கோலிவுட் ரைட்டர்ஸ்



தமிழ் சினிமாவில் கதாசிரியர்கள், வசனகர்த்தாக்களின் தனிப்பட்ட பெயருக்காகவே படங்கள் ஓடின காலங்கள் உண்டு. அவர்களுக்கு பெரும் மதிப்பும்  மரியாதையும் இருந்த பொற்காலம் அது. அப்படியென்றால் இப்போது சினிமா எழுத்தாளர்களுக்கு மரியாதை இல்லையா? வேட்டியை வரிந்து கட்டிக்கொண்டு  வரவேண்டாம்.

இப்போது வரும் பெரும்பாலான படங்களின் கதை, திரைக்கதை, வசனம் என எழுத்து வேலை அத்தனையையும் இயக்குநரே தன் தோளில் சுமக்க வேண்டும் என  விரும்புகிறார்கள். ஆனாலும் ஒரு சில இயக்குநர்கள் புத்தம் புதிய எழுத்தாளர்களுக்கு வாய்ப்புகள் அளிக்கத் தவறுவதில்லை. அந்த வகையில் சமீபத்தில்  டிரெண்டில் உள்ள ஃபிலிம் ரைட்டர்கள் சிலரின் ஷார்ட் அண்ட் ஸ்வீட் இன்ட்ரோ...

அதே கண்கள் முகில்
‘‘சொந்த ஊர் தூத்துக்குடி. மாணவர் பத்திரிகையாளரா ‘விகடன்’ல என் எழுத்துப் பயணம் ஆரம்பித்து, ‘கல்கி’, ‘கிழக்கு பதிப்பகம்’னு சிறகு விரித்தது.
இதுவரை 25 புத்தகங்கள் வரை எழுதியிருக்கேன். நடிகர்கள் எம்.ஆர்.ராதா, சந்திரபாபுவின் பயோகிராஃபி புத்தகங்கள் தவிர மீதி அனைத்தும் வரலாற்றுப் பின்னணி  நூல்கள். அப்புறம் பதிப்பக வேலையை உதறிட்டு சினிமா முயற்சில இறங்கினேன். முதன் முதல்ல வசனம் எழுதின படம் ‘கலியுகம்’. பிறகு, ‘அதே  கண்கள்’. ஆனா ‘கலியுகம்’ ரிலீஸுக்கு முன்பே ‘அதே கண்கள்’ வந்துடுச்சு. தொடர்ந்து படங்களுக்கு எழுதுவேன்... ஸ்கிரிப்ட் கன்சல்டன்ட் ஆகவும்  இருப்பேன்...’’ என்கிறார் முகில்.                

வேலைனு வந்துட்டா வெள்ளக்காரன் எழிச்சூர் அரவிந்தன்
‘‘‘சத்யசாய் கிரியேஷன்’ நாடகக் குழுவுக்காக 2002ல ‘அசட்டு மாப்பிள்ளை’ நாடகத்தை எழுதினேன். இப்ப வரை நாடகங்கள் எழுதிட்டு இருக்கேன்.  காரைக்குடி நாராயணன் சாருக்கு உதவியாளரா டிவி சீரியல் சிலதுக்கு வசனம் எழுதினேன். டி.பி.கஜேந்திரன் சார் அறிமுகம் கிடைச்சது. ‘சீனா தானா 001’க்கு  உதவி வசனகர்த்தாவா பணிபுரிஞ்சேன். சினிமாவுல நம்பிக்கை கொடுத்தவர் எழில் சார். ‘வேலைனு வந்துட்டா வெள்ளக்காரன்’, ‘சரவணன் இருக்க பயமேன்’  எல்லாம் நல்ல பெயர் வாங்கிக் கொடுத்தது. இப்ப பார்த்திபன் சார் படம், ராய்லட்சுமி நடிக்கிற ‘யார்’ படங்களுக்கு எழுதறேன். ஒரு குட் நியூஸ். என் இரு  நாடகங்கள் சினிமாவாகப் போகுது...’’ என்கிறார் எழிச்சூர் அரவிந்தன்.    
          
ஆதலால் காதல் செய்வீர் கிளைட்டன் சின்னப்பா
‘‘பூர்வீகம் மதுரை. பி.எஸ்சி. கணிதம் படிச்சேன். சென்னைல கிராஃபிக்ஸ் அண்ட் விஷுவல் முடிச்சேன். அப்ப, ஆபாவாணன் சார் எடிட்டிங் வேலைகளுக்காக  புதுசா கம்ப்யூட்டர் வாங்கியிருந்தார். அவர்கிட்ட உதவி படத்தொகுப்பாளர் வேலைல சேர்ந்தேன். நிறைய குறும்படங்களுக்கு எடிட் பண்ணினேன். அப்புறம் என்  சகோதரர் ஜெரால்ட் கூட சீரியல் தயாரிப்பு வேலைகள்ல இருந்தேன். அவரோட ‘கனவுப் பட்டறை’ பதிப்பக வேலைக்கு உதவி செஞ்சேன். ‘குள்ளநரிக்  கூட்டம்’ இயக்குநர் பாலாஜி, என் நண்பர். திடீர்னு ஒருநாள் என்னைக் கூப்பிட்டு அந்தப் படத்துக்கு டயலாக் எழுத வைச்சார். பிறகு சுசீந்திரன் சாரோட  ‘ஆதலால் காதல் செய்வீர்’க்கு வசனம் எழுதினேன். இப்ப ‘எங்க காட்டுல மழை’க்கு வசனம் எழுதிட்டிருக்கேன்...’’ என்கிறார் கிளைட்டன் சின்னப்பா.       

மாப்ள சிங்கம் டான் அசோக்           
‘‘ஏழெட்டு வருஷங்கள் அனிமேஷன் துறைல இருந்தேன். அப்ப ஹாலிவுட் ரைட்டர் சார்ல்ஸ் நட்பு கிடைச்சது. என் எழுத்தைப் பார்த்துட்டு அவர்தான் இந்த  லைனுக்கு திருப்பி விட்டார். முதல் படமான ‘மாப்ள சிங்கம்’ல என் பெயர் டான் அசோக்னு வெளியாகிடுச்சு. இங்க ஒரு ஸ்டண்ட் மாஸ்டருக்கும் அப்படி ஒரு  பெயர் இருக்கறதால, என் பெயரை அசோக்.ஆர்.னு இப்ப மாத்தி வச்சிருக்கேன். பூர்வீகம் மதுரை. எம்பிஏ முடிச்சிருக்கேன். ‘இன்ஃபி’ இதழின் தமிழ்ப்பதிப்புக்கு  ஆசிரியராகவும் இருந்திருக்கேன். ‘ஈழ முரசு’, ‘உயிர்மை’, ‘நக்கீரன்’ல தொடர்ந்து அரசியல் கட்டுரைகள் எழுதிட்டிருக்கேன். இப்ப, ‘ராஜதந்திரம்’ வீரா  நடிக்கிற ‘அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா’, ஜீவாவை வைச்சு ‘மாப்ள சிங்கம்’ ராஜசேகர்  இயக்கும் படங்களுக்கு வசனம் எழுதிட்டிருக்கேன்...’’  என்கிறார் டான் அசோக் என்கிற அசோக்.ஆர்.

கிருமி அனுசரண்
‘ஆஸ்திரேலியாவுல அனிமேஷன் கோர்ஸ் முடிச்சுட்டு அங்கயே சில வருஷங்கள் ஒர்க் பண்ணினேன். சில மியூசிக் ஆல்பங்களும், குறும்படங்களும்  இயக்கினேன். ஒரு ஃபிலிம் ஃபெஸ்டிவல்ல ‘காக்கா முட்டை’ மணிகண்டன் நட்பு கிடைச்சது. அப்ப அவரும் குறும்படங்கள் இயக்கிட்டிருந்தார்.  ‘மதயானைக்கூட்டம்’ கதிர்கிட்ட நான் ‘கிருமி’ கதையை சொல்லி, படம் பண்றதுக்கு காரணமே மணிகண்டன் கொடுத்த ஊக்குவிப்புதான். அந்த நட்புல  அவரோட ‘குற்றமே தண்டனை’லயும், ‘ஆண்டவன் கட்டளை’லயும் எடிட்டிங் பண்ற வாய்ப்பு அமைஞ்சது. ‘ஆண்டவன் கட்டளை’ திரைக்கதையை அமைக்க  உதவினது மறக்க முடியாத அனுபவம்...’’ என்கிறார் அனுசரண்.         

இரும்புத்திரை ஆண்டனி பாக்யராஜ் சவரிமுத்து

‘‘இந்த வருஷம் மட்டும் எங்க வசனத்துல ஆறு படங்கள் வருது. நாங்க ரெண்டு பேருமே லயோலா காலேஜ்ல விஸ்காம் முடிச்சிருக்கோம்.  என் சொந்த ஊர் சென்னை, பம்மல். காலேஜ் படிக்கும் போதே வாலி சாரோட டிவி ஷோல ஒர்க் பண்ணினேன். படிப்பு முடிச்சதும் ‘சிலம்பாட்டம்’ சரவணன்  சார்கிட்ட உதவியாளரா வேலை பார்த்தேன். அப்புறம், ‘எனக்கு இன்னொரு பெயர் இருக்கு’ சாம் ஆன்டன்கிட்ட இருந்தேன். அங்கதான் காலேஜ் கிளாஸ்மேட்  சவரிமுத்துவை திரும்பவும் சந்திச்சேன். எங்க நட்பு நெருக்கமாச்சு.

சவரிமுத்துவுக்கு சொந்த ஊர் சென்னைதான். பெரம்பூர். விஷாலின் ‘இரும்புத்திரை’, ஆர்யாவின் ‘கஜினிகாந்த்’, ஜி.வி.பிரகாஷின் ‘100% காதல்’  படங்களுக்கு வசனம் எழுதியிருக்கோம். அடுத்து அருண்ராஜாகாமராஜா இயக்கற படத்துல நாங்க நடிக்கறோம். எங்க இலக்கு டைரக்‌ஷன். ஜி.வி.பிரகாஷ்கிட்ட  கதை சொல்லி ஓகேவும் வாங்கியிருக்கோம்...’’ கோரசாக சொல்கிறார்கள் ஆண்டனி பாக்யராஜும் சவரிமுத்துவும்.        
                 

தொகுப்பு: மை.பாரதிராஜா