அன்பை பரிசாக்குங்கள்!வழிகாட்டும் அன்புப் பெட்டகம்

சமீபமாய் மதுரையைக் கலக்கிக்கொண்டிருக்கும் பெயர், ‘அன்புப் பெட்டகம்’. வாட்ஸ் அப், ஃபேஸ்புக் எங்கும் இதுதான் ஹாட் டாக். அது என்ன அன்புப் பெட்டகம்? நல்ல நிலையில் உள்ள பொருட்கள் ஏதும் உங்களிடம் இருந்து, அது உங்களுக்குத் தேவைப்படாது என நீங்கள் நினைத்தால், அதை இந்த நிறுவனத்துக்குக் கொடுக்கலாம். இவர்கள் அதை அவசியம் தேவை என்ற நிலையில் உள்ளவர்களுக்கு தானமாக வழங்கிவிடுவார்கள். இதுதான் அன்புப் பெட்டகம்.

மதுரை இளம் பெண்கள் மற்றும் ARC குழுமத்தின் கூட்டு முயற்சி தான் இந்த ‘அன்புப் பெட்டகம்’. மதுரை பாத்திமா பெண்கள் கல்லூரிக்கு எதிர்ப்புறம் இந்த அமைப்பு உள்ளது. இந்த அமைப்பைச் சேர்ந்த சுகன்யா ரகுராமிடம் பேசினோம்.“இந்த கான்செப்ட்டை திருநெல்வேலியில்தான் முதல் முறையாக ஆரம்பித்தார்கள்...’’ உற்சாகத்துடன் பேச ஆரம்பித்தார் சுகன்யா ரகுராம்.

‘‘அதே மாதிரி இங்கேயும் ஆரம்பிக்க நினைத்தோம். ARC டிரான்ஸ்போர்ட் சர்வீஸ் குழுமத்துடனும் ‘LC India’ என்னும் Lady Circle India அமைப்பின் மதுரைக் கிளையுடனும் சேர்ந்துதான் இதை தொடங்கியுள்ளோம்.

பார்வையற்றவர்கள் பங்கேற்கும் ரேலி, ஆதரவற்றோர்க்கான சிறப்பு மருத்துவ முகாம், மாற்றுத் திறனாளிகளுக்குத் தேவையான சக்கர நாற்காலிகள் வழங்கும் நிகழ்வு என்று எங்கள் சேவை பலவகைகளில் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இப்படியான நேரத்தில்தான் எங்களுக்கு இந்த ‘Wall Of Happiness’ கான்செப்ட்டை செய்ய வேண்டும் என்று தோன்றியது.

கல்லூரிக்கு எதிர்ப்புறம் ஒரு சின்ன குடில் மாதிரி அமைத்து அதில் சில அலமாரிகளை உருவாக்கியுள்ளோம். ‘உங்களுக்குத் தேவையற்ற, நல்ல நிலையில் இருக்கக்கூடிய உடைகள், புத்தகங்கள் என எதுவாயினும் அந்த அலமாரியில் நீங்கள் வைத்துவிடலாம். உணவுப்பொருட்கள் மட்டும் இப்போதைக்கு வேண்டாம்’ என அறிவித்திருக்கிறோம்.

எங்கள் குழுவில் இருந்தே ஒரு நபர் அங்கு பாதுகாவலராக இருப்பார். அங்கே பொருட்கள் வைப்பவர்களிடம் பெயர் மற்றும் முகவரி வாங்கிக்கொள்வோம். யாராவது இதில் இருக்கும் பொருட்களை எடுத்துக்கொண்டு போனால் நாங்கள் பெரும்பாலும் அவர்களுக்கு இடையூறு செய்ய மாட்டோம்.

பணம் வைப்பதையும் நாங்கள் முடிந்தவரை தவிர்க்கச் சொல்லியுள்ளோம். ஒருவர் இப்படித்தான் உடைகளோடு 800 ரூபாய் பணமும் சேர்த்து வைத்திருந்தார். அவரைத் தொடர்புகொண்டு பணத்தைக் கொடுக்க முயற்சி எடுத்துள்ளோம்.

பணமாகக் கொடுக்க நிறைய அமைப்புகள் இருக்கு. அங்கு நீங்கள் நேரடியாகப் போய் செலவிடலாம். இந்த கான்செப்ட் முக்கியமாக புத்தகங்கள், உடைகள், ஏழைக் குழந்தைகளுக்கான பால் பாட்டில்கள், விளையாட்டுப் பொருட்கள், வீட்டு உபயோகப் பொருட்களான மிக்ஸி, கிரைண்டர் போன்றவற்றை தேவைப்படுபவர்களிடம் சேர்ப்பதுதான்.

உதாரணத்துக்கு, 10ம் வகுப்பு முடித்த ஒரு மாணவர் தன் பழைய பள்ளிப் புத்தகங்களை இங்கு கொண்டு வந்து கொடுக்கலாம். அது இன்னொரு குழந்தைக்கு உதவியாக இருக்கும். இதை நகரத்தில் இன்னும் சில இடங்களில் ஆரம்பிக்க முடிவு செய்துள்ளோம்.

ஆனால், எல்லா இடங்களிலும் ஒரு பொறுப்பாளரை அமரவைத்துக் கண்காணிப்பது இப்போதைக்கு எங்களுக்கு சாத்தியம் இல்லாத விஷயம். அதனால், அந்த ஏரியா மக்களுக்கு இது குறித்த புரிதலைக் கொடுத்து அவர்கள் கண்காணிப்பில் விடலாமா என்று யோசிக்கிறோம்.  தேவைப்படும் எல்லோருக்கும் தேவையான ஒவ்வொரு பொருளும் போய்ச் சேர வேண்டும். இதுதான் எங்கள் நீண்ட கால இலக்கு. எங்கள் இலட்சியக் கனவு...’’ கண்கள் மின்ன பேசுகிறார் சுகன்யா ரகுராம்.