83 ஆயிரம் தீப்பெட்டி அட்டைகள்!புதிய பகுதி - கலெக்டர்ஸ்

முந்தைய தலைமுறையைச் சேர்ந்தவர்கள் பள்ளி நாட்களில் என்ன செய்வார்கள்? பல நாட்டு தபால் தலைகளையும், நாணயங்களையும் சேகரிப்பார்கள். ஆரம்ப ஜோரில் இப்படி கலெக்ட் செய்பவர்கள் நாட்கள் செல்லச் செல்ல அல்லது வயது ஏற ஏற அதிலிருந்து விலகிவிடுவார்கள். கல்லூரி நாட்களில் தாங்கள் சேகரித்த விஷயங்களையே சிறுபிள்ளைத்தனமாக எண்ணுவார்கள். ஆனால், குழந்தைத்தனம் என்று பெரும்பாலோர் நினைக்கும் இந்த செயலை ஒரு சிலர் சீரியஸாக நினைக்கிறார்கள். முதுமையிலும் தங்கள் சேகரிப்பை தொடர்கிறார்கள்.

சென்னையைச் சேர்ந்த ரோஹித் காஷ்யாப் அப்படித்தான் இன்றும் கலெக்ட் செய்து வருகிறார். ஆனால், நாணயங்களையோ தபால் தலைகளையோ அல்ல. மாறாக தீப்பெட்டிகளை! தனியார் கார்ப்பரேட் நிறுவனம் ஒன்றில் பயிற்சியாளராக வேலை பார்த்து வரும் இவர், தன்னுடைய பத்தாவது வயதில் இருந்து இதனை சேகரித்து வருகிறார். இன்று இவரிடம் 108 நாடுகளைச் சேர்ந்த 83 ஆயிரம் தீப்பெட்டி அட்டைகள் இருக்கின்றன. விளைவு, லிம்கா சாதனையில் இடம்பெற இருக்கிறார். அதற்குப் பின் சர்வதேச அளவிலான கின்னஸ் சாதனையில் இடம்பிடிக்க முயன்று வருகிறார்.

‘‘உத்தரப்பிரதேசத்துல இருக்கிற ஜான்சி என்கிற சிறிய கிராமம்தான் சொந்த ஊர். வளர்ந்தது, படிச்சது எல்லாம் அங்கதான். ஐந்து வருஷம் முன்னாடி வேலை காரணமா சென்னை வந்தேன். இப்பவும் அப்பா, அம்மா அங்கதான் இருக்காங்க. கூடப் பிறந்தவங்க தில்லில செட்டிலாகிட்டாங்க...’’ தன்னை அறிமுகப்படுத்திக் கொள்ளும் ரோஹித், ஆறாவது படிக்கும் போதுதான் இந்த சேகரிப்பில் இறங்கினாராம்.

‘‘கூட படிச்சவங்க எல்லாம் ஏதாவது ஒரு பொருளை கலெக்ட் பண்ணிட்டு இருந்தாங்க. எனக்கும் ஆசை வந்தது. ஆனா, அவங்களை மாதிரி காயின்ஸ் அல்லது ஸ்டாம்ப் கலெக்ட் பண்ண விருப்பமில்ல. வித்தியாசமா செய்ய நினைச்சேன். அப்பாவும் அம்மாவும் கைல காசு தர மாட்டாங்க. ஸோ, செலவே இல்லாம கலெக்ட் பண்ணணும். அதே நேரம் சுலபமா கிடைக்கக் கூடிய பொருளாவும் இருக்கணும். இப்படி நினைச்சுட்டு இருந்த நேரத்துல ஒருநாள் ரோட்ல ஒரு தீப்பெட்டியைப் பார்த்தேன்.

சட்டுன்னு மனசுக்குள்ள ஸ்பார்க் அடிச்சது. இதையே நாம ஏன் சேகரிக்கக் கூடாது?அன்னிலேந்து ரோட்ல கீழ குனிஞ்சு பார்த்துகிட்டேதான் நடப்பேன். தீப்பெட்டி கிடைச்சா உடனே அதை எடுத்துடுவேன். இப்ப என் வயசு 40. பத்து வயசுல ஆரம்பிச்ச அந்த பழக்கம் இப்பவும் தொடருது. ரோட்ல நான் குப்பைகளைக் கிளறி தீப்பெட்டி எடுக்கறதைப் பார்த்த என் பெற்றோர் ஆரம்பத்துல ரொம்ப பயந்துட்டாங்க. ஒரு கட்டத்துல ஆயிரம் தீப்பெட்டி வரை சேகரிச்சுட்டேன். ஆனா, வீட்ல குப்பையைச் சேர்க்கிறேன்னு அதை ஒருநாள் எரிச்சுட்டாங்க...’’ என்று சிரிக்கும் ரோஹித், கல்லூரி படிக்கும்போதும் தன் சேகரிப்பை விடவில்லை.

‘‘ஸ்கூல்ல படிக்கிறப்ப அப்பப்ப கண்காட்சி நடக்கும். கூட படிக்கிறவங்க எல்லாம் ஸ்டாம்ப் இல்லைனா காயின்ஸை கொண்டு வந்து அடுக்குவாங்க. நான் தீப்பெட்டி அட்டைகளை வைப்பேன். வந்தவங்க கிண்டல் செய்வாங்கன்னு பயந்தேன். ஆனா, ஆர்வத்தோட பார்த்தாங்க. சந்தோஷமா இருந்தது. அந்த நொடிலதான் தீப்பெட்டி கலெக்‌ஷன்ல தீவிரமா இறங்க முடிவு செய்தேன். ஆனா, எங்க வீட்ல இது சுத்தமா பிடிக்கல. அவங்களுக்கு தெரியாம ரகசியமா கலெக்ட் பண்ண ஆரம்பிச்சேன்...’’ என்றவர் ஒவ்வொரு தீப்பெட்டியும் ஒவ்வொரு கதையைச் சொல்வதாக வியக்கிறார்.

‘‘ஒவ்வொரு தீப்பெட்டிலயும் ஒவ்வொரு சின்னம் இருக்கும். விலங்குகள், பறவைகள், மலர்கள், அறிவியல் கண்டுபிடிப்புகள்... இப்படி. அதனால தனித்தனியா விலங்குகளுக்கு தனி, மலர்களுக்கு தனினு வகைப்படுத்தினேன். ஒவ்வொரு பெட்டியோட மேல் அட்டையையும் கிழிப்பேன். அதை பிளாஸ்டிக் ஷீட்ல போடுவேன். இதுக்கு ஸ்கிலெட்ஸ்னு (skillets) பேரு. கல்லூரி நாட்கள்ல நடந்த எக்ஸிபிஷன்லயும் கலந்துகிட்டேன். அதுல எனக்கு செகண்ட் ப்ரைஸ் கிடைச்சது. அப்ப என்கிட்ட ஐந்தாயிரம் பெட்டிகள் வரை இருந்தது.

என் சேகரிப்புக்கு கிடைச்ச முதல் அங்கீகாரம் அது. இதுமாதிரி தீப்பெட்டி சேகரிப்பவர்களை பிலிமினிஸ்ட்னு (phillimenist) சொல்வாங்க. உண்மையை சொல்லணும்னா இந்த பரிசுக்கு அப்புறம்தான் எங்க வீட்ல, நான் குப்பையை சேர்க்கலை... வேற ஏதோ செய்யறேன்னு புரிஞ்சுகிட்டாங்க. இதுக்குப் பிறகு எங்காவது வித்தியாசமான தீப்பெட்டிகள் கிடைச்சா உடனே அதை எடுத்து வந்து என்கிட்ட கொடுக்க ஆரம்பிச்சாங்க.

அப்படித்தான் ஒருமுறை என் அம்மா வழி தாத்தா பாட்டியை பார்க்க தில்லிக்கு போயிருந்தேன். அப்ப என் மாமா ஐந்து நட்சத்திர ஹோட்டலில் இருந்து எனக்காக தீப்பெட்டி அட்டைகளைக் கொண்டு வந்தார். அது பார்க்கவே வித்தியாசமா இருந்தது. பொதுவா தீப்பெட்டி டப்பாக்கள் அட்டைப் பெட்டிலதான் இருக்கும். ஆனா, மாமா கொண்டு வந்து கொடுத்தது பிளாஸ்டிக்குல இருந்தது. அதன் குச்சிகளும் பல நிறங்கள்ல இருந்தது. அன்னிக்கி எனக்குள்ள ஏற்பட்ட சந்தோஷத்தை விவரிக்க இப்ப வரைக்கும் வார்த்தைகள் கிடைக்கல...’’ என்று பரவசப்படும் ரோஹித், தீப்பெட்டிகள் பற்றி விவரிக்கத் தொடங்கினார்.

‘‘இது பழங்காலப் பொருள் இல்ல. 1827லதான் கண்டுபிடிச்சாங்க. 1850க்குப் பிறகுதான் பாதுகாப்பான தீப்பெட்டிகள் அறிமுகப்படுத்தப்பட்டது. வெள்ளை பாஸ்பரஸ்ல இதை தயாரிச்சாங்க. அது ரொம்பவும் ஆபத்தானது. சாதாரணமா பெட்டியை பாக்கெட்ல வைக்க முடியாது. சின்ன இறுக்கம் ஏற்பட்டாலும் குபீர்னு பத்திக்கும். அதனால இதை வைக்கவே ஸ்பெஷலா வெண்கலம் / இரும்புல பெட்டிகள் தயாரிச்சாங்க. இதுக்குள்ளதான் தீப்பெட்டிகள் இருக்கும். பாக்கெட்டா மட்டும் இல்ல... லூஸ்ல கூட தனியா வைக்காம உலோகப் பெட்டிக்குள்ளதான் அடைப்பாங்க.

1845ல ஸ்வீடன் விஞ்ஞானி இதுக்கு மாற்றா பாதுகாப்பான தீப்பெட்டிகளை உருவாக்கினார். இப்ப நாம பயன்படுத்தற எல்லா மேட்ச் பாக்ஸும் பாதுகாப்பானவை. இதுக்கு அப்புறம் மர டப்பாக்கள்ல தீப்பெட்டிகள் வந்தன. ஆனா, சீக்கிரமே இது நொறுங்கிடும். அதனால அட்டை டப்பாவுக்கு மாறினாங்க. சோவியத் ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட தீப்பெட்டிகள் வித்தியாசமா இருக்கும். பாக்கெட் பாக்கெட்டாதான் இது கிடைக்கும். ஒரு பாக்கெட்ல 12 டப்பா இருக்கும். அதுல காரல் மார்க்ஸ், ஏங்கல்ஸ், லெனின் போன்ற தலைவர்களோட படம் இடம்பெற்றிருக்கும். அதுமட்டுமில்ல... புரட்சிகர வாசகங்களையும் அதுல அச்சிட்டிருப்பாங்க.

எல்லா வீட்லயும் தீப்பெட்டி இருக்கும். ஸோ, எப்ப அதை உபயோகப்படுத்த நினைச்சாலும் புரட்சி வாசகங்கள் கண்ணுல படணும்னு நினைச்சாங்க. ஐரோப்பாவுல பல வகைகளை பயன்படுத்தறாங்க. ஒரே பெட்டியை நான்கு பாகங்களா பிரிச்சு அதுல தீக்குச்சிகளை அடுக்கியிருப்பாங்க. சில தீக்குச்சிகள் குறிப்பிட்ட அடுப்புக்காகவே தயாரானவை. இதனோட நீளம், 16 அங்குலம். அதேபோல சிகரெட்டுக்காக நான்கு / ஐந்து அங்குல நீளத்துல தயாரிக்கிறாங்க. நாட்டுக்கு நாடு அட்டைகளும் குச்சிகளோட நீளமும் மாறும். இந்தியாவுல சிவகாசியிலும், கோவில்பட்டியிலும்தான் தீப்பெட்டி தயாராகுது. இங்க குச்சியோட நீளம் ஸ்டாண்டர்ட் சைஸ்.

என் சேகரிப்புல ஓரடி நீளம், ஓரடி அங்குலம் உள்ள சின்ன சைஸ் தீப்பெட்டியும் இருக்கு...’’ என்ற ரோஹித்திடம் பல நாட்டு தீப்பெட்டிகளும் இருக்கின்றன. ‘‘பத்து வருடங்களுக்கு முன்னாடிதான் செல்போன், மெயில் எல்லாம் புழக்கத்துக்கு வந்தது. அதுக்கு முன்னாடி எல்லாவற்றுக்கும் லெட்டர்தான். அதனால பேனா நண்பர்கள் அதிகம் இருந்தாங்க. ஆங்கிலப் பத்திரிகைகள்ல பேனா நண்பர்கள் பத்தின விவரங்கள் வெளியாகும். அதைப் பார்த்துட்டு அவங்களுக்கு நான் கடிதம் எழுதுவேன். அப்படித்தான் பல நாடுகளில் இருந்து நண்பர்கள் கிடைச்சாங்க. என் பொழுதுபோக்கை அவங்க கிட்ட சொன்னதும் தங்கள் நாட்டு தீப்பெட்டி அட்டைகளை எனக்கு அனுப்பினாங்க.

சர்வதேச அளவுல எங்களுக்குன்னு குழுக்கள் இருக்கு. அதுல உறுப்பினரா ஆகி, எக்ஸ்சேன்ஜ் பண்ணிக்கலாம். அபூர்வமான தீப்பெட்டிகளை விலைக்கும் வாங்கலாம். ஒரு டாலர் முதல் இரண்டாயிரம் டாலர் வரை விலை போகும். உருண்டை தீப்பெட்டிகள், முக்கோண தீப்பெட்டிகள்னு பல டிசைன்ஸ் இருக்கு...’’ என்று சொல்லும் ரோஹித், வேலை நிமித்தமாக வெளிநாடுகளுக்குச் செல்லும்போது தீப்பெட்டிகளைத் தேடி கடை கடையாக ஏறி இறங்குவாராம்.

‘‘இந்தியாவுல சாதாரணமா பெட்டிக் கடைகள்ல கூட தீப்பெட்டிகள் கிடைக்கும். ஆனா, சில நாடுகள்ல சில கடைகள்லதான் இதுக்குன்னு ஸ்பெஷலா இடம் ஒதுக்கி இருப்பாங்க. அதனால தேடி அலைந்தால்தான் பெட்டிகள் கிடைக்கும். சில கோயில்கள்ல குருக்கள் / பூசாரி கைல அபூர்வமான தீப்பெட்டி இருக்கும். அதை கேட்டு வாங்குவேன். சிலர் உடனே கொடுத்துடுவாங்க. வேறு சிலர் நம்ம ஆர்வத்தைப் பார்த்துட்டு தனியா ரேட் கேட்பாங்க. சில பெட்டிகளை நூறு ரூபாய் கொடுத்து கூட வாங்கியிருக்கேன். அதுவும் நம்ம இந்தியாவுல!

வெளிநாடுகள்ல தீப்பெட்டி வாங்கினா விமான நிலையத்துல பிரச்னை பண்ணுவாங்க. கைப்பைல எடுத்து வர அனுமதிக்க மாட்டாங்க. அவங்ககிட்ட கெஞ்சி, என்னைப் பத்தி எடுத்துச் சொல்லி அனுமதி வாங்குவேன். இப்படித்தான் 83 ஆயிரம் தீப்பெட்டிகள் வரை சேகரிச்சிருக்கேன். இந்திய அளவுல அதிக எண்ணிக்கைல மேட்ச் பாக்ஸ் கலெக்ட் செய்திருப்பது நான்தான். உலகளவுல இங்கிலாந்தைச் சேர்ந்த ஒருத்தர் ஒரு மில்லியன் தீப்பெட்டி அட்டைகளை சேகரிச்சிருக்கார். அவரோட சாதனையை முறியடிக்கணும். அதுதான் லட்சியம்...’’ என்கிறார் ரோஹித் காஷ்யாப்.

- ப்ரியா