சிக்கன் சாப்பிட்டா உயிருக்கே ஆபத்து?



‘இனிமேல் ஆன்டிபயாட்டிக்ஸ் மருந்துகள் எந்த நோயையும் கட்டுப்படுத்தாது; குணப்படுத்தாது. அது உங்கள் உடலில் எந்த வேலையையும் செய்யாது...’ இப்படியொரு நிலை வந்தால் இந்த உலகம் எப்படியிருக்கும்? பெயர் தெரியாத நோய்கள் எப்போது வேண்டுமானாலும் நம்மைத் தாக்கும். அதை குணப்படுத்துவதற்கான மருந்துகள் எதுவும் நம்மிடம் இருக்காது. அப்படியே இருந்தாலும் ‘மருந்துக்குக்’கூட அந்த மருந்துகள் வேலை செய்யாது. மரணம் வரைக்கும் நோயுடலாகவே நாம் வாழவேண்டியிருக்கும். மனித குலம் வேகமாக நகர்ந்து கொண்டிருக்கும் இந்த அபாய நிலைக்கு ஒரு முக்கிய காரணம், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பிச் சாப்பிடும் ‘சிக்கன்’!

‘‘ஓரளவு இது உண்மைதான்...’’ என்று அலாரம் அடிக்கிறார் ‘குளோபல் மருத்துவமனை’யின் தொற்று நோய்ப் பிரிவில் மருத்துவராக இருக்கும் சுப்ரமணியன் சுவாமிநாதன். ‘‘பொதுவாக கோழிகளைச் சுத்தமான சூழலில் வளர்த்தாலே போதும். எந்த நோயும் அதனை அண்டாது. கோழிகளும் ஆரோக்கியமாக, செழிப்பாக, அதிக எடையுடன் வளரும். ஆனால், கோழிகளுக்கு ஏற்ற சுகாதாரமான சூழலை உருவாக்க கொஞ்சம் செலவாகும். அப்படிச் செய்தால் பண்ணை முதலாளிகளுக்கு அதிக லாபம் கிடைக்காது. அதே நேரத்தில் தூய்மையற்ற சூழலில் வளர்க்கப்படும் கோழிகளைத் தொற்றுநோய்கள் சுலபமாகத் தாக்கும். நோயினால் கோழிகள் இறந்துவிட்டால் பண்ணை முதலாளிகளுக்குப் பெருத்த நஷ்டம் ஏற்படுமே!

அதனால் செலவைக் குறைக்கவும், அதே நேரத்தில் கோழிகளும் ஆரோக்கியமாக, அதிக எடையுடன் இருக்கவும் பண்ணை முதலாளிகள் பலவிதமான ஆன்டிபயாட்டிக்ஸ் மருந்துகளை தீவனத்துடன் கலந்து கொடுத்து வருகின்றனர். இது மனிதர்களுக்குத்தான் ஆபத்தாக விடிகிறது...’’ என்று அதிர்ச்சியளிக்கிறார்.‘பிராய்லர் கோழிகளில் 6 விதமான ஆன்டிபயாட்டிக்ஸ் மருந்துகள் கலந்திருக்கிறது...’ என்று சில வருடங்களுக்கு முன்பே எச்சரித்திருந்தது தில்லியைச் சேர்ந்த ஓர் ஆய்வு நிறுவனம். இப்போது ‘கொலிஸ்டின்’ எனும் ஆன்டி பயாட்டிக்ஸும் கோழிகளில் கலந்திருப்பதாக ஆய்வுகள் வெளிவந்து கலங்கடிக்கிறது.

‘‘பொதுவாக தொற்றுநோயைக் கட்டுப்படுத்தவும், அது உடலின் மற்ற பாகங்களுக்குப் பரவாமல் இருக்கவும், அந்த நோய் மற்றவர்களைத் தாக்காமல் தடுக்கவும் ‘கொலிஸ்டின்’ போன்ற ஆன்டிபயாட்டிக்ஸ் மருந்துகள் நோயாளிகளுக்குக் கொடுக்கப்படுகின்றன. ஆனால், நோய் தாக்குவதற்கு முன்பே கோழிகளுக்கு இதைக் கொடுக்கின்றனர். ‘கோழிகளைத் தொற்றுநோயிலிருந்து காப்பாற்றுவதற்காகத் தான் ‘கொலிஸ்டினை’க் கொடுக்கிறோம்...’ என்று பண்ணை முதலாளிகள் ஒருபக்கம் சொன்னாலும் அதிலுள்ள உண்மை லாப நோக்கம் மட்டுமே. ஆம்; கோழிகளின் எடை கூடுவதற்கும், விரைவிலேயே அது வளர்ச்சியடைவதற்கும்தான் ‘கொலிஸ்டின்’ உணவில் கலக்கப்படுகிறது.

இப்படிக் கொடுக்கப்படும் மருந்துகள் உடனடியாக கோழியின் உடலில் இருந்து வெளியேறிவிடாது. சில நாட்களுக்கு அதன் ரத்தத்தில் அப்படியே கலந்திருக்கும். அது அதன் உடலில் ஆபத்தான பாக்டீரியாக்களை உருவாக்கும். இந்தப் பாக்டீரியாக்களை ‘டிரக் ரெசிஸ்டன்ட் அல்லது மருந்து மாத்திரைகளால் அழிக்கமுடியாத நோய்க் கிருமிகள்...’ என்று மருத்துவ உலகம் சொல்கிறது. இதன் மூலம் பலவிதமான கொடிய தொற்றுநோய்கள் மனிதர்களுக்கும் வேகமாகப் பரவும். இதைத் தவிர்க்க முடியாது. மருந்தைக் கொண்டு அந்த நோய்களைக் குணப்படுத்தமுடியாத சூழல் ஏற்படும். சில நேரங்களில் மரணம் கூட நிகழலாம்...’’ என்ற சுப்ரமணியன் சுவாமிநாதன், ‘கொலிஸ்டினை’ப் பற்றி மேலும் விவரித்தார். ‘‘கொலிஸ்டினை நோயாளிக்குக் கொடுப்பதற்கு முன் ஒரு மருத்துவர் தீர ஆலோசிக்க வேண்டும்.

பொருத்தமான எல்லா மருந்துகளும் நோயாளியைக் கைவிட்டபோதுதான் இதை மருத்துவர்கள் கொடுக்க வேண்டும். ஐம்பது வருடங்களுக்கு முன்பு ‘கொலிஸ்டின்’ அறிமுகமானபோது ‘இந்த மருந்தில் பக்கவிளைவுகள் அதிகம்...’ என்று பல்வேறு தரப்பிலிருந்து   குற்றச்சாட்டுகள் எழுந்தன. பிறகு இதைவிட சிறந்த ஆன்டிபயாட்டிக்ஸ் மருந்துகள் சந்தையில் அறிமுகமானதால் பல வருடங்களுக்கு ‘கொலிஸ்டின்’ பயன்பாட்டிலே இல்லாமல் போனது. ஆனால், அண்மைக்காலங்களில் மனிதர்களின் பயன்பாட்டில் இருந்த பல்வேறு ஆன்டிபயாட்டிக்ஸ் மருந்துகளை விலங்குகளுக்கும், பறவைகளுக்கும் கொடுக்க ஆரம்பித்ததன் விளைவாக, அந்த மருந்துகள் மனிதர்களின் உடலில் வேலை செய்வதை நிறுத்திவிட்டது. இதனால் ‘கொலிஸ்டினை’ மருத்துவர்கள் மறுபடியும் பயன்படுத்த ஆரம்பித்திருக்கிறார்கள்.

இப்போது ‘கொலிஸ்டினை’யும் கோழிகளுக்கு உணவில் கலந்து தருவதால், மற்ற ஆன்டிபயாட்டிக்ஸ் போல அதுவும் மனிதர்களின் நோய்களைக் குணப்படுத்துவதில் சிக்கலை ஏற்படுத்தும். இதனால் வருங்காலத்தில் மனித உடலில் அனைத்து விதமான ஆன்டிபயாடிக்ஸ் மருந்துகளும் வேலை செய்யாமல் போகும் நிலை உருவாகலாம்...’’ என்று எச்சரித்த டாக்டர், தொடர்ந்தார்.‘‘கோழிகளில் உருவாகும் குணப்படுத்த முடியாத பாக்டீரியாக்கள் கோழிக்கறியின் மூலம் நமக்குப் பரவுவதைவிட அதன் மலம், எச்சங்கள், குப்பைகள்மூலம்தான் அதிகம் பரவுகிறது. இன்றைக்கு மருந்துகள் இல்லாத உணவே இல்லை. காய்கறிகளில் இல்லாத பூச்சிக்கொல்லி மருந்துகளா? அவற்றுடன் ஒப்பிட்டால், சிக்கனை சரியாக வேகவைக்கும்போது அதிலுள்ள மருந்துகள் வலுவிழக்கக் கூடியவையே.

ஆனால், வினோதமான முறையிலோ அல்லது நவீன ஃபேஷன் அடிப்படையில் வேக வைக்காமல் சாப்பிட்டாலோ பாக்டீரியாக்கள் நம்மைத் தொற்றிக்கொள்ளும்...’’ என்ற சுப்ரமணியன் சுவாமிநாதன், இதற்கான தீர்வையும் சொல்கிறார். ‘‘‘கொலிஸ்டின்’ போன்ற ஆன்டிபயாட்டிக்ஸை விலங்குகள், பறவைகளுக்குக் கொடுப்பதை அரசு தடை செய்ய வேண்டும். ஆரோக்கியமற்ற பிராய்லர் கோழிகளுக்காக நம் உயிரையே விலை பேசுவதைவிட, சுத்தமாக வளரும் கோழிகளுக்காக நாம் கொஞ்சம் அதிக விலை கொடுப்பது புத்திசாலித்தனம் இல்லையா..!’’ அக்கறையுடன் கேட்கிறார் டாக்டர் சுப்ரமணியன் சுவாமிநாதன்.


சிக்கன் பிசினஸ்

இந்தியாவில் கிராமத்தைவிட நகரங்களில்தான் சிக்கனுக்கு ரசிகர்கள் அதிகம். சிக்கனுக்குப் பிறகுதான் ஆடு, மீன் எல்லாம் அவர்களின் தட்டுக்கே வருகிறது. மட்டுமல்ல, உலகளவில் முட்டை உற்பத்தியில் இந்தியா 3வது இடத்திலும்; கோழி உற்பத்தியில் 19ம் இடத்திலும் உள்ளது. இந்தியாவின் மொத்த அசைவ உணவில் கோழியின் பங்கு 28%. பத்தாண்டுகளுக்கு முன் இது 14%. இந்தியாவிற்கு கோழி உற்பத்தியின் மூலம் ஆண்டுக்கு ரூ.20 ஆயிரம் கோடி வருமானம் கிடைக்கிறது.

மருந்துகளால் குணப்படுத்த முடியாத நோய்கள்
உலகளவில் ‘மருந்துகளால் குணப்படுத்த முடியாத நோய்கள்’ ஒரு பெரும் பிரச்னையாக வளர்ந்து வருகிறது. வருடத்துக்கு சுமார் 7 லட்சம் பேர் இதனால் இறந்துபோகிறார்கள். அதாவது ஒரு நிமிடத்துக்கு ஒருவர். இந்தியாவில் மூத்திரக் குழாய், நுரையீரல் மற்றும் இரத்த ஓட்டப் பாதையைத் தாக்கும் ஒருவகை நிமோனியாவால் தாக்கப்படுபவர்களில் 57% பேர், சிகிச்சைக்காக கொடுக்கப்படும் ஆன்டிபயாட்டிக் மருந்துகள் பயனளிக்காமல் போவதால் இறக்கிறார்கள். அதேபோல் வருடந்தோறும் சுமார் 58,000 குழந்தைகள் தொற்றுநோய் தாக்கி, ஆன்டிபயாட்டிக்கினால் குணப்படுத்த முடியாமல், பிறக்கும்போதே இந்தியாவில் இறந்துபோகிறார்கள்.

- டி.ரஞ்சித்