‘‘பேட்டி கொடுத்திருக்கோமா இல்ல ஏழரையை கூட்டியிருக்கோமா?’’நாளொரு வீடியோவும் பொழுதொரு வைரலுமாக விடிந்து கொண்டிருக்கும் டெக் யுகம் இது. இதில், யூ டியூப்பின் சமீபத்திய சலனம் ‘பொரி உருண்டை’ சானல்தான். ‘அது என்ன பொரி உருண்டை? பெயரே வித்தியாசமாக உள்ளதே...’ என்று Ctrl F போட்டு அதன் அட்மினைத் தேடிப்பிடித்தோம். ஓர் ஆள் அல்ல. ஒரு பெரிய டீம் அது. எல்லோருமே மாடர்ன் மகாலட்சுமிகளாக இருந்தார்கள்!

‘‘பெயரைப் பார்த்ததும் இது ஏதோ அரசியல் நையாண்டி சேனல்னு நினைச்சிடாதீங்க. முழுக்க முழுக்கப் பொண்ணுங்களே நடத்தும் சேனல். இந்த ஜென் Z இளம் பெண்களின் அட்ராசிட்டியைத்தான் ப்ளாக் காமெடி ஸ்டைலில் வீடியோவாகப் பதிவேத்துறோம். சில நேரம் எங்களைப் பாதிக்கிற அரசியல் நிகழ்வுகளும் அதுல இருக்கும். யூ நோ ஒன் திங்... நாங்க எல்லோருமே வெவ்வேறு காலேஜ். ஆனா, ஸ்கூல்ல ஒண்ணா படிச்சோம். எடிட்டிங், கேமரா, இயக்கம்னு ஒவ்வொருத்தரும் தனித்தனியா செட் ஆகிட்டோம்...’’ என்கிறார் ஹரிதா.

இவர்தான் இந்த டீமின் தொடக்கப்புள்ளி. அது என்ன பொரி உருண்டை என்றதும், ‘‘அதை ஏன் கேட்கறீங்க... நிறைய பேர் ‘இது ‘அந்த’ அரசியல் தலைவரைக் கிண்டல் செய்யும் டைட்டிலா?’னு கேட்கறாங்க. உண்மைல ‘அவருக்கு’ அந்தப் பட்டப் பெயர் வர்றதுக்கு முன்னாடியே நாங்க இந்த சேனலைத் தொடங்கிட்டோம். அப்புறம் நாங்க அந்த அளவுக்கு எல்லாம் வொர்த் இல்ல. எங்களை விட்டுடுங்க பாஸ்...’’ என்று கோரஸாக கும்பிடுகின்றனர்.

‘‘தலைப்புக்கு அர்த்தம் கேட்டீங்க இல்லையா? நாங்க எல்லாருமே பொரி உருண்டை பிரியைகள். சின்ன வயசுல இருந்தே அதுதான் எங்க ஃபேவரைட். குழந்தையா இருந்தப்ப... ஆமா பாஸ்... நினைவு தெரிஞ்ச குழந்தையா இருந்தப்ப வீட்டுப் பக்கத்துல இருக்கிற பொட்டிக் கடைல பொரி உருண்டைகளா வாங்கித் தின்போம்.

அடிக்கடி நாங்க வண்டலூர் ஜூவுக்கு பிக்னிக் போவோம். சரி... எங்க சொந்தக்காரங்களான குரங்கைப் பார்க்கத்தான்னு வைச்சுக்குங்க! பட், அந்த ஸ்பாட்டை ஏன் செலக்ட் செய்தோம் தெரியுமா? அங்கதான் பொரி உருண்டை கிடைக்கும்!

இந்த அளவுக்கு வீ ஆர் பொரி உருண்டை லவ்வர்ஸ்! அதனாலதான் எங்க யூ டியூப் சேனலுக்கும் அதே பெயரை வைச்சுட்டோம்..’’ என ஹரிதா பொரி உருண்டை புராணம் பாட... இடையில் புகுந்தார் பிரியதர்ஷினி.

‘‘பல பசங்க பொண்ணுங்களுக்கு பீஸா, பர்கர், சாட் ஐட்டம்னு மாடர்ன் டிஷ் மட்டும்தான் பிடிக்கும்னு நினைக்கிறாங்க. ஃபன்னி கைஸ். எங்களுக்கு தேன் மிட்டாய், கடலை மிட்டாய், பர்ஃபி, பொரி உருண்டை எல்லாம்தான் பிடிக்கும்! சொன்னா நம்ப மாட்டீங்க. நிறைய இளம் பெண்களோட கைப்பைல மிக்சர் பாக்கெட், டைகர் பிஸ்கட்னு லோக்கல் ஐட்டம் இருக்கும்!’’ என இன்றைய டீன் பெண்களின் ரகசியத்தை போட்டுடைத்தார்.

‘‘ஜம்ப் கட்ஸ்னு ஒரு சேனல். அதுல வர்ற பையன் ஒருத்தன் பொண்ணு மாதிரியே நடிப்பான். பெண்கள் செய்யற அலப்பறைகளை அதே பாடி லேங்குவேஜ்ல அதே மேனரிசத்தோட செய்து அசத்துவான். ஆனா, பெண்களே வரிஞ்சு கட்டி அட்ராசிட்டி செய்யறயூ டியூப் சேனல் இருக்கானு தேடித் தேடி பார்த்தோம்.

எதுவுமே எங்க கண்களுக்கு அகப்படலை. சமையல், மேக்கப், காஸ்ட்யூம்னு சின்சியர் சிகாமணிகள்தான் அதிகம் இருக்காங்க!என்னடா இது தமிழ்நாட்டு யூத் கேர்ள்ஸுக்கு வந்த சோதனைனு நாங்களே களத்துல இறங்கிட்டோம்...’’ என சேனல் தொடங்குவதற்கான நியாயங்களை பட்டியலிட்டபடி தொடர்ந்தார் சந்தோஸ்ரீ.

‘‘ரைட். சேனலோட கான்செப்ட் என்ன? ரூம் போட்டு யோசிச்சோம். இருக்கிற மூளையை எவ்வளவு கசக்கியும் ஒரு புள்ளி அளவுக்குக் கூட சிக்னல் கிடைக்கலை. ஐடியாஸ் எல்லாம் நாட் ரீச்சபிள்லயே இருந்தது.இந்த நேரத்துலதான் சட்டுனு பல்பு எரிஞ்சுது. ‘சேனல் ஆரம்பிக்க யோசிக்கறதையே காமெடி வீடியோவா மாத்தினா என்ன?’

அப்பதான் வைகைப் புயல் வடிவேலு கைகொடுத்தார். ‘நல்லா இருக்குல்ல... அட! நல்லாதானே இருக்கு...’ போதாதா? தொபுக்கடீர்னு குதிச்சுட்டோம்...’’ என சந்தோ முடிக்க, என்ட்ரி ஆனார் நான்சி.‘‘இதுக்கு நல்ல வரவேற்பு கிடைச்சுது. தெம்பா ‘மதர் அட்ராசிட்டி’ செஞ்சோம். மாடர்ன் கேர்ள்ஸுக்கும் அவங்க அம்மாவுக்கும் நடக்கிற கான்வர்சேஷன்தான் கான்செப்ட்.

‘20 வருஷங்களா காய்கறி மட்டும்தான் கட் பண்ணித் தர... எதுவும் சமைக்க மாட்டேங்கிற... சமையல் செய்யச் சொன்னா கடலை மாவு, காய்கறிகளை எல்லாம் ‘ஹை... ஃபேஸ்பேக்’னு சொல்லி முகத்துல பூசிக்கிற...’‘என்னடி இது? இந்த கிழிஞ்சுபோன ஜீன்ஸுக்கு 2,500
ரூபாயா?’

இப்படி கலகலனு அந்த வீடியோ இருக்கும். போதாதா? ஐபோன் இல்லா ஊருக்கு சைனா மேட் சர்க்கரை மாதிரி யூத் கேர்ள்ஸ் ஏகோபித்த ஆதரவை வழங்கினாங்க...’’ என்று கண்சிமிட்டினார் நான்சி.‘‘முக்கியமானதை சொல்லாம டபாய்க்கறீங்களே...’’ என்றபடி தன் கரங்களைப் பரபரவென தேய்த்தபடி ஆரம்பித்தார் தனலட்சுமி.

‘‘எந்த ஃப்ரெண்ட் வீட்டுக்கு நாங்க போனாலும் முதல் வேலையா அந்த வீட்டு கிச்சனுக்குள்ள புகுந்து உண்டு இல்லைனு ஆக்குவோம். ஆக்சுவலா எங்க யாருக்குமே ஒழுங்கா சமைக்கத் தெரியாது. ஆனாலும் ஒரு கெத்து காட்டுவோம்.இதையே கான்செப்ட் ஆக்கினோம்.

‘பொரியல் செய்யவா? கூட்டு செய்யவா’னு பொண்ணுகிட்ட அம்மா கேப்பாங்க. ‘முதல்ல நீ சோறு வைம்மா’னு பொண்ணு கலாய்க்கும்.

இப்படி எதார்த்தமா வீட்டுல நடக்கறதை எல்லாம் பதார்த்தமா நாங்க வீடியோவா பரிமாறுகிறோம். ‘ஜிமிக்கி கம்மல்’ பாட்டு வைரலானப்ப ஷாக்கானோம். தமிழ்ப் பசங்க எல்லாம் கேரள பொண்ணுங்களுக்கு மயங்கிட்டா எப்படி?

உடனே பீச், பார்க்னு சென்னையோட முக்கியமான இடங்கள்ல டான்ஸே தெரியாம டான்ஸ் ஆடி சேனல்ல போட்டோம்.காஞ்சு போயிருந்த நம்ம பசங்க அதைப் பார்த்துப் பார்த்து ஹிட் ஆக்கினாங்க!’’ என்று தனலட்சுமி சிரிக்க அவரைத் தட்டிக் கொடுத்தபடி தொடர்ந்தார் ஹரிஜா.

‘‘பொதுவா, இப்ப இருக்கிற யூ டியூப் சேனல்ஸ் எல்லாமே க்ரீன் மேட் போட்டு இன்டோர்ல ஷூட் செய்யறாங்க. நாங்க ‘என் இனிய தமிழ் மக்களே’ பாரதிராஜா பரம்பரை! எல்லாமே அவுட்டோர்தான். எங்க நாங்க கேமரா வைச்சாலும் அடுத்த 10வது நிமிஷம் போலீஸ் வந்துடும். அப்படியொரு ராசி எங்களுக்கு! இதையெல்லாம் சமாளிச்சுதான் நாட்டுக்கு சேவை செய்யறோம்!

மலேசியன் தமிழ் கேர்ள்ஸ்கிட்ட ஒரு நல்ல பழக்கம் உண்டு. எந்த தமிழ் சினிமா பாட்டு ரிலீஸ் ஆனாலும் உடனே அதுக்கு தாங்களே டான்ஸ் ஆடி வீடியோவை பதிவேத்துவாங்க. நம்மூர்ல அப்படியொரு சிஸ்டமே இல்ல.விடுவோமா? திரைகடலோடியும் திரவியம் தேடற ரத்தம்தானே எங்க உடம்புலயும் ஓடுது! நாங்களும் அதேமாதிரி சினிமா பாட்டுக்கு டான்ஸ் ஆட ஆரம்பிச்சோம்.

‘ஃபிடா’னு லேட்டஸ்ட்டா ஒரு தெலுங்குப் படம் வந்துச்சு. ‘பிரேமம்’ மலர் டீச்சரான சாய் பல்லவிதான் ஹீரோயின். அவங்க ஆடற ஒரு பாட்டுக்கு நாங்க சென்னை அண்ணா சாலை, பெசன்ட் நகர்ல நடனமாடினோம். நாங்க அழகிங்க இல்லையா?! கூட்டம் சேர்ந்துடுச்சு. நல்லவேளையா சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படலை!’’ என்று ஹரிதா முடிக்க ‘ஓ...’ என மற்றவர்கள் ஆர்ப்பரித்தார்கள்.

‘‘கேர்ள்ஸ், ஸ்கூல் பசங்க, குட்டிப்பசங்க. இவங்கதான் எங்க டார்கெட் ஆடியன்ஸ். ஈவினிங் நாங்க ரோட்ல ஷூட் செய்யறப்ப, ஸ்கூல் பசங்க ‘இதோடா... ‘ஆன்டிஸ்’ எல்லாம் கேமரா வைச்சு சீன் போடறாங்க’னு எங்களை கலாய்ப்பாங்க. இதையும் ஷூட் செஞ்சு அப்லோட் செஞ்சோம்.

இப்படித்தான் சுமுகமா எங்க சேனல் போயிட்டிருக்கு. இப்ப நீங்க வந்திருக்கீங்க. பேட்டி கொடுத்திருக்கோமா இல்ல ஏழரையை கூட்டியிருக்கோமானு தெரியலை.

‘நல்ல பீஸா பார்த்து சண்டை போடுங்க. அப்பதான் ‘ஐ சப்போர்ட்’னு டேக் லைன் ஃபேஸ்புக்,டுவிட்டர்ல உருவாகும். நீங்களும் ஃபேமஸா ஆவீங்க’னு ஃப்ரெண்ட்ஸ் எல்லாம் சொன்னாங்க. அதை நம்பி ஜிஎஸ்டி பத்தி ஒரு வீடியோ செஞ்சோம். ப்ச். ஒண்ணும் நடக்கலை. எங்களை மனுஷங்களாவே மதிக்க மாட்டேங்கறாங்க. என்ன பாஸ் செய்யறது..?’’ அப்பாவியாகக் கேட்கிறார்கள் இந்த பொரி உருண்டைகள்!