ஸ்வீட் கார்னர்ஸ்தோட்டா ரவா

செய்தி

ஹெல்மெட் அணியாமல் பயணித்த இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கு அறிவுரையோடு, இனிப்பும் வழங்கி, நாகர்கோயில் போலீசார் நடவடிக்கை.

‘வேற யார் யாருக்கு இந்த மாதிரி ஸ்வீட் அறிவுரை வழங்கலாம்?’ ஹெல்மெட்டை கழற்றி, தலைமுடியை பிய்த்துக் கொண்டபோது மாட்டிய சில இனிப்பு யோசனைகள்:

சாலையில் நடந்து போகும்போதும், வாகனங்கள் ஓட்டும்போதும் செல்ஃபோன் பேசி, தற்கொலைக்கு முயற்சிப்பவர்களுக்கு ரவா கேசரி ஸ்வீட்டுடன் அறிவுரை வழங்கலாம். ‘ரவை என்றால் துப்பாக்கி புல்லட். அதைப்போன்ற ஆபத்தை தரக்கூடியதுதான் நடு ரோடு செல்ஃபோன் பேச்சு...’ என அட்வைஸ் மழை பொழிந்தால் சம்பந்தப்பட்டவர் வெறுத்துப் போய் செல்ஃபோனை அறிவுரையாளரின் கையில் திணித்துவிட்டு ஓட்டம் பிடிப்பார்.
 
அதற்கு மேலும் அவரை பிடித்து வைத்து அறிவுரை வழங்கினாலும், ‘சரி... சரி...’ என்று சொல்வாரே தவிர, அடுத்த நிமிடமே செல்ஃபோன் அவருடைய காதுகளை முத்தமிட ஆரம்பிக்கும். ஆகவே, இந்த மாதிரி அறிவுரைகள் எல்லோருடைய செல்லிலும் ரிங் டோனாக இருக்க சட்டம் இயற்ற வேண்டும்! அதேபோல் கார் ஓட்டும்போதும், நடு ரோடிலும் செல் பேசினால் சிக்னல் கட்டாகும் டெக்னாலஜியும் அமலுக்கு வர வேண்டும்!

அரியர்ஸ் பால்கோவா

ஆவின் நிறுவனத்தோடு இணைந்து தேர்வில் அரியர் வைக்கும் மாணவர்களுக்கு கல்லூரி பேராசிரியர் பால் கோவா கொடுத்து, அறிவுரை வழங்கலாம். தினமும் அரியராகும் பால்தான் ஸ்வீட் கோவாவாக மாறுகிறது என்ற உண்மையை மாணவருக்கு விளக்கினால், இம்மாதிரி அரிய தத்துவங்களை காது கொடுத்து கேட்பதற்கு பதில், படித்து அரியரை கிளியர் பண்ணுவதே சேஃப் என்று அவர் மெர்சலாவது உறுதி. 

அரியர்ஸ் வைக்கும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், கோவா விற்பனை சூடு பிடித்து ஆவின் நிறுவனத்தின் வரவு அதிகரிக்கும். பால் கோவா சாப்பிடும்போது, ‘நீ மாடு மேய்க்கத்தான் லாயக்கு!’ என்று அப்பா ஏசியது நினைவுக்கு வந்தாலும், ‘உனக்கு பால் வடியும் முகம்டீ...’ என தன்னோட ஆள் கொஞ்சலாக கூறியது அந்த ஏசல் நினைவுகளை ‘கூல்’ செய்துவிடும். அம்மாதிரி கொஞ்சல் காற்றில் மனதை பறக்க விட்டதுதான், அரியர் பிறந்ததற்கு மூல காரணம் என்பது நினைவுக்கே வராது!

குடி அல்வாவை வாழ வைக்கும்

டாஸ்மாக் வாயிலில் நின்று கொண்டு, ‘குடி குடியைக் கெடுக்கும்’ என்று குடிமகனிடம், ‘அல்வா’ ஸ்வீட்டுடன் அறிவுரை கூறலாம். வீட்டில் இருப்பவர்களுக்கு ‘அல்வா’ கொடுத்துவிட்டு, அத்தியாவசிய செலவுகளுக்கு வைத்திருக்கும் பணத்தை தேட்டை போட்டு குடிமகன்கள் கட்டிங் போடுவதால், அல்வா இந்த அறிவுரைக்கு சரியான சைட் டிஷ்!

ஆனால், ஊறுகாய் போன்ற கார வகையறாக்களைத் தவிர, வேறு எந்த சைட் டிஷ்ஷிற்கும் அந்த லொகேஷனில் வேலை இல்லாததால், அறிவுரை கூறுபவருக்கு ‘அல்வா’ கொடுத்துவிட்டு, வயிற்றில் ஒரு குவார்ட்டர், மடியில் ஒரு குவார்ட்டர் என சரக்கை கட்டிக்கொண்டு, அறிவுரைகளிலிருந்து தப்பிக்க குடிமகன் வேறுவழியாக வெளியேறி விட வாய்ப்புகள் உண்டு.

ஸோ, அறிவுரை கூறுபவர் அல்வாவை பெரும்பாலும் தன் வாயில்தான் போட்டுக் கொள்ள வேண்டி வரும். ஒட்டு அல்வாவாக இருந்தால், அதை வாயில் போட்டதும், அறிவுரைக்கு வாயே திறக்க முடியாமல் போனாலும் போகும். ஜாக்கிரதை!

பூந்தியின் மகத்துவம்

அரசு அலுவலகங்களில் லஞ்சம் வாங்கக் கூடாது என ஊழியர்களுக்கு பூந்தி லட்டு ஸ்வீட்டுடன் அறிவுரை வழங்கலாம். கையில் பிடிபடாத லட்டு துகள்கள்தான் ஃப்ரீயாக நடமாடும் பூந்தி லட்டாகின்றன.

அதே போல், ‘லஞ்சம் பெற்று பிடிபடாத வரைதான் ஃப்ரீயாக இருக்க முடியும். யாராவது போட்டுக் கொடுத்து விட்டால், லஞ்ச ஒழிப்புத் துறையினரிடம் முழு ‘லட்டாக’ மாட்டிக் கொள்ளவேண்டும்...’ என்ற தத்துவ மிக்ஸ் அறிவுரைகள் சம்பந்தப்பட்டவர்கள் காதில் விழுகிறதா, இல்லையா என்று சோதனை செய்ய தேவையான டெக்னாலஜி இன்னும் வளரவில்லை. அறிவுரையை காதில் வாங்கிக் கொள்ளக்கூட அவர்கள் ‘சம்திங்’ கேட்டால் கொடுப்பதற்கு, அறிவுரை வழங்குபவர் பூந்தியோடு காந்தி நோட்டுகளையும் கையில் வைத்திருக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும்!

வசூல்தாதா மீட்டர்ஸ்

மீட்டருக்கு மேல் கட்டணம் வசூலிக்கும் ஆட்டோ ஓட்டுனர்களுக்கு, ‘ஜாங்கிரி’ ஸ்வீட்டோடு அறிவுரை வழங்கலாம். ‘ஜாங்கிரி சுற்றுவது கடினமான கலை. அதுபோல் நகரைச் சுற்றி வரும் ஆட்டோக்காரர்களுக்கு மீட்டர் கட்டணத்தை மட்டும் வசூலிப்பதும் கடினமான ஒன்றுதான்...’ என்று நீட்டி முழக்கி ஆரம்பிப்பதற்கு முன்பே, ‘ப்ரைவேட் ஸ்கூல்ல ஏகப்பட்ட கட்டண வசூல்... ரென்ட் வீட்டில் மீட்டருக்கு மேல கரண்ட் சார்ஜ் வசூல்...

புதுசா ரிலீஸ் ஆகிற படத்துக்கு டிக்கெட் விலைக்கு மேல வசூல்... இதையெல்லாம் கேட்காம வந்துட்டாங்க..!’ என அவர் புள்ளி விவரங்களோடு வசூல் மகாத்மிய கோப உரைகளை சுழற்றி வீசுவதற்கு முன்பே அறிவுரையாளர் அங்கிருந்து எஸ்கேப் ஆக வேண்டி வரும்.
ஸோ, ஜாங்கிரியை பிரித்தால் அதை திருப்பி பல சுற்றுகளாக பின்ன முடியாது... நாய் வாலை நிமிர்த்த முடியாது... அதே போலத்தான் இவைகளும்... என மனதைத் தேற்றிக் கொள்ள வேண்டியதுதான்!l

எஸ்.ராமன்