ஆர்கானிக் ஃபேஷன்!



இது ஆர்கானிக் காலம்! சாப்பிடும் உணவுப் பொருட்கள் முதல் குளிக்கும் சோப்பு, ஷாம்பூ வரை சகலத்திலும் ஆர்கானிக் புராடக்ட்ஸ் வந்துவிட்டன. அப்படியிருக்க, ஃபேஷன் உடைகளிலும் ஆர்கானிக் மெட்டீரியல்ஸ் வராமல் இருக்குமா? வந்தாச்சு! இதுகுறித்து அறிய டிசைனர் தஸ்னீமை தொடர்பு கொண்டோம். “உண்மைல சுற்றுச்சூழலுக்கு நன்மை செய்யற விஷயம் இது. யெஸ். கைத்தறி உடைகள்தான். ஆனா, ஸ்பெஷல் கைத்தறி! அதென்ன ஸ்பெஷல்? பொதுவா கைத்தறி உடைகள்ல கலரிங்குக்கு கெமிக்கல் டை பயன்படுத்துவாங்க. ஆனா, ஆர்கானிக் கைத்தறில கெமிக்கல் டை எதுவும் பயன்படுத்த மாட்டோம். துணி நெய்து எடுக்கறப்ப ரா மெட்டீரியல் கிடைக்குமே... அதை அப்படியே பயன்படுத்துவோம். எம்பிராய்டரி ஒர்க் அல்லது கை வேலைகள் மட்டும் செய்வோம். இதுக்கு மேல ப்ளீச் கூட செய்ய மாட்டோம்.

இப்ப ஆர்கானிக் மெட்டீரியல்ஸ் மேல மக்களுக்கு ஈடுபாடு வந்திருக்கு. பெரும்பாலானவங்க காட்டன், லினென்... இப்படி பயன்படுத்தத் தொடங்கிட்டாங்க. ஒண்ணு தெரியுமா? பாலிஸ்டர் உடைகளுக்கும் ஆர்கானிக் உடைகளுக்குமான விலை வித்தியாசம் அதிகம் போனா ரூ.100 அல்லது ரூ.200க்குள்ளதான் இருக்கும்...’’ என்று சொல்லும் தஸ்னீம், ‘Reuse, Reduce, Recycle’... இதுதான் பொதுவாகவே ஆர்கானிக் ஃபேஷனுக்கு அடிப்படை என்கிறார். “நமக்கு எதையுமே அதிகம் வாங்கற பழக்கம் உண்டு. ஒரு சில உடைகளை வாங்கிட்டு ஒண்ணு, ரெண்டு தடவை பயன்படுத்திட்டு அப்படியே வைச்சிருப்போம். வேண்டாம்னு தோணினா அதை ஆதரவற்ற இல்லங்களுக்கு கொடுத்துடுவோம்.

சிலருக்கு குறிப்பிட்ட டிரெஸ் மெட்டீரியல் பிடிக்கும். ஆனா, திரும்பத் திரும்ப அதை போட்டுட்டுப் போய் ஃப்ரெண்ட்ஸோட கேலி கிண்டலுக்கு ஆளாகணுமானு யோசிப்பாங்க. அப்படிப்பட்டவங்களுக்காகவே நாங்க ரீ சைக்கிள் செய்யறோம்! யெஸ். அதே உடையை திரும்ப டிசைன் செய்து ட்ரெண்டாக்கி வேற உடையாவே மாத்திக் கொடுப்போம். இந்த முறைல நிறைய புடவைகளை வெஸ்டர்ன் உடைகளா மாத்திக் கொடுத்திருக்கோம்...’’ என்ற தஸ்னீமிடம் ஆர்கானிக் உடைகளை என்னதான் பயன்படுத்தினாலும் அவற்றை துவைக்க சோப், கெமிக்கல் பவுடர்தானே பயன்படுத்த வேண்டியிருக்கிறது என்று கேட்டோம். “உண்மைதான். ஆர்கானிக் துணியாவே இருந்தாலும் ஒருமுறை துவைச்சிட்டா அதுவும் கெமிக்கல் கலந்த துணி வகையாதான் மாறும்.

இதுக்காகவே உஷாரா இருக்கோம். இருக்கவும் சொல்றோம். துணிகளுக்கு போடும் சாயம், ப்ளீச்களில் அதீத கெமிக்கல் இருக்கு. இதை தவிர்க்கலாம். அதுபோக இப்ப மார்க்கெட்டுல ஆர்கானிக் சோப், பவுடர் எல்லாம் இருக்கு. இதை பயன்படுத்தலாம்...’’ என்றவர் முக்கியமான தகவலைப் பகிர்ந்து கொண்டார்.‘‘பத்து ரூபாய்க்கு வாங்கற மிளகாய்ப் பொடி சாஷேல கூட என்னவெல்லாம் அதுல கலந்திருக்கு... எத்தனை சதவிகிதம் அதெல்லாம் இருக்குனு பிரிண்ட் பண்ணியிருக்காங்க. அப்படியிருக்க, ஆயிரக்கணக்குல நாம செலவு பண்ணி வாங்கற துணிகள்ல ‘Ingredients’ விபரம் இருக்கா? இல்ல. நாமும் கேட்கறதில்லை. ஆனா, ஆர்கானிக் உடைகள்ல எத்தனை சதவிகிதம் காட்டன்... எத்தனை சதவிகிதம் கெமிக்கல் மிக்ஸ்... போன்ற விபரங்கள் இருக்கும்!

எங்ககிட்ட இருக்கிற குர்தாக்கள்ல கூட இந்த விபரங்களை பார்க்கலாம். உடைகளைக் கொண்டு போகக் கூட துணிப்பைகளையே பயன்படுத்தறது நல்லது. கூடுமானவரை பாலிதீன் பைகளைத் தவிர்த்துடுங்க. இப்ப நிறைய கிராமப்புறங்கள்ல வாழை நார், காட்டன்ல நிறைய ஆர்கானிக் உடைகளை தயாரிக்கிறாங்க. இதெல்லாமே குடிசைத் தொழிலா இருக்கு. இன்னும் இதுல பிராண்ட் வரலை. என்னை மாதிரி ஆட்கள் அவங்ககிட்டேர்ந்துதான் மெட்டீரியல்ஸ் வாங்கி ஃபேஷனா தைச்சுத் தர்றோம். ஆமா. ஃபேஷனாதான். எப்படி சாதாரண ஜார்ஜெட், பாலிஸ்டர் மெட்டீரியல்ஸ்ல உடைகளை டிசைன் செய்யறோமோ அப்படி ஆர்கானிக் மெட்டீரியல்ஸ்லயும் செய்யலாம். அதே மாதிரி ஆக்ஸசரிஸும் ஒண்ணுதான். பாலிஸ்டர் துணிகளுக்கு அணிவதையே இதுக்கும் அணியலாம்!’’ என்கிறார் தஸ்னீம்.

- ஷாலினி நியூட்டன்