காட்பாதர் 34போதை உலகின் பேரரசன்

‘பணமழை பொழிந்தது’ என்று சொல்வது ஒரு பேச்சுக்குத்தான். பாப்லோ, தேர்தல் அரசியலில் குதித்ததுமே நிஜமாகவே பணமழை கொலம்பியாவில் பொழிந்தது.போதைக் கடத்தலுக்காக அவர் வாங்கியிருந்த விமானங்கள், வானத்தில் வட்டமிடும். ‘பாப்லோவுக்கு உங்கள் ஓட்டு’ என்று அச்சிடப்பட்ட துண்டுப்பிரசுரங்களில் கரன்ஸி நோட்டை பின் செய்து அப்படியே வீசுவார்கள். தெருவெல்லாம் பணம் வந்து விழும்.

அவற்றை பொறுக்கியெடுக்க மக்கள் கூட்டம் ஒருவரை ஒருவர் அடித்துக் கொண்டு ஓடும். விழுந்த பணத்தையெல்லாம் பொறுக்கியெடுத்ததும், அடுத்த விமானம் எப்போது வருமென்று வழிமேல் விழி வைத்துக் காத்திருப்பார்கள்.

தேர்தலில் ஜெயிப்பதற்கு முன்பாகவே பணத்தால் அடிக்கும் பாப்லோ, பதவிக்கு வந்துவிட்டால் கொலம்பியாவின் ஏழ்மை மொத்தமும் ஒழிந்துவிடும் என்று அசட்டுத்தனமாக ஏழை வாக்காளர்கள் நம்பியதில் ஏதும் ஆச்சரியமில்லை.

அரசியலில் அளவுக்கதிகமான பணத்தை பாப்லோ முதலீடு செய்வதை ரசிக்காத நடுத்தர வர்க்கமும் அங்கே இருந்தது. அவர்களை ஈர்க்கவும் பாப்லோவிடம் ஆயுதம் இருந்தது.தான், பேசும் ஒவ்வொரு கூட்டத்தையுமே அமெரிக்க எதிர்ப்புக் கூட்டமாக நடத்தத் தொடங்கினார்.

எண்பதுகளில் உலகம் முழுக்கவே அமெரிக்க எதிர்ப்பு மனப்பான்மை சராசரி மனிதர்களுக்குள் நீறு பூத்த நெருப்பாக கனன்றுகொண்டிருந்தது. அதை விசிறி விடும் வேலையை பாப்லோவின் பேச்சு கச்சிதமாக செய்தது.

“கொலம்பியா, நம்முடைய நாடு...” என்றுதான் பேச்சை ஆரம்பிப்பார்.“நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை தீர்மானிக்க அமெரிக்கா யார்? நம் அரசுடைய கொள்கைகள் என்னவென்று அமெரிக்கன் வரையறுப்பதா?” என்று ஆரம்பத்திலேயே சூட்டைக் கிளப்புவார்.

‘அமெரிக்கன் என்ன நம்மூரில் கஞ்சா பயிரிட்டானா, அதை அறுவடை செய்து பவுடராக்கினானா, உலகெங்கும் விமானத்தில் எடுத்துப் போய் விற்பனை செய்தானா?’ ரேஞ்சுக்கு மறைமுகமாக பாப்லோ பேச, அவருடைய போட்டி கார்டெல்கள்கூட பாப்லோவுக்கு நிபந்தனையற்ற ஆதரவைத் தர முன்வந்தார்கள்.

1982ல் அமெரிக்காவில் அதிபர் ஆகியிருந்த ரொனால்டு ரீகன், தங்கள் நாட்டுக்குள் கொலம்பிய போதைப் பொருட்கள் ஊடுரு வுவதைத் தொடர்ந்து, ஒட்டுமொத்த கொலம்பியாவையே தீவிரவாத நாடு என்பதைப் போன்று நடத்திக் கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவில் சாதாரண பிரச்னைகளில் சிக்கிய பல நூறு கொலம்பியர்கள், போதை கடத்தியதாக குற்றம் சாட்டப்பட்டு வாழ்நாள் முழுக்க சிறைகளில் காலம் கழிக்க வேண்டிய அவலநிலையில் இருந்தார்கள்.

தன்னுடைய போதைத் தொழிலுக்கு எதிரான அமெரிக்காவின் நடவடிக்கைகளை, சராசரி கொலம்பியனுக்கு எதிரான நடவடிக்கைகள் என்பதாக ஒரு பொதுக்கருத்தை பாப்லோ உருவாக்க, மற்ற கார்டெல்களும் ‘ஆமாம் சாமி’ போட்டார்கள். எல்லா நாடுகளில் வாழும் குடிமக்களும் அப்பாவிகள்தானே? யார் என்ன சொன்னாலும் தலையை ஆட்டிவிட்டு போய்விடுவார்கள்.

தேர்தல் அரசியலுக்கு வந்ததுமே, பாப்லோ செய்த நல்ல காரியம் ஒன்று உண்டு. வழக்கமாக, தான் எதை செய்தாலும் கூடவே வைத்துக் கொள்ளும் குஸ்டாவோ, ராபர்ட்டோ போன்றவர்களை விலக்கிவிட்டு தன்னுடைய அரசியல் ஆலோசகராக ஆல்பெர்ட்டோ என்பவரை நியமித்தார்.

கொலம்பிய அரசியலில் நீண்டகால அனுபவம் பெற்ற ஆல்பெர்ட்டோ, பாப்லோ எதையெல்லாம் பேசலாம், எதையெல்லாம் செய்யலாம் என்பது குறித்து உருப்படியான ஆலோசனைகளை வழங்கினார்.

ஆல்பெர்ட்டோ, செனட்டர், அமைச்சர் என்று பெரிய பதவிகளை வகித்தவர். அவருக்கு அந்நாட்டின் அதிபர் ஆகவேண்டும் என்கிற கனவு இருந்தது. நேர்மையான வழியில் அதிபர் சீட்டை எட்டுவது கடினம் என்கிற நிலையில் பெரும் பணபலமுள்ள பாப்லோ உள்ளிட்ட கிரிமினல்களின் உதவியால் தன்னுடைய லட்சியத்தை விரைவில் எட்ட முடியுமென்று நம்பினார்.

அவருக்கும் பாப்லோவுக்கும், ஒரு சுவாரஸ்யமான ஜென்டில்மேன் அக்ரிமென்ட் இருந்தது. தான் அதிபர் ஆனதுமே, கார்டெல்கள் மீதிருக்கும் அத்தனை வழக்குகளையும் திரும்பப் பெற்று விடுவதாகவும், சட்டத்தையே போதைத்தொழிலுக்கு ஒத்துழைக்கும் வகையில் திருத்துவதாகவும் ஆல்பெர்ட்டோ சொன்னார். ஆதை ஆமோதித்த பாப்லோ எஸ்கோபார், பதிலுக்கு அதிரடியான ஒரு கோரிக்கையை வைத்தார்.

“ஆல்பெர்ட்டோ, அதிபர் ஆகாமல் உங்கள் உயிர் போகாது. இதற்கு நான் உத்தரவாதம். ஆனால், நீங்கள் ஒருமுறைதான் அதிபர் ஆகவேண்டும். அடுத்த முறை உங்கள் நாற்காலியில் நான்தான் அமர்வேன்.

அதற்கு நீங்கள் முழு ஒத்துழைப்பு தரவேண்டும்...”ஆல்பெர்ட்டோ அதிர்ந்துவிட்டார். இருந்தாலும், முதலில் தன் காரியத்தை கச்சிதமாக முடித்துக் கொண்டு, பிற்பாடு பாப்லோவை சமாளித்துக் கொள்ளலாம் என்கிற நரித்தந்திரத்தோடு கை கோர்த்திருந்தார்.

தேர்தலுக்கு வந்துவிட்டதால் பாப்லோ அதுவரை கண்டிராத சில புதிய எதிர்ப்புகளையும் சமாளிக்க வேண்டியிருந்தது. கார்டெல்களுக்கு எதிராக அதுவரை வாயே திறக்காதிருந்த மக்கள், இவர்கள் தங்களிடம் ஓட்டுப் பிச்சை கேட்க வந்ததால், கண்டமேனிக்கு பேச ஆரம்பித்தார்கள்.

அதுவரை ‘கார்டெல்’ என்கிற சொல் கவுரவமாக உச்சரிக்கப்பட்டுக் கொண்டிருந்தது. பொதுவாழ்வுக்கு வந்துவிட்டதாலோ என்னவோ, இவர்களையெல்லாம் கடத்தல்காரர்கள் என்று பச்சையாகவே பேச ஆரம்பித்து விட்டார்கள்.

பழம் தின்று கொட்டை போட்ட அரசியல்வாதிகள் எல்லாம், “கடத்தல் முதலைகளின் கையில் அரசுப் பொறுப்பை கொடுப்பதைவிட கழுத்தை அறுத்துக் கொண்டு ஒவ்வொரு கொலம்பிய குடிமகனும் செத்துவிடலாம்...” என்று காட்டமாகப் பேச ஆரம்பித்தார்கள்.

‘இவனுங்களை எல்லாம் போட்டுத் தாளிக்கிறேன்...’ என்று வெகுண்டெழுந்த பாப்லோவை, ஆல்பெர்ட்டோதான் அமைதிப் படுத்தினார்.“போதை பிசினஸ் வேறு, அரசியல் வேறு. தேர்தல் களத்தில் பேசப்படும் பேச்சுக்கெல்லாம் எந்தப் பொருளும் கிடையாது.

இன்று உன்னை கேவலப்படுத்தி பேசுபவனுடைய உதவியே, நாளை உனக்கு தேவைப்படும். எதையும் கண்டுகொள்ளாதே. உன்னுடன் ஓட அவனையும் அனுமதி. ஆனால், அவனைவிட வேகமாக ஓடி இலக்கை அடைவதற்காக கடுமையாக முயற்சி செய்...” என்று அறிவுறுத்தினார்.

‘நீங்கள் கொஞ்சம் ஒதுங்கியே இருங்கள்...’ என்று பாப்லோ சொல்லியிருந்தாலும், அவரது சகாக்கள் அப்படி இருந்து விடவில்லை. எந்த வகையிலெல்லாம் பாப்லோவுக்கு ஆதரவைப் பெருக்க முடியுமோ, அத்தனை முயற்சிகளையும் அவரவர் பங்குக்கு செய்து கொண்டேதான் இருந்தார்கள்.

பாப்லோவை ஆதரித்து எழுதும்படி ஊடகங்களுக்கு ‘அன்பாக’ கோரிக்கை விடுத்தார்கள். ‘வெறும் அன்பு வேலைக்கு ஆகாது’ என்றவர்களின் அன்புக்கு விலை நிர்ணயிக்கப்பட்டது. அன்புக்கும் அடங்கமாட்டோம், காசுக்கும் பணியமாட்டோம் என்றவர்கள் துப்பாக்கி முனையில் பாப்லோ எஸ்கோபார் புகழ் பாடவேண்டிய அவலநிலை இருந்தது. இதன் விளைவாக, ‘நவீன ராபின்ஹுட் பாப்லோ’ என்று தங்கள் மனசாட்சியை அடகுவைத்து தலையங்கம் எழுதின பத்திரிகைகள்.

மக்களுக்கு பாப்லோ கொடுத்த வாக்குறுதிகள் எளிமையானவை.“ஃபுட்பால் கிரவுண்டில் விளக்கு எரியும்...”“சர்ச்சுகளுக்கு பெயிண்ட் அடிக்கப்படும்...”“பள்ளி மாணவர்களுக்கு இலவச நோட்டுப் புத்தகங்கள்...”இதுபோல சப்பையான வாக்குறுதிகள்தான் பெரும்பாலும்.

‘கொலம்பியாவை கோபுரமாக்குவோம்...’ என்று பேசிக்கொண்டிருந்த அவரது போட்டியாளர்கள், இந்த சின்ன லெவல் வாக்குறுதிகளைக் கண்டு நகைத்தார்கள்.
ஆனால் -மக்கள், பாப்லோ கொடுக்கும் வாக்குறுதிகளைத்தான் நம்பினார்கள். அவர்களுடைய உடனடித்தேவை என்னவோ, அதை குறிவைத்துத்தான் பாப்லோ பேசினார்.

அப்போது கொலம்பியாவில் அரசியல்வாதி களாக இருந்தவர்கள் பெரும்பாலும் பணக்காரர்கள். அரசியல் என்பதே பணக்காரர்களின் பொழுதுபோக்காக இருந்தது. மாறாக, சாதாரண குடும்பத்தில் பிறந்து, கடினப்பட்டு போதைத்தொழில் செய்து முன்னேறிய பாப்லோவை தங்களில் ஒருவனாக மக்கள் நினைத்தார்கள். தங்களில் ஒருவன், பரம்பரை பணக்காரர்களை எதிர்த்து அதிகாரத்தை கைப்பற்றினால்தான் அதிகாரம் ஒரே இடத்தில்
குவிந்துவிடாமல் பரவலாகுமென்று நம்பினார்கள்.

(மிரட்டுவோம்)

யுவகிருஷ்ணா ஓவியம்: அரஸ்