கவிதை வனம்
பிரிவின் கோரிக்கை


உறவின் பிரிவும்
அழுகையும் வலியும்
புதிதல்ல எனக்கு
எதிர்மறைக் கருத்துகள்
அவரவர் சுதந்திரம்
அன்பு தேய்ந்த வார்த்தைகள்
தேங்கி நிற்கும் வாழ்க்கை
இத்தருணத்தில் இப்படியே
நீ வெளியேறுவதில்
வருத்தம் ஏதுமில்லை எனக்கு
முன்பாக நீ காதல் சொன்ன
நொடிமுதல் தொலைந்துபோன
என் நண்பனை மீட்டுக்கொடு போதும்.

- மு.வித்யா


ரயில் ஸ்நேகம்

நீ யாரோ நான் யாரோ
ஆனாலும் பூத்தது
ஒரு மலர் நம்மிடையே
எல்லோரும் இறங்கிச் சென்றபின்
மணித்துளிகள் நாட்களாகி
நாட்கள் வருடங்களாகிவிட்டன
இன்னமும் அங்கேயே
நிற்கிறது நம் அன்பு
இதே வழித்தடத்தில்
அதே ரயில்
இனி எத்தனை முறை
வந்தாலும்
அந்த ரயிலாகப்
போவதில்லை எப்போதும்.

- ஷசாந்தன்