பால்ய பொழுதொன்றில்...



செழியனுக்கு இரவு நித்திரையே வரவில்லை. அதிகாலையிலேயே எழுந்து காலைக்கடன்களை முடித்து சாப்பிடாமலேயே சைக்கிளைப் பார்க்க ஓடினான். சேகரம் அவனை மதியத்துக்குப் பின்னரே வரச்சொல்லி இருந்தார். ஆனாலும் பொறுமையாக இருக்க முடியவில்லை. கடை திறக்கவில்லை என்பதால் வீட்டுக்கு வந்து காலை உணவைச் சாப்பிட்டுவிட்டு மீண்டும் ஓடினான். ரிம்முக்கு அன்டிகுரோஸ் அடிக்கப்படுவது முதல் போல்ஸ் உட்பட சகலத்துக்கும் கிரீஸ் வடிவாக வைக்கப்படுகிறதா என்பது வரை எல்லாவற்றையும் கவனித்தபடியே இருந்தான். இடையில ட்யூஷனுக்கு போய்விட்டு வந்தான். மதியமாகியும் வேலை முடியவில்லை. வீட்டுக்குச் சென்று மத்தியான சாப்பாட்டையும் முடித்துக் கொண்டு மீண்டும் வந்திருந்து சைக்கிள் பூட்டப்படுவதை பார்த்துக்கொண்டிருந்தான்.

ஒருவாறாக மாலை ஆறரை போல எல்லா வேலைகளையும் முடித்து ஒருதரம் ஓட்டிப் பார்த்துவிட்டு வந்து செழியனின் கையில் சைக்கிளைக் கொடுத்தார் சேகரம் அண்ணா. சிறிதுநேரம் அதைப் பிடித்தபடி நின்றான். கைகளால் தடவித் தடவி அது தனது சைக்கிள் என்பதை உணர்வால் உள்வாங்கிக் கொண்டான். சேகரம் அண்ணாவுக்கு நன்றியைக் கூறிவிட்டு சைக்கிளை மெதுவாக உருட்டிக்கொண்டு வீட்டை நோக்கி நடந்தான். புது சைக்கிளில் ஏறி இருந்து ஓட்ட மனசு வரவில்லை. சைக்கிளைத் தொட்டபடி இருந்தாலே போதும் என்ற மனநிலையில் இருந்தான். வீட்டிற்கு வந்ததும் அம்மா, அக்கா, தங்கச்சி என ஒவ்வொருவரையும் கூப்பிட்டுக் காட்டினான். அவனது முகத்தில் தெரிந்த கணக்கில்லாத சந்தோசத்தைப் பார்த்து அம்மாவும் அக்காவும் தாங்களும் சந்தோசப்பட்டுக் கொண்டார்கள்.

இரவு படுக்கைக்குப் போகும் வரைக்கும் சைக்கிளின் அருகிலேயே இருந்தான். படுக்கையில படுத்தபடி கடவுளை நினைத்து “என்ர விருப்பத்தையும் நீ கணக்கில எடுத்து ஒப்பேத்தி வச்சிருக்கிறாய், நன்றி வைரவா...’’ என்று சொல்லிக்கொண்டான். நாளைக்கு ஞாயிற்றுக்கிழமை. சைக்கிளில் வகுப்புக்கு போகலாம். பெடியள் எல்லாரிடமும் சைக்கிளைக் காட்டலாம் என்று எண்ணியபடியே நித்திரையாகிப் போனான். கடந்த முறை தந்தை விடுமுறையில் வந்திருந்தபோது கொண்டுவந்திருந்த ‘கீற்றக்’கை செழியன் கவனமாக வைத்திருந்தான், அந்த ‘கீற்றக்’ வித்தியாசமானது. சிறிய பட்டரி போட்டு பாவிக்க வேண்டிய கீற்றக். அதன் சிறப்பம்சம், எங்கேயாவது விழுந்துவிட்டால், விழுத்தியவர்கள் விசிலடித்தால் அதுவும் சப்தமெழுப்பும். அதன் மூலம் ‘கீற்றக்’ இருக்கும் இடத்தை கண்டுகொள்ளலாம்.

தந்தை கொண்டுவந்து தந்த உடனேயே செழியன் அந்த ‘கீற்றக்’கை பாடசாலை, வகுப்பு என எல்லா இடத்துக்கும் கொண்டுசென்று நண்பர்களிடம் காட்டியிருந்தான். காலையில் எழுந்ததும் முதல் வேலையாக தனது சைக்கிள் திறப்புடன் அந்த ‘கீற்றக்’கை கொழுவிவைத்துக் கொண்டான். வெவ்வேறு இடங்களில் நின்று விசிலடித்தும் பார்த்துக் கொண்டான். காலைக்கடன்களை முடித்து சுவாமி கும்பிட்டுவிட்டு அம்மா, அக்கா, தங்கச்சி எல்லோருக்கும் சொல்லிவிட்டு, அவர்கள் பார்த்துக்கொண்டிருக்க சைக்கிளை வீட்டு முற்றத்தில் முதல் முதலாக ஓட்டிக் காட்டினான். அவர்கள் கையசைத்து வழியனுப்ப சைக்கிளில் வகுப்புக்கு புறப்பட்டான். வீதியில் சைக்கிளை தான் ஓட்டிக்கொண்டு போகும் போது எல்லோரும் தன்னையே பார்ப்பதாக உணர்ந்தான். டியூஷனில் சிநேகிதர்கள் எல்லோரும் சைக்கிளைச் சுற்றி நின்று பார்த்தார்கள்.

ஒவ்வொருவரும் ஒவ்வொரு குறை நிறை சொன்னார்கள். ஒருபடியாக வகுப்புகள் தொடங்க எல்லோரும் வகுப்புக்கு போனார்கள். அன்று ஞாயிற்றுக்கிழமையாதலால் வகுப்பு முடிய வழமை போல நண்பர்கள் எல்லோரும் கடலில்குளிக்க மூக்கத்துக்கு புறப்பட்டார்கள். வீட்டிற்குத் தெரியாமல் செழியனும் நண்பர்களுடன் ஞாயிறுகளில் கடலில் குளிக்கப் போவான். ‘‘தம்பி, உனக்கு தண்ணியில கண்டம். அதால குளம், கடல், கேணி இதுகள்ல எல்லாம் குளிக்கப் போயிடாதை...’’ என்று அவன் தாய் எப்போதும் சொல்லுவாள். ஆதலால் வீட்டில் யாரிடமும் சொல்வதில்லை. வகுப்பு என்று சொல்லி விட்டு நண்பர்களுடன் சேர்ந்து கடலில் குளித்துவிட்டு வருவான். மழைக்காலமென்றால் கோயில் கேணிகள், குளங்கள், தோட்டக்கிணறுகள் என வீட்டிற்குத் தெரியாமல் குளியல் தொடரும்.

ஆலடிக்குளம், பெரியபிள்ளையார் தீர்த்தக்கேணி, வியாபாரிமூலை தோட்டக்கிணறுகள், புற்றளைக்கேணி என பல இடங்களுக்கும் நண்பர்களுடன் சென்று குளிப்பான். வீட்டிலுள்ளவர்களுக்குத் தெரியாமல் இருக்க இரகசியமாக புத்தகப்பையில் காற்சட்டை ஒன்றை வகுப்புக்கு எடுத்துச்செல்வான். பையில் ஈரமான காற்சட்டை நன்றாகப் பிழியப்பட்டு பொலித்தீன் பைக்குள் இருக்கும். வீட்டிற்கு வந்த பின்னர் யாரும் காணாதபோது உடுப்புகள் காயவிடும் கொடியில் தனது மற்ற உடுப்புகளோடு ஈர காற்சட்டையையும் காயப்போட்டு விடுவான். கடலில்குளித்த பின்னர் உடல்முழுவதும் படிந்திருக்கும் உப்பை வீட்டில் யாரும் கண்டுபிடித்துவிடாமல் இருக்க கடற்கரைக்கு சிறிது தூரத்தில் அமைந்துள்ள நண்பன் தாசனின் தென்னந்தோட்டக் கிணற்றில் மீண்டும் குளித்துவிட்டுத்தான் காற்சட்டையை மாற்றுவார்கள்.

தாசனுக்கு பிரச்சனையில்லை. ஏனென்றால் அவனது காணியில்தான் நண்பர்கள் சைக்கிளை விட்டுவிட்டு குளிக்கச் செல்வார்கள். அதனால் தாசனின் தாய்க்கு அவர்கள் கடலில்குளிப்பது தெரியும். அத்தோடு தாசன் குழந்தைப் பருவம் முதலே கடலோடு பழக்கமுள்ளவன் என்பதால் தாசன் கடலில் குளிப்பதில் தாய்க்கு எந்த பயமுமில்லை. ஆனாலும் மகனிடம் சொல்லுவார், ‘‘தம்பி கவனமடா. அலை கூடவா கிடக்கு. பெடியளை பாத்துக் குளிக்கச்சொல்லு...’’ என்று. மூக்கம் கடற்கரையை ஆண் பெண் கடல்கள் கலக்கும் இடம் என்றும், அதனாலே அவ்விடத்தில் சுழி இருப்பதாகவும், அதில் சிக்கினால் தப்பமுடியாது என்றும் செழியன் கேள்விப்பட்டிருக்கிறான்.

இரு வருடங்களின் பின்னர் அவன் கேள்விப்பட்டதை நம்பவைக்கும்படியான சம்பவம் ஒன்று நிகழ்ந்திருந்தது. ஒருநாள் செழியனும் நண்பர்களும் கடலில்குளித்துவிட்டு கரையேறும்போது, சீ.எம்.இ டியூஷனில் இவர்களுக்குப் பின்னர் படித்த, அதே ஆண்டு சாதாரண தர பரீட்சை எழுதியிருந்த பெடியள் சிலர் குளிக்கத் தொடங்கியிருந்தார்கள். அதில் ஒரு பெடியனை சுழி இழுத்திருந்தது. மறுநாளே அவனது உடல் கரையொதுங்கியிருந்தது. அவனது இறப்பு தந்த சோகத்தையும் விட அவன் தோற்றியிருந்த சாதாரண தர பரீட்சையில் எட்டு பாடங்களிலும் சிறப்புசித்தி பெற்றிருந்தான் என்பது தெரியவந்தபோது ஊர் முழுவதுமே அவனுக்காக அழுதது.

அன்றும் வகுப்பு முடிய நான்கு சைக்கிள்களில் எட்டு பேர் மூக்கத்துக்கு புறப்பட்டார்கள். ராகவனை டபிள்ஸ் ஏற்றிக்கொண்டு, புது சைக்கிள் கலர்ஸ் காட்ட செழியன் எல்லோரையும் முந்தி ஓடினான், சைக்கிள்கள் எல்லாவற்றையும் தாசனின் தென்னங்காணிக்குள் விட்டு பூட்டினார்கள். செழியனும் தனது சைக்கிளை தேங்காய் விழாத இடமாகப் பார்த்து நிறுத்தி, பூட்டையும் பூட்டி திறப்பை கவனமாக சட்டைப்பைக்குள் போட்டுக்கொண்டான் கடலுக்குள் நிற்கும்போது நண்பர்களுக்கு நேரம் போவதே தெரியாது. பசி, தாகம் கூட விளங்காது. ஆனால் நீந்திக் களைத்து கடலிலிருந்து கரையேறினால் அவ்வளவுதான். ஒருபானை சோறு இருந்தாலும் சாப்பிடலாம் போல பசிக்கும்.

மூக்கம் கடற்கரையில் நீண்ட தூரம் மணலில் நடந்தே கடலுக்குச் செல்ல வேண்டும். இடையில் சிறிதே உயரமான மணல் மேடுகள் கடற்கரையோடு நீண்டு கிடக்கும். ஒவ்வொரு பெளர்ணமிக்கும் கடல் பொங்கி கரையை மீறி மணல்மேடு தாண்டி உள்வந்து நீண்ட ஆறு போல தங்கிவிடும். அடுத்த பருவத்துக்கு இடையில் அந்த கடல்நீர் ஆற்றில் இறால், சின்ன மீனினங்கள், நண்டு என்று பலவும் விளையும். அவற்றை சிறுவர்கள், மீனவர்கள், கடலில்குளிக்க வருவோர் என பலரும் பிடிப்பார்கள். அவ்வாறுதான் செழியனும் நண்பர்களும் பெளர்ணமிக்கு அடுத்த வாரமளவில் குளிக்கப் போவதாயிருந்தால் தண்ணீர் நிற்கும் எனத் தெரிந்து இறால் பிடிக்க ஆயத்தமாகவே போவார்கள்.

இறாலோடு சேர்த்து சாப்பிடுவதற்கு என தங்களிடம் இருக்கும் சில்லறைக் காசை சேர்த்து பாண் வாங்கிப் போவார்கள். கூடவே கொஞ்சம் தேங்காய் எண்ணெய், வெங்காயம், பச்சமிளகாய் எல்லாம், இறாலை பிரட்டல் மாதிரி செய்வதற்குதாசனின் காணிக்குள் சைக்கிள்களை விட்டுவிட்டு பாணையும் மற்றைய பொருட்களையும் தாசனின் தாயிடம் கொடுத்துவிட்டு, எல்லோருமாகப் போய் முதலில் இறால் பிடித்துக் கொண்டுவந்து கொடுத்து பிரட்டல் செய்யச் சொல்லிவிட்டுத்தான் குளிக்கப் போவார்கள். தாசனின் வீடு வேறிடத்திலிருந்தது. அந்த தென்னந் தோட்டத்தில் ஒரு சிறிய பெட்டிக்கடையை நடத்தினார் தாசனின் அப்பா. ஆனால் கடையில் கூடிய நேரம் தாசனின் அம்மாவோ அக்காவோதான் இருப்பார்கள்.

கடைக்கென இருந்த கொட்டிலை விட இன்னொரு சிறிய கொட்டிலும் அந்த காணிக்குள் இருந்தது, தேங்காய்களைச் சேகரித்து வைக்க, மண்வெட்டி போன்ற சாமான்களை வைத்தெடுக்க வசதியாக. அவசரத்துக்கு தேநீர் போட என ஒரு அடுப்பும் சில பாத்திரங்களும் மட்டுமே அங்கே இருந்தன. அன்றும் முதலில் இறால் பிடிக்க போனார்கள். முன்பு அங்கு இறால் பிடித்தவர்கள், மீனவர்கள் என பலரும் விட்டுச் சென்ற பிய்ந்த, சிறிய துண்டு வலைகள் அங்கங்கே இருந்தன. அவற்றை எடுத்து சேர்த்துக் கட்டி நீண்ட வலைபோல ஆக்கி தாசன் ஒருகரையிலும், செழியன் மறுகரையிலுமாக நின்று வலையை இழுத்துக்கொண்டு ஓடி கொஞ்சம் இறால், குஞ்சு மீன், நண்டு என பிடித்தார்கள்.

கழிவுகள் எல்லாம் போக ஒரு ஒன்றரைக் கிலோ இறால் தேறியிருக்கும். பிடித்திருந்தவைகளை வலையோடு சேர்த்து தாசன் எடுத்துச்சென்றான், தாயிடம் கொடுப்பதற்கு. மற்றவர்கள் கடலை நோக்கி ஓடினார்கள். கரைமீது இழுத்துவிடப்பட்டிருந்த கட்டுமரமொன்றில் உடைகளைக் கழற்றி வைத்துவிட்டு கடலுக்குள் பாய்ந்தார்கள். செழியன் சைக்கிளை விடும் போதே காணிக்குள் வைத்து  தான் புத்தகப் பைக்குள் மறைத்துக் கொண்டுவந்திருந்த காற்சட்டையை மாற்றியிருந்தான். சட்டையைக் கழற்றி சைக்கிள் திறப்பு சட்டைப்பைக்குள் இருக்கிறதா எனப் பார்த்து கவனமாக சுற்றி கட்டுமரத்தில் வைத்துவிட்டு தானும் கடலுக்குள் பாய்ந்தான்.

கடலில்குளிப்பதை நினைத்தாலே ஒரு புத்துணர்ச்சியும் குதூகலமும் வந்துவிடும். நீண்ட நேரம் யார் மூச்சடக்கி இருப்பது, யாரெல்லாம் நீண்ட தூரம் நீந்துவது, புற நீச்சலடிப்பது, சுழியோடுவது என பல போட்டிகளும் நடக்கும். நண்பர்களில் சிலர் வடிவாக நீந்தத் தெரியாதவர்கள் அல்லது தண்ணீருக்குள் வர பயப்படுபவர்கள். அதில் ஒருவன்தான் பாலமுரளி. இடுப்பளவு தண்ணீரிலேயே குளிப்பான். அலை வந்தால் எழுந்து ஓடிப்போய் கரையில் நிற்பான். அவ்வளவு பயம் கடலுக்கு. அப்படி கடலுக்கு பயந்தவன் பிற்காலத்தில் தன்னை போராட்டத்தில் இணைத்துக்கொண்ட போது கடலில் போரிடும் அணியில் இணைந்திருந்தான். காலம் பல பொழுதுகளில் புரியாதவற்றை புரியவைத்துவிடுகிறது. எமது எண்ணங்களை மாற்றிவிடுகிறது.

அப்படித்தான் கடலில்குளிக்கவே பயப்பட்ட பாலமுரளியை கடல் போராளியாக ஆக்கி கடலிலேயே போராட வைத்தது காலம்.பாலமுரளியைப் போல இன்னொருவன் வாசன். எப்போதும் உள்ளாடையுடனேயே கடலில்குளிப்பான். அலையடிக்கும் இடத்திலே மண்ணுக்குள் உருண்டபடியிருப்பான், இவ்வாறு கடலுக்கு பயந்து கரையில் நின்று குளித்த வாசன் பிற்காலத்தில் போராட்டத்தில் இணைந்து ஊடுருவல் தாக்குதல் ஒன்றிற்காக கடலுக்கூடாக நீந்திச்சென்று கரையேறி முன்னேறிச் செல்லும்போது சாம்பல் தீவில் விமானத் தாக்குதலில் வீரச்சாவடைந்திருந்தான். பருத்தித்துறை ஜெற்றிக்கு கப்பல் வந்தால் ஆழம் காட்டுவதற்கு என்று வெறும் எண்ணெய் பரல்கள் நான்கை ஒன்றாகச் சேர்த்து இரும்பு சட்டம் போட்டு வெல்டிங் செய்து கடலிலே குறிப்பிட்ட தூரத்திலே நங்கூரமிட்டு மிதக்க விட்டிருப்பார்கள்.

அந்த பரல்களைத் தாண்டி கப்பல் வந்தால் தரைதட்டி நிற்கவேண்டிவரும். சில நாட்களில் ஜெற்றியடியிலும் குளிக்கப் போவார்கள், அப்படிப் போகும்போது பெடியள் அந்த பரல்கள் வரைக்கும் நீந்திப் போயிருக்கிறார்கள்.  ராகவன், குமார், கபிலன்- இவர்கள் பரல்கள் வரைக்கும் போட்டிபோட்டு நீந்துவார்கள். செழியனால் அவ்வளவு தூரம் நீந்த முடியாது. அரைவாசி தூரம் நீந்திவிட்டுத் திரும்பிவிடுவான். ஒருமணித்தியாலத்துக்கும் மேலாக குளித்து, கும்மாளமடித்து கரையேறினார்கள். உடுப்புகளை எடுத்துக்கொண்டு தாசனின் காணிக்கு வந்து அங்கிருந்த நல்ல தண்ணிக் கிணற்றில் குளித்தார்கள். உடுப்பை மாற்றி, அலம்பி, புழிஞ்சு டிசு பையில் போட்டு புத்தகப்பைக்குள் வைத்து சைக்கிளில் கொழுவினான் செழியன்.

தென்னந்தோட்டத்தின் நடுவில் ஓலைகளைப் பரப்பி அதன் மேல் நண்பர்கள் வட்டமாக அமர்ந்தார்கள். தாசனின் தாய், பிரட்டிவைத்திருந்த இறாலை சட்டியோடு தூக்கிவந்து பெடியளுக்கு நடுவில் வைத்தார். அனைவரும் பகிர்ந்து உண்டார்கள். பானையில் வைத்திருந்த தண்ணீரில் ஆளாளுக்கு சிறிதளவு குடித்தார்கள். அந்த மத்தியான வெய்யில் நேரத்தில் கடலில்குளித்து விட்டு வந்தால் மிகவும் தாகமெடுக்கும். ஆனாலும் நண்பர்கள் அங்கே அதிகம் தண்ணீர் குடிக்க மாட்டார்கள். தென்னந்தோட்டம் கடற்கரைக்கு அருகில் உள்ளதால் தண்ணீர் உப்புச்சுவையுடன் இருக்கும். அத்தோடு திரும்பிப் போகும்போது சிவன்கோயில் துலாக்கிணற்றில் குடிக்கலாம் என்பதாலும்தான்.

மத்தியான வெய்யிலில் கடலில் குளித்தபின்பு பாணும் இறாலும் உண்ட களையால் ஒவ்வொருவரும் மற்றவர்களிடம் சைக்கிளை  ஓட்டக்  கொடுப்பார்கள். ஆனால் செழியன் தன் புது சைக்கிளை யாரிடமும் கொடுக்காமல் ராகவனை ஏற்றிக்கொண்டு தானே ஓட்டினான்.  சிவன்கோயில் வடக்கு வீதியில் உள்ள துலாக்கிணற்றடிக்கு வந்து எல்லா சைக்கிள்களும் நின்றன. எல்லோருமாக ஓடிவிழுந்து துலாவைப் பிடித்து தண்ணியிறைத்துக் குடித்தார்கள். அந்த இடத்திலிருந்து ஒவ்வொருவராகப் பிரிந்து தத்தமது வீடுகளுக்கு புறப்பட்டார்கள். ராகவன், கபிலன் ரெண்டு பேரும் கிணற்றடிக்கு எதிர்ப்புறமாக இருந்த பருத்தித்துறை நூலகத்துக்குப் போனார்கள். வழமையாக நூலகத்துக்குப் போய் அங்கு வாசிப்பு மேசைகள் மீது போடப்பட்டிருக்கும் புத்தகங்கள், சஞ்சிகைகள், பத்திரிகைகளை மேலோட்டமாகப் பார்த்துவிட்டு பின்னர் வீடு செல்வது வழக்கம்.

ராகவனும், கபிலனும் நடந்தே வருபவர்கள். இதுவரை செழியனும் அவர்களைப் போலவே வந்திருந்தான். இன்று தனது புது சைக்கிளில் வந்திருந்தான். வழமைபோல அவனும் நூலகத்துக்குப் போனான். தாழ்வாரத்தில் சைக்கிளை நிறுத்திவிட்டு உள்ளே சென்றான். நூலக மேசைகள் மீது இருந்த எல்லா பத்திரிகைகள், சஞ்சிகைகளையும் மேலோட்டமாக ஆள் மாறி ஆள் பார்த்த பின்னர் எல்லோருமாக வெளியே வந்தார்கள். கடைசியாக வந்த செழியன் சைக்கிள் விட்டிருந்த இடத்தைப் பார்த்ததும் கத்தினான், ‘‘ஐயோ, சைக்கிளை காணேல்லையடா...’’திடுக்குற்ற பெடியள் ஆளுக்கு ஒரு திசைக்கு ஓடி தேடினார்கள். எங்கும் காணவில்லை. நூலகத்தில் மேலோட்டமாக படித்துவிட்டு உடனே புறப்படுவது வழமை என்பதால் செழியன் சைக்கிளைப் பூட்டவில்லை.

அதுமட்டுமல்ல, அன்றைய பொழுதின் சந்தோசங்கள் அவனை, சைக்கிளைப் பூட்டிவிட்டு உள்ளே செல்லவேண்டும் என்ற அளவுக்கு சிந்திக்க விடவில்லை. அவனுக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை. அருகில் நின்ற ஒவ்வொருவரிடமும் சென்று, ‘‘என்ர சைக்கிளை கண்டனியளே, புது லுமாலா சைக்கிள். இதில லைபிரரி வாசல்ல விட்டிட்டு உள்ள போனனான். வந்து பாக்க காணேல்லை...’’ என்று கேட்டான். யாரும் கவனித்ததாகக் கூறவில்லை. திடீர் என்று ‘கீற்றக்’ நினைவு வர விசிலடித்தபடி ஒவ்வொரு சைக்கிளையும் நோக்கி ஓடினான். வீதியில்சென்று கொண்டிருந்த சைக்கிள்களையும் உற்றுப்பார்த்தபடி விசிலடித்தான். எதுவும் பிரயோசனப்படவில்லை. நண்பர்களும் எல்லாப்புறமும் தேடிக் களைத்துத் திரும்பினார்கள். செழியன் இன்னும் வீதியில் போய்வரும் சைக்கிள்களையே பார்த்துக்கொண்டு நின்றான்.

சிலவேளைகளில் சுற்றுமுற்றும் பார்த்தபடி விசிலடித்தான், பித்துப்பிடித்தவன் மாதிரி நின்றான். கபிலன் கைகளில் புத்தகப்பை வைத்திருந்தான். ஆனால் செழியனதும் ராகவனதும் புத்தகப் பைகள் செழியனின் சைக்கிளில் கொழுவப்பட்டிருந்ததால், அவையும் காணாமல் போயிருந்தன. செழியனைப் பார்த்து ராகவன் மெதுவாகக் கேட்டான், ‘‘வாடா, வீட்டை போவம்...’’‘‘இல்லையடா. நீங்க போங்கோ. நான் நிண்டு பாக்கப் போறன். யாராவது மாறிக் கொண்டு போயிருப்பாங்கள். திரும்ப கொண்டுவரேக்கை நான் நிண்டாதானே வாங்கலாம்?’’ ராகவனுக்கு என்ன சொல்வதென்று புரியவில்லை. கபிலனைப் பார்த்தான். கபிலனுக்கும் அடுத்து என்ன செய்வது என்று புரியவில்லை. சிறிது நேரத்தின் பின்னர் செழியன் தானாகவே சொன்னான், ‘‘வாங்கோடா போவம். நீங்களும் இன்னும் சாப்பிடேல்லை...’’

உண்மையிலேயே அப்போது யாரும் பசியை உணரும் மனநிலையிலில்லை. மெத்தக்கடை சந்தியில் நண்பர்கள் பிரிந்து தத்தமது வீடுகளை நோக்கி நடக்கத் தொடங்கினார்கள். செழியன் சிவன்கோயிலின் மேற்கு வாசலுக்கு வந்து சிறிதுநேரம் நின்று பிள்ளையாரைப் பார்த்தான். பொறுக்க முடியாமல் உடைந்து அழுதான். எவ்வளவு நேரம் அப்படியே கோயில் வாசலில் அழுதபடி இருந்திருப்பானோ தெரியவில்லை, மேற்குவாசல் துலாக்கிணற்றில் தண்ணியள்ள ஆட்கள் வரத் தொடங்க, மெதுவாக எழுந்து வீட்டை நோக்கி நடக்கத் தொடங்கினான். அப்போது கூட போய்வருகின்ற சைக்கிள்களை ஒவ்வொன்றாகப் பார்த்த படியே நடந்தான். நீண்ட நேரம் அழுததன் மிச்சமாக வந்த கேவலுடன், இடைக்கிடையில் விசும்பியபடி, தலை கலைந்து, கண்கள் சிவந்து, போட்டிருந்த சட்டை கசங்கி, கால்கள் முழுவதும் புழுதி படிந்தபடி வீதியில் நடந்து போய்க்கொண்டிருந்தான்...

விண்வெளியில் பீட்ஸா!
சர்வதேச விண்வெளி மையத்தில் தங்கியுள்ள இத்தாலி வீரர் பாலோ நெஸ்போலி, தனது டீம் லீடர் கிர்க் ஷிரெமன்னுக்கு ‘நான் பீட்ஸாவை மிஸ் செய்கிறேன்’ என ட்விட்டினார். நட்பு சும்மா விடுமா? ஈர்ப்பு விசை இல்லாத இடத்திலும் பல்வேறு சைஸ்களில் பீட்ஸா செய்து அசத்திவிட்டனர் சக விண்வெளி வீரர்கள்.

குடிகார எலி!
அமெரிக்காவின் ஃப்ளோரிடாவில் உள்ள விலங்கு காப்பகத்திலிருந்து எஸ்கேப்பான எலி, அருகிலுள்ள ஆல்கஹால் கடையில் திருட்டுத்தனமாக நுழைந்து சரக்கு அடித்து செம போதை ஆகியுள்ளது. இப்போது ஐசியூவில் எலிக்கு ட்ரீட்மென்ட் நடக்கிறது!
 
கார் வைப்பரில் வயலின்!
இஸ்‌ரேலைச் சேர்ந்த வயலின் வித்வான் ஆதர் கோல்டுஃபார்ப், புதிய பாதை அறிவாளி. தன் கார் வைப்பரின் மூலம் வயலின் வாசிக்கும்படி செட்டப் செய்து அசத்துகிறார். வயலின் வாசிக்கும் வைப்பர் வீடியோ இணையத்தில் ஹைப்பர் ஹிட். இவர் இதற்கு முன்பு வைப்பரில் ட்ரம்ஸ் இசைக்கும்படி செட் செய்த ஆசாமி.

-குலசிங்கம் வசீகரன்