COFFEE TABLE



ராக் ஸ்டார்
வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே வரும் போட்டோஷூட் என்பதாலும், அது சினிமா கம்பெனிகளின் அலுவலகங்களையும் அலங்கரிக்கும் என்பதாலும் காலண்டர் போட்டோஷூட்கள் என்றாலே பாலிவுட் நடிகைகள் குஷியாகிவிடுகிறார்கள். சமீபத்தில் ‘லிங்கா’ ஹீரோயின் சோனாக்‌ஷி சின்ஹா, டாபூ ரத்னானியின் 2018க்கான காலண்டர் போட்டோஷூட்டில் பங்கேற்றார். ராக் ஸ்டார் போல மினுமினுக்கும் ப்ளாக் காஸ்ட்யூமில் சோனாக்‌ஷி போஸ் கொடுத்திருக்கிறார். அந்த போட்டோஷூட் வீடியோவைத் தன் ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர, 3 லட்சத்துக்கும் மேலான ரசிகர்கள் பார்த்து அசந்து போயிருக்கின்றனர்.

கவர்ச்சி ஹார்மோன்
‘‘ஆண்- பெண் இனக்கவர்ச்சிக்கு நம் மூளையில் இயங்குகிற ‘கிஸ்பெப்டின்’ ஹார்மோன்தான் காரணம்...’’ என்று கண்டுபிடித்திருக்கிறார்கள் பெல்ஜிய மருத்துவர்கள். ஒருவருடைய பாலுணர்வு சார்ந்த பழக்கவழக்கங்களை இந்த ஹார்மோன்தான் தீர்மானிக்கிறது. சில வருடங்களுக்கு முன் ‘கிஸ்பெப்டின்’தான் ஒரு பெண் பூப்படைவதற்கும், தாய்மையடைவதற்குமான தகுதியைக் கொடுப்பதாக கண்டுபிடித்திருந்தார்கள்.‘‘எனக்கு ஆண்களைக் கண்டாலே பிடிக்காது. எனக்கு பெண்கள் என்றாலே பயம்... என எதிர் பாலினத்தின் மீது வெறுப்புகாட்டும் நபர்களுக்கு இந்தப் புதிய கண்டுபிடிப்பு பலனளிக்கலாம்...’’ என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

சுட்டி டிரைவிங்
நம்மூரில் மூன்று வயது பிஞ்சுக் குழந்தைக்கு பொம்மை கார் ஓட்டச் சொல்லிக் கொடுத்தாலே அதிசயம்தான். ஆனால், ஆப்பிரிக்காவில் குழந்தையை நம்பி நிஜ காரையே கொடுக்கிறார்கள். ஃபேஸ்புக்கின் ‘We Africans Nations’ பக்கத்தில் ‘Dad carefully teaching his 3 year old daughter how to drive wow’ என்ற தலைப்பில் இடம் பெற்றுள்ள வீடியோ ஒன்றில், தன் மூன்று வயது மகளை மடியில் அமரவைத்து கார் ஓட்டக் கற்றுக்கொடுக்கிறார் ஒரு தந்தை.

சாலையில் வளைவு, நெளிவுகள் பார்த்து லாவகமாக காரை டிரைவிங் செய்கிறது அந்தக் குழந்தை. இந்த வீடியோவை 40 லட்சம் பேர் பார்த்து வைரலாக்கியுள்ளனர். ‘‘இந்த வயதில் கார் ஓட்டக் கற்றுக்கொடுப்பது தவறு...’’ என்றும், ‘‘சபாஷ், அந்த அப்பாவுக்கு பாராட்டுகள்...’’ போன்ற கமென்ட்டுகளும் குவிகின்றன.

நோக்கியா3310 4G
ஒரு காலத்தில் செல்போன் சாம்ராஜ்யத்தின் அசைக்க முடியாத அரசனாக இருந்த ‘நோக்கியா’, இன்றைய ஸ்மார்ட்போன் யுகத்தில் தனக்கான இடத்தைத் தக்க வைத்துக்கொள்ள கடுமையாகப் போராடிக் கொண்டிருக்கிறது. இதன் நிமித்தமாக தனது புதிய மாடலான ‘3310 4G’ஐ சீனாவில் கடந்த வாரம் அறிமுகப்படுத்தியுள்ளது. இது நீலம், கருப்பு என இரு வண்ணங்களில் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

‘ஒரு முறை பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்துவிட்டால் 16 மணி நேரத்துக்கு பாடல்களைக் கேட்க முடியும்...’ என்று உத்தரவாதம் அளிக்கிறது நிறுவனம். உலகச் சந்தைக்கான விலை இன்னும் நிர்ணயிக்கப்படவில்லை. பிப்ரவரி இறுதியில் அல்லது மார்ச் மாதத்தின் ஆரம்ப நாட்களில் இந்தியாவில் விற்பனைக்கு வருகிறது.

மனிதநேயம்
கடற்கரை மணலில் தாகத்துடன் தவித்துக் கிடந்த வாத்துக்கு தன்னிடமிருந்த தண்ணீரைக் கொடுத்து அதன் தாகத்தைப் போக்கியிருக்கிறார் இளைஞர் ஒருவர். இந்த மாதிரி நிறைய மனிதநேய சம்பவங்களைத் தினமும் படித்துக்கொண்டுதான் இருக்கிறோமே, அப்படி இதிலென்ன ஸ்பெஷல்? இந்த அற்புதமான நிகழ்வு நடந்த இடம், ‘உலகிலேயே தண்ணீர் தீர்ந்து போன முதல் நகரம்’ என்று விரைவிலேயே பெயரெடுக்கப் போகும் கேப்டவுனில் உள்ள கிளிஃப்டன் கடற்கரை!

இந்த ஸ்பெஷலான காட்சியை நெட்டிசன் ஒருவர் தனது ஸ்மார்ட்போனில் பதிவு செய்து இணையத்தில் வெளியிட, சில நிமிடங்களில் 5 லட்சம் பார்வையாளர்களை எட்டிவிட்டது அந்த வீடியோ. ‘‘அந்த வாத்து கேப்டவுனின் வறட்சியைப் பிரதிபலிக்கிறது. இந்த இக்கட்டான சூழலிலும் தண்ணீரைப் பகிர்ந்த அந்த இளைஞருக்கு சல்யூட்...’’ என்று கமென்ட்டுகள் நெகிழ்கின்றன.

- குங்குமம் டீம்