ஒரு கள்ளத்தனம்... காரிய புத்தி இங்க எல்லார்கிட்டயும் இருக்கு..!பூர்ணா open talk

கிளாமரை விட திறமைதான் ஜொலிக்கும் என உணர ஆரம்பித்த நடிகைகள் வரிசையில் பூர்ணாவுக்கு முதலிடம் உண்டு. ‘கொடி வீரனு’க்காக தலைமுடியை காணிக்கை கொடுத்தவர், ‘சவரக்கத்தி’க்காக நிறைமாதக் கர்ப்பிணியாக, இரு குழந்தைகளுக்கு தாயாக அவதாரம் எடுத்திருக்கிறார். இப்படத்தில் முதல் முறையாக சொந்தக் குரலில் பேசவும் செய்திருக்கிறார். இவை எல்லாமே சினிமினி செய்திகள். உண்மையில் இது மட்டுமே பூர்ணா அல்ல என்பதுதான் ஹைலைட்.‘‘ஆக்சுவலி நான் லக்கி கேர்ள். நல்ல டான்சரா பெயரெடுக்கணும்னு நினைச்சேன். ஆனா, நல்ல நடிகைனு பெயர் வாங்கியிருக்கேன். சினிமாவுக்கு வந்து 10 வருடங்களாச்சு. சொல்லிக்கறா மாதிரி எந்த பெரிய ஹிட்டும் இதுவரை கொடுக்கலை. ஆனாலும் பூர்ணாவை எல்லோருக்கும் நினைவிருக்கு. ஏன்... நீங்களே இப்ப பேட்டிக்கு வரலையா? இதை பெரிய விஷயமா நினைக்கறேன்...’’ புன்னகைக்கிறார் பூர்ணா. 


ஏன் ‘சவரக்கத்தி’ ஃபங்ஷன்ல எமோஷனலானீங்க?

சில வருஷங்களுக்கு முன்னாடி ‘தகராறு’ படத்துல நடிச்சேன். நல்ல படம்னு எல்லாரும் பாராட்டினாங்க. ‘ஒரு ரவுண்ட் வருவ’னு சொன்னாங்க. நானும் பட வாய்ப்புகள் தேடி வரும்னு எதிர்பார்த்தேன். ஆனா, அப்படி எதுவும் நடக்கலை. என் திறமை மேல எனக்கு நம்பிக்கை இருந்தது; இருக்கு. ஆனாலும் இந்த உதாசீனம் ரொம்பவே காயப்படுத்திச்சு. இனி சினிமா நமக்கு செட் ஆகாது... டான்ஸ்ல கவனம் செலுத்துவோம்னு கூட நினைச்சேன். அந்தளவுக்கு ஒரு விரக்தி. எங்க குடும்பத்துக்கு சினிமா பத்தி எதுவும் தெரியாது. இந்த சூழல்லதான் நடிகையாகவே மாறினேன். தமிழ் தவிர மலையாளம், தெலுங்கு, கன்னட மொழிகள்லயும் படங்கள் பண்ணியிருக்கேன்.

ஹீரோயினா தாக்குப் பிடிக்க அழகும் திறமையும் மட்டும் போறாதுனு புரிஞ்சுக்கவே எனக்கு வருஷங்களாச்சு. சினிமாவுல வெற்றிதான் எல்லாத்தையும் தீர்மானிக்குது. எவ்வளவு திறமை, அழகு இருந்தாலும் ஹிட் கொடுத்தா மட்டும்தான் நிலைக்க முடியும். இது எல்லாருக்கும் தெரிஞ்ச விஷயம்தான். எனக்கு புரிபட லேட்டாச்சு. ‘தகராறு’க்குப் பிறகு சான்ஸ் வரலை. டான்ஸ் ஸ்கூல் தொடங்க முடிவு செய்தேன்.

அப்பதான் தெலுங்குல ‘அவ்னு’ பட வாய்ப்பு கிடைச்சுது. நடிச்சேன். பெருசா ஹிட்டாச்சு. தொடர்ந்து கோலிவுட்ல இருந்து ஆஃபர்ஸ் தேடி வந்தது. அந்த செகண்ட்லதான் ஞானோதயம் பிறந்தது. சினிமாவை சின்சியரா நேசிக்கிறவங்களை சினிமா எப்பவும் கை விடாது. சோதிச்சுப் பார்க்கும். கீழ கூட சாய்க்கும். ஆனா, புதைஞ்சு போக விடாது. கைதூக்கி விட்டுடும். இதுதான் இப்ப என் விஷயத்துல நடந்துட்டு இருக்கு. ‘சவரக்கத்தி’ சுபத்ரா கேரக்டர் நிச்சயம் என் கேரியர்ல மைல்கல். மிஷ்கின் சார் என்னால முடியும்னு நம்பினார். அதை காப்பாத்தி இருக்கேன்னு நினைக்கறேன்.

எல்லா வகையான டான்ஸும் உங்களுக்கு தெரியுமா?
ம். ஆரம்பத்துல கிளாசிக்கல் மட்டும்தான் தெரியும். பிஏ இங்கிலீஷ் லிட்ரேச்சர் முடிச்சதும் டிவி ரியாலிட்டி ஷோவுக்காக வெஸ்டர்ன் கத்துக்கிட்டேன். அப்படியே படிப்படியா எல்லா வகை நடனங்களையும் கத்துக்கிட்டேன். பெங்களூர் இன்ஸ்டிடியூட்ல குச்சுப்புடில பிஎச்.டி பண்ணிட்டிருக்கேன். என் டான்ஸ் ஷோவுல எல்லா வகையான நடனங்களும் உண்டு. நடிப்பும், நடனமும் எனக்கு இரு கண்கள். இந்த இரண்டும்தான் என் வாழ்க்கை. டான்ஸ் ஸ்கூல் தொடங்கறது என் சிறு வயது கனவு.

ஸ்டூடண்ட்ஸுக்கு நானே கத்துக் கொடுக்கணும்னு நினைக்கறேன். வேற மாஸ்டர்ஸ் வைச்சு கிளாஸ் ஆரம்பிக்கற ஐடியா இல்ல. அதனாலதான் இன்னும் ஸ்கூல் தொடங்காம இருக்கேன். இன்னும் வயசிருக்கு. சினிமால இப்பதான் என் மேல வெளிச்சம் விழ ஆரம்பிச்சிருக்கு. இதுல ஸ்கோர் பண்ணிட்டு அப்புறம் ஸ்கூல்தான். ஷோபனா மேம்தான் எனக்கு இன்ஸ்பிரேஷன்.

நீங்க அம்மா செல்லம் இல்லையா?
அதுல என்ன சந்தேகம்? இதை பெருமையாவே சொல்லுவேன். அவங்க இல்லைனா இந்த பூர்ணா இல்லை. அவங்க ஹாபியே எம்பிராய்டரியும் ஸ்டிச்சுங்கும்தான். டிரெஸ் அண்ட் டிசைனிங் சென்ஸ் அவங்களுக்கு அதிகம். அவங்ககிட்டேந்து நிறைய கத்துகிட்டேன். அதனாலதான் நான் நடிச்ச சில படங்கள்ல என்னால காஸ்ட்யூம் டிசைனராகவும் இருக்க முடிஞ்சுது. இன்னொரு விஷயம் தெரியுமா? என்னோட சில படங்கள்ல இடம்பெற்ற பாடல்களுக்கு நானே கோரியோகிராஃபியும் செய்திருக்கேன்.

இப்ப தெளிவு பிறந்திருக்கா?
கண்டிப்பா. நான்கு தென்னிந்திய மொழி பட உலகம் பத்தியும் இப்ப ஓரளவு தெரியும். ஆரம்பத்துல எல்லாரையும் கண்மூடித்தனமா நம்பிடுவேன். இங்க யாரும் யார்கிட்டயும் வெளிப்படையா பழகறதில்லை; பேசறதில்லை. ஒரு கள்ளத்தனம், காரிய புத்தி இங்க எல்லார்கிட்டயும் இருக்கு. இதையெல்லாம் மீறி, கடினமா உழைச்சா நிச்சயம் ஓர் இடம் சினிமாவுல கிடைக்கும். பூர்வீகம் கேரளா. ஆனா, தமிழகம்தான் இப்ப ஹோம் டவுன். கோலிவுட் ரொம்ப பிடிச்சிருக்கு. நெருக்கமாகவும் உணர்றேன்.               

- மை.பாரதிராஜா

படங்கள்: சுரேஷ் சுகு