை மூடு. சமயம் தெரியாம ஜோக் அடிக்காதே...’’ என்றான் வேறு ஒருத்தன். ‘‘பூங்கோதை குடும்பம் குணமாகி திரும்பி வரணும்னு வேண்டிட்டிருக்கேன்!’’‘‘ஏய், அங்கே பாருடா!’’அப்போதுதான் எல்லாருடைய பார்வையும் தேவராஜன் மீது சென்றது. பழைய மாருதியைத் தொட்டாற் போல் நின்றிருந்தார்.‘‘ஏய்! யார் நீ? இன்னா வேணும்?’’தேவராஜன் சற்று முன்னே வந்தார். ‘‘இல்லே, வந்து பூங்கோதை... ஏதோ கேள்விப்பட்டேனே...’’ அவருக்கு வார்த்தைகள் தடுமாறின.‘‘நீ எங்கேர்ந்து வரே?’’

தொடர்ந்து மரியாதைக் குறைவாக ஒருமையில் தன்னை விளித்தது கூட உறுத்தவில்லை. நல்ல செய்தி காதில் விழ வேண்டுமே என்பதுதான் அவருடைய பிரார்த்தனையாக இருந்தது. தன் இல்லத்தின் அடையாளத்தை விவரமாகச் சொன்னார்.‘‘ஷ்! அந்த தனி வீடுங்களா? ரொம்ப அக்கறையாங் காட்டியும்! சும்மா பாவ்லா பண்ணாதீங்க’’ என்றான் மீசை இளைஞன். கொஞ்சம் குரூரமாக, ‘‘உங்க வீட்டைக் கூட்டிப் பெருக்க ஆளில்லை... அதானே விஷயம்!” வேறு ஓர் ஆள் சமாதானமாக, “பூங்கோதைக்கு உடம்பு சரியாகட்டும்...” என்றான். தேவராஜன் கையைத் தேய்த்து விட்டுக் கொண்டு நின்றார்.

என்ன ஆயிற்று பூங்கோதைக்கு? ரொம்ப சீரியஸ் இல்லையே? எந்த ஆஸ்பத்திரி? எப்போது திரும்புவார்கள்? கேள்விகளைக் கேட்க ஆவல்தான். ஆனால், மனசுக்கு விரும்பாத பதில் வந்து விடுமோ என்ற பயம் கூடவே தடுத்தது. ரேணுகா, ‘‘போகலாங்க, இப்ப நிலைமை சரியில்லை...’’ என்றாள் மெதுவாக. தேவராஜன் சிரமப்பட்டு காரைத் திருப்பினார். ‘‘சுந்தரைக் கூட்டி வந்திருக்கலாம்... தைரியமாகக் கேட்பான். உஷாவாவது...”‘‘பேசாமலிருங்க...’’ என்று குறுக்கிட்டு அதட்டினாள். ‘‘நீங்க பண்ணின தப்புக்கு அவங்க என்ன செய்வாங்க? காரை ஜாக்கிரதையா ஓட்டுங்க.

நடக்கிறபடி நடக்கட்டும்...” தேவராஜனுக்கு சினம் பொங்கியது. என்ன மனைவி இவள்! கொஞ்சமாவது உற்சாக வார்த்தைகள் சொல்லக்கூடாதோ? மறுநிமிடமே வேறு எண்ணம் உதித்தது. ‘ம்... அவள் தடுக்கத்தானே செய்தாள்? நான்தான் பிடிவாதமாக...’அனிச்சையாக அவர் விரல் கைப்பேசி மீது பட்டு அன்றைய தேதி தெரிந்தது. ‘சே! நாட்களை மட்டும் பின்னுக்குத் தள்ள முடிந்தால்…’தேவராஜன் மிகவும் மெதுவாகக் காரைக் கிளப்பினார். ஒன்றுமில்லை. ஓர் அற்ப விஷயம், எப்படி பூதாகரமாய் உருவெடுத்து விட்டது? மூன்று தினங்களுக்கு முன் பூங்கோதை வழக்கம் போல் காலையில் புயலாய் நுழைந்தாள்.

“சாயந்தரம் வரமாட்டேன், நாளைக்கும் கூட சந்தேகம்தான்… காயைக் கொடு, நறுக்கி வைச்சுடறேன்...” ரேணுகாவுக்கு வருத்தம்தான். மாலையில் வராமலிருந்தால் தொந்தரவு. நாளைக்கும் வராவிட்டால்? உஷாவுக்கு ஆபீசில் வேலை அதிகம். இருந்தாலும், மனக்கவலையைக் காட்டிக் கொள்ளாமல் ‘‘உன் பையன் ஆறாவதுதானே? எப்படிப் படிக்கிறான்?’’பூங்கோதையின் முகம் மலர்ந்தது, “நல்லா படிக்கிறான்... மெசின்லே டைப் அடிக்கிறான். அவனுக்காகத்தான் மதியம் மீன் குழம்பு...”ரேணுகா பரபரவென்று நிறைய பாத்திரங்களை எடுத்துப் போட்டாள். ‘நாளைக்கு உருளைக்கிழங்கு பண்ணலாம்’ என்று நினைத்தாள்.

உஷா ரொம்பத் தீவிரமாகக் குளிர்சாதனப்பெட்டியைச் சுத்தம் செய்து கொண்டிருந்தாள். காய்கறிகள், பழங்கள், பூண்டு ஊறுகாய், பாதாம்பருப்பு... அட? இது என்ன? டப்பாவைத் திறந்து முகர்ந்தாள். பிடிபடவில்லை. ‘‘இது என்னது? பாருங்க...’’ என்று மாமியாரிடம் கொடுத்தாள். ரேணுகாவுக்கு, ஆறு மாதம் முன்பு, கணவருடன் காதி பவனில் ஏதோ வாங்கியது ஞாபகம் வந்தது. ஆனால், இன்னதென்று தெரியவில்லை. ‘‘என்ன இது?’’ என்று கேட்டாள். தேவராஜன் டப்பாவைப் பார்த்தார். ‘‘அட... ஆ...  காதிபவன்லே பிரசென்ட் வாங்கப் போனப்ப கறிவேப்பிலைப் பொடி வாங்கினோமே!’’ என்றார். ‘‘ஏன் யூஸ் பண்ணலை?’’

ரேணுகா பதில் சொல்லவில்லை. கடையில் வாங்கின மறுநாளே, பள்ளிக்கரணையிலிருந்த தன் தங்கை எலுமிச்சை ஊறுகாய் கொண்டு வந்தாள்; இந்தப் பொடி மறந்தே போய் விட்டது!‘‘சரி... தூக்கிப் போடுங்க!’’தேவராஜன் முன்னே வந்தார். ‘‘என்ன சொல்றே! கறிவேப்பிலைப் பொடி... தூக்கிப் போடறதா? இந்தா பூங்கோதை.. வைச்சுக்கோ...’’ என்று டப்பாவை நீட்டினார். பூங்கோதைக்கு என்ன தோன்றியதோ, பெற்றுக் கொள்ளச் சற்றுத் தயங்கினாள். உஷா ஓசைப்படாது தலையில் அடித்துக் கொண்டாள். ரேணுகாவும் ‘வேண்டாமென்று’ ஜாடையாகச் சொன்னாள். தேவராஜன் விடாமல் ‘‘பொடி ஃபர்ஸ்ட் கிளாஸ்.. எண்ணெய் விட்டு தோசை இட்லிக்கு தொட்டுக்கலாம். ஏன்... போன வாரம் கூட சாதத்தோட பிசைஞ்சு சாப்பிட்டோமே!’’ என்று கூசாமல் புளுகினார்.

‘‘எடுத்துக்கோ பூங்காதை...’’அவள் ‘‘சரிங்க... கொடுங்க...’’ என்று டப்பாவை வாங்கிக் கொண்டாள். ‘‘வரேம்மா. புதன்கிழமை மதியம்தான் வருவேன்!’’ என்று விறுவிறுவென்று புறப்பட்டாள். ஆனால், புதன்கிழமை வரவில்லை. வேறு செய்திதான் வந்தது. பூங்கோதை வீட்டில் எதையோ சாப்பிட்டார்களாம். வயிற்றுப்போக்கு வந்து ஆஸ்பத்திரியில் இருக்கிறாளாம்! தேவராஜனுக்கு அடிவயிறு கலங்கியது. அந்தப் பொடி மிகப் பழையதோ? அதை உண்டு ஏதாவது ஆகி விட்டதோ? ஆஸ்பத்திரி என்றால் சீரியஸ்தானே...எதற்கும் விசாரித்துப் பார்ப்போமென்று மனைவியுடன் கிளம்பிப் போனார். ஒரு பயனும் இல்லை. இன்னும் மனம் வேதனை அதிகமானதுதான் மிச்சம்.

இரண்டு தினங்கள் ஆயின. தற்செயலாகப் பார்த்த - அடுத்த தளத்தில் பணிபுரியும் வேலைக்காரியிடம் கேட்டாள். ‘‘ஆங்... பூங்கோதைக்குச் சரியா பூடுச்சாம். மகனுக்குத்தான் சரி ஆகலியாம். இன்னும் ஆஸ்பத்திரிலே பெசல் வார்ட்லே இருக்கானாம்! பாவம் பூங்கா... மகன்ட்டே உசிரையே வச்சிருந்தாங்க...’’ படபடவென்று பேசினாள். தேவராஜனின் மனம் குழம்பியது. வீட்டில் யாருமே ஆறுதல் சொல்லுபவர்களாயில்லை. பிள்ளையிடம் ஏதோ கூற ஆரம்பித்ததும், ‘‘போங்கப்பா! உங்க சுபாவமே அப்படித்தான்! ரெண்டு மாசம் முன்னாலே நமுத்துப் போன பிஸ்கட்டைத் தின்று அவஸ்தைப்பட்டீங்க. அது நம்மோட போச்சு! இப்ப பாருங்க...’’ என்றான் சலிப்புடன்.

உஷாவுக்கு அலுவலக வேலையுடன், வேறு குறை. திருமணமாகி நாலு வருடம் மேலாகியும் கர்ப்பம் தரிக்கவில்லையே என்ற உளைச்சல். வெளியில் காண்பித்துக் கொள்ளாவிடினும், ரேணுகாவுக்கும் அதே கவலைதான். என்ன செய்வதென்றே புலப்படவில்லை. ஆ... அந்த காதி பவன். அவ்வை சண்முகம் சாலை... எப்படியோ விலாசத்தைத் தேடி போன் பண்ணினார். குறிப்பிட்ட பொடிக்கு காலாவதி தேதியுண்டா என்று விசாரித்தார். மறுமுனையில் ‘‘அட போங்க சார்! சாதாரண துணியே உபயோகிக்கா விட்டால் கெட்டு விடுகிறது. ஆறு மாச கறிவேப்பிலைப் பொடியைக் கேட்டு... சே... சரியான தொல்லை!’’ என்ற பதில் வந்தது! உடனே தொடர்பு துண்டிக்கப்பட்டும் விட்டது.

வெறுத்துப் போய் மேசையின் மீது கிடந்த பத்திரிகைகளைப் புரட்டினார். அட! புத்தாண்டு பலன்கள்! தனக்கு என்ன போட்டிருக்கிறதென்று பார்க்கலாமே? ‘‘ரேணு! ரேணுகா...’’ என்று கூப்பிட்டார். ‘‘இதனோட இணைப்பு எங்கே? புத்தாண்டு பலன்கள்...’’‘‘அதை எடுத்து தனியா வைச்சிருக்கேன். உங்களுக்கு எதற்கு அது?’’‘‘ம்... ஒண்ணுமில்லை...’’ என்று மழுப்பினார். அந்த ஜோதிட பக்தி பத்திரிகையை மெதுவாகப் புரட்டினார். அட இந்தக் கேள்வி! பொருத்தமாக இருக்கிறதே? ஆவலுடன் அடுத்த பக்கத்தைப் பார்த்தார். ‘‘அறியாமையால் செய்த பாவத்தை அவர் மன்னிப்பார்...‘இப்படிச் செய்து விட்டேனே என்று என் மனம் மிகவும் வேதனைப்படுகிறது. அந்தத் தவறினால் சிந்தனை என்னை வாட்டி வதைக்கிறது.

மீண்டும் இந்தத் தவறை என் மனம் நினைக்காது. உன்னைச் சரணடைந்து விட்டேன்! அருள வேண்டும்...’ என்று மனமுருகி வேண்டினால் மன்னிப்பு நிச்சயம். தவறு செய்த பிறகு கடவுளை வணங்குவதை விட்டுவிட்டு தவறு செய்யாமலிருக்கும் மனப்பாங்கைப் பெற்று விடுங்கள்.. அவர் தண்டிக்கவே மாட்டார்...’’ ‘என்ன குழப்பமான பதில்!’ என்று தேவராஜனுக்குத் தோன்றியது. தான் செய்தது அறிந்து செய்ததுதான். நாட்பட்ட, பழைய பொடி என்று தெரிந்தும் ஏன் வேலைக்காரியிடம் தந்தோம்? பாவம் அவள்! குடிகாரக் கணவனை குழந்தைகளுக்காகவே பொறுத்துப் போகிறாள்! அந்தப் பையன் ரொம்ப வருஷம் கழித்துப் பிறந்தவன்... அவனுக்கு ஏதாவது நேர்ந்து விட்டால்?

அந்த குடும்பத்தின் சாபம் தங்களைத் தொற்றிக் கொண்டு விடுமோ? தன் சந்ததியைப் பாதிக்குமோ? மற! வேண்டாத கவலைகள்! மற! மற! தலையை ஆட்டிக் கொண்டார். கண்களை மூடிக் கொண்டு ஏதோ தோத்திரத்தை உச்சரித்தார். ‘‘என்னங்க? மேஜை மேலே மோர் வைச்சிருந்தேன்... தினம் மத்தியானம் குடிப்பீங்களே?’’ என்றாள், நெருங்கி வந்து.‘‘ஓ., மோரா...’’ என்று அனிச்சையாகத் தம்ளரை எடுத்தார். குடித்தார். வயிற்றுக்கு இதமாக இருந்தாலும், உள்ளே சமாதானமாகவேயில்லை. ஒன்று மிகவும் உறுத்தியது. ரேணுகா ஏன் மலர்ந்த முகத்துடனிருக்கிறாள்? தன்னுடைய வேதனை அவளுக்கு மகிழ்ச்சியா? சே... இருக்காது. வேறு காரணம் ஏதாவது இருக்க வேண்டும்.

ஆச்சரியப்படும் விதமாக தேவராஜனின் கவலையும், குழப்பமும்; உளைச்சலும் உறுத்தலும் மற்றவர்களைத் தொற்றவேயில்லை.‘‘விடுங்கப்பா. நல்லபடியாக ஆகும். ‘நோ நியூஸ் இஸ் குட் நியூஸ்...’’’ என்றான் சுந்தர்.‘‘சாலையிலே கார் ஓட்டிக் கொண்டு போகிறோம். குறுக்கே ஒருத்தன் வந்ததனாலே ப்ராக்சர் ஆகிவிடுகிறது. இதுக்காக நாம பொறுப்பு ஆக முடியுமா? நீங்க ஆனாலும் ரொம்பவே கவலைப்படறீங்க...’’ என்றாள் உஷா. அவளை வியப்புடன் நோக்கினார் தேவராஜன். இது போல் மனம் விட்டுப் பேசினதேயில்லை! என்ன காரணம் என்று நினைத்தார். மறுநிமிடம் பூங்கோதையின் நினைவுதான் எழுந்தது, ‘‘உஷா சொன்னதில் பாதி சரி.

ஆனா நான்தானே வேகமாக ஒட்டறமாதிரி, பூங்கோதை கையில் திணித்தோம்!’’‘‘இன்று சாயங்காலம் நாங்களெல்லாம் அடையார் கோயிலுக்குப் போகிறோம். பிரம் மோற்சவம். ரொம்ப விசேஷம்...’’ என்று ரேணுகா அழைத்தாள். தேவராஜனுக்கு போக உள்ளூர விருப்பமில்லை. கூட்டத்தில் அவஸ்தைப்பட்டு, மெதுவாக வரிசையில் நகர்ந்து...‘‘இன்னிக்கு என்ன?’’‘‘நரசிம்மரை வேண்டிக் கொண்டால் ரொம்ப நல்லதாம்! வாருங்களேன்...’’செலுத்தப்பட்டவர் போலத்தான் அவர் இயங்கினார். நவக்கிரகம், பிள்ளையார், சயனகோலப் பெருமாள் லட்சுமி நரசிம்மர்... எல்லாரையும் தரிசித்தார்.

‘‘நாளைக்கு நல்ல நியூஸ் வரும்...’’ என்றாள் ரேணுகா புன்னகையுடன், ஞாயிறு காலை. ரேணுகா, உஷாவை அழைத்துக் கொண்டு எங்கோ வெளியே போய்விட்டுத் திரும்பி வந்தாள். சுந்தருக்குக் கணினியில் ஆபீஸ் வேலை இருந்தது. இந்த நாலைந்து நாளில் பூங்கோதை இல்லாமல் வீடு ‘‘ஒரு மாதிரி’’ பழக்கத்துக்குப் படிந்துவிட்டது, பாத்திரங்கள் தேய்ப்பது, கறிகாய் நறுக்குவது, துணி உலர்த்தி எடுத்து வைப்பது  போன்ற காரியங்களை மூன்று பேரும் பகிர்ந்து கொண்டார்கள். தரைதான், சரியாகச் சுத்தம் செய்யப்படாது, குப்பை மண்டிக் கிடந்தது.

தேவராஜன் முன்பெல்லாம் துணிமணிகளை மடிக்க ஒத்தாசை செய்வார். இப்போது அதுவுமில்லை; விரட்ட விரட்ட மொய்க்கும் ஈ போல பூங்கோதையின் நினைவுதான். யாரோ வருகிறாற் போலிருக்கிறதே? உஷா நன்றாகக் கதவைச் சாத்தவில்லையோ? திறந்து கிடந்த வாசலில் புயலாக நுழைந்தாள் - பூங்கோதை! அவர் இருக்கையிலிருந்து துள்ளி எழுந்து விட்டார். உடல் பூராவும் மகிழ்ச்சி பரவியது. ‘‘என்ன ஆச்சு? ஏன் வரலை? செல்லையும் எடுக்கலை? பையன் ஆஸ்பத்திரியிலா இருக்கான்?’’ மளமளவென்று கேள்விகள் விழுந்தன. அடுப்படியில் வேலையாக இருந்த உஷாவும் ரேணுகாவும் மலர்ந்த முகத்துடன் திரும்பிப் பார்த்தார்கள்.

பூங்கோதை கருமமே கண்ணாக துடைப்பத்தை எடுத்துக்கொண்டு விறுவிறுவென்று பெருக்க ஆரம்பித்தாள். அதற்குள் பக்கத்து தளத்திலிருந்து குரல் கேட்கவே, துடைப்பத்துடனேயே அங்கே போனாள். ‘‘அதையேன் கேக்கறே மோகனா! காட்டு நாயக்கர் வூட்டிலே கறி பிரியாணி தந்தாங்க... என்னத்தைக் கலந்தாங்களோ, வூடு பூரா ஆஸ்பத்திரிலே.. நேத்துத்தான் மகனை இட்டாந்தேன்!’’ என்ற பூங்கோதையின் குரல் எல்லோருக்குமே கேட்டது. மோகனா, ‘‘அது செம்மறியாட்டுக் கறியா இருக்கும். இப்படித்தான் ஒரு தபா...’’பூங்கோதை, ‘‘பையன் இந்த மட்டும் நல்லா ஆகி வந்ததே அதிசயம்தான். டாக்டர் ஸ்ட்ரிக்டா சொல்லிட்டார், பத்து நாளைக்கு அய்யர் சாப்பாடுன்னு...’’

தேவராஜன் புன்னகையுடன், ‘‘உனக்கு இட்சிணி வித்தை தெரியுமா? எப்படி நல்ல நியூஸ் வரும்னு சொன்னே?’’ என்று மனைவியிடம் வினவினார். ரேணுகா உஷாவைப் பார்த்தாள். பிறகு ‘‘நான் சொல்ல வந்தது வேற... நீங்க தாத்தா ஆகப் போறீங்க. ரெண்டு நாள் முன்னால்தான் டாக்டர் ‘கன்ஃபாம்’ பண்ணினார்...’’‘‘யாருமே சொல்லலியே!’’ என்றார் பரவசமாக,‘‘ஆமா! நீங்கதான் குப்பத்திலேயே ஐக்கியமாயிட்டிங்களே? நான் சொல்லி நீங்க ஏதாவது அபசகுனம் மாதிரி சொன்னா, உஷா தாங்குவாளா?’’

சட்டென்று ஞாபகம் வந்து, ‘‘பூங்கோதை! அந்தப் பொடியைத் தூக்கி எறிஞ்சுடு...’’ என்றார். ‘‘ஏங்க? இட்லிக்கு தொட்டுக்கலாம்னு...’’ என்று அவள் முடிப்பதற்குள் ‘‘வேண்டாம்! தூக்கி எறி!’’ தேவராஜனுக்கு மகிழ்ச்சியில் வார்த்தைகள் வரவில்லை. காலை நீட்டிப் படுத்துக் கொண்டார். எது அதிக சந்தோஷம்? தன் குற்ற உணர்வு விலகிப் போனதா? குடும்பத்தில் ஒரு புது ஜீவன் உதிக்கப்போவதா? இன்னொன்றும் அவருக்குத் தோன்றிற்று. நாளைக்கு மறு படியும் குளிர்சாதனப்பெட்டியிலிருக்கும் நாட்பட்ட பொருள்களை வீசி எறிய வேண்டும்!

- வாதூலன்

சீஸ் தீர்ந்துபோச்சு!
இங்கிலாந்தில் சீஸ் பொருட்களுக்கான திருவிழா நடந்தது. அதில் டிக்கெட் வாங்கி உள்ளே புகுந்த மக்களின் கைவரிசையில் சீஸ் துண்டுகள் மின்னல் வேகத்தில் காலியாயின. சீஸ் கிடைக்காத பலரும் ஏமாற்றத்துடன் சோஷியல் தளங்களில் விழா டீமை வறுத்தெடுக்க, தவறுக்கு மன்னிப்பு கோரிய குழுவினர், அடுத்த ஆண்டு டிக்கெட்டில் 50 சதவிகித தள்ளுபடி கொடுத்துள்ளனர்.

ட்ரோன் பிரெட்!
அயர்லாந்தில் கடும் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. தன் பக்கத்து வீட்டு நண்பருக்கு, பிரெட் தர பேட்ரிக் மன்கோவன் முடிவுசெய்தார். பனியால் வீட்டின் கதவையே திறக்க முடியாதே? தன் கேமரா ட்ரோனில் பிரெட்டை கட்டி அனுப்பி வைத்ததோடு அந்த வீடியோவை இணையத்தில் வெளியிட்டுள்ளார்.  ஃபேஸ்புக்கில் ‘3 கி.மீ தூரத்தில் யாருக்கேனும் உணவு தேவை எனில் உதவ ரெடி!’ என பதிவிட்டு லைக்ஸ் அள்ளியுள்ளார்.

ஹைட்டான தொப்பி!
அமெரிக்காவில் ஃப்ளோரிடாவைச் சேர்ந்த அடிலன் அசாரே பதினெட்டு அடி உயரத்தில் ஒரு தொப்பியை உருவாக்கி அண்ணாந்து பார்க்கும் சாதனை செய்துள்ளார். ஏழு வாரத்தில் இந்த அதி உயர தொப்பியை உருவாக்கிய அடிலன், கின்னஸ் சாதனைக்கு இதைப் பற்றிய தகவல்களை அனுப்பியுள்ளார்.

திருடர்களுக்கு வேலை!
நியூசிலாந்தைச் சேர்ந்த டிம் ஸ்மித், தன் கட்டுமான நிறுவனத்தைக் கொள்ளையிட்ட திருடர்களுக்கு வேலைவாய்ப்பை அறிவித்து மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.‘‘நேர்மையாக எங்களுடன் இணைந்து உழைக்க ரெடியா? உடனே வாங்க!’’ என செக்யூரிட்டி கேமராவிலுள்ள திருடர்களைக் குறிப்பிட்டு ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார் டிம் ஸ்மித்.