ஊஞ்சல் தேநீர்



யுகபாரதி - 68

நெல்லைப் பகுதியில் 1995ல் நடந்த சாதிக் கலவரத்தை விட்டுவிட்டு நல்லகண்ணுவின் நிதானத்தை நினைத்துப் பார்க்க முடியாது. அந்தக் கொடூரக் கலவரத்தில்தான், இடதுசாரி போராளியான தன் மாமனார் அ.க.அன்னசாமியை அவர் இழக்க நேர்ந்தது. வெட்டுப்பட்டு சரிந்த அன்னசாமி, யார் வெட்டினார்களோ அவர்களுக்காகப் பாடுபட்டவர். சாதி இழிவை நீக்கவும் சமத்துவத்தைப் பேணவும் முனைந்த அவரை, கலவரக் கத்திகள் கண்டந்துண்டமாக்கின. அந்த நிலையிலும் உணர்ச்சிவசப்படாமல் “நம்மிடம் நல்லிணக்கம் வேண்டும். பழிவெறியோ, பகைவெறியோ நம் இலட்சியங்களை சின்னாபின்னமாக்கிவிடும்.

சகோதர உறவுகளைப் பேணுங்கள். அன்பைப் பெருக்கி சாந்தம் அடையுங்கள்...” என்றவர்தான் நல்லகண்ணு. “இத்தனை ஆண்டுகளாக உங்களுக்காக உழைத்தவரை உணர்ந்துகொள்ளாமல் வெட்டிச் சாய்த்துவிட்டீர்களே பாவிகளே...” என வெகுண்டு எழவில்லை. துக்கத்திலும் கோபத்திலும் நிதானமிழக்காத அவர், ‘தோழர் சீனிவாசராவ் வாழ்க்கை வரலாறு’, ‘விடுதலைப் போரில் விடிவெள்ளிகள்’, ‘கங்கை காவிரி இணைப்பு’, ‘பாட்டாளிகளைப் பாடிய பாவலர்கள்’, ‘கிழக்கு ஜெர்மனியில் கண்டதும் கேட்டதும்’, ‘சமுதாய நீரோட்டம்’, ‘விவசாயிகளின் பேரெழுச்சி’ ஆகிய நூல்களை எழுதியிருக்கிறார்.

ஒரு சிறுகதையும் சில கவிதைகளையும் சேர்த்துக்கொள்ளலாம் ‘டாலர் தேசத்து அனுபவங்கள்’ எனும் அவருடைய அமெரிக்கப் பயணக் கட்டுரை நூலும் குறிப்பிடத்தக்கது. அடிநாள் தொட்டே அமெரிக்க எதிர்ப்பாளரான அவர், அந்த மண்ணில் பார்த்த காட்சிகளையும் கட்டடங்களையும் வியப்பில்லாமல் விவரித்திருக்கிறார். அமெரிக்க ஐக்கிய நாடுகளில் இருபது நாட்கள் பயணம் மேற்கொண்டிருக்கிறார். அப்பயணத்தில் நிகழ்ந்த சம்பவங்களை எல்லாம் உணர்வு பூர்வமாக அந்நூலில் குறிப்பிட்டிருக்கிறார். அமெரிக்க கம்யூனிஸ்ட் கட்சியின் அதிகாரபூர்வ நாளேடான ‘பீப்பிள்ஸ் வேர்ல்டு’ அச்சடிக்கப்படும் சிகாகோ நகரில் நின்று, மே தின தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தியிருக்கிறார்.

அட்லாண்டாவில் அமைந்துள்ள மார்ட்டின் லூதர் கிங்கின் நினைவிடத்திற்குச் சென்ற அவர், கறுப்பின மக்களின் விடுதலைப் போராட்டத்தை நினைத்துக்கொண்டே அவ்விடத்தில் நின்றதாகத் தெரிவித்திருக்கிறார். நூலின் இறுதியில், ‘நான் ஒரு கனவு கண்டேன்’ என்னும் தலைப்பில் அமைந்த மார்ட்டின் லூதர் கிங்கின் புகழ்பெற்ற சொற்பொழிவையும் இணைத்திருக்கிறார். “ஒவ்வொரு பள்ளத்தாக்கும் உயர்ந்து நிற்கும், ஒவ்வொரு மலையும் குன்றும் பள்ளமாக்கப்பட்டுவிடும் என்று நான் கனவு கண்டேன்.  கரடுமுரடான இடங்கள் சமதளமாகவும் வளைந்து காணப்படும் இடங்கள் நேரானதாகவும் ஆக்கப்பட்டுவிடுமென்று நான் கனவு கண்டேன்...” என்பதாகப் போகும் அச்சொற்பொழிவு, விடுதலைக் கனவுடைய எவரையும் ஈர்த்துவிடக் கூடியது.

ஒருபக்கம், வாஷிங்டன் நதிக்கரையில் மார்ட்டின் லூதர் கிங்கிற்கு முழு உருவச்சிலை. இன்னொரு பக்கம், வியட்நாம் மக்களைக் கொன்று குவித்த அமெரிக்கப் படைவீரர்களின் சாகசத்தைப் பாராட்டிய வாசகங்கள். ஒன்றுக்கு ஒன்று முரண்பட்டது. ஏனெனில், அப்பாவி வியட்நாம் போராளிகளைக் கொன்று குவிக்க, அமெரிக்கா படையனுப்பியதற்கு எதிர்ப்பைத் தெரிவித்தவர் மார்ட்டின் லூதர் கிங். ஆனால், அவருக்கும் சிலையை நிறுவிவிட்டு, அவர் எதிர்த்த அமெரிக்க படைவீரர்களையும் அமெரிக்கா சிறப்பித்திருப்பதை நல்லகண்ணு அந்நூலில் விமர்சித்திருக்கிறார்.‘‘முரண்பாடுகளின் முழுவடிவம் அமெரிக்கா என்பதைப் புரிந்துகொள்ள, இது ஒன்றே போதும்...’’ என்றிருக்கிறார்.

உலகமயமாக்கல் மூலம் உலக ஆதிக்கத்தைக் கைப்பற்றும் சூழ்ச்சிகளை வரலாற்றுப் பின்னணியுடன் உள்வாங்கிக் கொண்ட அவர், ஓர் இடத்தில்கூட அமெரிக்காவை அந்நூலில் பிரமிக்கவில்லை.‘அழகர்சாமியின் குதிரை’ எனும் தலைப்பில் எழுத்தாளர் பாஸ்கர் சக்தி எழுதிய கதை, அதே தலைப்பில் சுசீந்திரனால் படமாக்கப்பட்டது. மூட நம்பிக்கையால் எளிய மனிதன் ஒருவன், என்னவித பாடுகளுக்கு உள்ளாகிறான் என்பதே கதையின் சாரம். அப்படம் தயாரிக்கப்பட்டு வெளிவரும் நிலையில், அதைத் தோழர் நல்லகண்ணு பார்த்து கருத்துத் தெரிவிக்க வேண்டுமென்று படக்குழுவினர் விரும்பினர். தோழரைத் தொடர்பு கொண்டு நான்தான் பிரத்யேகக் காட்சிக்கு அழைத்துப்போனேன்.

அப்படத்தைப் பார்த்த அவர், “மூட நம்பிக்கையைவிட, எளிய மக்களின் சூழ்ச்சிகளே பிரதானப்பட்டுவிட்டது...” என்றார். ஒரு கதையையோ ஒரு திரைப்படத்தையோ பார்த்துவிட்டு அவர் உதிர்க்கும் சொற்கள், நெஞ்சின் அடியாழத்திலிருந்து பிறப்பவை. ராஜுமுருகனின் ‘ஜோக்கர்’ பற்றி அவர் ஆற்றிய உரையும் அத்தகையதே. முற்போக்கு படைப்பாளரும் திரை எழுத்தாளருமான கே.ஏ.அப்பாஸைப் பற்றி அவ்விழாவில் நினைவுகூர்ந்தார்.‘‘எதார்த்த படங்களைப் பார்க்கும்போதெல்லாம் ‘இதைத்தானே தினமும் தெருவில் பார்க்கிறோம். இதை திரையில் வேறு பார்க்க வேண்டுமா?’ என்று தோன்றும்.

ஆனால், என் இளவயதில் அப்பாஸின் படங்களையும் நாவல்களையும் படித்த பிறகுதான் மக்கள் பிரச்னைகளை மக்களிடம் கொண்டு செல்வதற்கு இப்படியான படங்களும் படைப்புகளும் தேவை என்பதை உணர்ந்தேன்...” என்றார். சேர்ந்து செய்ய வேண்டியதை தனித்தும், தனித்துச் செய்ய வேண்டியதை சேர்ந்தும் செய்யக்கூடிய சமூகமாக இந்திய சமூகம் இருப்பதை நேரு தன் ‘டிஸ்கவரி ஆஃப் இந்தியா’வில் எழுதியிருக்கிறார். அதைக் குறிப்பிட்டுப் பேசிய நல்லகண்ணு, ‘‘இயற்கைக் கடனைக் கழிக்கக்கூட வசதிசெய்து தராத நாடு ஒரு நாடா...’’ எனவும் குரல் உயர்த்தினார். தனித்துச் செல்ல வேண்டிய கழிப்பிடத்திற்கும் வசதியில்லாததால், நம்முடைய கிராமப் பெண்கள் காட்டுக்கும் மேட்டுக்கும் கூட்டாகச் செல்லவேண்டிய நிலையை நேருவின் மேற்கோளில் கொண்டுவந்து முடித்தார்.

தீவிர வாசிப்பு பழக்கமுடைய நல்லகண்ணு பல நூல்களுக்கு முன்னுரைகளும் அணிந்துரைகளும் எழுதியிருக்கிறார். குறிப்பாக, ‘வீரத் தியாகி தூக்குமேடை பாலு’ என்னும் ஐ.மாயாண்டி பாரதியின் நூலுக்கு அவர் எழுதிய முன்னுரை கவனத்துக்குரியது. ஐம்பதுகளில் காங்கிரஸ் அரசால் கைது செய்யப்பட்ட தோழர் பாலு, மக்களை நேசித்த ஒரே குற்றத்திற்காக தூக்கிலிடப்பட்டிருக்கிறார். பஞ்சாலைத் தொழிலாளியான பாலு, வேலை நிறுத்தப் போராட்டங்களில் கலந்துகொண்டதனால் பணியிலிருந்து நீக்கப்படுகிறார். நீக்கப்பட்ட அவர் சிறிது காலம் கழித்து, காவல்துறையில் பணிக்குச் சேர்கிறார்.

பணியில் சேர்ந்த அவர், தெலங்கானாவில் விவசாயிகளை ஒடுக்குவதற்கு அரசால் அனுப்பப்படுகிறார். அடிப்படையில் கம்யூனிஸ்ட்டான பாலு காவல்துறையின் கொலைவெறிச் செயல்களுக்கு உடன்பட மறுக்கிறார். அரசு வேலையில் இருந்துகொண்டே, அரசுக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபட்டதாக பொய்வழக்கில் கைது செய்யப்படுகிறார். ஒரு குற்றமும் இழைக்காத அவருக்கு, நீதிமன்றம் மரணதண்டனையைத் தீர்ப்பாக வழங்குகிறது. ‘‘விவசாயிகளைச் சுட மறுத்ததற்காக தனக்கு மரணதண்டனை விதித்தாலும், மகிழ்ச்சியே...’’ என்ற பாலு சிறையில் இருந்தபோது அதே சிறையில் நல்லகண்ணுவும் இருந்திருக்கிறார்.

தூக்கிலிடப்படும் நாளில் கூட அச்சமோ துக்கமோ இல்லாமல், அனைவருடனும் சகஜமான மனநிலையில் இருந்த பாலுவின் நினைவுகளை நல்லகண்ணு உணர்வுபூர்வமாக எழுதியிருக்கிறார். முன்னுரையிலேயே முழு புத்தகத்தையும் படித்த நிறைவு வந்துவிடுகிறது. மதில் சுவருக்கு அப்பால் தூக்கிலிடப்பட்ட பாலு, “புரட்சி ஓங்குக, செங்கொடி வாழ்க...” என முழக்கமிட்டபடியே மரித்திருக்கிறார். மதில் சுவருக்கு எதிரே இருந்த தோழர் நல்லகண்ணு உள்ளிட்ட தோழர்கள், “தோழர் பாலு நாமம் வாழ்க, புரட்சி ஓங்குக...” என வீரவணக்கம் செலுத்தியிருக்கிறார்கள். நினைத்தாலே நெஞ்சு கனத்துவிடும் அச்சம்பவத்தையும்,

உணர்வு உந்த எழுதிய மாயாண்டி பாரதியின் தியாக வாழ்வையும், அம்முன்னுரையில் நல்லகண்ணு பகிர்ந்திருக்கிறார். இடதுசாரிகள் இத்தனை ஆண்டுகளாக இந்த மண்ணை உழுது, நட்ட புரட்சிப் பயிர் முளைக்கவில்லையே என்கிற மாயத் தோற்றத்தை ஊடகங்களும் சமூக வலைத் தளங்களும் உண்டாக்கி வருகின்றன. ஆறுகள் பாழ்பட்டுவிட்டன. நீர் ஆதாரங்கள் நிலைகுலைந்து கிடக்கின்றன. கனிம வளம், காட்டுவளம், மலை வளம் எல்லாமும் தனியார் நிறுவனங்களின் ஏகபோக சுரண்டலுக்கு ஆளும் அரசுகளால் கிரயம் செய்து தரப்பட்டுவிட்டன. கூடங்குளமும் கதிராமங்கலமும் நெடுவாசலும் மக்களைப் பீதி கொள்ள வைத்திருக்கின்றன.

இந்த நிலைகளையெல்லாம் கணக்கிலெடுத்துக்கொண்டு, கடந்த எண்பது ஆண்டுகளாய் பொதுவாழ்வுக்கென்று வாழ்வை ஒப்புக்கொடுத்து நல்லகண்ணு போராடி வருகிறார். இந்தப் போராட்ட வாழ்வுக்கு நடுவில், மகளுடைய காதுகுத்து நிகழ்வுக்குக்கூட அவரால் கவரிங் தோடுதான் வாங்கிக்கொண்டு போக முடிந்திருக்கிறது. பொருளாதார ரீதியில் அவருக்கு எதையாவது செய்ய வேண்டுமென விரும்பிய கட்சித் தோழர்கள், அவரது 80ஆவது பிறந்த நாளை முன்னிட்டு ஒருகோடி ரூபாயை வசூலித்துக் கொடுத்திருக்கிறார்கள். வெகு விமர்சையாக நடந்த அவ்விழாவில், பரிசுத் தொகையைப் பெற்றுக்கொள்ள மேடையேறிய நல்லகண்ணு,

அதே மேடையிலேயே அப்பணத்தை கட்சிக்கான வளர்ச்சி நிதியாக வைத்துக்கொள்ளச் சொல்லிவிட்டு, துண்டை உதறி தோளில் போட்டபடி கீழே இறங்கியிருக்கிறார். அதைவிட, “இவ்வளவு ரூபாயை வைத்துக்கொண்டு நானென்ன செய்யப் போகிறேன்...’’ என்றதுதான் விசேஷம். தமிழக அரசு அவருக்கு ‘அம்பேத்கர் விருது’ வழங்கி, ஒரு லட்சம் ரூபாயைப் பரிசளித்தபோதும் அதே கதைதான். பரிசுத் தொகையை இரண்டாகப் பிரித்து, ஒரு பங்கை கட்சிக்கும் இன்னொரு பங்கை விவசாய சங்கத்திற்கும் வழங்கியிருக்கிறார்.

பண மதிப்பிழப்பு நடவடிக்கையை வெகுகாலத்திற்கு முன்பே ஆரம்பித்தவர் நல்லகண்ணுதான். எதற்கும் ஒரு விலையுண்டு என்று தத்துவம் பேசுபவர்கள், அவருடைய வாழ்வை அறிய நேர்ந்தால் அவ்விதம் சொல்லத் தயங்குவர். இலட்சியத்தில் நம்பிக்கையும் பற்றும் உடையவர்கள் நல்லகண்ணுவிடம் கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது. சுற்றுச்சூழலில் மிகுந்த அக்கறை கொண்ட அவர் எழுதிய ஒரு கட்டுரை, குற்றால அருவிக்கு அருகே அமையவிருந்த ரேஸ் கோர்ஸ் முயற்சியைத் தடுத்திருக்கிறது. தாமிரபரணி ஆற்றில் நடைபெற்றுவந்த மணற்கொள்ளையைத் தடுக்க, அவரே மதுரை உயர்நீதிமன்றத்தில் வாதாடி தடை வாங்கியிருக்கிறார்.

இன்னமும் அவருடைய போராட்ட இதயத்தின் வீரியம் குறையவில்லை. மதவாதத்திற்கு எதிராகவும் மக்கள் பிரச்சனைகளுக்கு ஆதரவாகவும் களத்தில் நிற்கிறார். அதிகாரக் கண்களுக்கு அவர் சாதாரணமானவர். ஊடகங்களுக்கு எளிமையானவர். ஊழல் அரசியல்வாதிகளுக்குப் பிழைக்கத் தெரியாதவர். இயற்கையைச் சுரண்டுபவர்களுக்கு எதிரானவர். எவருடைய கண்களிலிருந்து பார்த்தாலும், ஏழைகளுக்கும் எளியவர்களுக்கும் மட்டுமே அவர் தோழர். வேட்பாளராகத் தோற்றிருக்கலாம். ஒருபோதும் தோழராக அவர் தோற்பதில்லை.

(பேசலாம்...)

ஓவியங்கள்: மனோகர்