ஊஞ்சல் தேநீர்



யுகபாரதி - 64

சமூக மாற்றத்திற்காகத் தங்களை வருத்திக் கொள்ளும் இடதுசாரித் தலைவர்களைப் பார்க்கும் தோறும், தானும் அவர்களைப்போல ஆகவேண்டுமென நல்லகண்ணு எண்ணியிருக்கிறார். அதன் விளைவாக, முதல் முதலாக ஸ்ரீவைகுண்டத்தில் உருவாக்கப்பட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கிளையில் இணைந்திருக்கிறார். தமிழகத்தின் தென்கோடியில் இருந்த ஓர் ஊரின் கிளைச் செயலாளராக அரசியல் வாழ்வைத் தொடங்கிய அவர், நான்குமுறை தொடர்ச்சியாக அக்கட்சியின் மாநிலச் செயலாளர் பொறுப்பை வகித்திருக்கிறார். தகுதியால் பொறுப்புக்கு வந்த அவர், தன்னுடைய செயல்களால் அப்பொறுப்புக்கு ஏற்படுத்திக் கொடுத்த கெளரவத்தால் இன்றளவும் மதிக்கப்படுகிறார்.

கம்யூனிஸ்ட் கட்சியின் ஸ்தாபன விதிகளுக்கு உட்பட்டு வாழ்வதே சிரமம் எனும் பட்சத்தில், தன்னை வருத்தி அவர் அடைந்த உயரமென்பது வேறு எவரும் எட்ட முடியாதது. சாதி, மதம், பணம், சந்தர்ப்பவாதம் என்று தறிகெட்டுப்போன இன்றைய தேர்தல் அரசியலுக்கு, நல்லகண்ணுவின் தியாக வாழ்வைத் திரும்பிப்பார்க்கவும் நேரமில்லை என்பதுதான் வருத்தத்துக்குரியது. இப்பொழுதும் நம்முடைய ஊடகங்கள் தோழர் நல்லகண்ணுவை தோற்றுவிட்ட அரசியல் ஆளுமையாகக் காட்டுவதையே வாடிக்கையாக வைத்திருக்கின்றன. அவர் எங்கேயும் எப்போதும் தோற்கவில்லை. தவிர, அவருடைய அரசியல் நெறிகள் ஒருபோதும் அஸ்தமனமாகக்கூடியதும் அல்ல.

தனிநபரைப் போற்றுவதோ அவரை முன்வைத்து முழக்கங்களை எழுப்புவதோ இடதுசாரிகளுக்கு வழக்கமில்லை. என்றாலும், நல்லகண்ணுவை சொல்ல வேண்டியதும் அவரை முன்வைத்து விவாதங்களை எழுப்புவதும் அவசியமே. தனிநபர் துதியாக அதை எடுத்துக்கொள்ளாமல், ஓர் இடதுசாரியின் பண்பு நலன்களைச் சீர்தூக்கிப் பார்ப்பது காலத்தின் தேவையாகிறது. பணமும் படாடோபமுமே அரசியல் என்பதாகப் போய்க்கொண்டிருக்கும் இக்காலத்திய அறப் பிறழ்வுகளை அறிந்துகொள்வதற்கு, நல்லகண்ணு போன்றோரின் வாழ்க்கைப் பதிவுகள் அவசியமானவை. அவை நேர்மறை அரசியலின் நியாயங்களைப் பேசக்கூடியவை. இடதுசாரிகள் மீது வைக்கப்படும் விமர்சனங்கள், கொள்கை சார்ந்ததாக இருக்கிறதே ஒழிய, ஒருபோதும் அது அவர்களின் நேர்மையைப் பரிசோதிப்பதாக இருந்ததில்லை.

அவதூறுகளையும் பொய்ப் பிரசாரங்களையும் அவர்களுக்கு எதிராகப் பரப்பி வருபவர்கள்கூட இத்தனை ஆண்டுகளில் ஒரு குற்றச்சாட்டுக்கும் ஆளாகாத இடதுசாரிகளின் கை சுத்தத்தில் கறையோ குறையோ கண்டதில்லை. இந்தியா சுதந்திரம் அடைந்தவுடன் ஆட்சிக்கும் அதிகாரத்துக்கும் வந்த காங்கிரஸின் முதல் குறிக்கோள் கம்யூனிஸ்ட்டுகளை அடக்கி, ஒடுக்கி, அழிப்பதாக இருந்திருக்கிறது. பொய்வழக்குகளைப் போட்டு உள்ளே தள்ளுவது, கிடைத்தவர்களைத் துப்பாக்கிக் குண்டுக்கு இரையாக்குவது, சிறையிலிட்டுச் சித்ரவதை செய்வது, சிறைக் கொட்டடியிலேயே சிலரைக் கொன்றுவிடுவது எனத் தீர்மானித்த காங்கிரஸின் தொடர் கொடுமைகளுக்குக் கம்யூனிஸ்ட்டுகள் பலியான அக்காலத்தில், தோழர் ஜீவானந்தத்தின் புரட்சிகர பேச்சுகளால் நல்லகண்ணு ஈர்க்கப்பட்டிருக்கிறார்.

ஜீவாவின் இலக்கியப் பேச்சுகளால் கம்பனும் பாரதியும் புதிய கவனத்தைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. தேசம் விடுதலை அடைந்துவிட்டால் சுபிட்சம் வந்துவிடுமென்று எண்ணிய கம்யூனிஸ்ட்டுகளுக்கு, காங்கிரஸின் இந்த அடாத செயல்கள் அதிருப்தியையே தந்திருக்கின்றன. சென்னை சதி வழக்கு, மதுரை சதி வழக்கு, நெல்லை சதி வழக்கு, ராமநாதபுரம் சதி வழக்கு என வழக்குக்குமேல் வழக்காகப் போட்டு கம்யூனிஸ்ட்டுகளை ஒடுக்கிய காங்கிரஸ், ஒரு கட்டத்தில் கம்யூனிஸ்ட் கட்சியைத் தடைசெய்தது. ஆங்கிலேய ஆட்சியை அப்பறப்படுத்த தங்களுக்குச் சமமாக உழைத்த கம்யூனிஸ்ட்டுகளைக் காங்கிரஸ் விரோதிகளாகப் பார்த்திருக்கிறது. கம்யூனிஸ்ட்டுகள், தேசத் துரோகச் செயல்களில் ஈடுபடுவதாகவும் மக்களைக் கிளர்ச்சிக்குத் தூண்டுவதாகவும் காங்கிரஸின் பதவி சுகத்தை அனுபவித்தவர்கள் வதந்திகளைப் பரப்பியிருக்கிறார்கள்.

விவசாயத் தொழிலாளர்களுக்குச் சங்கம் ஏற்படுத்தி அதன் மூலம் அவர்களின் உரிமைக்குப் போராடிய கம்யூனிஸ்ட்டுகளைக் காங்கிரஸுக்குப் பிடிக்கவில்லை. ஆனால், மக்களோ அலை அலையாக கம்யூனிஸ்ட்டுகளின் பின்னே அணிதிரண்டிருக்கிறார்கள். அதிகாரத்திலிருந்த காங்கிரஸுக்கு இந்த அணிசேர்க்கை அச்சத்தை உண்டாக்க, தீவிர வேட்டையில் ஈடுபட்டிருக்கிறது. 1948ல் காங்கிரஸ் பிறப்பித்த தடை உத்தரவை அடுத்து, ஓராண்டுகாலம் நல்லகண்ணுவும் தலைமறைவாக வாழ வேண்டிய சூழலுக்குத் தள்ளப்பட்டிருக்கிறார். நாங்குனேரி தாலுக்காவில் புலியூர்க்குறிச்சி எனும் கிராமத்தில் தாழ்த்தப்பட்ட தோழர் ஒருவரின் வீட்டில் தலைமறைவாகத் தங்கியிருந்த நல்லகண்ணுவை, காங்கிரஸ் அரசு கைதுசெய்து, கடும் சித்ரவதைக்கு உள்ளாக்கியிருக்கிறது.

உண்மையை வரவழைக்க விசாரணை எனும் பெயரில் நல்லகண்ணுவின் மீசையை ஒரு காவல்துறை ஆய்வாளர் சிகரெட்டால் பொசுக்கியிருக்கிறார். அன்றுமுதல், ‘‘இனி மீசையே வைப்பதில்லை...’’ என முடிவெடுத்த நல்லகண்ணு, புரட்சிகர வாழ்விலிருந்து பின் வாங்கவோ அச்சுறுத்தலுக்குப் பயந்து கம்யூனிஸ்ட்டுகளைக் காட்டிக்கொடுக்கவோ நினைக்கவில்லை. அவரைக் கைது செய்து சிறையில் அடைத்த காங்கிரஸ் அரசு, கைது செய்யும்போது நல்லகண்ணு வெடிகுண்டு வைத்திருந்ததாகப் பொய்வழக்குப் போட்டு நீதிமன்றத்தில் நிறுத்தியிருக்கிறது. அரசின் நீதி, போராளிகள் பக்கம் ஒருபோதும் சாய்ந்ததில்லை என்பதால், அரசின் விருப்பப்படியே ஆயுள் தண்டனையை நல்லகண்ணு பெற்றிருக்கிறார்.

ஏழாண்டுகால சிறைவாழ்வுக்குப் பின் வெளியே வந்த அவர், அதிக ஈடுபாட்டுடன் கட்சிப் பணியைத் தொடர்ந்திருக்கிறார். அதன்பின்னும், வீரம் செறிந்த அவர் எத்தனையோ போராட்டங்களை அரசுக்கு எதிராக நடத்தியிருக்கிறார். சிறை அவருடைய போராடும் வெறியை அதிகரிக்கச் செய்ததே தவிர, மட்டுப்படுத்தவில்லை. ஏனெனில், ஆர்வ மிகுதியில் அவர் போராடக் கிளம்பவில்லை. அர்த்தத்தோடும் ஆத்ம சுத்தியோடுமே அவருடைய இலட்சியப் பயணம் தொடங்கியிருக்கிறது. அவர், தலைமை தாங்கி நடத்திய பல போராட்டங்கள் கோரிக்கைகளை வென்றிருக்கின்றன. விவசாயப் போராட்டத்திலிருந்து அணு உலை எதிர்ப்புப் போராட்டம் வரை, தயக்கமில்லாமல் மக்களுடன் களத்தில் நிற்கும் அவருடைய போராட்டக் குணத்தைப் பிரதிபலிக்கும் சம்பவங்கள் அநேகமுண்டு.

குறிப்பாக, ஆதிக்க சக்திகளை அசைக்க தலித்துகளுக்கும் பெண்களுக்கும் ஆதரவாக நடந்த ஸ்ரீவைகுண்ட கோட்டைத் தகர்ப்பு போராட்டத்தைச் சொல்லலாம். ‘‘அதுவே தோழர் நல்லகண்ணு முன்நின்று வெற்றிபெற்ற, சாதித்த முதல் களப்போராட்டம்...’’ என எழுத்தாளர் பொன்னீலன் ஒரு கட்டுரையில் எழுதியிருக்கிறார். கோட்டைகள் என்றால் மன்னர்கள் வாழும் இடமென்று அர்த்தமல்ல. கோட்டைப் பிள்ளைமார் சமூகத்தைச் சேர்ந்தவர்கள், தங்கள் குலப்பெண்களை யார் கண்ணிலும் படாமல் பாதுகாக்க கட்டிய கோட்டை ஒன்று ஸ்ரீவைகுண்டம் பகுதியில் இருந்திருக்கிறது. சுமார் 450 அடி சுற்றளவும் 10 அடி உயரமும் கொண்ட அக்கோட்டை மண்ணால் கட்டப்பட்டது. மூன்று நூற்றாண்டுகளாக அக்கோட்டையைப் பராமரித்து, தங்கள் குலப்பெண்கள் வெளியுலகையோ வெய்யிலையோ பார்க்காதவாறு ஆண் ஆதிக்கச் சமூகம் அடிமைப்படுத்தியிருக்கிறது.

கோட்டையைச் செப்பனிட ஆண்டுதோறும் தலித்துகள் அழைக்கப்பட்டாலும், அப்பணியில் ஈடுபடுபவர்களுக்குக் குறைந்த கூலியே கொடுக்கப்பட்டிருக்கிறது. கூடவே தீண்டாமைக் கொடுமைகளும் நிகழ்ந்திருக்கின்றன. பொறுத்துப் பொறுத்துப் பார்த்து, கொதிப்படைந்த தலித்துகள், ஒருகட்டத்தில் பலநூறு ஆண்டுகளாக நிலவி வரும் ஆதிக்கத்தை வேரோடும் வேரடி மண்ணோடும் வீழ்த்த எண்ணியிருக்கிறார்கள். கூலி உயர்வுக்கென்று தொடங்கிய அப்போராட்டம், கோட்டைப் பிள்ளைமார் சமூகப் பெண்களை விடுவிக்கும் போராட்டமாகவும் மாறியிருக்கிறது.

வாழவல்லான் ந.ஜெயபாண்டியன், சிவகளை கந்தப்பா செட்டியார் உள்ளிட்டோரின் உறுதுணையுடன் பெரும் எழுச்சியோடு நடந்த அப்போராட்டம், மக்கள் மத்தியில் புரட்சிகர நம்பிக்கைகளை விதைத்திருக்கிறது. கடும் சாதீயக் கட்டுமானத்தையும் நிலப்பிரபுத்துவ நடைமுறையையும் தகர்க்க எண்ணிய நல்லகண்ணு, பெருந்திரளான மக்களுடன் கோட்டையைத் தகர்த்தெறிந்திருக்கிறார். சொந்த சாதி அபிமானத்தை விட்டொழித்து, தலித்துகளுக்காகப் போராடிய அவரை, கட்சித் தோழர்களில் சிலர் தலித்தென்றே நினைத்துமிருக்கிறார்கள். பாவனையில், பழக்கத்தில் எங்கேயும் அவரிடம் சாதியின் சாயலைப் பார்க்கமுடியாது. 1999ல் மாஞ்சோலை தோட்டத் தொழிலாளர்கள் தங்கள் கோரிக்கையை முன்வைத்து, மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்கப் போனபோது நிகழ்ந்த கொடூர சம்பவம் நினைவுக்கு வருகிறது.

(பேசலாம்...)

ஓவியங்கள்: மனோகர்