நாங்கள் ஆதிவாசிகளல்ல... அறிவியல் விஞ்ஞானிகள்..!தமிழகத்துக்குப் பெருமை சேர்க்கும் பர்கூர் மலை மாணவர்கள்!

‘‘ஆதிவாசினா பனங்காட்டுல ஆடு, மாடு மேய்ச்சிட்டும், குளம், குட்டைல மீன் பிடிச்சிட்டும், ஸ்கூலுக்குப் போகாம காடு, மலையில சுத்திட்டும் இருப்பாங்கன்னு நினைச்சீங்களா? சரியான வாய்ப்பு கிடைச்சா போதும், ஆடு மேய்க்கறதிலிருந்து அறிவியல் ஆராய்ச்சிகள் வரைக்கும் புகுந்து பட்டையைக் கிளப்புவோம்..!’’ கட்டை விரலை உயர்த்திக் காட்டி, சாதித்துவிட்ட பெருமிதத்துடன் பேசுகிறார் ‘இளம் விஞ்ஞானி’ சின்னக்கண்ணன்.

ஈரோடு மாவட்டத்திலுள்ள பர்கூர் மலைப்பகுதியில் வீற்றிருக்கும் கொங்காடை கிராமத்தைச் சேர்ந்த இவரின் ஆய்வுக் கட்டுரையான ‘மலைப்பகுதிகளில் போக்குவரத்து வசதியின்மையால் ஏற்படும் ஆற்றல் இழப்பு’ இக்கால கல்விச்சூழலில் பெரும் அதிர்வை கிளப்பியுள்ளது. கடந்த டிசம்பர் மாதம் குஜராத்தில் நடந்த தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் தமிழகத்தைச் சேர்ந்த சின்னக்கண்ணன் உட்பட 30 மாணவர்கள் தங்களின் ஆய்வுக் கட்டுரைக்காக ‘இளம் விஞ்ஞானி’ பட்டத்தைப் பெற்றிருக்கின்றனர்.

மட்டுமல்ல, வரும் மார்ச் மாதம் மணிப்பூரில் இந்திய விஞ்ஞானிகள் மாநாடு நடைபெறவுள்ளது. இதில் குடியரசுத்தலைவர், பிரதமர், உலக விஞ்ஞானிகள் என பலரும் கலந்து கொள்கின்றனர். இந்த மாநாட்டுக்கு தமிழகத்தைச் சேர்ந்த இளம் விஞ்ஞானிகள் இரண்டு பேரின் கட்டுரைகள் தேர்வுசெய்யப்பட்டுள்ளன. அந்த இருவரில் சின்னக்கண்ணனும் ஒருவர். இப்போது கொங்காடையில் ‘சுடர்’ அமைப்பு நடத்திவரும் மத்திய அரசின் தேசிய குழந்தைத் தொழிலாளர் சிறப்புப் பள்ளியில் சின்னக்கண்ணன் ஏழாவது படித்துக் கொண்டிருக்கிறார்.

இதற்குமுன் பர்கூர் மலைப்பகுதியைச் சேர்ந்த கணேசனும் (2012), கவினும் (2013) தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் பங்கேற்று ‘இளம் விஞ்ஞானி’ பட்டத்தைப் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. ‘‘அப்பாவும், அம்மாவும் கூலி வேலை செய்றாங்க. தினமும் ரெண்டு கிலோ மீட்டர் தூரம் நடந்தே ஸ்கூலுக்குப் போவேன். எங்க கிராமத்திலிருந்து வெளில போறதுக்கு டெம்போவை விட்டா வேற வழியில்ல. அதுல போகணும்னா காசு அதிகம். அதனால எங்க கிராம மக்கள் ரொம்பவே கஷ்டப்படுறாங்க.

இதை உலகத்துக்குச் சொல்லணும்னு தோணுச்சு. அதனாலதான் எங்க மலைப்பகுதியில போக்குவரத்து வசதி இல்லாததால ஏற்படுற ஆற்றல் இழப்புகளை ஆய்வு செஞ்சோம். இதுக்கு என்னோட படிக்கும் கார்த்திக், நாகராஜ், ராஜ்குமாரும் உறுதுணையா இருந்தாங்க. ஆசிரியர் நித்தியானந்தன் சார் வழிகாட்டினார்...’’ என்கிற சின்னக்கண்ணன் தனது ஆய்வை விவரித்தார். ‘‘எங்க மக்கள் மளிகைச் சாமான்கள் வாங்கறதுல இருந்து ஆஸ்பிட்டல், பேங்க்னு சகலத்துக்கும் 60 கி.மீ தூரத்திலுள்ள அந்தியூருக்குத்தான் போயாகணும். டெம்போவுல போயிட்டு வர ஒரு ஆளுக்கு (ரூ.50 X 2) 100 ரூபா செலவாகும்.

ஒரு வாரத்துக்கு 1940 பேர் போயிட்டு வர்றாங்க. ஒரு மாசத்துக்கு (1940 X 4) 7,760 பேர். ஒரு ஆளுக்கு போக்குவரத்துச் செலவு 100 ரூபானா, மாசத்துக்கு ரூ,7,76,000. இங்க வேலை செய்யறவங்க, அப்புறம் ஆசிரியர்களுக்கு எல்லாம் ஜீப், வேன்களுக்கு மட்டும் மாசம் ரூ.3 ஆயிரம் செலவழிக்கறாங்க. இப்படி இருக்கிறவங்க 32 பேர். அப்படின்னா மாசத்துக்கு ரூ.96,000. ஆக, மொத்தமா ஒரு மாசத்துக்கு ரூ.8,72,000. ஒரு வருசத்துக்கு ஒரு கோடியே நாலு லட்சத்து அறுபத்தி நாலாயிரம் ரூபா (1,04,64,000) போக்குவரத்துக்கு மட்டும் செலவாகுது.

இந்தப் பாதைல பஸ் விட்டிருந்தா இதுல 40 சதவீதம்தான் செலவாகும். எங்க மக்களோட சம்பளம் ரொம்ப குறைவு. அந்த சொற்ப வருமானத்துல கூட வருசத்துக்கு சுமார் 60 லட்ச ரூபா விரயமாகுது. இப்படி செலவழிச்சும் சரியான நேரத்துல எங்கயும் போக முடியாது. வீட்டுக்குத் திரும்பவும் முடியாது. கொங்காடை பகுதில ஒரு நடுநிலைப்பள்ளிதான் இருக்கு. போக்குவரத்து வசதி இல்லாததால இங்கிருக்கிற குழந்தைகளோட படிப்பு எட்டாம் வகுப்போட நின்னு போகுது. ஒன்பதாவது படிக்க 15 கி.மீ தூரத்துல இருக்குற ஒசூருக்கு நடந்துதான் போகணும்.

பதினொண்ணாம் வகுப்புனா 60 கி.மீ தூரம் போகணும். இதனாலயே யாரும் மேல்படிப்பு படிக்க முடியல. வேற வழியில்லாம குழந்தைத் தொழிலாளர்களா மாறிடறாங்க. பெண் குழந்தைங்களுக்கு சின்ன வயசுலயே கல்யாணம் செஞ்சு வைச்சிடறாங்க. எங்க கணக்கெடுப்புல கடந்த மூணு வருஷத்துல 50 பேரோட படிப்பு போக்குவரத்து வசதியில்லாததால தடைப்பட்டிருக்கு. இன்னொண்ணு  தெரியுமா? நாற்பது ரூபா மின் கட்டணம் செலுத்த 100 ரூபா செலவு செஞ்சு அந்தியூருக்குப் போகணும். இதெல்லாம் நாங்க செஞ்ச ஆய்வுல கிடைச்ச தகவல்கள். இதைத்தான் கட்டுரையா சமர்ப்பிச்சோம்...’’ என்கிற சின்னக்கண்ணன், ‘‘கொங்காடை மலைப்பகுதிக்கு உடனடியா பேருந்து வசதியை அரசு செய்து தரணும்...’’ என்ற கோரிக்கையோடு விடைபெற்றார்.

கொங்காடை மட்டுமின்றி, ஜீயன்தொட்டி, கெட்டிப்போடு, போரேதொட்டி, சுண்டைப்போடு, அக்னிபாவி, கோயில்நத்தம் ஆகிய கிராமங்களில் இந்த ஆய்வினை மூன்று மாதங்களாகச் செய்திருக்கின்றனர். ‘‘பொதுவா வகுப்பறையைத் தாண்டி மாணவர்கள் கற்க நிறைய விஷயங்கள் இருக்குனு சொல்றோம். ஆனா, நம்ம கல்வி முறைல அதுக்கான தளம் எங்கயும் இல்ல. வகுப்பறையை விட்டு மாணவர்களை கொஞ்ச தூரம் கூட்டிட்டுப் போகணும்னா கூட அந்த பர்மிஷன், இந்த பர்மிஷன், சி.இ.ஓ பர்மிஷன்னு ஏகப்பட்ட கெடுபிடிகள் இருக்கு.

இதுக்கு மத்திலதான் எங்க மாணவர்கள் மூணு மாசமா இந்த ஆய்வை செஞ்சாங்க. இந்த மூணு மாசமும் வகுப்பறைக்கே போகாம சமூகத்துல இருக்குற நிறைய விஷயங்களை கத்துக்கிட்டாங்க. பொதுவா நகர்ப்புறத்துப் பள்ளி மாணவர்கள்தான் அறிவியல் மாநாட்டுல பங்கெடுப்பாங்க. மலைப்பகுதி மாணவர்கள் இதுல கலந்துக்கறதும் மாநாட்டுக்காக சென்னை, குஜராத் போவதும் அவங்களுக்கு பெரிய தன்னம்பிக்கையைக் கொடுத்திருக்கு. சமூகப் பிரச்னைகளுக்குத் தீர்வு சொல்லக்கூடிய திறன் இந்த மாணவர்களோட இயல்புலயே இருக்கு. அவங்க வாழ்க்கைமுறை அதை கத்துக் கொடுத்திருக்கு. மற்ற மாணவர்கள் மாதிரி இவங்களுக்கு வாய்ப்பு கொடுத்தா போதும். வேற எதுவும் செய்ய வேண்டாம்...’’ அழுத்தமாக முடித்தார் ‘சுடர்’ அமைப்பின் இயக்குனர் எஸ்.சி.நடராஜ்.               

- த.சக்திவேல்

கணேசன்
குடும்பச் சூழலால் இரண்டாம் வகுப்பிலேயே இடைநின்ற மாணவர், கணேசன். சிலவருடங்களுக்குப் பிறகு ஆறாம் வகுப்பில் சேர்ந்து ‘காடுகளைப் பாதுகாப்பது’ குறித்த ஆய்வை மேற்கொண்டார். ‘பர்கூர் மலைப்பகுதியில் யார் வீட்டிலும் கேஸ் கனெக்‌ஷன் இல்லை. அதனால் மக்கள் மரங்களை வெட்டி அதை சமையலுக்குப் பயன்படுத்துகிறார்கள். பயோகேஸ் கனெக்‌ஷனை கொடுத்தால் மரம் வெட்டப்படுவது தடுக்கப்படும்.

வனப்பரப்பு விரிவடையும். உலக வெப்பமயமாதல் குறையும். மக்களின் ஆற்றலும் சேமிக்கப்படும்...’ என்பது கணேசன் மேற்கொண்ட ஆய்வின் சாராம்சம். 2015ம் ஆண்டு வனத்துறை பர்கூர் மலைப்பகுதியில் உள்ள 1000 வீடுகளுக்கு கேஸ் கனெக்‌ஷன் கொடுத்திருக்கிறது. இது இந்த கணேசன் செய்த ஆய்விற்குக் கிடைத்த வெற்றி. இப்போது இவர் அந்தியூரில் பதினொன்றாவது படித்து வருகிறார்.

கவின்
‘குழந்தைத் திருமணங்களால் ஏற்படும் ஆற்றல் இழப்பு’ குறித்த ஆய்வு இவருடையது. ‘ஒரு மனிதன் 60 வருடங்கள் வாழ்ந்தால் எவ்வளவு பணம் ஈட்டுவான், அவனின் உழைப்பு சமூக வளர்ச்சிக்கு எந்தளவுக்கு முக்கியமானது, பத்து வயதிலேயே திருமணமாகி குழந்தைப் பேறின்போது தாயும், சேயும் இறந்துவிட்டால் என்ன மாதிரியான ஆற்றல் இழப்பு நேரிடும்’ என்பது இந்த இளம் விஞ்ஞானியோட ஆய்வின் சாராம்சம்.