பெண் தெய்வங்கள் இருக்கிற இந்தியாவுல தான் பெண்களுக்கு பாதுகாப்பில்லை!



‘‘நல்ல படங்களை ஜனங்கள் ஒதுக்கியதில்லை. அவர்களின் ரசனையைக் குறைத்து மதிப்பிடுவது சரியாகாது. அவங்க ஒரு படத்தை ரசிக்கிறதுக்கும், ரசிக்காததுக்கும் நியாயமான காரணங்கள் இருக்கும். நாம்தான் அவங்களை பெரிய திறனாய்வாளர்கள் மாதிரி ஏ, பி, சின்னு பிரிச்சி வச்சிருக்கோம். என்னைப் பொறுத்தவரை சென்னையில கை தட்டின சீனுக்குத்தான் திருநெல்வேலியிலும் கைதட்டு றாங்க. ஆக, ரசனை பொதுவானது. அந்த ரசனைக்கு ஏற்றமாதிரிதான் நான் ‘ஆருத்ரா’ பண்றேன். நிச்சயம் மக்களை ஏமாற்றமாட்டேன்...’’ தெளிவாகப் பேசுகிறார் இயக்குநர் பா.விஜய்.

‘ஆருத்ரா’ எப்படியிருக்கும்?
இது ஒரு க்ரைம் எமோஷனல் த்ரில்லர். நான் இயக்கிய முதல் படமான ‘ஸ்ட்ராபெரி’யில் பள்ளிக் குழந்தைகளுக்கு  இருக்கிற வசதிக் குறைவை, பள்ளி நிர்வாகம் காட்டுகிற அலட்சியத்தைச் சொன்னேன். அது பேய்க்கதையாகவும் அமைந்தது. ‘ஆருத்ரா’வில் பெண்களுக்கு கொஞ்சமும் பாதுகாப்பு இல்லாத சூழ்நிலையைச் சொல்லியிருக்கேன். ஒரு கணக்கெடுப்பில் கிடைக்கிற விஷயம் என்னை ஆச்சர்யப்படுத்தியது. இந்தியாவில் மட்டும் 3500 பெண் தெய்வங்கள் வழிபடப்படுகிறது. அனுதினமும் இந்த தெய்வங்களை தரிசிக்க கூடும் கூட்டமும், பிரார்த்தனையும் கோயில் எங்கும் நிரம்பி வழிகிறது.

ஆனால், அதே தேசத்தில் பெண் குழந்தைகளுக்குக் கிடைக்கிற பாதுகாப்பு பெரும் கேள்விக்குறியாக இருக்கு. நாகரிகம் மேம்பட்டதாக சொல்லப்படுகிற இந்த நூற்றாண்டிலும் துளியளவு கூட பெண்களுக்கான பாதுகாப்பு உறுதி செய்யப்படவில்லை. இதையும் படத்தின் ஒரு முக்கிய விஷயமாக கருத்தில் கொண்டிருக்கிறேன். ஆனால், படம் மொத்தமும் அதற்கான விஷயமாக இல்லாமல் இன்னும் கமர்ஷியலாக வெளிப்படுத்தி இருக்கேன். இரண்டு மணி நேரப் படத்தில் நிச்சயம் ஒரு செய்தி சொல்லணும்னு நினைப்பேன். இன்னும் பத்து, இருபது வருஷங்கள் கழிச்சுப் பார்த்தாலும் ‘அடடா, நம்ம பா.விஜய் இதைச் சொல்ல விரும்பியிருக்கான்’னு மக்கள் நினைக்கணும்.

இந்தச் சமூகத்தில் எந்த விஷயத்தை எடுத்துக்கிட்டாலும் அதைப் பற்றிய ஒரு கருத்து இருக்கு. ஒரு செய்தியின் ஆரம்ப அதிர்ச்சி அடுத்தநாள்கூட நிற்கமாட்டேங்கிது. அம்மாவை தெய்வமாகப் போற்றுகிற நாட்டில் பெண்களுக்கு ஒரு நிச்சயம் இல்லாத நிலைமை இருக்கு. நாம் எந்த விஷயத்தையும் மனதில் ரொம்ப நாள் பாதிக்க விடுவதில்லை. அது மாதிரி ஒரு தவிர்க்க முடியாத விஷயம் ஒன்றைச் சொல்றேன்.

மறுபடியும் ஹீரோ...
ஆமாம். இதில் தொன்மை பொருட்களைச் சேகரிப்பவனாக வர்றேன். இரண்டு கெட்அப் சேன்ஞ் இருக்கு. அதற்கான மெனக்கெடல்கள், தயாரிப்பதற்கான வேலைகள்னு காலம் பறந்துகிட்டு இருக்கு. இதில் விக்னேஷ் வெகு முக்கியமான கேரக்டரில் வருகிறார். ‘பருத்திவீரன்’ சரவணன் மாதிரியான ஆக்டிவ்வான கேரக்டர். படத்தில் சில பிரச்னைகளில் உள் நுழைந்தபிறகு, எனக்கு வரும் சோதனைகள், பயங்கள், பின் தொடர்கிற சிக்கல்கள்னு படம் போகும்.

இந்தப் படத்திற்காக லொகேஷன் ராஜஸ்தான், குளுமணாலி, ஆலப்புழை, கும்பகோணம், பொள்ளாச்சி, பாண்டிச்சேரின்னு தொடர்ந்து சென்னைக்கு வந்து நின்னது. ஆக, இது பெரும்பயணம். படத்தில் அதற்கான இடங்கள் நிறைய இருக்கு. இடங்களின் அழகும், தேவையும் த்ரில்லரில் கிடைக்கிற அமானுஷ்யமும் அவ்வளவு அருமையா வந்திருக்கு. இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் ஒரு மிக முக்கியமான கேரக்டரில் வருகிறார். மீரா கதிரவன், மயில்சாமி படத்தில் சொல்லும்படியான ரோலில் இருக்காங்க. படத்தில் 40 நிமிட கிராபிஃக்ஸ் நிறைய பேசப்படும். நிறைய புதுமைகளோடு எடுக்கிறோம் என்பதற்காக ெசலவில் கை வைக்கவில்லை.

ஹீரோயின்ஸ் நிறையப் பேர் இருக்காங்க...
ஆனால், எனக்கு படத்தில் நேரிடையான ரொமான்ஸ் எதுவும் கிடையாது. தக்‌ஷிதா என்கிற புதுமுகம் க்ரைம் பத்திரிகையாளராக நடிக்கிறார். மேகாலி கிராமத்துப் பொண்ணாக வர்றாங்க. சோனி போலீஸ் எஸ்.பி.யாக களைகட்டுறாங்க. மூவருக்கும் சரிசமமாக இடங்கள் இருக்கு. பாக்யராஜ், ‘நான் கடவுள்’ ராஜேந்திரன் என இரண்டு பேரும் வருகிற இடங்கள் ரொம்பவும் ரிலாக்ஸ் தருபவை. நீதி சொல்றது நம்மோட வேலை கிடையாது. ஆனால், இதுதான் விஷயம், இப்படி இருக்கு, பார்த்துக்கங்கன்னு சில விஷயங்களை சொல்லியிருக்கோம். துளி மிகையோ, பொய்யோ இல்லாத படமாகப் பார்த்து ெசய்திருக்கேன். அழகா ரசனையா மொத்தக் குடும்பமும் உட்கார்ந்து பார்க்க ஒரு ட்ரீட்தான் ‘ஆருத்ரா.’

நீங்கள் பாடலாசிரியராக இருக்க இசை எப்படி வந்திருக்கு?
வித்யாசாகர் அருமையாக படத்தை தக்க வைச்சிருக்கார். அவர் உள்ளே களம் இறங்கி விளையாட இந்த திரில்லரில் நிறைய இடங்கள் கொடுத்திருக்கேன். ‘இளைஞனை’ ஒளிப்பதிவு செய்த சஞ்சய்தான் இதற்கும் கேமரா. இந்த சினிமாவை நேசிச்சு வந்திருக்கேன். பாடல்கள் எழுதும்போது ஒரு நாளைக்கு இரண்டு பாடல்கள் என்பதெல்லாம் சாதாரணமா இருக்கும். முத்துக்குமாரும், நானும் அடுத்தடுத்து எழுதிக்கிட்டே இருப்போம்.

இயக்குநராக நம்மால் சிறப்பாக ெசய்ய முடியும் என்ற நம்பிக்கை வந்தபிறகுதான் இதில் இறங்கினேன். இப்பவும் என் நெருங்கிய நண்பர்களுக்காக பாடல்கள் எழுதிக்கொண்டேதான் இருக்கிறேன். அது என் உடலின் ஒரு பாதி. சினிமாவில் இருக்கணும் என்பது என் தீராத கனவு. அந்த வகையில் எனக்கு நல்ல பெயர் சொல்லும்படியாக இந்த ‘ஆருத்ரா’ இருக்கும். நிச்சயம் இந்தப் படத்தில் எனக்குள்ளிருக்கும் கலைஞன் வெளிப்படுவான்.

- நா.கதிர்வேலன்