ஊஞ்சல் தேநீர்



நம்முடைய நினைவுகளில் இருந்து ஒருவர் அகலாமல் இருக்கிறார் என்றால், அவரை நாம் மறக்காமல் இருக்கிறோம் என்பதல்ல பொருள். மறுக்கவோ, மறக்கவோ முடியாத பல காரியங்களை அவர் நமக்குச் செய்திருக்கிறார் என்றுதான் புரிந்துகொள்ள வேண்டும்.

அவ்வாறு அவர் செய்திருக்கும் காரியங்கள் நல்லவிதமாக இருக்கும்பட்சத்தில் அவரை நாம் நம்முடைய இறுதிமூச்சு உள்ளவரை விலகுவதில்லை. எழுத்தாளர் தஞ்சை ப்ரகாஷ் என்னுடைய நினைவுகளில் மட்டுமல்ல; நிஜத்திலும் வாழ்ந்துகொண்டிருப்பவர்.

எழுத்தின் சகல நுட்பங்களையும் கற்பித்து, என்னை எனக்கே அறிமுகப்படுத்திய அவர் இறந்து பதினேழு ஆண்டுகள் ஆகின்றன. இந்த பதினேழு ஆண்டுகளில் அவரை நான் நினைக்காத நாளில்லை என்று சொல்வது மிகையாகப் படலாம். ஆனால், அதுதான் உண்மையென்பதை என்போல அவரிடமிருந்து விஷயதானத்தைப் பெற்றுக் கொண்டவர்களால் விளங்கிக் கொள்ள முடியும்.

தனிச்சுற்று இதழ்களிலும் பாக்கெட் நாவல்களிலும் கவிதைகளை எழுதிக்கொண்டு இருந்த என்னை, நவீன இலக்கியத்தின் பக்கமும் நல்ல எழுத்தாளர்களை நோக்கியும் பயணிக்க வைத்தவர் அவரே.

அவருடைய அறிமுகம் வாய்க்கும் வரை மரபுக் கவிதைகளைத் தாண்டி நான் வரவில்லை. ஓரளவு யாப்புப் பயிற்சி பெற்றிருந்த காரணத்தால் அதையே கவிதை எழுதுவதற்கான முழுத் தகுதியாக நம்பிக்கொண்டிருந்தேன். பெரிய வாசிப்பில்லை. ஆழ்ந்து ஒரு விஷயத்தை அணுகி, அதைப் பக்குவத்துடன் பார்க்கவும் பழகியிருக்கவில்லை.

பத்திரிகைகளில் பெயர் பார்த்து சந்தோஷப்படும் சராசரி மனநிலையில்தான் என் பொழுதுகள் கழிந்தன. பத்திரி கைகளில் ‘ஸ்பேஸ் ஃபில்லர்’களாக பிரசுரிக்கப்பட்ட என்னுடைய கவிதைகளை, உலகமே உற்று நோக்கிக்கொண்டிருப்பதான பாவனையில் மிதந்துகொண்டிருந்தேன்.

அக்காலங்களில் கவிதை என்று பிரசுரமானவற்றை என் எந்தக் கவிதைத் தொகுப்பிலும் இன்றுவரை இணைக்கவில்லை. காரணம், அது கவிதைகளே இல்லை என்பதை ப்ரகாஷ் போன்றவர்களே புரியவைத்தார்கள்.

துணுக்குகளை மடக்கி எழுதியதை கவிதை என்னும் பெயரில் அப்போதைய தினசரிகள் தங்கள் இலவச இணைப்புகளில் பிரசுரித்துக்கொண்டிருந்தன. அதையும் கவிதையாகக் கருதி, இந்த வாரத்தில் என்ன வந்திருக்கிறது எனக்கேட்டு, பாராட்டியும் விமர்சித்தும் என்னை ஒழுங்கு செய்தவர் தஞ்சை ப்ரகாஷே.

வெறும் ஆர்வப் பெருக்குடன் அலைந்துகொண்டிருந்த என்னை, இலக்கியத்தின் முகத் துவாரத்தில் கொண்டு நிறுத்தும் காரியத்தைச் செய்தவர் அவர்தான். அவருடைய பாராட்டுகளைப் போலவே விமர்சனங்களும் மென்மையானவை. ‘தூங்குகிற குழந்தையின் கையிலிருக்கும் கிளுகிளுப்பையை பிரித்தெடுப்பதுபோல’ என கு.அழகிரிசாமி எழுதுவாரே அப்படி.

தோற்றத்தில் ஓஷோவைப் போலிருக்கும் அவர், உதிர்க்கும் சொற்களில் உண்மையும் அன்பும் மிகுந்திருக்கும். தாடியை நீவிக்கொண்டே அவர் பேசும் அழகில் சொக்கிக் கிடந்த நாள்கள் அநேகம்.நெடிய உருவம். உருண்ட விழிகள்.

தீட்சண்யமான பார்வை. எதைப் பற்றியும் தெளிவாக சொல்பவராகவும் சொல்லித்தரக்கூடியவராகவும் அவர் இருந்தார். வெகுஜனப் பத்திரிகைகளில் எழுதிவந்த நான், அவரின் அறிவுறுத்தலுக்குப் பிறகே இலக்கியப் பத்திரிகைகளுக்குத் திரும்பினேன்.

இலக்கியத்தை வாசித்து நுகரும் பயிற்சியை அவரில்லாமல் நான் பெற்றிருப்பேனா என்பது சந்தேகமே. அவர் என் ஆசான்களில் முதன்மையானவர். எனக்கு மட்டுமல்ல, எனையொத்த தஞ்சை படைப்பாளிகள் பலருக்கும் அவர்தான் ஆசானெனும் ஸ்தானத்தில் இருந்தார்; இருக்கிறார்.

அவருக்கு எவ்வளவு தெரியுமென அளவிடக்கூடிய தராசு எங்களிடம் இருக்கவில்லை. அவர் ஒருவரைத் தவிர யாருடைய பேச்சையும் நாங்கள் கேட்டதுமில்லை. அவரோடு முரண்படுவோம். ஆனால், அவர் உறவை முறித்துக்கொள்ள எண்ணியதில்லை.

எந்த இலக்கிய சர்ச்சைக்கும் தீர்ப்பு சொல்லக்கூடிய நீதிமானாக அவரை வைத்திருந்தோம். அவரும், தான் சொல்வதைக் கேட்கிறார்கள் என்பதற்காக கூடுதலாக எங்களை வழிநடத்த மாட்டார். எங்கள் போக்கில் எங்களை அனுமதித்து இலக்கிய சாளரத்தைத் திறந்துவிடுவார்.

ஒருநாள் இருநாள் அல்ல, ஒவ்வொரு நாளும் புதிய செய்திகளைச் சொல்பவராக அவர் இருந்தார். ஒரே அடியாக கருத்துகளை அடித்து நொறுக்குபவராக அவர் இருந்ததில்லை. இது அந்தக் காலத்தில் அப்படி இருந்தது, இப்போது இப்படி இருக்கிறது என்று மட்டுமே விளக்குவார்.

அறிந்தும் அறியாமல் நாங்கள் முன்வைக்கும் கேள்விகளை உள்வாங்கி, அதற்குரிய பதில்களை அளிப்பார். அவர் சொல்வதெல்லாம் சரியா, சரியில்லையா என்னும் சந்தேகமே எங்களுக்கு எழுந்ததில்லை. ஏனெனில், அவருடைய உரையாடல் தொனியில் அத்தகைய தெளிவு இருக்கும்.

பழந்தமிழ் இலக்கியத்தில் பாண்டித்தியம் உடைய ஒருவர், நவீன இலக்கியத்தை அலட்சியப்படுத்துவார். அதேபோல நவீன இலக்கியத்தை பயின்ற ஒருவர், பழந்தமிழ் இலக்கியத்தை மருந்துக்குக்கூட சேர்த்துக்கொள்ள மாட்டார். ஆனால், தஞ்சை ப்ரகாஷ் இரண்டையும் பழுதற பயின்றவர்.

மரபின் தொடர்ச்சியே புதுமை என்று சொல்லக்கூடிய திராணி அவரிடமிருந்தது. புதுமை என்பதற்காக பொக்குகளையும் புழுதிகளையும் அவர் கொண்டாடியதில்லை. உலகக் காவியங்களை விரல் நுனியில் வைத்திருந்த அவர், பல மொழிகளைக் கற்றிருந்தார்.

ஆங்கிலம், சமஸ்கிருதம், மராட்டி, தெலுங்கு, ப்ரெஞ்ச், உருது, கன்னடம், வங்கம், மலையாளம் என பத்து மொழிகளில் அவருக்குப் புலமை இருந்தது. அம்மொழிகளில் அவ்வப்போது வெளிவரும் நூல்களை கவனித்து வாசிக்கும் பழக்கத்தையும் வைத்திருந்தார்.தஞ்சை கீழராஜவீதியில் ரப்பர் ஸ்டாம்ப், பிளாக் மேக்கிங்குடன் சேர்ந்த அச்சகக் கூடத்தை  நடத்தி வந்தார்.

அதை அச்சகக் கூடமென்று சொல்வதைவிட, இலக்கிய அரட்டைக்கூடம் என்றுதான் சொல்லவேண்டும். எப்போதும் அவரைச்சுற்றி ஓர் இலக்கிய வட்டம் அமர்ந்திருக்கும்.அந்த வட்டத்தில் பிரபஞ்சன், அசோகமித்திரன், கி.ராஜநாராயணன், எம்.வி. வெங்கட்ராம், வல்லிக்கண்ணன், வண்ணநிலவன், தேனுகா, மாலன், கரிச்சான்குஞ்சு, வெங்கட்சாமிநாதன், தி.ஜானகிராமன், வேல.ராமமூர்த்தி, தஞ்சாவூர்க் கவிராயர், சி.எம்.முத்து, நா.விச்வநாதன் எனப் பலர் அடங்குவர்.

“மிகச் சிறிய வசதிகளை உடைய ஒருவர், எப்படி ஆண்டுக்கணக்கில் நவீன இலக்கியத்தின் மீது ஆர்வமும் கவனமும் வைத்திருக்க முடியும்” என அசோகமித்திரன் ஆச்சர்யப்பட்டிருக்கிறார். அந்த ஆச்சர்யத்தில் அவரை “இலக்கிய யோகி” என்றும் அழைத்திருக்கிறார்
ஒருவர் எழுத்தாளராக ஆவதற்கு எவ்வளவு படிக்கவேண்டும் என்கிற அளவீடு இல்லை. எவ்வளவு படிக்கவேண்டும் என்பதுடன் எதையெதை படிக்கவேண்டும் என்பதையும் சேர்த்துக் கொள்ளலாம்.

தன்னுடைய எழுத்துகளை பிறர் படிக்கவேண்டும் என்று எண்ணக்கூடிய ஒருவர், பிறருடைய எழுத்துகளை எவ்வளவு படித்திருக்கிறார் என்பதில்தான் எழுத்தின் சூட்சுமங்கள் அடங்கியிருக்கிறது. நிரம்பப் படித்துவிடுவதால் மட்டுமே ஒருவர் எழுத்தாளரென்னும், அந்தஸ்தைப் பெற்றுவிடுவதில்லை.

எதுவுமே படிக்காமல், தன் வாழ்வில் நிகழ்ந்த சம்பவங்களை எழுதி, பெரிய எழுத்தாளர் எனும் பெயரை வாங்கிய எத்தனையோ எழுத்தாளர்கள் நம்மிடையே இருக்கிறார்கள். நான் சொல்வது, பள்ளிப் படிப்பையோ, பட்டப் படிப்பையோ அல்ல.

தன் வாழ்நாள் முழுக்க புத்தக வாசத்திலேயே உழன்றவராக எழுத்தாளர் தஞ்சை. ப்ரகாஷைச் சொல்லலாம். அவர் வாசித்தறியாத புத்தகங்களே இல்லை. நான்கு தலைமுறையைச் சேர்ந்த எழுத்தாளர்களை அவர் வாசித்திருந்தார். ஆழ்ந்தும் அகன்றும் அவர் வாசித்த பல விஷயங்களை எழுதவும் பேசவும் பழகியிருந்தார். நுனிப்புல் மேய்ந்து கருத்துச்சொல்லும் வழக்கம் அவரிடம் இருந்ததில்லை. எதையும் ஆய்ந்து விளக்கமளிக்கும் ஆற்றல் அவரிடமிருந்தது. பிரபலமான எழுத்தாளர்களிடம் எப்படி நடந்துகொள்வாரோ அப்படியேதான் பிரபலமில்லாத எழுத்தாளர்களிடமும் நடந்துகொள்வார்.

அன்றே தன் முதல் கதையை, கவிதையை எழுதியவராய் இருந்தாலும், அவரைப் பொறுத்தவரை எல்லோரும் ஒன்றுதான். என்னுடைய பள்ளிப் பருவத்தில் பெரும்பாலான விடுமுறைகளை அவருடன் கழித்திருக்கிறேன். என் தந்தையைக் காட்டிலும் கூடுதலான வயதுடைய அவர், எந்த இடத்திலும் என்னை சிறியவனாக நடத்தியதில்லை.

வயதுக்கு மீறிய செய்திகளை அறிந்துகொள்வதால் வழிமாறிவிடுவானோ என்று என் வீட்டிலுள்ளவர்களுக்கு கவலையிருந்தது. இலக்கியத்தின் இன்னொரு பகுதியைத் தெரிந்துகொள்ள முனைந்து, படிப்பிலும் ஒழுக்கத்திலும் தவறிவிடுவானோ என்றும் அஞ்சியிருக்கிறார்கள்.ஓரிருமுறை அப்பாவேகூட தஞ்சை ப்ரகாஷிடம் பழகுவது குறித்து விசனப்பட்டிருக்கிறார். “அவர் ஒருமாதிரி எழுதக்கூடியவர். அவருடன் உனக்கென்ன பழக்கம்” என்றிருக்கிறார்.

அந்த ஒருமாதிரியை கடைசிவரை ப்ரகாஷ் என்னுடன் பகிர்ந்துகொள்ளவே இல்லை.எழுத்தின் உச்சங்களை மட்டுமல்ல; எழுதுவதால் நேரும் கஷ்டங்களையும் அவர்மூலமே நான் அறிந்துகொண்டேன்.

(பேசலாம்...)

யுகபாரதி

ஓவியங்கள்: மனோகர்