இளைப்பது சுலபம் - வெஜ் பேலியோவில் எடை குறைப்பது எப்படி?



பா.ராகவன் - 34

சரக்கு. இந்தத் தொடரின் ஆக முக்கியமான அத்தியாயம் இதுவாகத்தான் இருக்கும் என்று சென்ற வார அத்தியாயம் வரை விடாமல் வாசித்துவந்த என் நண்பர் ஒருவர் சொன்னார். நான் அப்படிக் கருதவில்லை. உடல் நலனில் அக்கறை என்ற ஒன்று உருவாகிவிட்டால் யாராக இருந்தாலும் மதுவில் இருந்து தள்ளி நிற்பார்கள். அதற்கு பேலியோவுக்குத்தான் வர வேண்டும் என்பதில்லை. ஒரு கணம் யோசித்துப் பாருங்கள். தோராயமாகக் கணக்குப் போட்டால்கூட மதுவின் வயது குறைந்தது ஐயாயிரம் ஆண்டுகள். மனிதன் சமைத்துச் சாப்பிட ஆரம்பிக்கும்போதே குடித்து ருசிக்கவும் ஆரம்பித்தவன். நான்காயிரம் வருடங்களுக்கு முன்னர் நமது மண்ணில் இருந்த சுரா மற்றும் சோம பானத்தில் தொடங்கினால்,

கி.பி பன்னிரண்டாம் நூற்றாண்டுக்குப் பிறகு அது பீராகவும் விஸ்கியாகவும் ரம்மாகவும் மற்றதாகவும் சாதி பிரிந்து ஆளத் தொடங்கிய கதை மிகப் பெரிது. அப்படி இருக்கும்போது, இந்நேரம் அது நமது உடலுக்குப் பழகியிருக்க வேண்டுமல்லவா? சிக்கல் மிக்க திரவமாக இன்னமும் சொல்லிக்கொண்டிருக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கக்கூடாதல்லவா? ஏன் அப்படி ஆகவில்லை? தவிரவும், உலகின் எந்த ஓர் எடைக்குறைப்பு உணவு முறையிலும் மது இல்லை என்பதைக் கவனியுங்கள். ‘சும்மா எப்பவாவது கொஞ்சம் சாப்ட்டுக்கலாம்’ என்பதெல்லாம் சர்வதேச ஃப்ராடு சமூகத் திரிப்புகள்.

உயிருக்கு உலை என்று தெரிந்தேதான் மனிதன் ஆதி முதல் குடித்தும் வருகிறான். பேலியோ போன்ற உணவு முறை பயில்பவர்களுக்குக் குடிப்பழக்கமும் இருந்தால் இந்த உலை சீக்கிரம் வைக்கப்படும் அபாயம் இருப்பதை மட்டும் தெரிந்துகொண்டால் போதுமானது. இது ஏன் இப்படி என்று சொல்லுகிறேன். பேலியோ என்பது குறைந்த, மிகக் குறைந்த கார்போஹைடிரேட் மற்றும் அதிக, மிக அதிகக் கொழுப்பையும், அளவான புரதச் சத்தையும் (உங்கள் எடை எவ்வளவோ அவ்வளவு கிராம் ப்ரோட்டின் - ஒவ்வொரு நாள் உணவிலும்) சேர்த்து எடுக்கச் சொல்லுகிற ஒரு டயட். இந்த உணவு முறைக்கு உடல் இயந்திரம் பழகும்போது ரத்த சர்க்கரை அளவு ஒரு கட்டுக்குள் வருகிறது.

ஓர் உதாரணம் சொன்னால் புரியும் என்று நினைக்கிறேன். நான் பேலியோவுக்கு வருவதற்கு முன் எனது ஃபாஸ்டிங் ரத்த சர்க்கரை அளவு சுமார் 115 - 125 இருக்கும். சாப்பிட்ட பின் எடுத்துப் பார்த்தால் 150 - 160 இருக்கும். ரொம்ப பயப்படும் விதமான அளவு இல்லைதான். ஆனால், இது சரியான அளவும் இல்லை. இது எந்நாளும் எனக்குக் குறைந்ததில்லை. ஆனால், பேலியோ ஆரம்பித்து ஆறு மாதங்களுக்குப் பின் ஒரு ரத்தப் பரிசோதனை செய்து பார்த்தபோது எனக்கு மிகவும் வியப்பாகிப் போனது. உண்ணாதபோது ரத்த சர்க்கரை அளவு 80. உண்டு முடித்து இரண்டு மணி நேரங்களுக்குப் பின் 85. வியப்பு மட்டுமல்ல. இது எனக்கு ஆர்வத்தைத் தூண்டக்கூடிய ஒரு விஷயமாக இருந்தது.

எனவே போதிய இடைவெளியில் வாய்ப்புக் கிடைக்கும்போதெல்லாம் ரத்த சர்க்கரை அளவை மட்டும் எடுத்துப் பார்த்தேன். ரேண்டமாகவும் ஒன்றிரண்டு முறை செய்து பார்த்தபோதும் இந்த 80 - 85 எல்லையைத் தாண்டவேயில்லை. புரிகிறதா? கார்போஹைடிரேட்டைக் குறைத்து, கொழுப்பை அதிகரித்து உண்ணும்போது ரத்த சர்க்கரை கட்டுக்குள் வந்துவிடுகிறது. ரத்த சர்க்கரை எல்லை மீறாதபோது உடலில் தேவையற்ற கெட்ட கொழுப்பு சேர்வதில்லை; நீரிழிவுடன் கூட உடல் பருமன் பிரச்னையும் படிப்படியாகத் தீரத் தொடங்குகிறது. இதுவே குடிப்பவர் அல்லது குடிகாரர் அல்லது குடி நோயாளி என்றால் அவரது ஈரலுக்கு குடியை ப்ராசஸ் செய்வது தவிர வேறு வேலை பார்க்கவே நேரம் இருக்காது.

ஏனென்றால் ஈரலின் சுபாவம் அப்படி. ஒரு மணி நேரத்துக்கு, மிஞ்சிப் போனால் பதினைந்து மில்லி கிராம் ஆல்கஹாலை மட்டுமே ஈரலால் ப்ராசஸ் செய்ய முடியும். என்றால் ஒரு குவார்ட்டர் அடித்து முடித்தவரின் ஈரல், அதை சுத்திகரித்துவிட்டு அடுத்த வேலைக்கு வர எவ்வளவு நேரமாகும் என்று யோசித்துப் பாருங்கள். இடைப்பட்ட நேரத்தில் நீங்கள் என்னதான் நல்ல கொழுப்பு சாப்பிட்டாலும், வைட்டமின்கள், மினரல்கள் நிறைந்த காய்கறிகளை, நட்ஸை உண்டாலும் பிரயோசனமில்லை. ஈரல் அதையெல்லாம் திரும்பிக்கூடப் பார்க்காது. உண்ட அனைத்தும் தண்டத்துக்கு வெளியேதான் போகும்.

இது தவிர இலவச இணைப்பாக ஈரலில் கொழுப்பு நிறைய சேர ஆரம்பித்து புதிய சிக்கலுக்கு வழி வகுக்கும். ஃபேட்டி லிவர் என்று இதைச் சொல்லுவார்கள். இது முற்றிப் போனால் (சிரோசிஸ்) மரணம் நிச்சயம் என்பது மருத்துவ முடிவு. ரத்த சர்க்கரைப் பிரச்னை மட்டுமில்லாமல், மதுவானது உங்கள் ரத்த அழுத்தத்தையும் தாறுமாறாக்கக் கூடியது. இது இதயத்துக்கு நல்லதல்ல. இதயத்தின் அளவேகூட வழக்கமான அளவைக் காட்டிலும் இதனால் விரிவடையும் என்பார்கள். ஒரு பக்கம் கொழுப்பை அதிக அளவு உட்கொண்டு இன்னொரு பக்கம் இதயத்தைக் குறி வைத்துத் தாக்குவதையே இலக்காக வைத்திருக்கும் மதுவையும் சேர்த்து அருந்தினால் என்னாகும்?

என்னுடைய பல நண்பர்கள் இந்தக் காரணத்தாலேயே அவசியம் இருந்தும் பேலியோவுக்கு வர யோசிக்கிறார்கள். ஒரு நாளைக்கு ரெண்டு பெக் மட்டும்கூட சாப்பிடக் கூடாதா? வாரம் ஒரு முறை மட்டும் குடித்தால் தப்பா? பார்ட்டிகளில் அதைத் தவிர்க்க முடியாதே என்று டிசைன் டிசைனாக வருத்தப்படுவார்கள் கூடாது என்பது மட்டும்தான் பதில். உடலோடு விளையாடுவது அபாயகரமானது. அதுவும் நடுத்தர வயதைக் கடந்தவர்கள் இம்மாதிரி சேட்டைகள் பக்கம் திரும்பாதிருப்பதே நல்லது. நீங்கள் வழக்கமான அரிசிச் சாப்பாடு, பரோட்டா, முட்டை போண்டா, பாதாம் அல்வா, மசால் தோசை சாப்பிட்டு, குடிக்கவும் செய்து உடல் நலன் குன்றி மருத்துவமனைக்குப் போய்ப் படுத்தால் குடிதான் பிரச்னை என்று உலகம் புரிந்துகொள்ளும்.

இதுவே, பேலியோவில் இருந்து குடித்து உடம்புக்கு முடியாமல் போய் விழுந்தால் அநியாயத்துக்குக் கொழுப்பின்மீது பழி போடுவார்கள். பேலியோவில் உயிரை வாங்கும் கெட்ட கொழுப்பு என்பது அறவே கிடையாது என்பதையெல்லாம் சமூகம் சிந்திக்காது. ஒன்று சொல்லுவேன். குடிக்கத் தோன்றாவிட்டால் நான் ஏன் குடிக்கப் போகிறேன் என்று கேட்பவராக இருந்தால் தைரியமாக பேலியோவுக்கு வரலாம்! ஏனென்றால் உள்ளே போகும் சரக்கு எதுவானாலும், அதைத் திரும்பத் திரும்பக் கேட்கும் ‘க்ரேவிங்’ என்பது கார்போஹைடிரேட்டில் மட்டும்தான் உண்டு. கொழுப்புணவுக்கு மாறியபின் இந்த க்ரேவிங் அடியோடு இருக்காது. எதைக் கண்டாலும் சாப்பிட வேண்டும்போல் தோன்றவே தோன்றாது.

பசித்தால் மட்டுமே உண்ணத் தோன்றும். இதன் அடிப்படையில் குடிப்பழக்கம் மறப்பதற்கு பேலியோ உதவும். அதுவும் நம் ஆட்களைச் சொல்லுங்கள்! ஆல்கஹால் செய்கிற உபத்திரவம் பத்தாது என்று சைட் டிஷ்ஷாக எத்தனை விதமான பதார்த்தங்களை உள்ளே தள்ளுவார்கள்! என் நண்பர் ஒருவர் ஒவ்வொரு வாய் மதுவுக்கும் முந்திரி பக்கோடாவைத் தக்காளிச் சட்னியில் தோய்த்துத் தோய்த்துத் துணையாக உள்ளே அனுப்புவார். சேட்டுக்கடையில் இனிப்பு பூந்தி வாங்கி வந்து வைத்துக்கொண்டு, அதில் கைமுறுக்கை நொறுக்கிப் போட்டு அள்ளி அள்ளி விழுங்கும் பெருங்குடி மகன் ஒருவரையும் அறிவேன்.

எல்லா கெட்டதுகளையும் ஒன்றாகச் சேர்த்து ருசிக்கும்போது நமது வயதைச் சிறிது சிறிதாக நாம் குறைத்துக்கொள்கிறோம். அப்புறம், சிறிய வயதில் போய்ச் சேர்ந்தான் என்ற பட்டத்தை வாங்கிக்கொள்கிறோம். எனவே, பேலியோவில் மது கண்டிப்பாக இல்லை. தவிரவும் ஆல்கஹால் என்பது எந்த விதத்திலும் கொழுப்பு டயட்டோடு ஒட்டவே ஒட்டாது. இதைப் பரிபூரணமாக அறிந்து, உணர்ந்துகொண்டவர்கள் மட்டுமே இந்த டயட்டைக் கடைப்பிடிக்கலாம்! முடியாது; நான் குடிக்கத்தான் செய்வேன் என்பீர்களானால் பேலியோ உங்களுக்கு வேண்டாம். ஓடிவிடுங்கள்.

(அடுத்த வாரம் நிறைவுறும்)