இது உறவுகளை முன்னிறுத்தும் படம்..!



வெற்றி பெறும் நிச்சயத்தோடு உரையாடுகிறார் கொடி வீரன் சசிகுமார்

எப்பவும் சசிகுமார் ஸ்பெஷல்! ரொம்பவே நெருக்கமான மனிதராக ஈர்ப்பதில் அவரை மிஞ்சுவது கடினம்! முறுக்கிய மீசை, ‘கொடி வீரன்’ தாடியில் இருந்தாலும் எப்போதும் எட்டிப் பார்க்கிற அழகிய புன்னகை. ஈரக்காற்றுக்கு முகமும், நமக்கு மனசும் தருகிறார். ‘கொடிவீரன்’ ரிலீசுக்குத் தயாராக இருக்க, ஆல் டைம் ஸ்மார்ட் நம்மிடம் பேசினார். எதிர்பார்ப்புக்கு மதிப்பளிக்கும் வகையில் படம் வந்திருப்பதில் முகத்தில் நிறைவும், நிம்மதியும் ததும்பி வழிகின்றன.

‘‘இது உறவுகளை முன்னிருத்துகிற கதை. நான் உங்ககிட்டே அன்பு செலுத்துறேன்னா, அதற்குப் பதிலாக வருகிற அன்பு இன்னும் நேர்த்தியாக இருந்தால் மனதை அள்ளும். எழுதித் தீராத உறவுகளின் அருமைகளைச் சொல்லி பெருமைப்படுகிற ஒரு படத்தில் நடிச்சிருக்கோம்னு சந்தோஷமாக இருக்கு. அதுதான் உண்மை. சில படங்கள் ரொம்பவும் மனசுக்கு நெருங்கி நாமே பெருமைப்பட்டுக்கிற மாதிரி இருக்கும். அப்படியொரு Signature கொண்டிருக்கிற படம் ‘கொடிவீரன்’. ரொம்ப நாள் கழிச்சு முத்தையா இந்தக் கதையை கொண்டு வந்தார். அவர் மனதில் தங்கிப்போய் செதுக்கிய கதை. சரியாக வளர்ந்து வெளியே வர ஒரு நேரம் பிறக்குமில்லையா அந்த இடத்தில் இருக்கு ‘கொடிவீரன்’ படம்...’’ எளிய வார்த்தைகளில் தொடர்கிறார் சசி.

தலைப்பாகட்டும், லேசா முறுக்கின மீசையும், பாசமும், கோபமுமாகட்டும் வெரைட்டியா இருக்கீங்க...
கிராமத்து மனசும், மணமும் மறக்காத படம். விஞ்ஞானம் வளர்ந்திருக்கலாம். அலைபேசி வந்து நம்மை வேற இடத்திற்கு கொண்டு போயிருக்கலாம். ஆனால், உறவுகளை மீறி எதுவும் இங்கே இல்லை. எங்கே போனாலும் இங்கேதான் வந்து சேரணும். ‘கொடிவீரன்’ உங்களோட இணைஞ்சு நிற்பான். நல்லது கெட்டதிற்கு ‘நான்’னு முன்னாடி வந்து சொந்தம் கொண்டாடி மனசைப் பிடிக்கிறவன்.

ஊரே வணங்குகிற மனுஷன். பிறந்த மண்ணையும், மனுஷனையும் பார்த்து சந்தோஷப்படுகிறவன். நீரின்றி அமையாது உலகுன்னு சொல்வாங்க. அதே மாதிரியான நிஜம் உறவின்றி அமையாது உலகு. இப்படத்தைப் பார்த்தால் எல்லோருக்கும் அவங்களுக்கு பிடித்தமான ஓர் இடத்தில் கொண்டுபோய் நிறுத்துவான். மறந்துபோன உறவு மனசில் வரும்.

உறவுகளை எப்படிப் பார்க்கணும்னு கொஞ்சம் நமக்கு அறிவுறுத்தும். ஊரே கதின்னு கிடக்கிற கொடிவீரனுக்கே ஒரு பிரச்னை வந்தால், சாந்தமாக இருக்கிறவனையே உக்கிரப்படுத்திப் பார்த்தால் எப்படியிருக்கும்... அதுதான் ‘கொடிவீரன்.’ வசதிகளோ, பணமோ உறவுக்கு முன்னாடி ஒண்ணுமே இல்லைன்னு சொல்கிற படமாகவும் இருக்கும். இது பாசங்களுக்கு இடையேயான போட்டி. மனசு இருக்கிறவங்களுக்கு எல்லாம் பிடிக்கும்.

நீங்கள் உறவுகளில் எப்பவும் அக்கறைப்படுகிறீர்கள்..
சனுஜாதான் என் தங்கை. ஷூட்டிங் ஸ்பாட்களில் கிராமங்களின் உள்ளே ஷூட்டிங் போய்க்கிட்டு இருக்கும்போது என்னையும், சனுஜாவையும் சொந்த அண்ணன் தங்கச்சியாகவே உணர ஆரம்பித்துவிட்டார்கள். நல்ல வியாபாரம் ஆகணும், நிச்சயம் வெற்றி பெறணும் என்ற நியாயமான ஆசைகள் போக சில சினிமாக்களில் நம்மை அடையாளம் காண ஆசை வரும். சில படங்களைச் செய்யும்போது உத்வேகமா இருக்கும். நாமளே நம்மை கொஞ்சம் தட்டிக் கொடுக்கறது மாதிரின்னு வைச்சுக்கங்களேன்.

எனக்கு சினிமா என்பது ஒரு சந்தோஷம். அது டைரக்டர், கேமராமேன், இசையமைப்பாளர், நடிகர்னு எல்லோரும் சேர்ந்து விளையாடுகிற விளையாட்டு. சமயங்களில் அது சசிகுமார் படமாகக் கூட ஆயிடும். ஆனால், நான் திருப்தியை மனப்பூர்வமாக எல்லோருக்கும் பிரிச்சுக் கொடுக்கத்தான் விரும்புவேன்.

ஏகப்பட்ட நடிகர்கள் இருக்காங்க...
வெவ்வேறு மூணு அண்ணன் தங்கச்சிகள். பசுபதிக்கு பூர்ணா தங்கை. விக்ரம் சுகுமாரனுக்கு மகிமா தங்கை. எனக்கு தங்கச்சி சனுஜா. மகிமாதான் எனக்கு ஜோடி. ‘மதயானை கூட்டம்’ படத்தை டைரக்ட் செய்த விக்ரம் சுகுமாரன் அருமையான கேரக்டரில் வருகிறார். தானே ஒரு டைரக்டர்னு எதையும் நினைச்சுக்காமல் ‘நச்’னு ஒரு கேரக்டர். மகிமா நடிப்பில் கவனம் வைக்கிற பொண்ணு. நல்ல தமிழில் பேச முடியுது. ஒரு விஷயம் சொன்னா அதை மெருகேத்திப் பண்ணிட்டு ‘போதுமா’னு சிரிச்சுக்கிட்டே நிற்பாங்க. பார்க்கவே அழகா இருக்கும்.

படத்திற்கு உழைக்கிறதில் அவங்க மிச்சம் எதுவும் வச்சுக்கிறதில்லை!
பூர்ணா அருமை! ஓர் இடத்தில் கதையின் தன்மைக்காகவும், அவசியத்திற்காகவும் மொட்டை அடித்துக் கொள்ள வேண்டிய கட்டாயம். கதையைக் கேட்டதும் அவங்களுக்கு பிடிச்சது. பெண்களுக்கு உயிராக இருக்கிற கூந்தலை இழக்க கஷ்டமாகவேயிருக்கும். ஆனாலும் ஆரம்ப தயக்கங்களுக்குப் பிறகு அவங்க மனப்பூர்வமாக எங்கள் யூனிட்டிற்குள் வந்திட்டாங்க. மொட்டையும் அடிச்சாங்க. அவங்களுக்கு நன்றி. பசுபதி சொல்லவே வேண்டாம். எள்ளுண்ணா எண்ணெய்யாக நிற்பார். அவரது மிடுக்கும், துடுக்கும், கோபமும் படத்தோட இயல்பிற்கு அவ்வளவு முக்கியமாக இருக்கும். விதார்த் நல்ல ஒரு கேரக்டரில் வருகிறார்.

வேறு வேறு காலகட்டங்கள்... இதில் ரகுநந்தன் இசை எப்படியிருந்தது?
‘சுந்தரபாண்டியனுக்கு’ப் பிறகு இதில் ரகு... ரொம்ப அனுபவசாலி... பொறுப்போடு செய்திருக்கார். சினிமாங்கிறது பேலன்ஸ் ஷீட் மாதிரி. ஒரு என்ட்ரி மேட்ச் ஆகலைன்னா கூட டேலி ஆகாம போயிடும். இதில் எல்லாமே கச்சிதம். அப்புறம் என் நண்பன் எஸ்.ஆர்.கதிர். அவர் காண்பிச்சிருக்கிற கிராமத்து திருவிழாவும், மீன்பிடி சண்டையும் பின்னியெடுக்கும். மனசில் நினைக்கிறதை எப்படி இம்ப்ரூவ் பண்ணலாம்னு கொடுத்து வாங்கி ஷேர் பண்ணிக்கிறவர்.

சண்டைக்காட்சிகளை சூப்பர் சுப்பராயன், தினேஷ் சுப்பராயன், திலீப் சுப்பராயன்னு மொத்த குடும்பமே செய்திருக்காங்க. வாழ்க்கையில் எவ்வளவு மாறினாலும் அடிப்படைப் பண்புகள் மாறிடக்கூடாதுன்னு நினைக்கிறேன். என்னால் எப்போதும் மூன்றாம் தர உணர்வுகளுக்கு தீனி போட முடியாது. மக்கள் மனசில் நல்ல தாக்கங்களை முன்னிருத்தினால் நான் மகிழ்வேன். நாம் சந்திக்கிற கிராமத்து மனிதர்கள், சூழல்கள், அவற்றின் அனுபவங்களிலிருந்து உருவாக்கிக் கொண்ட நியாயங்களை மட்டுமே என் படங்களில் முன் வைக்கிறேன். யாரும் காணக்கூடிய, எளிதில் கை வரக்கூடிய எளிய மனிதர்களே எனது கதாநாயகர்கள்.
 

- நா.கதிர்வேலன்