வெளிநாடு வாழ் இந்தியர்களின் திருமண உடைகள்!



- ஷாலினி நியூட்டன்

கல்யாணம் என்றாலே பட்டுப் புடவை, லெஹெங்கா என இந்தியாவில் இரண்டு விதங்கள் மட்டுமே. அதிகம் சென்றால் கவுன். சரி, வெளிநாடு வாழ் இந்தியர்கள் என்ன செய்கிறார்கள்? முக்கியமாக மணப்பெண் உடைகள் என்ன? பாரிஸ் வாழ் டிசைனர் மற்றும் மேக்கப் கலைஞர் கல்பனாவைப் பிடித்தோம். கைநிறைய உடைகள் சகிதமாக வந்திறங்கினார். “மணப்பெண்ணை கொஞ்சம் கூட டென்ஷன் ஆக்கக் கூடாது. இதைத்தான் அங்க அதிகமா ஃபாலோ பண்றோம். நாம சாதரணமா கட்டுற பட்டுப் புடவைகளையே எடுத்துப்போம். நாள் முழுக்க கை கால்களை உயர்த்த முடியாம, இங்க இழுத்தா அங்க தெரியுது, அங்க இழுத்தா இங்க தெரியுதுங்கிற மாதிரி பிரச்னைகள் இருக்கும் இல்லையா? இதெல்லாம் இருக்கக் கூடாது.

இன்னொண்ணு, இந்தப் புடவைகளைக் கட்டிக்கிட்டு சம்பிரதாயம், கால்ல விழுந்து ஆசீர்வாதம் வாங்கறதுனு அரைநாள்ல மொத்த எனர்ஜியும் போயிடும். இதுக்கு மாறா ஜாலியா, கொண்டாட்டமா திருமணம் செய்வோம்...’’ என்று சொல்லும் கல்பனா அதுகுறித்து விவரித்தார்.‘உடைகள் எப்பவும் நம்மை கஷ்டப்படுத்தக் கூடாது. இதைத்தான் வெளிநாடு வாழ் இந்தியர்கள் விரும்பறாங்க. அதை மனசுல வெச்சுதான் நாங்க லெஹெங்காவையும் சேலையையும் மிக்ஸ் செஞ்சோம். சேலை கட்டுறதுல முக்கிய பிரச்னை கால்களை நம் விருப்பத்துக்கு பயன்படுத்த முடியாது என்பதுதான். அதைத்தான் நாங்க டார்கெட் செய்தோம்.

உள் பாவாடைகளுக்குப் பதிலா லெஹெங்கா ஸ்கர்ட்டை ஏன் பயன்படுத்தக் கூடாதுனு தோணுச்சு. டிசைன் இல்லாத லெஹெங்கா ஸ்கர்ட்ல பட்டுப்புடவைகளை விதவிதமா கட்டினோம். ஒண்ணு, பின்புறம் மட்டும் விசிறி ஸ்டைல். இன்னொண்ணு ஸ்கர்ட் மேல தாவணி முறைல கட்டிக்கிற பட்டுப் புடவை. இந்த கான்செப்ட் பல பெண்களுக்கு பிடிச்சுப் போச்சு...’’ என்ற கல்பனா, தென்னிந்தியர்கள் குறித்து வியந்தார். “வெளிநாட்ல வாழற தென்னிந்தியர்கள் இப்பவும் தங்கள் திருமணங்கள்ல பட்டு மிஸ் ஆகவே கூடாதுனு கவனமா இருக்காங்க. ஆனா, மணப்பெண்களோ ட்ரெண்டி லெஹெங்காவுக்கு ஆசைப்படறாங்க. இந்த இரண்டுக்கும் பாலமா இருக்கறதுதான் எங்க சவால்.

லெஹெங்கானு சொன்னாலே ஆரி ஒர்க், சாட்டின், வெல்வெட் இப்படிதான் இருக்கும். இதனால பெரியவங்களுக்கும் சின்னவங்களுக்கும் பிரச்னைகள் வர்றதை கவனிச்சிருக்கேன். அப்பதான் லெஹெங்காவுல ஏன் பட்டு மிக்ஸ் பண்ணக் கூடாதுனு தோணுச்சு. எப்போதுமான லெஹெ ங்கா கூட நல்ல முறைல நெய்த காஞ்சிவரம் பட்டு துப்பட்டாவை மேட்ச் செஞ்சோம். இன்னைக்கு பலரும் இதை விரும்பறாங்க. ரொம்பவே ஆச்சர்யமான விஷயம் நம்ம இந்தியர்கள் திருமணத்துல கருப்பு நிறம் பயன்படுத்தவே மாட்டாங்க. ஆனா, அங்க அதிகமா கருப்பு, வெள்ளை பயன்படுத்துவாங்க.

இங்க இரண்டு விதமான சேலை மாடல்களை நான் கட்டியிருக்கேன். இரண்டுமே தாவணி ஸ்டைல்தான். ஆனாலும் பட்டு சேலை கட்டிக்கிட்டா என்ன லுக் கிடைக்குமோ அதே ஸ்டைலைத்தான் ஃபாலோ செய்திருக்கேன். இந்த கான்செப்ட் இப்ப கொஞ்சம் கொஞ்சமா இந்தியாவுக்கும் பரவ ஆரம்பிச்சிருக்கு. சில டிசைனர்கள் இதை அடாப்ட் செஞ்சு ஃபேஷன் ஷோக்கள்ல பயன்படுத்தறாங்க. இன்னமும் திருமணங்கள்ல வரலை. அதே மாதிரி கொண்டை மாதிரியான ஸ்டைல்களை அங்க அதிகம் விரும்பறாங்க. காரணம், பெரும்பாலும் ஜடைகள், லூஸ் ஹேர்தான் அன்றாட வாழ்க்கை முறைல பயன்படுத்தறாங்க. ஸோ, ஃபங்ஷன் டைம்ல கொண்டை போட்டு மல்லிகை மாதிரி பூக்கள் வெச்சுக்க ஆசைப்படறாங்க.

லெஹெங்காவுக்கே அங்க அதிகம் கொண்டைதான் பயன்படுத்துவாங்க. ஒரு சின்ன ஐடியா சொல்றேன். எந்தவிதமான டிசைனும் இல்லாம ஒரே கலர்ல சல்வார் டாப்பும் பாட்டமும் போட்டுகிட்டு இதுக்கு சம்பந்தமே இல்லாம காஞ்சிவரம் பட்டு துப்பட்டாவை பயன்படுத்திப் பாருங்க....அப்படியே அள்ளும்! பட்டு துப்பட்டா ரூ.800 முதலே கிடைக்குது...’’ என்கிறார் கல்பனா.

மாடல்கள்  : சுமா பூஜாரி,  நந்தினி நஞ்சன்
உடைகள் & மேக்கப்  : கல்பனா (பாரீஸ்: Kay S Mua)
ஹேர் ஸ்டைல்  : அகிலா வீரா
நகைகள் : Fine Shine
Model Co-odinator  : நந்தினி
படங்கள் :  ஆண்டன் தாஸ்