மாநிலத்தை முன்னேற்றுவது ஆண்களல்ல... பெண்கள்!



- ச.அன்பரசு

அற்புதமான சரமதி மலைத் தொடரை தன் அடையாளமாகக் கொண்ட மாநிலம் நாகலாந்து. அசாம், அருணாசலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களும் மியான்மர் எனப்படும் பர்மாவும் இதன் எல்லைகள். விவசாயத்தை முதன்மையாகக் கொண்ட இம்மாநிலத்தில் 16 பழங்குடி இனங்கள் உள்ளன. நாகலாந்துக்கு எத்தனையோ சிறப்புகள் உள்ளன. அதுபோலவே அங்கு எத்தனையோ பிரச்னைகளும் உள்ளன. நாகலாந்தின் சிக்கல்களில் தலையாயது என சமூக வல்லுநர்கள் கருதுவது பெண்களுக்கான அரசியல் பங்களிப்பில் மிகவும் பின் தங்கியிருப்பது.

கடந்த 2005ம் ஆண்டு நாகர்பாரி கிராம சபை கவுன்சில் தலைவர் தேர்தலில் ஆணாதிக்க வாதிகளின் கடும் எதிர்ப்புகளுக்கு இடையே தலைவராகத் தேர்வான டோகலி கிகோன் என்ற பெண்மணி மட்டுமே கடந்த 12 ஆண்டுகளில் கிராம சபைக்குத் தேர்வாகியுள்ள ஒரே பெண்.‘‘தேர்தலின்போது ஆண்கள் தொடர்ந்து என் நம்பிக்கையைக் குலைக்கவே முயற்சித்தனர். ‘சிறைக்கும் ராணுவ முகாமுக்கும் எப்படி ஒரு பெண் செல்ல முடியும்?’ என்று ஆங்காரமாகக் கேள்வி கேட்டனர். ஆனால், தேர்தலில் வென்று இவை அனைத்தையும் நான் செய்து காட்டியதும் மவுனமாகிவிட்டனர்...’’ என உற்சாகமாகப் பேசுகிறார் கிகோன்.

1963ம் ஆண்டு தனி மாநில அந்தஸ்து கிடைத்து 16வது மாநிலமாக நாகலாந்து உருவானதில் இருந்து அமரர் ரானோ எம்.ஷைசா (1977) தவிர வேறு எந்தப் பெண்மணியும் இதுவரை மக்களவையில் நுழையவில்லை. தாய்வழிச் சமூகமான நாகலாந்தின் அரசியல் டிசைன் இப்படித்தான் உள்ளது. கிகோன் பதவி ஏற்றபின், தன் கிராமத்துக்கு அருகில் இருந்த பழமையான ஏரியை ஆக்கிரமிப்பிலிருந்து அகற்றச் சென்றபோது, ஆக்கிரமிப்பாளர்கள் அவரைக் கடுமையாகத் தாக்கி, மேலாடையைக் கிழித்து மானபங்கப்படுத்தினர். கடந்த ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் சட்டசபையில் பெண்களுக்கு உள்ளாட்சித் தேர்தலில் 33% இட ஒதுக்கீடு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்தச்  சட்டத்தைத் திரும்பப் பெறக்கோரி நாகா பழங்குடி அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டன. முதல்வர் டி.ஆர்.சொலியாங் வீட்டின் முன்பு நடைபெற்ற போராட்டம் கலவரமாக மாற துப்பாக்கிச் சூடு நடைபெற்றது. இதில் இரண்டு பேர் இறந்ததால் முதல்வர் தன்னுடைய பதவியை இழக்க வேண்டியதாகிவிட்டது. தேர்தலில் மனுத் தாக்கல் செய்திருந்த பெண் வேட்பாளர்களை JCC, NTAC Kohima ஆகிய அமைப்புகள் மிரட்ட, அவர்களும் தம் மனுக்களை வாபஸ் பெறும் அவலமும் நடந்தேறி உள்ளது. ‘‘NMA அமைப்பில் பல்வேறு பழங்குடிப் பிரிவு பெண்கள் உறுப்பினராகியிருந்தனர்.

பழங்குடி அமைப்பில் இனி நீங்கள் இடம்பெற முடியாது எனப் பெண்களை பிற்போக்குப் பழங்குடி அமைப்புகள் மிரட்ட, திருமணமான பெண்கள் என்ன செய்வார்கள்? அரசும் தேர்தல் முடிவை நிறுத்திவைத்துவிட்ட நிலையில் இட ஒதுக்கீட்டுக்கான பெண்கள் அமைப்பை கலைக்கும் சூழல் ஏற்பட்டுவிட்டது...’’ என விரக்தியான குரலில் பேசுகிறார் NMA அமைப்பின் தலைமை ஆலோசகரும் நாகலாந்து பல்கலைக்கழக ஆசிரியருமான ரோஸ்மேரி ஸூவிச்சு. வடகிழக்கு மாநிலங்கள் முழுதுமே பெரும்பாலும் பெண்களுக்கு இதேநிலைதான்.

‘‘தாய்வழிச் சமூகமான மேகாலயா உள்ளிட்ட மாநிலங்களில் வாழும் பெண்களுக்கும் நாகலாந்தின் அவல நிலைமைதான் உள்ளது. இப்போது கல்வி கற்கும் பெண்கள் மெல்ல ஜனநாயக வழியில் தம் உரிமைக்குக் குரல் கொடுக்கத் தொடங்கியுள்ளது நம்பிக்கை தருகிறது...’’ என்கிறார் மணிப்பூர் பல்கலையைச் சேர்ந்த விஜயலட்சுமி பிராரா. இதில் அரசின் பெண்களுக்கான இட ஒதுக்கீடு எதிர்ப்பு கடந்து, 371(A) எனும் மத்திய அரசின் சிறப்பு அந்தஸ்து தகுதியையும் நாகா பழங்குடி அமைப்புகள் கடுமையாக எதிர்க்கின்றன. ‘‘இந்தியாவிலுள்ள பிற மாநிலப் பெண்கள் போலவே அரசியலில் பெண்கள் ஈடுபடலாமே?

எதற்கு தனி இட ஒதுக்கீடு?’’ என பாம்பாய் சீறுகிறார் நாகா ஹோகோ அமைப்பின் தலைவரான சுபா ஆசுகும். நாட்டின் முக்கிய முடிவுகளை எடுக்கும் எந்த அமைப்பு களிலும் நாகலாந்து பெண்களுக்கு அணு அளவும் இடம் இல்லை என்பதே சுடும் நிஜம். முதலில் சர்ச்சுகளில் தொடங்கிய NMA பெண்கள் அமைப்புக்கு சமூக சீர்திருத்தங்களே லட்சியம். 33 ஆண்டுகளாக இயங்கும் இந்த அமைப்பு குடிபோதை, போதைப் பொருள் என 1980களில் நோயாகப் பரவிய பிரச்னைகளைத் தீர்க்க முயற்சித்தது. இதன் தொண்டர்களுக்கு ‘அம்மா’ என்பது செல்லப்பெயர். ‘‘சமூகத்தின் பிரச்னைகளை ஆண்களுடன் இணைந்து போராடித் தீர்ப்பதுதான் எங்களது நோக்கம்.

அதன் வழியாக பெண்களின் அரசியல் தீண்டாமையை நீக்க முயற்சிக்கிறோம்...’’ என்கிறார் NMA தலைவரான அபியூ மேரு. 2006ம் ஆண்டு பெண்களுக்கான இட ஒதுக்கீடு மசோதா உருவானாலும் ராணுவமயமாக்கல் பிரச்னையால் பெண்கள் தங்களுக்கான அரசியல் உரிமையைப் பேச முடியவில்லை. உடல்நலம், பிரசவகால மரணம் குறித்த வழக்குகளும் இன்றுவரை கோர்ட்டில் ஏராளமாகத் தேங்கியுள்ளன. நாகலாந்து பெண்களுக்கு நிலச் சொத்துரிமை கிடையாது. திருமணமாகி விவாகரத்து கிடைத்தால், குழந்தைகளும் சொத்துக்களும் கணவருக்கு மட்டுமே. பெண்களுக்கு எதுவுமே கிடையாது என்பதுதான் சூழல்.

‘‘ஆணாதிக்க சமூகம் என்பதால் பெண்கள் வேறு பழங்குடி இனத்தைச் சேர்ந்தவரை மணந்தால், முன்னோர்களின் நிலம் அப்பெண்ணுக்குக் கிடையாது என்பது நியாயமா? குடும்பத்தில் பெண்களுக்குத் தாராள உரிமை கிடைத்தாலும், பொருளாதாரம், அரசியல் உள்ளிட்டவற்றில் அவர்களுக்கு எந்த வாய்ப்பும் கிடைப்பதில்லை. இந்த உரிமைக்காகத்தான் போராடி வருகிறோம்...’’ என்கிறார் வாட்சு முங்டாங் அமைப்பைச் சேர்ந்த அமெனியா சஷி. பெண்களின் மீதான வன்முறை மற்றும் மனித உரிமைகளைக் காப்பதற்காக 1983ம் ஆண்டு தோன்றிய NMA அமைப்பு, விவசாயப் பெண்களுக்குப் பல்வேறு செமினார் வகுப்புகளோடு, பொருட்களை மார்க்கெட்டிங் செய்வது வரை உதவிகளை வழங்குகிறது.

கிழக்கு நாகலாந்தின் வறுமையான சூழலால், சிறுமிகளை வீட்டு வேலைக்கும், பாலியல் தொழிலுக்காகக் கடத்துவதும் அதிகம். இதைத் தடுக்க Enwo எனும் என்ஜிஓ களமிறங்கியுள்ளது. ‘‘பெண்கள் இயக்கம் முறையாக வளர்ச்சி பெறவில்லை. எனவேதான், குழுக்களாக இன்றும் திரள முடியவில்லை. பெண்களில் பலருக்கும் நாட்டில் என்ன நிகழ்கிறது என்பது பற்றிய விழிப்புணர்வு கிடையாது...’’ என எதார்த்தமாகப் பேசுகிறார் மாநில பெண்கள் மையத்தின் ஒருங்கிணைப்பாளரான ஜூலியன் மேடோம். அரசியல், வன்முறை தாண்டி பெண்களின் குரல் இன்று நாகலாந்தின் தெருக்களில் தம் உரிமைக்காக ஓங்கி ஒலிக்கத் தொடங்கியுள்ளது ஜனநாயகம் தழைப்பதற்கான நன்னம்பிக்கை முயற்சி.       

திருவிழா தேசம்!

அங்காமி, சங் உள்ளிட்ட 16 பழங்குடி இனங்கள் வாழும் நாகலாந்து, 1963ம் ஆண்டு டிசம்பர் ஒன்றாம் தேதி உருவான 16வது மாநிலம். கிறிஸ்தவர்கள் (88%) அதிகம் வாழும் 16,579 ச.கி.மீ பரப்புள்ள மாநிலத்தில் மதம், மொழிச் சண்டை அதிகம். தானியங்கள், பருப்பு, கரும்பு உற்பத்தியோடு சுற்றுலா, ரியல் எஸ்டேட், குறுந்தொழில்கள் ஆகியவையும் நாட்டுக்கு வளம் சேர்க்கின்றன. அதிகாரபூர்வ மொழி ஆங்கிலம். சராசரி கல்வியறிவு 80 சதவீதம். Sekrenyi, Bushu Jiba  என விவசாயத்தை மையமாகக் கொண்ட பழங்குடி இனங்களின் திருவிழாக்களுக்கு ஆண்டு முழுவதும் பஞ்சமே இல்லை. நாகலாந்தின் பெருமளவு வணிகம் சாலை மார்க்கமாகவே நடைபெறுகிறது.


சக்தி கொடு!


* இந்திய கேபினட்டில் பெண்களின் பங்கு 18.5%

* பெண் எம்.பிக்களில் இந்தியாவின் இடம் 88

* அரசியலில் பெண்களின் இடம்
ருவாண்டா (61.3%)
பொலிவியா (53.1%)
பல்கேரியா, பிரான்ஸ், நிகராகுவா (52.9%)    
கியூபா (48.9%)

* உலகளவில் பெண்களின் வளர்ச்சி
 22.6%(2015)
 23.3%(2016)

(UN Women — the international organisation’s arm for empowering women 2016 தகவல்படி)