காங்கிரசும் நேரு குடும்பமும்...



காங்கிரஸ் கட்சிக்கு விரைவில் தலைவராகிறார் ராகுல்காந்தி. இந்நிலையில் நேரு குடும்பத்துக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் இருக்கும் பிணைப்பு குறித்த சரித்திரத்தை சுருக்கமாகத் தெரிந்து கொள்வது நல்லது.

1907

காஷ்மீர் பண்டிட் குடும்பத்தைச் சேர்ந்த வழக்கறிஞரான மோதிலால் நேரு, அலகாபாத்தில் நடந்த காங்கிரஸ் மாநாட்டின் மூலம் அரசியலில் நுழைந்தார்.

1916

நான்கு ஆண்டுகள் இங்கிலாந்தில் தங்கி வழக்கறிஞர் படிப்பை முடித்த ஜவகர்லால் நேரு, இந்தியா திரும்பினார். காஷ்மீரி பெண் கமலா கவுலை மணந்தவர், தந்தையுடன் இணைந்து வழக்கறிஞர் பணியை செய்யத் தொடங்கினார்.

1917

இந்திய சுதந்திரப்போராட்டத்தில் ஈடுபட்ட தியோசபிகல் சொசைட்டியின் ‘ஹோம்ரூல்’ அன்னி
பெசன்ட் கைது செய்யப்பட்டிருந்தார். நேருவின் அரசியல் ஆர்வம் அதிகரித்த இக்காலகட்டத்தில் அவரின் பிரிய மகள் இந்திரா பிறந்திருந்தார்.

1922

சௌரி சௌராவில் ஏற்பட்ட கலவரத்தினால் ஒத்துழையாமை இயக்கத்தை, காந்தி தற்காலிகமாக நிறுத்தி வைத்தார்.

1923

சுயராஜ்ய கட்சியின் சி.ஆர்.தாசுடன் மோதிலால் நேரு இணைந்து மேற்கு வங்காள சட்டசபைத் தேர்தலில் பெரும்பான்மை பலத்தில் போட்டியிட்டு வென்றார்.

1924

காந்தியின் விருப்பத்துக்கு மாறாக, மோதிலாலும் தாசும் மத்திய சட்டமன்ற கவுன்சிலுக்கு தேர்வானார்கள்.

1928

ஆங்கிலேயே காமன்வெல்த் நாடுகளில் இந்தியாவிற்கு அரசுரிமை அந்தஸ்து தேவை என்ற கோரிக்கையை மோதிலால் நேரு ஆங்கில அரசிடம் சமர்ப்பித்தார். மாகாணங்களை குறிப்பிடாமல் மையப்படுத்திய அரசமைப்பு முறையை இவ்வறிக்கை வலியுறுத்தியது.

1929

லாகூரில் காங்கிரஸ் தலைவரான ஜவகர்லால் நேருவின் தலைமையில் காங்கிரஸ் மாநாடு நடைபெற்றது. இதில் காங்கிரஸின் கொள்கையாக இந்திய சுதந்திரம் வலியுறுத்தப்பட்டு இந்தியக்கொடி ஏற்றப்பட்டது. ஜனவரி 26ம் தேதியை முழுமையான சுயராஜ்ஜிய தினமாக கடைப்பிடிக்க
மக்களைக் கோரினார் மகாத்மா காந்தி.

1930

அரசின் உப்புவரிக்கு எதிராக தண்டியில் காந்தியின் நடைபயண பேரணி தொடங்கியது.

1937

இந்திய அரசு சட்டப்படி (1935) நடந்த தேர்தலில் ஜவகர்லால் நேரு தலைமையிலான காங்கிரஸ் கட்சி போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் மெகா வெற்றி பெற்றது.

1938

அரிபுராவில் நடந்த காங்கிரஸ் மாநாட்டில், ஆங்கிலேயர்களுடனான ஒப்பந்தங்கள் குறித்த பேச்சுவார்த்தையில் காந்திக்கும், சுபாஷ் சந்திர போஸுக்கும் கருத்துவேறுபாடுகள் உருவானது.

1983

இரண்டாம் உலகப்போர் தொடங்கியது.

1942

ஆகஸ்ட் மாத காங்கிரஸ் மாநாட்டில் வெள்ளையனே வெளியேறு போராட்டத்தை முன்னெடுத்த காந்தி, ‘செய் அல்லது செத்துமடி’ என்ற சுலோகத்தை மக்களுக்கு கூறி சுதந்திரப்போராட்டத்தை தொடர உத்வேகப்படுத்தினார்.தந்தை ஜவகர்லால் நேருவுக்கு பிடிக்கவில்லை என்றாலும் பார்சி மணமகன் ஃபெரோஸ் காந்திக்கும், இந்திராவுக்கும் திருமணம் நடத்தி வைக்கிறார் மகாத்மா காந்தி.

1944

இந்திரா - ஃபெரோஸ் தம்
பதிக்கு ராஜீவ்காந்தி பிறந்த தருணத்தில், காங்கிரஸ் இயக்கத்தையும் அதன் செயல்பாடுகளையும் ஆங்கிலேயர்களால் அமைக்கப்பட்ட சைமன் கமிஷன் முற்றாக நிராகரித்தது.

1946

இந்திராவின் இரண்டாவது குழந்தையாக சஞ்சய் காந்தி பிறந்தார். இங்கிலாந்து பிரதமர் கிளமண்ட் அட்லீ, இந்தியாவில் அமைச்சரவை அமைக்க செய்த முயற்சிகள் தோல்வியுற்றன.

1947

நேரு, வல்லபாய் படேல், ராஜாஜி ஆகியோரை பிரிவினை தொடர்பாக சமரசம் செய்து இந்தியாவின் ஆட்சிப்பொறுப்பை ஏற்கச்செய்தார் வைஸ்‌ராய் மௌண்ட்பேட்டன். நாட்டின் முதல் பிரதமராக நேரு அமர்ந்த சமயத்தில் காஷ்மீர் மாநிலம் தொடர்பாக பாகிஸ்தானுடன் போர் ஏற்பட்டு முடிவடைந்திருந்தது.

1959

பல்வேறு கண்டனங்கள், சர்ச்சைகளைக் கடந்து தன் மகள் இந்திராவுக்கு அமைச்சரவை பதவி அளிக்காமல், காங்கிரஸ் கட்சியின் தலைவராக நியமித்தார் நேரு.

1962

பொதுத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியை மீண்டும் மாபெரும் வெற்றிபெற வைத்தார் நேரு. ஆனால், சீனாவுடனான எல்லைக்கோடு தொடர்பாக நடந்த போரில் இந்தியா, படுதோல்வியுற்றதால் நேரு மீது கடும் விமர்சனங்கள் எழுந்தன.

1963

காங்கிரஸ் கட்சியை புதுப்பிக்க தமிழ்நாடு முதல்வராக இருந்த கே.காமராஜ் பதவி விலகினார். இவரைத் தொடர்ந்து லால் பகதூர் சாஸ்திரி, மொரார்ஜி தேசாய், ஜெகஜீவன் ராம், பிஜு பட்நாயக் ஆகியோரும் கட்சிப் பதவிகளிலிருந்து விலகினர். காமராஜர், மீண்டும் காங்கிரஸ் கட்சித்தலைவரானார்.

1964

நேரு இறக்க, லால் பகதூர் சாஸ்திரி இந்தியாவின் பிரதமரானார். 1965ம் ஆண்டு இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் போர் மூண்டபோது, சாஸ்திரி எழுப்பிய ‘ஜெய் ஜவான், ஜெய் கிஸான்’ சுலோகன் மக்களின் மனதில் உத்வேகம் மூட்டிய மந்திரச்சொல்.

1966

பாகிஸ்தானுடன் தாஷ்கண்ட் ஒப்பந்தத்தில் (ஜனவரி 10) கையெழுத்திட்ட சாஸ்திரி, திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் காலமானார். பின், காமராஜரின் பரிந்துரையால் இந்திரா இந்தியாவின் பிரதமர் இருக்கையில் அமர்ந்தார்.

1967

காங்கிரஸ் கட்சி, தேர்தலில் 50 சதவிகித தொகுதிகளை இழந்தது. இந்திரா தன் பதவியை அரும்பாடுபட்டு தக்கவைத்துக்கொண்டு இளைய தலைவர்களிடம் உதவி கோரினார். பின்னர் இரு ஆண்டுகளுக்குப் பிறகு தனியார் வங்கிகளை அரசுடமையாக்கினார்.

1974

பிரதமர் இந்திராவின் தலைமையில் இந்தியா தனது முதல் அணுகுண்டு சோதனையை நடத்தியது. ரயில்வே ஸ்ட்ரைக், பொருளாதார பற்றாக்குறை இந்தியாவை மூச்சுத் திணறவைத்துக் கொண்டிருந்த சூழலில் சிக்கிம் இந்தியாவுடன் இணைக்கப்பட்டது.

1971

வறுமை ஒழிப்பு திட்டங்களை மக்களிடம் கொண்டு செல்ல இந்திராகாந்தி ‘Garibi Hatao’ முழக்கத்தை இந்தியாவெங்கும் பிரசாரம் செய்தார். இம்முறை ஏற்பட்ட இந்தியா - பாகிஸ்தான் போரில் பாகிஸ்தான் ராணுவம் இந்தியாவிடம் பரிதாபகரமாக தோற்று சரணடைந்தது. வங்காளதேசம் புதிய நாடாக உருவாகி சுதந்திரக் காற்றை சுவாசிக்கத் தொடங்கியது.

1975

எமர்ஜென்சிக்கு எதிரான வழக்கில் இந்திரா பின்னடைவை சந்தித்தார். காங்கிரஸ் கட்சித்தலைவர் டி.கே பரூவா, ‘Indira is India’ என்ற சுலோகனை முன்னெடுத்தார். தனது ஆக்ரோஷ அரசியல் செயல்பாடுகளால் சஞ்சய்காந்தியின் மீதான நன்மதிப்பு கெட்டது.

1980

பல்வேறு பிரச்னைகளை சமாளித்த இந்திரா, மீண்டும் மக்கள் ஆதரவுடன் ஆட்சியைப் பிடித்தார். பஞ்சாப் பிரச்னை, விமான விபத்தில் சஞ்சய்காந்தி மரணம் ஆகியவை இந்திராவின் மன உறுதியை சோதித்தன. ராஜிவ்காந்தி, அம்மா இந்திராவுக்கு பக்கபலமாக அரசியலில் காலடி எடுத்து வைத்தார்.

1984

இந்திரா தனது சீக்கிய பாதுகாவலர்களாலேயே சுடப்பட்டார். உடனே பிரதமராக பதவியேற்ற ராஜிவ்காந்தி 400க்கும் மேற்பட்ட மக்களவை உறுப்பினர்களுடன் காங்கிரஸ் கட்சியையும் ஆட்சியையும் கையகப்படுத்தினார். 52வது சட்டத்திருத்தமாக கட்சித் தாவல் தடைச்சட்டத்தையும் வெற்றிகரமாக கொண்டுவந்தார்.

1987

போஃபர்ஸ் ஊழலால் பிரதமர் ராஜிவ்காந்தியின் செல்வாக்கு குலைந்ததோடு, கட்சியும் சிதைந்துபோனது. இரு ஆண்டுகளுக்குப் பிறகு, காங்கிரஸ் அல்லாத கட்சிகள் ஒன்றிணைய வி.பி.சிங் தலைமையிலான ஆட்சி தொடங்கியது.

1991

ராஜிவ்காந்தி விடுதலைப்புலியினரால் படுகொலை செய்யப்பட்டார். கட்சியின் தலைவர் பிளஸ் பிரதமராக பி.வி.நரசிம்மராவ் பதவியேற்றார். உலகமயமாக்கம், தாராளமயமாக்கம் உள்ளிட்ட பொருளாதாரக் கொள்கைகளை தனது அரசு மூலம் அமல்படுத்தினார்.

1996

காங்கிரஸ் கட்சித்தலைவராக சீதா ராம் கேசரி, வாக்கெடுப்பின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஹெச்.டி.தேவகௌடாவின் ஐக்கிய முன்னணி அரசு தோற்றபின், கேசரியை தேர்தலில் காங்கிரசின் முகமாக சோனியாகாந்தி முன்னிலைப்படுத்தினார்.

1999


காங்கிரஸ் கட்சித் தலைவரான சோனியாகாந்தியின் ஆட்சியமைக்கும் முயற்சிகள் படுதோல்வியடைய, பிஜேபி ஆட்சிக்கட்டில் ஏற, அடல்பிகாரி வாஜ்பாய் பிரதமரானார்.

2004

பிஜேபியை எதிர்க்க மதச்சார்பற்ற கூட்டணியை சோனியா காந்தி உருவாக்கி தேர்தலில் வெற்றிபெற்றார். ஆனால், பிரதமரானது, காங்கிரஸ் தொண்டர்கள் கூட எதிர்பார்க்காத முன்னாள் நிதியமைச்சரான மன்மோகன்சிங். 2009ம் ஆண்டு தேர்தலிலும் காங்கிரஸே வெற்றிப் பெற்றது.
 
2017

காங்கிரஸ் கட்சித்தலைவராக உள்ள சோனியாகாந்தியின் உடல்நலம் தொடர்ந்து சிக்கலாகி வரும் நிலையில் புதிய தலைவராக ராகுல் காந்தி பதவியேற்கப் போகிறார்.   

ச.அன்பரசு