சத்யா



பூகம்பம் கிளப்பிய காதலியின் துயரம் களைய புறப்பட்டு வந்து எதிரியை வீழ்த்துபவனே ‘சத்யா’.சிட்னியில் சந்தோஷமாக இருக்கிறார்கள் சிபிராஜும், யோகிபாபுவும். உற்சாகத்தோடு கடக்கிற நாட்களில் தன் பழைய காதலி ரம்யா நம்பீசனிடமிருந்து ஒரு போன் வருகிறது. தன் காணாமல் போன குழந்தையை மீட்டெடுத்து தரச் சொல்லி கண்ணீர் வடிக்கிறாள். ஊருக்குத் திரும்புகிறார் சிபி. காதலியைச் சந்தித்து கேட்டால், அவர் சொல்கிற விபரங்களும், நடப்பிற்கும் தொடர்பே இல்லாமல் இருக்கிறது. காதலிக்கு அடிபட்டதால் ‘எல்லாமே அவருக்கு கனவு மாதிரி தெரிகிறது. அவர் சொல்வது எதுவும் உண்மையில்லை’ என சிபி சந்திக்கிற அத்தனை பேரும் சொல்கிறார்கள்.

துப்பறியத் தொடங்குகிறார். விளைவாக அவர் கண்டு உணர்ந்த, கண்டுபிடித்தவைகளை சற்றே திகிலுடன் கொண்டு செல்வதே திக் திக் கிளைமாக்ஸ். காதலியின் துயர் துடைக்கும் இளைஞனாக சிபிராஜ் பெர்ஃபெக்ட் ஃபிட். இறுக்க முகமும், முழுக்க தாடியும், எப்போதாவது புன்னகையை உதிர்ப்பதுமாக புது சிபி. இதே பெர்ஃபெக்‌ஷனை தொடர்ந்து காட்டினால் இன்னும் உயரம் தொடுவது உறுதி. கொஞ்சம் கொஞ்சமாக உண்மைகளை விசாரித்து அறியும்போது அனல் சிபி!

பயத்தில் அலறுவதிலும், தான் சொல்லியவற்றை நம்பாது கேள்விகள் கேட்கும்போது தரும் பதட்டத்திலும் ரம்யா நம்பீசன்... ஆஹா! சிபியும், ரம்யாவின் காதல் எபிஸோடும் அடுத்தடுத்து விரையும் த்ரில்லர் பயத்திற்கு முன்னால் கலகலப்பு. அவர்களின் அந்தக் கிறக்கம், இவை போக பலப்பல சூடு பறக்கும் நெருக்கம் அழகு கொஞ்சுகிறது! படம் முழுக்க சோகம், காதல், டென்ஷன், நெகிழ்ச்சி என டோன் மாற்றும் இடங்களில் வசனம் சிறப்பாக ஒத்துழைக்கிறது. வசனக்காரர் கார்த்திக் கிருஷ்ணா சிறப்பு.

வலை விரித்து திகில் பரப்பிய வகையில் இயக்குநர் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி பாராட்டுக்குரியவர். கடைசியில் காணாமல் போன குழந்தை இருக்கிறதா? இல்லையா? என்று சொல்லிவிடுங்களேன் என்று வாயெடுக்கிற அவசரம் வரை த்ரில்லில் அசர அடிக்கிறது கூட்டணி. பாடல்களிலும், மிரட்டும் பின்னணியிலும் படத்தின் ஆன்மாவைச் சுமந்திருக்கிறது சைமன் கே.கிங்கின் கைவரிசை. சிட்னியின் விரைவு காட்சிகள், பரபரக்கும் மர்ம விவரங்கள், சிபியின் தெறிக்கும் வேகம் என நிலவரத்தின் கலவரத்தை பார்வையாளர்களுக்கு அப்படியே கடத்துகிறது அருண்மணி பழனியின் கேமரா. கொஞ்ச நேரமே வந்தாலும் வரலட்சுமி சரத் திருப்பம் தந்து, திருப்தியும் தருகிறார்.

முன்பின் பாதிகளில் அலுப்புத்தட்டும் கூறியது கூறலுக்கு பலமாக கத்திரி வைத்திருந்தால் இன்னும் சுவாரஸ்யத்திற்கு கேரண்டி. அதனால் சீக்கிரம் ‘கிளைமேக்ஸுக்கு வாங்கப்பா...’ என ஸ்டேட்டஸ் போடவைக்கிறது. துப்பாக்கியை எடுத்து விசையை அழுத்தும்போதே உடனே வெடித்திருக்க வேண்டாமா? க்ளிஷேக்களை அடுக்காமல் விட்டதற்கே இயக்குநருக்கு வந்தனம். சிபியின் புதுத் துடிப்பும் இயக்குநரின் ‘நீட்’ த்ரில்லும் ரசிக்க வைக்கிறது.
 

- குங்குமம் விமர்சனக்குழு