ஹரஹர மஹாதேவகி வெறும் டிரெயிலர்தான்... இதுதான் மெயின் பிக்சர்!



இருட்டு அறையில் முரட்டு குத்துகலாட்டா

‘‘முதல் படத்துலயே அடல்ட் காமெடியை எடுத்துட்டோமேனு எப்பவும் ஃபீல் பண்ணினதில்ல. பதினெட்டு வயசுக்கு மேற்பட்ட எல்லாருக்கும் பிடிக்கும் படமா ‘ஹரஹர மஹாதேவகி’ இருக்கணும்னு நினைச்சேன். எதிர்பார்த்த மாதிரியே நல்ல ரெஸ்பான்ஸ். படம் பார்த்துட்டு நிறைய பேர் வாழ்த்தினாங்க. ‘ஆபாசமில்லாத அடல்ட் காமெடியா இருந்தது. பெண்களும் ரசிக்கும்படி இருந்துச்சு. இடைவேளைக்குப் பிறகுதான் அடல்ட் போர்ஷன் வந்திருந்தது. அதை இன்னும் அதிகப்படுத்தி இருக்கலாம்’னு விமர்சனம் வந்தது!

இதை கருத்தில் கொண்டுதான் இப்ப ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ எடுக்கறோம்!’’ வெளிப்படையாகப் பேசுகிறார் இயக்குநர் சன்தோஷ் பி.ஜெயக்குமார். இப்பட ரிலீஸுக்கு முன்பே, மூன்றாவதாக ஆர்யாவை வைத்து இவர் இயக்கி வரும் ‘கஜினிகாந்த்’தின் படப்பிடிப்பையும் தொடங்கிவிட்டார். ‘‘ஆக, அடல்ட் கன்டன்ட்டைப் பொறுத்தவரை ‘ஹரஹர...’ வெறும் டிரெயிலர்தான். ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’தான் மெயின் பிக்சர்! இது அடல்ட் ஹாரர் காமெடி. டைட்டில்ல இருந்து எண்ட் கார்டு வரை நீங்க எதிர்பார்க்கற சரக்கை நிறைய வச்சிருக்கோம்....’’ எனர்ஜி பொங்க பேசுகிறார் சன்தோஷ் பி.ஜெயக்குமார்.

‘இருட்டு அறையில் முரட்டு குத்து’, என்ன அர்த்தம்?
பளிச்சினு புரியற மாதிரிதானே டைட்டில் இருக்கு? அப்புறம் மீனிங் கேட்டா எப்படி பிரதர்? ஃபேமிலி ஆடியன்ஸை கவர்ந்து இழுக்கற மாதிரி மங்களகரமா டைட்டில் வைச்சுட்டு, உள்ள அடல்ட் மூவியா பண்ணியிருந்தா அது தப்பு. நான் அப்படி பண்ணல. அப்படி செய்யவும் மாட்டேன். இது அடல்ட் ஹாரர் மூவினு நேரடியா புரியற மாதிரியே டைட்டில் வச்சிருக்கேன்.

கதைக்கு பொருந்தற தலைப்புதான். நீங்களா வேற அர்த்தம் கற்பிச்சா அதுக்கு நான் பொறுப்பில்ல!  நம்மூர்ல ஃபேமிலி ஆடியன்ஸுக்கான படங்கள் வாரத்துக்கு நாலு வருது. குழந்தைகளோடு குடும்பமா படம் பார்க்க நினைக்கறவங்க அந்தப் படங்களைப் பார்க்கட்டும். சென்சாருக்கு முன்னாடியே சொல்லிடறேன். ‘இ அ மு கு’ பக்கா ‘ஏ’ சர்டிபிகேட் படம். அந்த ஆடியன்ஸ் மட்டும் தியேட்டருக்கு வந்தா போதும்.

இங்க பேய் படம்னா ஒரு ஃபார்முலா இருக்கு. அடர்ந்த காடு, ஒத்தையடிப் பாதை, அதுல ஒரு பங்களா, அதில் ஒரு பேய். பங்களாவில் கொடூரமான லுக்ல வேலைக்காரங்க, அந்த பங்களாவைத் தேடி வரும் நாலு பேர், பேய்க்கு ஒரு ஃப்ளாஷ் பேக்னு... எல்லாம் ஒரே மாதிரியா இருக்கும். ஆனா, ‘இருட்டு அறையில்...’ அப்படியில்ல. புது ஃபார்முலா ட்ரை பண்ணியிருக்கோம். எங்க பேய்க்கு ஃப்ளாஷ்பேக்கே கிடையாது.

‘பேய்க்கிட்ட மாட்டிக்கிட்டா என்னஆகுமோ, அதை காமெடி ஹாரரா சொல்லியிருக்கோம். ‘ஹர ஹர’ போஸ்ட் புரொக்‌டக்‌ஷன் நடக்கும்போதே இந்தப் படம் முடிவாகிடுச்சு. அப்பவே இதோட ஷூட்டிங் ஷெட்யூலை திட்டமிட ஆரம்பிச்சிட்டோம். மத்தபடி மெசேஜ் சொல்றது பிடிக்காத விஷயம். தயவு செஞ்சு என் படங்கள்ல மெசேஜ் எதிர்பார்க்காதீங்க. ஜாலியா வாங்க. சந்தோஷமா வாங்க.

முதல் பட டீம்தான் இதிலுமா?
கொஞ்சம் கொஞ்சம் மாத்தியிருக்கோம். ஹீரோ கவுதம் கார்த்திக்தான். ஹீரோயின்கள் வேற. வைபவி சாண்டில்யா, யாஷிகா. இவங்க தவிர ‘டெம்பிள் மங்கீஸ்’ சரா, ஜான் விஜய், மொட்டை ராஜேந்திரன், பாலசரவணன், கருணாகரன்னு கலகல ஆர்ட்டிஸ்ட்கள் நிறைய பேர் இருக்காங்க. ஒளிப்பதிவை பல்லு கவனிக்கறார். இந்தப் படத்தை 22 நாட்கள்ல முடிச்சதுல அவரோட பங்கும் அதிகம். அடுத்து இயக்கி வரும் ‘கஜினிகாந்த்’துக்கும் அவர்தான் கேமராமேன்.

‘ஹரஹர...’ பாலமுரளி பாலு, இதிலும் இசையமைக்கிறார். என் முதல் படத்துக்கு தயாரிப்பாளர் கிடைக்கறதுக்கு முன்னாடியே சம்பளம் வாங்காம பாடல்கள் ரெடி பண்ணிக் கொடுத்தவர் அவர். இந்தப் படத்தையும், அடுத்த படமான ‘கஜினிகாந்த்’தையும் தயாரிப்பவர் ஞானவேல்ராஜா சார்தான். அவர் தயாரிப்பாளர்னு சொல்றதை விட, என் நண்பர்னு சொல்லலாம். அப்படி ஒரு கெமிஸ்ட்ரி எங்களுக்குள்ள இருக்கு.

உங்களுக்கும் கவுதம் கார்த்திக்கும் கூட செம கெமிஸ்ட்ரி செட் ஆகிடுச்சு போல..?
யெஸ்... யெஸ்.! என் முதல் படத்தின் மேல நம்பிக்கை வச்சவர் கவுதம். இதுல நாங்க இன்னும் நெருங்கிட்டோம். இந்தப் படத்துல அவருக்குனு இல்ல... யாருக்குமே எந்த கேரக்டரைசேஷனும் இல்ல. அப்படி ஒரு சப்ஜெக்ட் இது! கவுதம் இப்ப டான்ஸ்லயும் கலக்கறார். டைமுக்கு ஸ்பாட்டுக்கு வர்றார். நிச்சயம் அவர் பெரிய ஆளா வருவார். இந்தப் படத்தோட ரெண்டாவது பாதில மொட்டை ராஜேந்திரன் காமெடி பின்னியெடுக்கும்.

நிக்கி கல்ரானி இதுல நடிக்க மாட்டேன்னு சொல்லிட்டாங்களாமே?
ஒண்ணு தெரியுமா? இந்தப் படத்துல நடிக்கிறீங்களானு நாங்க நிக்கிகிட்ட கேட்கவே இல்ல. நிச்சயம் அவங்க அப்படி சொல்லியிருக்க மாட்டாங்க. நிக்கிக்கான ஸ்கோப் இதுல இல்ல. அவங்களுக்கான படம் அமையும்போது மறுபடியும் நிக்கி நடிக்கலாம். இதுல ‘சக்கப் போடு போடு ராஜா’ வைபவி சாண்டில்யா நடிச்சிருக்காங்க. தமிழ் சினிமா லவ்வர் அவர். இங்க தொடர்ந்து படங்கள் பண்ணும் ஆர்வத்துல இருக்கார். அதனாலயே தமிழ் கத்துக்கிட்டு வர்றார்.

நீங்க எஸ்.ஜே.சூர்யா அசிஸ்டென்ட்டாக இருப்பீங்க போலிருக்கே..?
இல்ல! நான் ‘எங்கேயும் எப்போதும்’ சரவணன் சார் ஸ்கூல்ல இருந்து வந்தவன். எங்க அப்பா சி.பி.ஜெய், பல வருஷங்களா சினிமால புரொடக்‌ஷன் எக்ஸிக்யூட்டிவ்வா இருந்தவர். சினிமா சூழல்லதான் வளர்ந்தேன். என்ஜினியரிங்  முடிச்சிட்டு சரவணன் சார்கிட்ட ‘இவன் வேற மாதிரி’ல ஒர்க் பண்ணினேன். அப்புறம்தான் ‘ஹரஹர..’ இயக்கினேன்.

எப்படி வந்திருக்கு ‘கஜினிகாந்த்’?
கிட்டத்தட்ட மொத்த ஷூட்டிங்கையும் பொங்கலுக்கு முன்னாடியே முடிச்சிடுவோம். பொங்கலுக்கு ‘கஜினிகாந்த்’ டீசர் கொண்டு வர்றோம். இப்படி ஒரு டைட்டில் ஏன் வச்சோம்னு டீசர்ல தெரிஞ்சிடும். இந்தப் படத்துல ஆர்யா வந்ததே ஒரு மேஜிக். ஆர்யா தவிர ‘வனமகன்’ சாயிஷா சைகல், சதீஷ், கருணாகரன்னு நிறைய பேர் இருக்காங்க. ‘இருட்டு அறையில்...’ டெக்னிகல் டீமே இதிலும் ஒர்க் பண்றாங்க.                    

- மை.பாரதிராஜா