அத்தியாயம்



6 இயக்குநர்கள் 6 கதைகள் ஒரு படம்

உண்மையிலேயே தமிழ் சினிமாவில் ‘6 அத்தியாயம்’ படம் புதுமுயற்சிதான். ஹாரர் தீமில் ஆறு குறும்படங்கள். இதை ஆறு இயக்குநர்கள் இயக்கியிருக்கிறார்கள். ஒரே படமாக வெளியிடுகிறார்கள். இதிலென்ன புதுமை என்கிறீர்களா? இருக்கிறது. ஒருவகையில் உலகளவில் முதல் முறையாக என்றும் சொல்லலாம். இதற்கு முன் உலகின் பல்வேறு பகுதிகளில் இதுபோல் சில / பல குறும்படங்கள் ஒன்றிணைந்து வெளியாகியிருக்கிறது ஆனால், அவற்றில் எல்லாம் ஒரு குறும்படம் முடிந்த பிறகுதான் இன்னொரு குறும்படம் தொடங்கும்.‘6 அத்தியாயம்’ இதில் வேறுபடுகிறது. வரிசையாக ஆறு குறும்படங்களும் ஒன்றன்பின் ஒன்றாக ஒளிபரப்பாகும். அதுவும் க்ளைமாக்ஸ் இல்லாமல்!

ஆறாவது குறும்படம் முடிந்தபின், மீண்டும் முதலிலிருந்து ஆறு குறும்படத்தின் க்ளைமாக்ஸும் அடுத்தடுத்து விரியும்! ஒரே படத்தில் 6 இயக்குநர்கள். 60 நடிகர்கள். 6 இசையமைப்பாளர்கள். 4 ஒளிப்பதிவாளர்கள். கிட்டத்தட்ட 100 டெக்னீஷியன்ஸ். அத்தனைக்கும் ஒரேயொரு தயாரிப்பாளர்தான். எக்ஸ்ட்ரா போனஸாக, ‘விக்ரம் வேதா’ சாம் சி.எஸ். இசையமைத்த புரொமோ பாடல். இந்த புள்ளிவிபரங்களைப் பார்த்தபின், மெகா பட்ஜெட் போல என்று தோன்றும். இல்லை. லோ பட்ஜெட்டுக்கும் குறைவான பட்ஜெட்! அதனால்தான் சமீபத்தில் இந்தப் படத்தைப் பார்த்த இயக்குநர் பாரதிராஜா, ‘‘இது ஒரு வித்தியாசமான அணுகுமுறை. பொதுவாக பெங்காலியில் சின்ன படமாக இருந்தாலும், பெரிய படமாக இருந்தாலும் சிந்திக்கும் விதத்தில் வித்தியாசம் காட்டுவார்கள்.

இந்தப் படம் அதைக்காட்டிலும் பிரமாதம். நிஜமாகவே மிரண்டு போனேன்...’’ என்று பிரமித்திருக்கிறார். தீர்ப்பு ரசிகர்கள் கையில் என்றாலும் நிஜமாகவே தனித்துவம் காட்ட முயற்சித்திருக்கிறார்கள் அல்லவா? அவர்களை சந்தித்து உரையாடுவதுதானே முறை? ஓர் அழகான பனிக் காலையில் ‘6 அத்தியாயம்’ படத்தின் இயக்குநர்களான கேபிள் சங்கர், ஷங்கர் தியாகராஜன், அஜயன் பாலா, இ.ஏ.வி.சுரேஷ், லோகேஷ் ராஜேந்திரன், தர் வெங்கடேசன் ஆகியோரை ஒரே இடத்தில் சந்தித்தோம். ‘‘இந்த மாதிரி பல குறும்படங்கள் சேர்ந்து ஒரு படமா வெளிவருவதை அந்தாலஜி ஃபிலிம்ஸ்னு சொல்வாங்க. இங்கேயும் அப்படி சில அந்தாலஜிஸ் வந்திருக்கு. அந்த மேக்கிங் முறையே வேறு.

ஏற்கெனவே பாராட்டுகள் வாங்கின ‘தி பெஸ்ட்’ ரக குறும்படங்களாக தேர்ந்தெடுத்து அதையே ஒரு படமா கொண்டு வந்திருப்பாங்க. ஆனா, எங்க படம் அப்படியில்ல. 6 பேய்க்கதைகளோட தொகுப்பா கொண்டு வர முடிவெடுத்தோம். ஹாரர் இன்னிக்கு டிரெண்ட் தானே! கிட்டத்தட்ட 60 பேய்க்கதைகள்ல இருந்து இந்த 6 கதைகளை படமாக்கியிருக்கோம். அறுசுவை உணவு மாதிரி, ஆறு ஃப்ளேவர்ல பேய்கள் இருக்கும்!’’உற்சாகமான இன்ட்ரோவுடன் பேச ஆரம்பிக்கிறார்கள் இயக்குநர்கள் ஷங்கர் தியாகராஜன், கேபிள் சங்கர், அஜயன்பாலா. இவர்கள் மூவருமே வலைத்தள உலகில் அறிமுகமான நட்பூக்கள். இதில் ஷங்கர் தியாகராஜன், இந்தப் படத்தை தயாரித்திருப்பதுடன் ஒரு குறும்படத்தையும் இயக்கியிருக்கிறார்.

அடுத்தவர் ‘தொட்டால் தொடரும்’ என்ற படத்தை இயக்கிய கேபிள் சங்கர். இவரும் ஒரு குறும்படத்தை இயக்கியதுடன், படத்தின் நிர்வாகத் தயாரிப்பாளராகவும் வேலை செய்திருக்கிறார். உதயநிதி நடித்த ‘மனிதன்’ உட்பட பல படங்களுக்கு வசனம் எழுதியிருக்கும் அஜயன் பாலாவும் ஒரு குறும்படத்தை இயக்கிருக்கிறார்.‘‘தயாரிப்பாளர்களும் இயக்குநர்களும் ஈகோ இல்லாமல் நட்பாக பழகறதே இங்க அரிதான விஷயம். நாங்க ரொம்ப கொடுத்து வச்சவங்க. இந்த முயற்சி வழியா திக் ஃப்ரெண்ட்ஸ் ஆகிட்டோம்...’’ என சுரேஷ், லோகேஷ், ஸ்ரீதர் மூவரும் நெகிழ, ‘‘சில ஷார்ட் ஃபிலிம் விழாக்கள்ல ஸ்ரீதர், லோகேஷின் பட திரையிடலை பார்த்திருக்கேன்.

அங்கதான் இவங்க அறிமுகம் கிடைச்சது. ரெண்டு பேருமே செம டேலன்ட்...’’ என இருவரையும் தோள் சேர்த்து அணைத்து அறிமுகப்படுத்தினார் கேபிள். அமைதியாக நின்று கொண்டிருந்த ஸ்ரீதர் வெங்கடேசன், ஆட்டத்துக்குள் வந்தார். ‘‘சொந்த ஊர் சென்னை. சாஃப்ட்வேர் துறைல டெக்னிகல் மேனேஜர் வேலையை உதறிட்டு சினிமாவுக்கு வந்தேன். இயக்குநராகணும்னு கனவு. அது இப்ப நிறைவேறியிருக்கு. பட ஷூட் அப்ப நிஜமாவே அமானுஷ்ய அனுபவங்கள் ஏற்பட்டுச்சு. ஒரு நாள் முழுக்க ஷூட் பண்ணிட்டு ராத்திரி வந்து செக் பண்ணினா, எதுவுமே பதிவாகல. பயந்தே போயிட்டோம். அப்புறம் ஷூட் கிளம்பினா மழை பெய்யத் தொடங்கிடும். இதையெல்லாம் மீறித்தான் ஷூட் பண்ணிட்டு வந்தேன்...’’ என ஸ்ரீதர் வெங்கடேசன் மிரள, ‘‘நாங்களும் ஐ.டி. ஆட்கள்தான் பிரதர்...’’ என ஜாலி லாலி பாடினார்கள் ஷங்கர் தியாகராஜனும், சுரேஷும்!

இ.ஏ.வி.சுரேஷ், அக்மார்க் ரஜினி ரசிகர். ‘‘சின்ன வயசுலேந்தே அவர் ரசிகன். சாரை பார்க்கணும்னே பரமக்குடியில் இருந்து சென்னை வந்தேன். எம்.சி.ஏ. முடிச்சு, ஐ.டி.வேலையை உதறிட்டு, சினிமாவுக்கு வரவும் அந்த ஆசைதான் காரணம். சரியான வழிகாட்டுதல் இல்லாம, போராட்டங்களை தாக்குப்பிடிக்க முடியாம சிரமப்பட்டேன். அப்ப சினிமா மார்க்கெட்டிங் கை கொடுத்துச்சு. யூ டியூப், ட்விட்டர்ல டிரெண்டிங் ஏற்படுத்திக் கொடுக்கற அளவுக்கு இப்ப வளர்ந்திருக்கேன். இடையிடையே விளம்பரப் படங்களும் இயக்கினேன். ‘ஜோக்கர்’, ‘அறம்’னு கிட்டத்தட்ட 40 படங்களுக்கு ஆன்லைன் புரொமோஷன் பண்ணியிருக்கேன்.

இந்த ஷார்ட் ஃபிலிம் என்னை பெரிய திரை இயக்குநரா அடையாளம் காட்டும்...’’ரஜினியாக மாறி தலைமுடியைக் கோதி ஸ்டைல் காட்டிய சுரேஷுக்கு ஒரு சல்யூட் அடித்தார் லோகேஷ். இவர் ஒரு குழந்தை நட்சத்திரம்! ‘மர்மதேசம்’ கால டி.வி.சீரியல்கள், ‘கண்ணுபடப் போகுதய்யா’ காலகட்ட படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருக்கிறார் லோகேஷ் ராஜேந்திரன். ‘‘ஃபேமிலியே கலைக்குடும்பம்தான். நான் நடிகவேள் வீட்டு வாரிசு. எங்க பெரியப்பா ராதாரவி எப்பவும் என்னை என்கரேஜ் பண்ணுவார். கேபிள்சங்கர் மூலமா இந்த பட வாய்ப்பு கிடைச்சது. அவரோட படத்திலும், ‘அம்புலி’ படத்திலும் ஒர்க் பண்ணின அனுபவத்தோடு இதுல ஒரு படம் இயக்கினேன். ஆக்சுவலா இது என் 3வது குறும்படம்!’’ என லோகேஷ் பணிவு காட்ட, புன்னகைத்த ஷங்கர் தியாகராஜன் தொடர்ந்தார்..  

‘‘நான் எட்டாவது படிக்கும்போதே, ‘முத்தாரம்’ உட்பட நிறைய பத்திரிகைகளுக்கு துணுக்கு எழுத ஆரம்பிச்சிட்டேன். அப்பவே சினிமா கனவு இருந்தது. சாஃப்ட்வேர் துறைல வேலை. ஒரு வருஷம் சிங்கப்பூர், பனிரெண்டு வருஷங்கள் அமெரிக்கானு வெளிநாட்டு வாசம். ஆனாலும் எழுதுறதை தொடர்ந்தேன். அப்ப ப்ளாக் என்கிற வலைப்பூவுல எழுதறது பாப்புலரா இருந்தது. கோதால நானும் குதிச்சேன். ‘பட்டைய கிளப்பு’னு என் வலைப்பூவுக்கு பெயர் வைச்சேன். இது மூலமா சென்னைல பல நண்பர்கள் கிடைச்சாங்க. டைரக்‌ஷன் ஆசைல அமெரிக்காவுல ஒரு குறும்படம் இயக்கினேன். நம்பிக்கை வந்ததும் படம் தயாரிக்க முடிவு செஞ்சேன்.

இங்க பல திறமைசாலிங்க இருக்காங்க. அவங்க எல்லாருக்கும் என்னால வாய்ப்பு கொடுக்க முடியுமானு தெரியலை. இருந்தாலும் என் சக்திக்கு உட்பட்டு ஒருசிலருக்காவது வாய்ப்பு தர முடியும். அப்படிச் செய்யலாம்னு முடிவெடுத்தப்ப தோன்றின ஐடியாதான் ‘6 அத்தியாயம்’ படமா வந்திருக்கு. இயக்குநர் எஸ்.எஸ்.ஸ்டேன்லி மாதிரி நிறைய தெரிஞ்ச முகங்களும் எங்க படத்துல (படங்கள்ல!) நடிச்சிருக்காங்க...’’ என்ற ஷங்கர் தியாகராஜன், நிர்வாகத் தயாரிப்பாளரான கேபிள் சங்கரை அருகே அழைத்து சின்ன சிரிப்புடன் ‘தேங்க்ஸ்’ சொல்ல, வெட்கத்தில் நெளிந்தார் கேபிள். ‘‘பாரதிராஜா சார் அசிஸ்டென்ட் வேல்முருகன் என்னை கூப்பிட்டு, ‘உங்ககிட்ட பேய்க்கதை இருக்கா’னு கேட்டார்.

அப்ப என்கிட்ட பேய்க்கதை எதுவும் இல்ல. ஆனா, நான் எழுதின ஒரு காதல் கதையை பேய்க்கதையாவும் மாத்த முடியும்னு தோணுச்சு. அப்படியே மாத்திக் கொடுத்தேன். ஷங்கர் தியாகராஜனுக்கு பிடிச்சிருந்தது. அதை குறும்படமா இயக்க முடிவு பண்ணினதும், இயக்குநர் பாண்டிராஜ் சார்கிட்ட சொன்னேன். அவர் ‘பசங்க’ கிஷோரை இதுல நடிக்க வைச்சார். பத்திரிகை புகைப்படக்காரர் பொன்.காசி ராஜனை என் குறும்படம் வழியா ஒளிப்பதிவாளரா அறிமுகப்படுத்தறேன். இந்தப் படத்தோட ஷூட்டிங்கை ரெண்டே நாள்ல முடிச்சுட்டோம். ஆனா, லொகேஷனைத் தேர்வு செய்ய பல நாட்களாச்சு...’’ என அஜயன் பாலா புன்னகைத்தார். ‘‘சினிமா ரொம்பவே மாறியிருக்கு.

இந்தப் படத்தோட பட்ஜெட்ல இத்தனை நடிகர்கள், டெக்னீஷியன்ஸ் பணிபுரிஞ்சிருக்காங்கனு சொன்னா யாரும் நம்ப மாட்டாங்க. முன்னாடி டி.வில படத்தை பார்த்தோம். இப்ப மொபைல்ல டவுன்லோடு பண்ணி கண்ணுகிட்டயே பார்க்கறோம். சினிமா பார்க்கிற முறைகள் மாறியிருக்கு. இப்படி மக்கள் அப்டேட் ஆன மாதிரி சினிமா மேக்கிங்கும் மாறணும். அப்படி செய்யணும்னு நினைச்சுதான் ‘6 அத்தியாயம்’ படத்தை உருவாக்கியிருக்கோம். வித்தியாசமான முயற்சிகளுக்கு எப்பவும் ஆதரவு கொடுக்கிற ரசிகர்கள் இதற்கும் கைதட்டுவாங்கனு நம்பறோம்...’’ என கேபிள் சங்கர் சொல்ல... அதை வழிமொழியும் விதமாக மற்றவர்கள் தலையசைத்தனர்.                 

- மை.பாரதிராஜா

படங்கள்: ஆ.வின்சென்ட் பால்