பல்லாவரம் சந்தை



அறிந்த இடம் அறியாத விஷயம்

கோயம்பேடு மார்க்கெட், பெட்ஸ் மார்க்கெட், மூர் மார்க்கெட், அவ்வப்போது நடக்கும் ஃபர்னிச்சர் ஃபேர்கள் என ஒவ்வொன்றுக்கும் தனித்தனியே போயிருப்பீர்கள். ஆனால், இவையெல்லாம் ஒட்டுமொத்தமாக ஒரே இடத்தில் சங்கமித்திருக்கும் பல்லாவரம் வெள்ளிக்கிழமை சந்தைக்கு சென்றிருக்கிறீர்களா?

வாரந்தோறும் வெள்ளிக்கிழமை மட்டுமே கூடும் மிகப் பழமையான சந்தை இது. ஃப்ரஷ் ஐட்டங்கள் தொடங்கி செகண்ட் ஹேண்ட் வரை இங்கு கிடைக்காத பொருட்களே இல்லை. குண்டூசி முதல் சோனி டிவி வரை சகலமும் பெறலாம்.

விமானநிலைய டெர்மினலுக்கு எதிரே திரிசூலம் ரயில்வே கேட் செல்லும் வழியில் வலப்புறமாக நீண்டு செல்கிறது ஒரு பாதை. ரயில்வே டிராக்கை ஒட்டியபடியே பல்லாவரம் மேம்பாலம் வரை செல்லும் அந்த ஒன்றரை கி.மீ பாதையில்தான் நடக்கிறது சந்தை. இதை ஓல்டு டிரங்க் ரோடு என்கிறார்கள்.

‘‘டூவீலருக்கு பத்து ரூபாய் சார்...’’ என்கின்றனர் நுழையும் இடத்தில் வசூலில் நிற்கும் இருவர். அவர்களிடம் டிக்கெட் வாங்கிவிட்டு, ‘‘எங்க பார்க்கிங் பண்ணணும்?’’ என்றோம்.‘‘அப்டியே வண்டியிலே போக வேண்டியதுதான். ரெண்டு கிமீ நடந்துருவீயா? அப்படின்னா அந்தாண்ட உட்டுட்டு போ...’’ என்றார் அதிலொருவர்.

இதேபோல பல்லாவரம் மேம்பாலம் அருகேயும் இரண்டு பேர்கள் வசூலில் நிற்பதாகச் சொன்னார் நம்ம போட்டோகிராபர். முதலில் வரிசை கட்டுகின்றன ஃபர்னிச்சர் கடைகள். அதன்முன் அமைதியாக நின்றிருந்த அண்ணனிடம், ‘‘இந்தச் சேர் எவ்வளவு?’’ எனக் கேட்டோம். ‘‘சார்... அதை நாங்க பார்த்து வச்சிருக்கோம். நீங்க வேற பாருங்க...’’ என்றனர் அதனருகில் நின்றிருந்த இருவர்.

‘‘இல்லங்க... ரேட்தான் விசாரிக்கேன்...’’ என்றபடி இன்னொன்றை காட்டி விலை கேட்டோம். வயரில் பின்னப்பட்டிருக்கும் சோபாவும், இரண்டு சேர்களும் சேர்த்து ரூ.14 ஆயிரம் என்றார் அண்ணன்.‘‘இவ்வளவா? செகண்ட் ஹேண்ட்தானே?’’ என்றோம்.‘‘தம்பி, இது ரோஸ்வுட். இந்தக் காலத்துல இதுமாதிரி கிடைக்காது. சேரையும் சோபாவையும் மடக்கி கூட வச்சிக்கலாம். ஈஸியா எடுத்திட்டும் போகலாம். தண்ணீர்ல போட்டாலும் ஒண்ணும் ஆகாது. வேணும்னா 11 ஆயிரத்துக்கு எடுத்துக்கோங்க...’’ என்றார்.

அப்படியே நகர்ந்து, எதிரிலிருந்த மர ஸ்டூல் மற்றும் டேபிள் பக்கம் வந்தோம். நானூறு, ஐநூறு என அதன் விலையைக் கேட்டுவிட்டு, புதிய குக்கர், தோசைக்கல் தவா, கேஸ் ஸ்டவ்  விற்கும் ஒரு கடைமுன் நின்றோம். இவற்றை மொத்தமாக வாங்கி அருகில் அடுக்கி வைத்துக் கொண்டிருந்தது ஒரு குடும்பம்.

அங்கே நான்ஸ்டிக் தோசை தவா 300 ரூபாய் என்றவரிடம் பேரம் பேசி 275 ரூபாய்க்கு வாங்கிக் கொண்டிருந்தார் ஒருவர். ‘‘எண்ணெய் விட வேண்டியதில்ல. அப்படியே மாவை விட்டு எடுக்க வேண்டியதுதான். எலெக்ட்ரிக் ஸ்டவ்ல வைக்க முடியாது...’’ என்றார் கடைக்காரர் அந்த தவாவைத் தூக்கியவாறு. அருகில் சென்று கேஸ் அடுப்பின் விலையை விசாரித்தோம். ‘‘பெரிசு 1400, சிறுசு 1200...’’

‘‘தம்பி, என்னையெல்லாம் போட்டோ பிடிக்க மாட்டீயா?’’ என அங்கலாய்த்த பாட்டியிடம், ‘‘எந்த ஊர்ல இருந்து வர்றீங்க?’’

என்றோம். ‘‘இந்த பல்லாவரம்தான். மார்க்கெட் கிட்ட கடை இருக்கு. வெள்ளிக்கிழமை இங்கெண வந்திடுவேன்...’’ என்றவர், விதவிதமான கவரிங் செயின்கள், வளையல்கள், பாசிகள் புதுசிலும், பழசிலுமாக விற்பனைக்கு வைத்திருந்தார்.

அடுத்து, வரிசையாக சைக்கிள் வீல்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்த ஒரு கடையைப் பார்த்தோம். டிரை சைக்கிள், சைக்கிள் என விதவிதமான வீல்கள். எல்லாம் செகண்ட்ஸ். ‘‘எவ்வளவு?’’ என்றோம் வீலை சோதித்துக் கொண்டிருந்தவரிடம்.‘‘இது 170 ரூபானு சொல்றாருங்க. 150க்குக் கேட்குறேன். அதுக்கு கொஞ்சம் பென்ட் ஆன வீலை எடுத்திட்டுப்போனு சொல்றாரு. பேக் வீல்தான் சைக்கிளுக்கு முதுகெலும்பு.

அதுல பென்ட் இருந்தா ஓட்ட முடியாது...’’ என சைக்கிள் லெக்சர் கொடுத்தவர், கடைசி வரை பேரம் படியாமல் அதை 170 ரூபாய்க்கு வாங்கினார்.

இந்தக் கடைக்கு அருகில் ஜீன்ஸ், ஷாட்ஸ் எல்லாமும் விற்பனைக்கு வைத்திருந்தார் ஒரு வியாபாரி. ஜீன்ஸ் நூறு ரூபாய்தான். செகண்ட் ஹேண்ட் என்றாலும் நன்றாகவே இருந்தது.

இதற்கு எதிரில் நரம்புகள் அறுந்து போன கித்தாருடன் ஒருவர் நிற்பதைக் கவனித்தோம். அவரிடம் மெல்ல பேச்சுக் கொடுத்தோம். கித்தார் பிரியராம். நானூறு ரூபாய்க்கு அதை வாங்கியதாகச் சொன்னவர், ‘‘நரம்புகள சரிசெய்துட்டா சூப்பரா வொர்க் ஆகும் சார்...’’ என்றார் நம்பிக்கையாக.

அரை கி.மீ நடந்ததும் கடைகளுக்குப் பின்புறத்தில் இருந்த ஒரு டீக்கடையில் கொஞ்சம் ஆசுவாசமானோம்.அதனருகே, ‘‘நூறு ரூபாய்க்கு அஞ்சு லிட்டர் குக்கர் வராதும்மா...’’ என செகண்ட் ஹேண்ட் குக்கருக்கு சண்டை நடப்பதைப் பார்த்தோம்.‘‘இந்த குக்கர்ல ரப்பர் எல்லாம் போட்டு பழுது பார்க்க இன்னும் இருநூறு ரூவா எக்ஸ்ட்ரா செலவாகும். அதனால, நூறு ரூபாய பிடிங்க...’’ என்கிறார் அந்தப் பெண்மணி. முடியவே முடியாது என நிற்கிறார் கடைக்காரர்.

தொடர்ந்து பழைய பேக் கடையைக் கவனித்தோம். ஒரு பெண்மணி ஸ்கூல் பேக்கை 50 ரூபாய்க்குக் கேட்டுக் கொண்டிருந்தார். இதே புதிய பேக் 300 ரூபாய்க்கு ஒரு கடையில் விற்றது ஞாபகத்திற்கு வந்தது.‘‘நிறுவனத் தயாரிப்பு... நூல் எதுவும் வெளியே வராது.

பாத்ரூம், வீட்டு வாசல்னு போட்டுக்கலாம்...’’ என்றொரு ஒலிபெருக்கி தகவலைக் கேட்டு அருகில் போனோம். ஒரு குட்டியானை வண்டியில் அடுக்கடுக்காக கால்மிதிகளைப் போட்டு அமர்ந்திருந்தனர் இருவர். ஆனால், கடைசி வரைக்கும் அது எந்த நிறுவனத்தின் தயாரிப்பு என்பதை சொல்லவே இல்லை அந்த ஒலிபெருக்கி.

இந்தக் கடைகளுக்கு இடையிடையே பல மளிகைக்கடைகள். பருப்பு வகைகளில் தொடங்கி கிராம்பு வரை அத்தனையும் கிடைக்கிறது. புளி கிலோ ரூ.120, உளுந்தம் பருப்பு ஒன்றரை கிலோ நூறு ரூபாய், பூண்டு இரண்டு கிலோ நூறு ரூபாய் என சிலவற்றின் விலையை போர்டில் எழுதி வைத்துள்ளனர். அருகிலேயே ரஸ்க், பிஸ்கட் கடைகள் ஜொலிக்கின்றன.

அடுத்து நரிக்குறவர்களும், சில ஜென்டில்மேன்களும் கூட்டமாக நிற்பதை எட்டிப் பார்த்தோம். வெரைட்டியான மீன்பிடி தூண்டில்களை அங்கு விற்பனைக்கு வைத்திருந்தார் ஒருவர்.‘‘எவ்வளவு?’’ என்பதை நரிக்குறவர் தன் மொழியில் கேட்டார்.‘‘250, 350, 450...’’ என்றார் விற்பனையாளர். நவீனமான தூண்டில் ஒன்றைப் பிடித்துப் பார்த்தோம். ‘‘சார்... பத்து கிலோ அசால்ட்டா பிடிக்கும்...’’ என்றார். அதை அவரிடமே கொடுத்துவிட்டு அருகில் இருந்த பழைய நாணயங்கள் சேகரிப்புக் கடையை வேடிக்கை பார்த்தோம்.

‘‘ஓட்டைக் காலணா ஒன்று இருபது ரூபாய்...’’ என விலை சொல்லும் அந்த இளைஞருக்கு பல்லாவரம்தான் சொந்த ஊர். ‘‘ஆரம்பத்துல சேகரிப்பாளரா இருந்து நிறைய கலெக்ட் பண்ணினேன். அப்புறம் இதை என்ன பண்றதுனு தெரியலை. மற்ற சேகரிப்பாளருக்கு விற்கலாம்னு கடை விரிச்சிட்டேன்...’’ என்றார்.சரி, பெட்ஸ் மார்க்கெட் எங்கிருக்கிறது?

கடைகளின் பின்புறத்தில் கிடைக்கும் காலி இடங்களில் சத்தமில்லாமல் நடக்கிறது பெட்ஸ் மார்க்கெட். நெரிசல் மிகுந்த அந்தப் பகுதிக்குள் நுழைந்தோம். ஆடு, கோழி, சேவல், வான்கோழி, முயல், புறா, லவ் பேர்ட்ஸ், நாய்... போன்ற செல்லப் பிராணிகளை விற்பனைக்கு வைத்திருந்தனர்.

இரண்டு சேவல் 750 ரூபாய் என்றவரிடம் 650 ரூபாய்க்கு பலரும் பேரம் பேசுவதைப் பார்த்தோம். அவர் குறைப்பதாக இல்லை. ஜோடி முயல் 400 ரூபாய் என்றவரைத் தாண்டி வெளியேறினோம்.

‘‘நிலக்கடலை கிலோ 20. மூணு கிலோ 50. சீனிக்கிழங்கு, மரவள்ளிக்கிழங்குக் கிலோ 30 ரூவா...’’ என வண்டியில் கூவிக் கூவி விற்பனை செய்கிறார்கள் சிலர். அப்படியே வலது பக்கமாக தாம்பரம் ஹைவேயைப் பிடிக்கும் சாலை ஓரமாக ஒதுங்கினோம். இந்த இடம் கார்டன் ஏரியா. அழகழகான ரோஜாக்கள், செம்பருத்தி, செவ்வந்தி, வாழை, கொய்யா என விதவிதமான தொட்டிச் செடிகளை இங்கே பார்க்க முடிகிறது. பாக்கெட் கன்று முப்பது ரூபாய் என்றும், தொட்டி அறுபது ரூபாய் என்றும் விற்கின்றனர்.

மாட்டு வண்டிகளில் இந்த தொட்டிச் செடிகளை கொண்டு வந்திருந்தது அற்புதமாக இருந்தது. இதில் சிலர் மாதவரம் ஏரியாவிலிருந்து வருவதாகச் சொன்னார்கள். கூடவே, இயற்கை உரக்கடைகளும் களைகட்டுகின்றன. மண்புழு உரப் பாக்கெட் பற்றி விளக்கிக் கொண்டிருந்தார் ஒருவர். இங்கே பெண்கள் கூட்டம் அலைமோதுகிறது.

மீண்டும் ஓல்டு டிரங்க் சாலையின் முடிவுப் பகுதிக்கு வந்து சேர்ந்தோம். இந்த எல்லை காய்கறி மார்க்கெட்டால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. கீரை விலை 15 ரூபாய் என்றார் ஒரு பெண்மணி. ‘‘ஏன்? வழக்கமா 5 ரூபாய்க்கு கொடுப்பீங்களே?’’ என்றோம்.

‘‘கீரை சீசன் இல்லாத காலம். அதான் ரேட் அதிகம்...’’ என்றார் அவர். அருகிலேயே இளநீருடன் தேங்காய்களை கூறு போட்டு விற்பனைக்கு வைத்திருந்தார் ஒருவர். சிறிய காய்தான். நான்கு 50 ரூபாய் என்றும், எட்டு நூறு ரூபாய் என்றும் விற்றவரிடம் ஒரு கூறை வாங்கி பாலத்தின் அருகில் வந்தோம். கார்கள் நிறைந்திருந்தன. ஆம். தெருவோரவாசிகளிலிருந்து பங்களாவில் வசிப்பவர்கள் வரை எல்லோரையும் அரவணைக்கும் சந்தையாக பல்லாவரம் மிளிர்கிறது!

வரலாறு

*181 ஆண்டுகளாக நடந்து வருகிறது இந்த சந்தை. 19ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பிரிட்டிஷ் அரசின் ஒரு ராணுவப்பிரிவினர் செயின்ட் தாமஸ் மலைக்கு மாற்றப்பட்டனர். அவர்களுக்குக் கால்நடைகளின் தேவை அதிகமிருந்தது. அதனால், 1836ல் அருகிலுள்ள கிராம மக்களிடம் ஆலோசித்து இங்கே கால்நடைச் சந்தையை உருவாக்கியுள்ளனர். காலப்போக்கில் எல்லாமும் கிடைக்கும் ஏ டூ இசட் மார்க்கெட்டாக இது உருமாறியுள்ளது.

* இந்த இடம் செயின்ட் தாமஸ் மவுண்ட் மற்றும் பல்லாவரம் கன்டோன்மென்ட் போர்டுக்குச் சொந்தமானது.

* ஆரம்பத்தில் சாலைக்கு அந்தப்புறமுள்ள ‘Cattle shandy’ சாலையில்தான் சந்தை நடந்தது. ஆறு ஆண்டுகளுக்கு முன்பு ஓல்டு டிரங்க் சாலைப் பக்கமாக மாற்றப்பட்டுள்ளது.

* காலை 6 மணிக்குத் தொடங்கி இரவு ஒன்பது மணிக்குப் பிறகே அடங்குகிறது. இதனால், வியாபாரிகள் வியாழக்கிழமை இரவு முதலே டேரா போட்டு விடுகின்றனர்.

* ஒவ்வொரு வாரமும் சுமார் ஒரு லட்சம் பேர் வந்து போகின்றனர்.

* ‘‘மொத்தம் மூவாயிரம் கடைகள் வரை இருக்கும். கடைக்கேத்த மாதிரி வாடகை வசூலிப்பாங்க. வண்டியில போட்டு விற்கிற கடைக்கு நூறு ரூபான்னா, பெரிய கடைக்கு ஆயிரம் ரூபா.

தவிர, டூவீலர் உள்ளவர பத்து ரூபா. பொருட்களைக் கொண்டு வர்ற குட்டியானைக்கு நூறு ரூபா. மொத்தத்துல, வெள்ளிக்கிழமையில வாடகை மூலமா சுமார் 2 லட்ச ரூபாய் கன்டோன்மென்ட் குத்தகைதாரருக்குக் கிடைக்கும்...’’ என்றார் அங்கிருந்த வியாபாரி. 

பேராச்சி கண்ணன்

ஆ.வின்சென்ட் பால்