காட்ஃபாதர் - போதை உலகின் பேரரசன்



யுவகிருஷ்ணா - 45

நவம்பர் 6, 1985. பொகோடா நகரில் அமைந்திருக்கும் Palace of Justice என்று சொல்லப்படும் கொலம்பியாவின் உச்சநீதிமன்றம் தன்னுடைய வழக்கமான அலுவல்களைத் தொடங்கியது. காலை பதினொன்றரை மணி இருக்கும். மூன்று கனரக வாகனங்கள் மின்னல் வேகத்தில் கோர்ட் வளாகத்தில் நுழைந்தன. ஆண்களும், பெண்களுமாக முப்பத்தைந்து பேர் ஆயுதங்களுடன் அவற்றில் இருந்து இறங்கினார்கள். சட்டென்று சுதாரித்த பாதுகாவலர்கள் கண்ணிமைக்கும் நேரத்தில், தயவுதாட்சண்யமின்றி சுடப்பட்டார்கள். தரைத்தளத்துக்கு எதிர்ப்புகளைத் தவிடுபொடியாக்கி உள்ளே நுழைந்தார்கள். ஏற்கனவே சிவில் உடையில் கோர்ட் நடைமுறைகளைப் பார்க்க வந்த அப்பாவிகள் மாதிரி அங்கே திரண்டிருந்த வன்முறையாளர்களும் இவர்களோடு கைகோர்த்துக் கொண்டார்கள்.

“எம்-19 வாழ்க. கொலம்பியா ஓங்குக...” என்று கோஷம் இட்டவாறே மொத்தக் கட்டிடத்தையும் ஆக்கிரமித்தார்கள். ஆங்காங்கே அரண்கள் போன்று அமைத்து துப்பாக்கிகளோடு காவல் நின்றார்கள். “மாட்சிமை தங்கிய கொலம்பிய உச்சநீதிமன்றம், எம்-19 போராளிகளின் ஆளுகைக்குள் வந்துவிட்டது...” என்று ‘Bloody takeover’ என பெயர் சூட்டப்பட்ட அந்த ஆபரேஷனுக்கு தலைமை தாங்கிய எம்-19 தளபதி லூயிஸ் ஒத்தெரோ அறிவித்தார். தளபதியின் துப்பாக்கி முனையில் திருதிருவென்று முழித்தவாறே கையறு நிலையில் நின்று கொண்டிருந்தார் உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி அல்போன்ஸோ ரேயஸ். பிற்பகல் இரண்டு மணிக்குள்ளாக ஐந்து மாடிகள் கொண்ட மொத்தக் கட்டிடமும் எம்-19 வசமானது.

எம்-19, கொலம்பியா மக்களுக்கு வானொலி செய்திக் குறிப்பு ஒன்றின் மூலமாக உச்சநீதிமன்றத்தை தாங்கள் கைப்பற்றிய செய்தியை பெருமையாக சொல்லிக் கொண்டது. “கொலம்பிய அரசாங்கம் அமைதிக்கும், சமூகநீதிக்கும் எதிராகப் போய்க் கொண்டிருப்பதால் இந்த நடவடிக்கை எங்களுக்கு தவிர்க்க இயலாததாகி விட்டது...”சுமார் முன்னூறு பேர் பிணைக் கைதிகளாக கட்டிடத்துக்குள் அடைபட்டுக் கிடந்தார்கள். உச்சநீதிமன்றத்தின் 24 நீதிபதிகளும் அதில் அடக்கம். திடீரென்று நடந்த இந்த தாக்குதல் தந்த அதிர்ச்சியில் இருந்து உடனடியாக மீண்டுவிட முடியவில்லை கொலம்பிய அரசாங்கத்தால்.

அதிபர் பெலிசாரியோவோடு தாங்கள் போனில் பேசவேண்டும் என்று எம்-19 விடுத்த கோரிக்கையை அரசாங்கம் நிராகரித்தது. உண்மையில் அவர்களோடு பேசுவதற்கு அதிர்ச்சியின் காரணமாக அதிபர் தயாராகியிருக்கவில்லை என்பதே உண்மை. உடனடியாக அமைச்சரவை கேபினட் கூட்டப்பட்டு கலந்தாலோசிக்கப்பட்டது. தங்கள் உச்சநீதிமன்றத்தை பயங்கரவாதிகள் ஆக்கிரமித்து விட்டார்கள் என்கிற கேவலத்தைவிட, அமெரிக்கா என்ன சொல்லுமோ என்கிற எண்ணம்தான் கொலம்பிய அரசியல்வாதிகளை வாட்டியது. எம்-19 யார்? 1970களில் தென்னமெரிக்காவில் புரட்சிகர சிந்தனைகள் மேலோங்கத் தொடங்கின. அமெரிக்காவுக்கும், ரஷ்யாவுக்கும் பனிப்போர் நடந்து கொண்டிருந்த காலகட்டம் அது.

மறைமுக அமெரிக்க காலனியாதிக்கத்தில் தென்னமெரிக்க நாடுகளின் மக்கள் சுதந்திரக் காற்றைச் சுவாசிக்க முடியாமல் பல்வேறு அடக்குமுறைகளுக்கு ஆளாக்கப் பட்டுக் கொண்டிருந்தார்கள். புரட்சிகர சோஷலிஸ நடைமுறைகளால் மட்டுமே மக்களுக்கான ஜனநாயகத்தைக் கொண்டுவர முடியுமென்று பல சிறிய குழுக்கள் உருவாகி ஆயுதமேந்தத் துவங்கின. அமெரிக்காவை எதிர்த்து சுயமரியாதையோடு நின்ற கியூபா, அவர்களுக்கெல்லாம் முன்னோடி நாடாக அமைந்தது. இம்மாதிரி ஆயுதம் ஏந்த முன்வந்த குழுக்களை ரஷ்யா ஆதரித்தது. ஆயுதங்களை வினியோகித்தது மட்டுமின்றி பொருளாதார ரீதியாகவும் ரஷ்யாவிடமிருந்து கிடைத்த உதவியால் இந்தக் குழுக்கள் சுறுசுறுப்பாகப் பணியாற்றத் தொடங்கின.

அமெரிக்க அடிமைகளாக ஆண்டு கொண்டிருந்த தத்தமது அரசாங்கங்களுக்கு எதிராக கொரில்லா முறையில் தாக்குதல் நடத்தி கணிசமான வெற்றிகளை இவர்கள் குவித்துக் கொண்டிருந்தார்கள். சில நாடுகளில் ஆட்சியையேகூட மாற்றியமைத்து சாதித்தார்கள். கொலம்பியாவில் அம்மாதிரி உருவான ஒரு கொரில்லா குழுதான் எம்-19 (19th April Movement). 1970ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 19ஆம் தேதி நடந்த அதிபர் தேர்தலில் ஏகத்துக்கும் தில்லுமுல்லு நடந்து, அமெரிக்க அடிமையான ஓர் அதிபர் தேர்ந்தெடுக்கப்பட்டார். பெரும் மக்கள் ஆதரவைப் பெற்றவரான முன்னாள் ராணுவ ஜெனரல் குஸ்டாவோ ரோஜாஸ் தோற்கடிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

இடதுசாரிகளுக்கு தேர்தல் அரசியலில் ஏற்பட்ட இந்தப் பின்னடைவின் காரணமாகவே, அரசை அச்சுறுத்தும் தீவிரவாத கொரில்லா அமைப்பாக எம்-19 உருவானது. 1974ல் மியூசியத்தில் இருந்து சரித்திரப் பிரசித்தி பெற்ற சிமோன் பொலிவாரின் வாளைக் கைப்பற்றியதிலிருந்து எம்-19 புகழ் பெறலாயிற்று. 1979ன் புதுவருடம் அன்று கொலம்பியாவின் ராணுவக் கிடங்கு ஒன்றிலிருந்து கணிசமான ஆயுதங்களை எம்-19 கைப்பற்றியது. மண்ணுக்குள் குகை நோண்டி வந்து கிடங்குக்குள் நுழைந்து இந்த சாதனை சம்பவத்தை நிகழ்த்திக் காட்டினர் எம்-19 கொரில்லாக்கள். ஐயாயிரத்துக்கும் மேற்பட்ட நவீன  துப்பாக்கிகளைக் கொள்ளையடித்த பிறகே, அரசுக்கு எதிரான வலுவான ஆயுதக் குழுவாக எம்-19 அடையாளம் கண்டுகொள்ளப்பட்டது.

அதற்கு முன்பாக அமெரிக்க சிஐஏவின் அடிவருடிகள் என்றுகூறி சில அரசியல்வாதிகளையும், அதிகாரிகளையும் அவ்வப்போது கடத்திச் சென்று பணயக்கைதியாக வைத்து பணம் பிடுங்கியதே எம்-19ன் செயல்பாடுகளாக இருந்தன. 1980ல் கொலம்பியாவிலிருந்த டொமினிக்கன் ரிபப்ளிக் நாட்டின் தூதரகத்தை எம்-19 கொரில்லாக்கள் கைப்பற்றினார்கள். அங்கு நடந்து கொண்டிருந்த நிகழ்வில் கலந்து கொண்டிருந்த பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 14 தூதர்கள் உட்பட சுமார் 60 பேரை பணயக்கைதிகளாக்கி, இரண்டு மாதங்களுக்கு கொலம்பியாவுக்கே தண்ணி காட்டினார்கள். அவர்களை விடுவிக்க நாடெங்கும் சிறையில் அடைபட்டிருந்த தங்கள் தோழர்கள் நூற்றுக்கணக்கானோரின் விடுதலையை விலையாக முன்வைத்திருந்தார்கள்.

மேலும், அனைவரையும் விடுவிக்க வேண்டுமானால் ‘சம்பவத்தில்’ ஈடுபட்டவர்கள், கியூபாவுக்கு பாதுகாப்பாகச் செல்வதற்கான ஏற்பாடுகளை அரசு செய்துதர வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்கள். எம்-19 கொரில்லாக்களை எப்படியோ தாஜா செய்து சர்வதேச அரங்கில் தங்கள் மானம் விமானம் ஏறாமல் பார்த்துக் கொண்டது கொலம்பிய அரசு. திரைமறைவில் ஏகத்துக்கும் பணம் விளையாடியதாகவும் தகவல். அந்த சம்பவத்துக்குப் பிறகு கொலம்பிய அரசுக்கும், எம்-19 கொரில்லாக்களுக்கும் பெரியளவிலான மோதல் எதுவுமில்லை. இன்னும் சொல்லப்போனால் அரசுடன் அமைதிப் பேச்சுவார்த்தைக்கும் கூட  எம்-19 கொரில்லாக்கள் முன்வந்திருந்தனர்.

இந்நிலையில்தான் யாருமே எதிர்பாரா வண்ணம் நாட்டின் சுப்ரீம் கோர்ட்டை ஆக்கிரமிக்கும் ‘bloody takeover’ தாக்குதலை நடத்தி உலகத்தின் கவனத்தை ஈர்த்தார்கள் எம்-19 கொரில்லாக்கள். இந்த தாக்குதலின் மூளையாகவும், பொருளாதார ஆதாரமாகவும் இருந்தவர் மெதிலின் கார்டெல் காட்ஃபாதர் பாப்லோ எஸ்கோபார் என்று அரசு கருதியது. அமெரிக்க அரசின் நெருக்குதல் காரணமாக போதைக் கடத்தல் கார்டெல்கள் மீது கொலம்பிய அரசு எடுத்த கிடுக்கிப்பிடி நடவடிக்கைகளுக்கு எதிராக அரசாங்கத்தின் அஸ்திவாரத்தையே அசைத்துப் பார்க்க எஸ்கோபார் முடிவெடுத்து விட்டார் என்று பரவலாக பேசிக்கொள்ளப்பட்டது.

ஓவியம் : அரஸ்

(மிரட்டுவோம்)